Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘இன்று நான் மணிரத்னமாக இருக்க, அவர்தான் காரணம்!’’ பாலசந்தர் குறித்து மணிரத்னம் நெகழ்ச்சி

தமிழ் சினிமாவுக்கு மாற்று முகத்தை விதைத்த இயக்குநர் சிகரம் பாலசந்தருக்கு அவர் பிறந்த ஊரில் சிலை நிறுவப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகின் தவிர்க்க இயலாத அடையாளங்களுள் ஒருவர் இயக்குநர் பாலசந்தர். தயாரிப்பு நிறுவனங்களும், திரை பாலசந்தர்நட்சத்திரங்களும் கோலோச்சிய காலத்தில் இயக்குநராகக் களம் கண்டு, தன்னையும் தன் படங்களையும் நிலை நிறுத்தியவர் கே.பாலசந்தர். தமிழ்த் திரையுலகுக்கு ஏராளமான முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கியவர் என்ற சிறப்பு அவருக்கு உண்டு. இவற்றுக்கெல்லாம் மணிமகுடமாக 2010-ம் ஆண்டு பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 2014 டிசம்பர் 23-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மண்ணுலகில் இருந்து மறைந்தார்.

ஜூலை 9-ம் தேதி, சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நல்லமாங்குடி கிராமத்தில் அவருக்கு வெண்கலச் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலசந்தரின் பிறந்த நாள் மற்றும் சிலை திறப்பு விழாவில் மனைவி ராஜம் பாலசந்தர், மகள் புஷ்பா கந்தசாமி, கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் வசந்த்சாய், பிரமிட் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். வெண்கலச் சிலையை ராஜம் பாலசந்தர் திறந்துவைத்தார்.

பாலசந்தருடனான தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் வசந்த்...

``அவருடன் பணியாற்றிய 18 படங்களும் 32 வருடப் பயணமும் மறக்க முடியாதவை. `அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் தொட்டில் ஆடுவதுபோன்று ஒரு சீன். `தொட்டிலை யார் ஆட்டுகிறீர்கள்?' என்று இயக்குநர் கேட்டார். அப்போதுதான் உதவி இயக்குநராகச் சேர்ந்திருந்தேன். ஆர்வக்கோளாறில் `நான் ஆட்டுகிறேன்' எனச் சொன்னதும் கேபி சார் சம்மதித்தார். நான் தொட்டில் ஆட்டுவதை இயக்குநர் கவனிக்கிறாரா என்று நான் அவரைப் பார்த்தேன். உடனே `கட் கட் கட்' என்று சத்தம் போட்ட கேபி சார், என்னைத் திட்டினார்.  `ஏன் சார் திட்டுறீங்க?' என்று இடையிலேயே கேட்டுவிட்டேன். `ஏன் திட்டுறேன்னுகூட தெரியலையா... அங்கே பார்' என்கிறார். தொட்டில் மிக வேகமாக  ஆடிக்கொண்டிருந்தது. `சரி, ரெண்டாவது டேக் போலாம், இப்ப யார் தொட்டிலை ஆட்டுறா?' என்றார். அதற்கு மீண்டும் `நானே தொட்டிலை ஆட்டுறேன் சார்' என்றதும், `தொட்டிலை கரெக்டா ஆட்டணும்' என்றார். இந்த முறை கேபி சார் என்னைக் கவனிப்பது பற்றியெல்லாம் கவலையில்லை. என்னுடைய வாழ்க்கையின் லட்சியமே தொட்டிலைச் சிறப்பாக ஆட்டுவதுதான் என்பதுபோல தொட்டிலை ஆட்டத் தொடங்கினேன். அந்தக் காட்சி மிகச் சிறப்பாக வந்தது. அப்படியும் என்னைத் திட்டினார், அதுவும் முன்பைவிட மோசமாக.  ஒன்றும் புரியாமல் விழித்தேன். `இப்ப செய்ததை முன்பே செய்யவேண்டியதுதானே' என்றார் அதுதான் கேபி சார். `அவள் ஒரு தொடர்கதை' படத்தில் கவிதா கேரக்டர் வீட்டினுள் நுழைவது தெரிந்தவுடன், வீட்டில் எல்லாரும் தங்கள் வேலைகளைச் செய்வதற்கு ஆயத்தமாகிவிடுவர். ஆனால், ஒரு குழந்தை மட்டும் அழுதுகொண்டிருக்கும். கவிதா கேரக்டர் தன் செருப்பை அவிழ்த்துவிடும் சத்தம் கேட்டதும், அந்தக் குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்'' என்றார் வசந்த்சாய்.

``நானும் இதே தெருவைச் சேர்ந்தவன்தான். அவர் வீடு பிள்ளையார் கோயிலுக்கு முன்னாடி நான்காவது வீடு. என் வீடு பிள்ளையார் கோயிலுக்குப் பின்னாடி இரண்டாவது வீடு.  அவர் படித்த அதே பள்ளியில்தான் நானும் படித்தேன். பிறகு, வேலை மாறுதல் காரணமாக ஊர் மாறி மாறி வேறு ஊர் போய்விட்டோம்.  அவர் எனக்கு உறவினரும்கூட. புஷ்பாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில்தான் கேபி-யை மீண்டும் சந்திச்சேன். இதே வீட்டில்தான் நாடகம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது  பற்றிய அவரின் கரம் இன்று வரை என்னுடைய கலையுலகுக்கு வழிகாட்டுகிறது.

கே.பாலசந்தர்

`கே.பாலசந்தர்' என்ற டைட்டிலுக்காகவே மக்கள் வருவர். நடிகரின் படம் என்பதைவிட இயக்குநரின் படம் என்ற பாணியை உருவாக்கியது கேபி சார்தான்.  போன வருடம், இந்த நாளில் அவரின் நினைவைப் போற்றும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் புஷ்பா. அப்போது என் மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருந்தேன்.  புஷ்பாவிடம் போன் செய்து `நிகழ்ச்சிக்கு வர முடியாது எனச் சொல்லிடலாமா' என யோசித்தேன். அப்போது `இயக்குநர் நிகழ்ச்சிக்குப்  போகலையா?' என்று கேட்டார் என் மனைவி. `உனக்கு உடம்பு முடியலையே அதான் வரவில்லைன்னு சொல்லிட்டேன்' என்றேன். அதுக்கு மனைவி `நீங்க இயக்குநர் நினைவு நிகழ்ச்சிக்கு நிச்சயமாப் போகணும்' என்றார். அதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை'' என தன் வருத்தங்களைப் பகிர்ந்துகொண்டார் பிரமிட் நடராஜன்.

இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது...

``சின்ன வயசுலே என்னை ஹாஸ்டலில் சேத்துட்டாங்க. அதனால் சினிமா பார்க்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.  ஒருமுறை  சினிமா பார்க்க அஞ்சு ரூபாய் கொடுத்தார் என் அப்பா.  அன்று நான் பார்த்த படம் `இருகோடுகள்'. அதுவரை நடிகர்கள்தான் முக்கியம் என்றிருந்த என் பிம்பத்தில், இயக்குநர் புதிய தேடல் தந்திருந்தார். `ரோஜா' படத்தின்  டைட்டில் சொன்னபோது, `என்ன இது, பாக்குத்தூள் மாதிரி இருக்கு?' என்றவர் அடுத்த நாள் `அதுவே இருக்கட்டும்' என்றார். அவரிடம் `வசனம் எழுதுங்க சார்' என்றேன். `அது சரியா இருக்காது. என் வசனம் எனக்குத்தான் சரியா இருக்கும்' என்றார் கேபி. அது இப்போதுதான் புரிகிறது, ஆசிரியரிடம் மாணவனே என் விடைத்தாளில் நீங்களே விடையெழுதுங்கள் என்பது போன்றது.

பாலசந்தர் - மணிரத்னம்

வைரமுத்து மணிவிழா கோவையில் நடந்தது. அதற்கு சென்னையிலிருந்து கோவை சென்றோம். விமானம் கிளம்பிய பிறகு, அவர் எடுக்க இருந்த அடுத்த கதையைக் கூறினார். முதலில் அவரிடம் நான் கதை கூறினேன். இப்போது அவர் கதை கூறுகிறார். அந்த நாளில் அவர் கடந்து வந்த பாதை, அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.  அந்த ஒருநாள் முழுவதும் அவருடன் இருந்தேன். கடைசியாக என் தோளில் அவர் தட்டிய நாள் அது. இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கான காரணம் அவர்தான்'' என்று நெகிழ்ந்தார் மணிரத்னம்.

இயக்குநர் பாலசந்தருக்குச் சிலை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுத்த கவிப்பேரரசு வைரமுத்து புகழுரை ஆற்றினார்...

கே.பாலசந்தர்``நான் புவியரசனாக இருந்திருந்தால் 80 கிலோ தங்கத்தால் சிலை செய்திருப்பேன். ஆனால், கவிராஜனாக இருப்பதால் வெண்கலச் சிலை செய்திருக்கிறேன். எனக்கு அவருக்கு சிலை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்ததும் நிறைவேற்ற நினைத்தேன். புஷ்பாதான் சொன்னார், `இப்போது அப்பா சிலை இருக்கும் இடம்தான் அப்போது திண்ணை. தாத்தாவின் வேட்டியை மறைத்து அப்பா முதன்முதலாக நாடகம் போட்ட இடம்' என்று. 86 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நட்சத்திரங்கள் அறிந்திருக்காது, தமிழ் சினிமாவுக்கு மாற்று சினிமா பிறந்திருக்கிறது என்று; உறவினர்கள் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள், தாதா சாகேப் பால்கே விருது பெறப்போகும் இயக்குநர் பிறந்திருக்கிறார் என்று; தமிழகம் அறிந்திருக்காது, கமல்-ரஜினி எனும் மாபெரும் கலைஞர்களைத் திரைக்கு அறிமுகம் செய்யப்போகிறார் என்று; இந்தக் காற்று அறிந்திருக்காது கலையாக வந்தவன் இங்கே சிலையாகப் போகிறான் என்று.

அவற்றை எல்லாம் நனவாகிப்போய்விட்டன. பாலசந்தர், தனிமனிதன் அல்ல; அவர் ஒரு நிறுவனம். அதனால் இந்தச் சமுதாயம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர், குடியரசுத் தலைவரிடம் விருதுபெறும் அளவுக்கு வளர்ந்தார் என்றால் அவரின் உழைப்பை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். இளைஞர்களே இந்தச் சிலை உங்களை மெளனமாக ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.

சினிமாவில் வெற்றிபெறுவது என்பது, புல்லில் நடந்து பூப்பறிப்பது போன்றதல்ல... முள்ளில் நடந்து தேன் எடுப்பது போன்றது. நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்தது, நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது,இயக்குநர்களின் ஆதிக்கம் இருந்தது. இவ்வளவு சுவர்களைத் தாண்டி சினிமாவில் ஒருவன் புகழ்க்கொடி நாட்டினான் எனச் சொன்னால், அவருக்கு மரியாதை செலுத்துவதுதான் அவருக்கு நாம் செய்யும் சிறப்பு.

மூச்சுவிட்டாலே உடைந்துவிடும் அளவுக்கு உலகத்திலே நிலையில்லாத பொருள் எதுவோ, அதையே தன் படத்துக்குத் தலைப்பாக வைத்தார் பாலசந்தர்,  `நீர்க்குமிழி'. இந்தத் தலைப்பு வைக்கவே மிகவும் துணிச்சல் வேண்டும்.  `புன்னகை மன்னன்' படத்தில் நான் பாட்டு எழுதியிருப்பேன். `என்ன சத்தம் இந்த நேரம்...' பாடலில்,

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதரவாய்ச் சரிந்துவிட்டால் ஆரிரரோ பாடு...

இந்த வரிக்கு ஒரு நியாயம் செய்திருப்பார் பாலசந்தர். அந்த சீனில் ஃப்ரேமை வலது புறமும் இடது புறமுமாக ஆட்டுவார். அது தாலாட்டு. வரிகளை உயிர்ப்பிக்க எப்படியெல்லாம் போராடினார் இயக்குநர், அதுதான் பாலசந்தர்.

`தண்ணீர் தண்ணீர்' படத்தில் வரும் பஞ்சத்தின் உச்சத்தைக் காட்டும் காட்சி, நெஞ்சில் தைப்பதாக இருக்கும். அப்படி ஒரு காட்சி, பத்திரிகையாளன் அந்த ஊருக்குள் செல்கிறான், கோடரியால் ஒருவன் கலப்பையை வெட்டிக்கொண்டிருக்கிறான். கலப்பையும் ஏர் மாடும்தான் எங்கள் கடவுள். அந்தக் கடவுளையும் உடைத்து அவன் சாப்பிடுகிறான் எனக் காட்சிப்படுத்தியிருப்பார்.  பாலுணர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. காதல் இல்லாமல் சினிமா இல்லை.  பாலுணர்ச்சியைக் கதை செய்பவர்தான் நாகரிகமானவர். கதையை பாலுணர்ச்சி செய்ய முடியாது. `சிந்துபைரவி' படத்தில் ஜேகேபி-யும் சிந்துவும் இணைவது எவ்வளவு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தினார்.

வேலைவாங்குவதில் பாலசந்தர் தேர்ந்தவர். ஒருவரின் உச்சபட்ச திறமை என்னவோ அதை வாங்கிவிடுவார். ரஜினியிடம் என்ன இருக்கிறது, கமலிடம் என்ன உள்ளது, எம்எஸ்வி-யிடம் உச்சம் தெரியும், வாலியிடம் என்ன உள்ளது தெரியும், வைரமுத்துவின் அதிகபட்சம் என்ன  இருக்கிறது தெரியும். ஒவ்வொருவரிடமும் அவரின் அதிகபட்சத் திறனை வெளிப்படுத்தும் வரை விட மாட்டார். பாலசந்தர் படங்களில், வெற்றி பெற்ற படங்கள், தோல்வியான படங்கள் என எதுவும் இல்லை. புரிந்துகொள்ளப்பட்ட படங்கள், புரிந்துகொள்ளப்படாத படங்கள் என்றுதான் வகைப்படுத்த முடியும்.

கே.பாலசந்தர்

இந்த ஊரில் `பாலசந்தர், இந்த ஊருக்கு என்ன செய்தார்?' என்று சிறிய முனுமுனுப்பு இருக்கிறதாம். அதற்கு நான் பதில் கொண்டுவந்திருக்கிறேன். கலைஞன் என்பவன், உங்கள் சட்டமன்ற உறுப்பினர் அல்ல; உங்கள் வார்டு கவுன்சிலர் அல்ல. வானத்தில் இருந்துகொண்டு பிரபஞ்சத்துக்கே வேலை செய்துகொண்டிருக்கிறான். ஊருக்காகப் பெய்யும் மழை அவன், உங்கள் வீட்டுக் குழாய்களில் அவன் வடிய மாட்டான். ஊருக்கெல்லம் மழை பெய்தால் உங்கள் வீட்டுக்கும் தண்ணீர் வரும். அவரது தாக்கத்தால் இந்த மண்ணிலிருந்து நூறு இளையவர்கள் உருவாகிறார்களே அதுதான் பெருமை. கலைஞனை அரசியல்வாதி ஆக்கிவிடாதீர்கள். அவரது பாத்திரங்கள், படைப்புகள், காட்சிகள் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சொத்து. சொல்லப்போனால், நல்லமாங்குடியின் சொத்து தேச உடைமையாக்கப்பட்டுள்ளது.  அவரது முதல் படம் `நீர்க்குமிழி', கடைசிப் படம் `பொய்'. நீ வாழ்ந்த உடல் அழிந்துவிடும் நீர்க்குமிழிபோல், அதிலிருந்து நிலைத்த அழியா புகழ்கொண்டவன் கலைஞன். இந்த வாழ்க்கை என்பது பொய், அதில் மெய் செய்பவன் கலைஞன். பாலசந்தர் கலைஞன். வாழ்க அவரது புகழ்'' என்று நிறைவு செய்தார் வைரமுத்து.

விழாவின் இறுதியில் புஷ்பா கந்தசாமி நன்றி கூறினார். கமல்ஹாசன் வருவாரா...மாட்டாரா என நல்லமாங்குடிவாசிகள் பெட் செய்ததும் குறிப்பிடத்தக்கது. வைரமுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும்போது, ``உடல் நலமில்லாத காரணத்தால் கமல்ஹாசனால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை'' எனக் கூறினார்.

சிகரம் எப்போதும் சிகரம்தான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்