Published:Updated:

சந்திரபாபு முதல் சூர்யா வரை.. சொந்தக்குரலில் பாடிய நடிகர், நடிகைகள்!

Surya
Surya ( vikatan )

தமிழில் பேசும் படங்கள் வெளியான காலத்தில் பெரும்பாலும் நாடகங்களே படமாக்கப்பட்டன. அவற்றில் பாடல்களே அதிகம் நிறைந்திருக்கும். அந்தந்தக் கலைஞர்களே அவரவர்களுக்கான பாடல்களைப் பாடியிருப்பர்.

மிழில் பேசும் படங்கள் வெளியான காலத்தில் பெரும்பாலும் நாடகங்களே படமாக்கப்பட்டன. அவற்றில் பாடல்களே அதிகம் நிறைந்திருக்கும். அந்தந்தக் கலைஞர்களே அவரவர்களுக்கான பாடல்களைப் பாடியிருப்பர். நீண்டகாலத்துக்குப் பிறகுதான் பின்னணிப் பாடகர்கள் வர ஆரம்பித்தனர். குறிப்பிட்ட சில பாடகர்களே பிரபலமான நடிகர்களுக்குப் பாடத் தொடங்கினார்கள். வேற்றுமொழி நடிகர்கள் வருகையாலும், சில நடிகர்களின் குரல் தெளிவின்மையாலும் நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுப்பதும் அதிகரித்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் தாங்கள் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு பாடலை சொந்த குரலில் பாடும் ஃபேஷன்  மீண்டும் உருவானது. தொடர்ந்து இல்லாவிட்டலும் அவ்வப்போது நடிகர்கள் பாடிவந்தார்கள். 1960-70களில் நடிகர் சந்திரபாபு தனக்கான பாடல்களை அவரே பாடி நடித்தார். தத்துவம், விரக்தி, சோகம், காமெடி என அவர் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட். `பிறக்கும்போதும் அழுகின்றார்... இறக்கும்போதும் அழுகின்றார்...', `குங்குமப்பூவே...' போன்ற பாடல்கள்  இப்போதும் பிரபலம். நடிகைகளைப் பொறுத்தவரையில் பானுமதி தனக்கான பாடல்களை அவரே பாடுவார். அவருடைய வார்த்தை உச்சரிப்பு தனித்தன்மை வாய்ந்தது. `அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்', “கண்ணிலே இருப்பதென்ன...” போன்ற அவரின்  பாடல்களை எல்லோரும் ரசிப்பர்.

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையான மனோரமா, அந்தக் காலத்திலேயே நாடகக் காட்சிகளை விவரிக்கும்வகையில் அதன் சூழ்நிலைகளைப் பாடலாகப் பாடி, பார்வையாளர்களை அசரவைத்தவர். அவரைப்போல வட்டார வழக்கில் பாடும் பெண் கலைஞர் இன்று இருக்கிறார்களா என்பது சந்தேகமே. `வா வாத்தியாரே வூட்டாண்டே, நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன்...' `தில்லா டோமிரி டப்பாங்குத்து பாட்டுப் பாடுவேன்...' என அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் பிரசித்தம். சந்திரபோஸ் இசையில் `டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே' பாடல் இவரின் குரல் நயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.

`இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் அதை இருப்பவனும் எண்ணிபார்க்க மறந்துட்டான்' என்று, வில்லன் நடிகரான அசோகன் அப்போது பாடிய ஒரு தத்துவப் பாடல், மக்களிடம் அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியதாகச் சொல்வார்கள். 

நடிகர்களில் தொடர்ச்சியாக சிறப்பான பாடல்களைப் பாடியதில் கமலுக்கு தனி இடம் உண்டு. ஜெயகாந்தனின் `மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் `அட மாமா சரக்கு இன்னிக்கு நல்லால்லை....' என்ற பாடலை கன்னடத்து ஷ்யாம் இசையில் பாடி அசத்தியிருப்பார். `பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு...' என்று மென்சோகப் பாடலை எப்போதும் ரசிக்கலாம்.  `நினைவோ ஒரு பறவை...  விரிக்கும் அதன் சிறகை...' என்ற வரிகளை காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியிருப்பார். அதன் மென்மையான இசைக்கு இளையராஜாவின் மெட்டும் காரணம்.   `அபூர்வ சகோதரர்கள்' படத்தில் `ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லை' பாடலை எஸ்.பி.பி-யும் பாடியிருப்பார், கமலும் பாடியிருப்பார். இசைத்தட்டில் இரண்டு பாடல்களும் தனித்தனியாக இருந்தாலும் பலருக்கு அதன் வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முடியாது. அதேபோல் பாலக்காட்டுத் தமிழில் `மைக்கேல் மதன காம ராஜன்' படத்தில் `சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்...' `தேவர் மகனில் `இஞ்சி இடுப்பழகி', `சதிலீலாவதி'யில் கொங்கு தமிழில் `மாறுகோ மாறுகோ...' `ஹேராமில்' `நீ பார்த்த....'  எனத் தொடர்ந்து இன்றும் பாடிக்கொண்டிருக்கிறார். 

பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் ருசிபார்த்த ரஜினி, பாடல்களைப் பாடுவதிலும் ஆர்வம்கொண்டார். `மன்னன்' படத்தில் `அடிக்குது குளிரு...'என்ற பாடல் மூலம் தன் குரலை தானே பரிட்சித்துப்பார்த்தார். இவரின் உச்சரிப்புக்கும் வேகத்துக்கு ஏற்ப இளையராஜாவின் மெட்டு அமைந்திருக்கும். இவரின் உடல்மொழி மற்றும் ஸ்டைல் வார்த்தைகளிலும் எதிரொலிப்பதை ரசிகர்கள் கவனித்திருக்கலாம்.

`தங்கைக்கோர் கீதம்' படத்தில் கொட்டாங்குச்சியை வைத்துப் பாடினார் டி.ராஜேந்தர். திரைத் துறையில் இவருடைய படைப்புக்களுக்குத் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். அதில் ஒன்றுதான் அவர் பாடல் பாடுவது. குத்துப்பாடல் முதல் சோகப்பாடல் வரை இவருக்கு அனைத்தும் தண்ணி பட்டப்பாடு. `இவரைப்போல் நாமும் பாடினால் என்ன?' என பாக்யராஜும் `இது நம்ம ஆளு' படத்தில் `பச்சமலை சாமி ஒண்ணு உச்சிமலை ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம்...' எனப் பாடினார்... திரைக்கதை ஆசானின் திறமை, திரையின் பின்னணியிலும் எதிரொலித்தது.

தன் உடல்மொழியால் மக்களைக் கவர்ந்த வடிவேலுக்குப் பாடல் பாடுவது  அல்வா சாப்பிடுவது மாதிரி. `எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு கேட்கும்...' `சந்தன மல்லிகையில் தூளி கட்டிப் போட்டேன்' போன்ற பாடல்கள் வடிவேல் ஒரு சிறந்த பாடகர் என்பதை நிரூபித்தன. நகைச்சுவையுடன் குணச்சித்திர வேடங்களில் கதையை நகர்த்துவதில் பெரும்பாங்காற்றும் இவர், இசை தொடர்பான எந்தப் பின்னணியும் இல்லாமல் தன் கேள்விஞானத்தால் மட்டுமே பாடல்களைப் பாடி ரசிகர்களைப் பரவசப்படுத்துபவர்.

நடிக்க வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே `அமரன்' படத்தில் `வெத்தலை போட்ட ஷோக்குலே....' என்ற பாடலைப் பாடினார் நவரச நாயகன் கார்த்திக். அதே படத்தில் நடிகை ஸ்ரீவித்யாவும் `சண்டே பஜாரு, ரொம்ப உஷாரு...' ஒரு கலக்கலான பாடலைப் பாடியது குறிப்பிடத்தக்கது. இவர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரின் வார்த்தை உச்சரிப்பு, பாவம் போன்றவை மிகத் தெளிவாக இருந்தன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்த பிறகு, வித்தியாசமான பல குரல்கள் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்தன. சுரேஷ் பீட்டர், அப்பாச்சி இண்டியன் எனப் பலருக்கும் திரையில் பின்னணிப் பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவருக்கு எந்த மாதிரியான குரல்வளம் இருக்கிறதோ அதற்கு ஏற்ற பாடல்களைக் கொடுத்துப் பாடச் சொல்வதில் தேர்ந்தவர் ரஹ்மான். `கருத்தம்மா' படத்தில் பாரதிராஜாவையே `காடு பொட்டல்காடு... ' எனப் பாடவைத்தவர்.

பாடல்களைப் பிசிறு தட்டாமல், மூச்சுவாங்காமல் பாடுவதில் நடிகர் விஜய் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் தாய், உறவினர்கள் அனைவரும் பாடகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. `பம்பாய் சிட்டி சுக்கா ரோட்டி', `தொட்டப்பெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா' எனப் பாடத் தொடங்கியவர் பிறகு  `வாங்கண்ணா வணக்கங்கண்ணா', `கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு...' என ஜாலி மெலடிகளைப் பாடி அனைவரையும் ஈர்த்துவருகிறார்.

`அஞ்சா'னில் சூர்யா பாடிய பாடல் கொஞ்சம் கவனம் பெற்றது.  அவரைப்போல நடிகர் சிம்பு, தனுஷ் எனப் பல நடிகர் நடிகைகள்  பாடிவருகிறார்கள். அவரவர் பணியை மிகச்சிறப்பாகச் செய்வதில் திரையுலகம் ஒவ்வொரு நாளும் புதுப்புது வடிவம் பெற்றுவருகிறது. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என தற்போது பல்வேறு பணிகளில் உள்ள இன்னும் பல திரை நட்சத்திரங்கள் தங்கள் குரல்வளத்தைப் பிரபலப்படுத்த இருக்கிறார்கள். வித்தியாசமான படைப்புகளை வரவேற்கும் ரசிகர்களுக்கு, மனம் விரும்பும் நட்சத்திரங்களே பாடுவது என்பது சர்க்கரைப் பாகில் தேன் ஊற்றுவதுபோல் டபுள் தமாக்கா மொமென்ட்.

சிறப்பு!

அடுத்த கட்டுரைக்கு