Published:Updated:

நானியின் ஆறாவது காதல் கதை... 'நின்னு கோரி' படம் எப்படி?

நானியின் ஆறாவது காதல் கதை... 'நின்னு கோரி' படம் எப்படி?
நானியின் ஆறாவது காதல் கதை... 'நின்னு கோரி' படம் எப்படி?

பலே பலே மகாடிவோய், க்ருஷ்ண காடி வீர பிரம கதா, ஜென்டில்மேன், மஜ்னு, நேனு லோக்கல் தொடர்ந்து இதோ நானி நடித்திருக்கும் அடுத்த ரொமான்டிக் படம் 'நின்னு கோரி'. காதல் கதைகளில் அப்படி என்ன ப்ரியமோ தெரியவில்லை, (ஜென்டில்மேன் படத்தில் மட்டும் ரொமான்ஸைக் குறைத்து த்ரில்லை ஏற்றியிருப்பார்) இந்த வருடத்தோடு காதல் படங்களுக்கு தடை விதித்துவிடுவது போல, தொடர்ந்து ரகரகமாக காதல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நானியின் ஆறாவது காதல் கதை எப்படி இருக்கிறது?

உமா (நானி) பல்லவியைக் (நிவேதா தாமஸ்) காதலிக்கிறார். பிறகு நிவேதாவும் நானியைக் காதலிக்கிறார். கூடவே தன் வீட்டு மாடியில் தங்கவும் வைக்கிறார். நானி ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பி.ஹெச்.டி ஆசையில் இருப்பவர். ஒரு கட்டத்தில் நிவேதா திருமணம் செய்யலாம் என நெருக்கடி கொடுக்க நானியும் திருமணத்துக்குத் தயாராகிறார். "காதல் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கற, அவள வெச்சுக் காப்பாத்த என்ன இருக்கு உன்கிட்ட" - என பக்கத்துவீட்டு பெண்ணின் காதலுக்கே அட்வைஸ் செய்யும் நிவேதாவின் தந்தையைப் பார்க்கும் நானி, ‘ஒருவருடம் கழித்து நல்ல வேலையுடன் வருகிறேன். திருமணத்தை அப்போது வைத்துக் கொள்ளலாம்’ என நிவேதாவிடம் கூறிவிட்டு பி.ஹெச்.டிக்காக டெல்லி சென்றுவிடுகிறார். அந்த நேரத்தில் நிவேதாவுக்கு அருணுடன் (ஆதி) திருமணம் நடந்துவிடுகிறது.  ஒரு வருடத்திற்குப் பிறகு ஆதியுடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நிவேதாவுக்கு நானி பற்றிய தகவல் வருகிறது. நிவேதா நானியை சந்திக்க "நீ இன்னும் என்னைத்தான் காதலிக்கிற என்னோட வந்திடு" என்கிறார். "நான் சந்தோஷமாதான் இருக்கேன், வேணும்னா எங்க வீட்டுக்கு வந்து நானும் என் கணவரும் வாழ்றதைப் பாரு" என சொல்கிறார் நிவேதா. "நீங்க சந்தோஷமா இல்லனு நான் நிரூபிச்சா நீ என்கூட வந்திடணும்" என்ற கண்டிஷனோடு அவர்கள் வீட்டிற்கு செல்கிறார் நானி. அதன் பின் யாருடைய வாழ்க்கை எப்படி மாறியது என்பது கதை.

அமெரிக்காவில் ஆதி, நிவேதா தாமஸுக்கு முதல் திருமண நாள் சர்ப்ரைஸ் தருவதில் துவங்கும் கதை, இடைவேளை வரை மேல் பத்தியில் சொன்ன விஷயங்கள் மட்டுமே படமாக விரிகிறது. நானி, ஆதி - நிவேதா தாமஸ் வீட்டுக்குப் போன பின்பே கொஞ்சம் படம் சுறுசுறுப்பாகிறது. நடிப்பைப் பொறுத்தவரை நானி வழக்கம் போல் ஸ்கோர் செய்கிறார். நிவேதாவுடன் காதல், டெல்லிக்குப் போன பிறகு நிவேதாவுடன் பேசமுடியாமல் தவிப்பது, இடைவேளைக்குப் பிறகு செய்யும் சேட்டைகள் என அசத்தல். அந்த ஒட்டுதாடி மட்டும் உறுத்தல். நிவேதாவும் முடிந்தவரை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.  செயற்கை ரியாக்‌ஷன்கள் மட்டும் இன்னுமும் துருத்திக் கொண்டு தெரிகிறது. ஆதிக்குப் பெரிய ஸ்கோப் கிடையாது, ஆனால் க்ளைமாக்ஸில் மட்டும் கவனிக்க வைக்கிறார். முரளி ஷர்மா, பலிரெட்டி ப்ருத்விராஜ் அமெரிக்கா வந்த பின்பு நடக்கும் காமெடிகள் கொஞ்சம் ரிலாக்ஸ்.

கோபி சுந்தர் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கவைக்கிறது. நானி குடித்துவிட்டு அழுது கொண்டே கேள்வி கேட்கும் காட்சியில் பின்னணி இசை நன்றாகவே ஃபீல் கொடுத்திருக்கிறது. வைசாக் எப்பிசோடுகளை ஒரு நிறத்திலும், அமெரிக்க காட்சிகளை வேறு டோனிலும் பதிவு செய்து விதவித உணர்வு கொடுக்கிறது கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவு. 

அமெரிக்கா, வைசாக் என மாறி மாறிப் பயணிக்கும் திரைக்கதை மட்டும் படத்தை சுவாரஸ்யப்படுத்திவிடும் என நினைத்து புது காட்சிகள், அழுத்தமான உணர்வுகளைப் பிரதிபலிக்க தவறியிருக்கிறார் இயக்குநர் ஷிவா நிர்வனா. காதலியின் கல்யாணம், அவள் விரும்பியவனுடன் சேர்த்து வைப்பது என அரதப் பழைய களம். காட்சிகள் இன்னும் புதிதாக இருந்திருந்தால், இன்னும் கவனம் பெற்றிருக்கும் படம். 'நேனு லோக்கல்' ரிசல்ட் பார்த்தாவது  உஷார் ஆவார் என நினைத்தால் மறுபடி இன்னொரு லவ் ஸ்டோரி.

நானி காதல் போதுமே ப்ளீஸ்!

அடுத்த கட்டுரைக்கு