Published:Updated:

ரகளை தனுஷ், ரகுவரன் கெமிஸ்ட்ரி, பாசிட்டிவ் கஜோல்! - செளந்தர்யா ரஜினிகாந்த் ஷேரிங்ஸ்

ரகளை தனுஷ், ரகுவரன் கெமிஸ்ட்ரி, பாசிட்டிவ் கஜோல்! - செளந்தர்யா ரஜினிகாந்த் ஷேரிங்ஸ்
ரகளை தனுஷ், ரகுவரன் கெமிஸ்ட்ரி, பாசிட்டிவ் கஜோல்! - செளந்தர்யா ரஜினிகாந்த் ஷேரிங்ஸ்

தனுஷ் நடித்துள்ள  `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின்  ரஷ் பார்த்தவர்களின் பாராட்டு மழையில் உச்சிக் குளிர்ந்திருக்கிறார் சௌந்தர்யா. ரஜினி, தாணு, கஜோல், தனுஷ் குறித்து மனம்விட்டு பேசுகிறார் செளந்தர்யா.  

 “கஜோல் - தனுஷ் தோன்றும் காட்சிகள் செம டஃப் எனச் சொல்கிறார்களே?”

“ `வி.ஐ.பி-2' படப்பிடிப்பில் தனுஷ் சார், கஜோல் மேம் இருவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கத் தொடங்கியதிலிருந்தே ரகுவரன் கதாபாத்திரத்துக்கும் வசுந்தரா கதாபாத்திரத்துக்கும் கெமிஸ்டரி பிரமாதமாகப் பொருந்திப்போனது. கஜோல் மேம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாலே எங்களுக்குள் ஒரு பாசிட்டிவ் வைபரேஷன் தொற்றிக்கொள்ளும்.  தனுஷ் சார், கஜோல் மேம் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் பிரமாதமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது. படத்தைப் பார்க்கும்போத அதை நீங்களே உணர்வீர்கள். தமிழ் ரசிகர்களின் ரசனையைப் புரிந்து உருவாகியிருக்கும் ‘வி.ஐ.பி-2 ’ திரைப்படம், அவர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்திசெய்யும்.''

“ `வி.ஐ.பி-1’ படத்தில் தனுஷ் பேசிய நீ...ண்ட வசனம் பிரசித்தி. அதுபோல ‘வி.ஐ.பி-2’ படத்திலும் விசேஷக் காட்சி...''

“முதல் பாகத்தில் இடம்பெற்ற தனுஷ் சாரின் புகழ்பெற்ற நீ...ண்ட வசனம் போன்ற வெற்றிக்கான காரணிகள், காட்சிகள் நிச்சயமாக இரண்டாம் பாகத்திலும் இடம்பெறும். வழக்கமாக, ஏழையாக இருந்து பணக்காரராக உயரும் ஒருவர், தன்னுடைய பழைய வாழ்க்கையை மறந்து பணக்காரர்களோடு சேர்ந்துகொள்வது இயல்பு. அதுபோல இல்லாமல்  பழைய நாள்களை மறக்காத இயல்புகொண்ட ரகுவரன் கேரக்டர், அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்படும்.''

“ `வி.ஐ.பி-2' படத்தில் பின்னணி இசையின் பங்கு பெரிய பலம் என்கிறார்களே?”

“சினிமாவில் இசையின் பங்களிப்பு, தவிர்க்க முடியாத ஒன்று. என் இனிய நண்பர் ஷான்ரோல்டனின் இசை, ‘வி.ஐ.பி-2' படத்தின் முதுகெலும்பாகப் பங்குவகிக்கிறது. இசையில் தொழில்நுட்பமும், நுண்ணறிவும்கொண்ட ஷான்ரோல்டன் போன்ற இசையமைப்பாளரை சினிமா உலகில் காண்பது அரிது. தனுஷ் சாருக்கும் ஷான்ரோல்டனுக்கும் நல்ல புரிதல் உண்டு என்பது ஏற்கெனவே அவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘பவர் பாண்டி’ திரைப்படம் மெய்பித்தது. இப்போது அடுத்து வரவிருக்கும் ‘வி.ஐ.பி-2’ படமும் நிச்சயம் நிரூபிக்கும்.'' 

“ `வி.ஐ.பி-2' படத்தின் வேலைகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?''

“தினசரி எடுக்கவேண்டிய காட்சிகளை முதல் நாளிலேயே திட்டமிட்டு முடிவுசெய்து படமாக்கினோம். அதேபோல மறுநாள் படமாக்கவேண்டிய வேலைகளையும் தேவைகளையும் முன்கூட்டியே கவனத்தில்கொண்டு உழைத்தோம். ‘வி.ஐ.பி-2’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்துவருகின்றன. உங்களைப்போலவே நானும் ஜூலை 28-ம் தேதிக்காக ஆசையோடு காத்திருக்கிறேன்.''

“ `கலைப்புலி’ தாணு தயாரிப்பில் டைரக்‌ஷன் செய்த அனுபவம் பற்றி..?''

“திரைத் துறையில் பல ஆண்டுகளாக தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொண்ட தயாரிப்பாளர். தமிழ் சினிமாவின் பிரமாண்டத் தயாரிப்பாளரான அவரின் உயரத்தை அண்ணாந்து பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். `வி.ஐ.பி-2' படத்தை தாணு அங்கிள் தயாரிக்கிறார் என முடிவானவுடன் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவருடைய அனுபவமும் ஆலோசனையும் என்னை சிறப்பாக வழிநடத்தியது. தாணு அங்கிளையும் அவரது மகன் பரந்தாமன் சாரையும் என்னுடைய குடும்ப உறுப்பினராகத்தான் பார்க்கிறேன். வி.கிரியேஷன்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் டைரக்‌ஷன் செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய கனவு,  ‘வி.ஐ.பி-2’ வாயிலாக நிறைவேறியுள்ளது. இதே நிறுவனத்தில் இன்னும் பல படங்களை இயக்கிப் பணியாற்ற ஆசைப்படுகிறேன். `தாணு அங்கிளின் தயாரிப்பு நிறுவனம்' எனும் கிரீடத்தில் ‘வி.ஐ.பி-2’ திரைப்படம் இன்னொரு வைரக்கல்லாக மின்னும் என்பது நிச்சயம்.''

“ரஜினி மகள் என்கிற ஒளிவட்டம் சாதகமா... பாதகமா?''

“ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருப்பதில் சாதகங்களும் உண்டு... பாதகங்களும் உண்டு. எங்களைச் சுற்றி இருப்பவர்கள் எங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. என் அப்பா மூலம் அதிகமான நன்மைகள் எனக்குக் கிடைப்பதாகப் பலரும் நினைக்கிறார்கள். என்னால்  முழுமையாக நீங்கள் நினைப்பதை அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தமான உண்மை.''

ரகுவரனுக்கும் தனுஷுக்குமான கெமிஸ்டிரி, 'ரகுவரன்' என்ற பெயர்மூலம் இந்தப் படத்திலும் தொடர்கிறது.