Published:Updated:

''என் பையனுக்காக தேடினேன்... நானே பயிற்சியாளர் ஆனேன்!'' - 'பாப்' ஷாலினியின் புது அவதாரம்

''என் பையனுக்காக தேடினேன்... நானே பயிற்சியாளர் ஆனேன்!'' - 'பாப்' ஷாலினியின் புது அவதாரம்
''என் பையனுக்காக தேடினேன்... நானே பயிற்சியாளர் ஆனேன்!'' - 'பாப்' ஷாலினியின் புது அவதாரம்

"சினிமாவுல நிறையவே வொர்க் பண்ணிட்டேன். இப்போ, சில வருஷங்களாகக் குழந்தைகள் பட்டாளத்துடன் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக நகர்ந்துட்டிருக்கு. அது, பெரிய சந்தோஷத்தைக் கொடுக்குது" என உற்சாகமாகப் பேசுகிறார், பிரபல பின்னணிப் பாடகி 'பாப்' ஷாலினி. 

''பாப் பாடல்களால் புகழ்பெற்ற உங்களை இப்போவெல்லாம் சினிமா மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பார்க்க முடியறதில்லையே'' என்று கேட்டதும், மெல்லிய புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் ஹாலினி. 

"சின்ன வயசுல தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக பல மேடைகளில் ஆடிப் பாடி நடிச்சேன். பதினைஞ்சு வயசுலயே 'நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் 'ஐலேசா ஐலேசா' பாட்டுப் பாடி சினிமாவுக்குள் வந்தேன். தொடர்ந்து சினிமா, மேடை நிகழ்ச்சிகளில் பிஸியா வொர்க் பண்ணினேன். பதினான்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான சினிமாப் பாடல்களையும், தனி ஆல்பங்களையும் பாடினேன். நான் அதிகமா பாடினது, பாப் பாடல்கள்தான். என் சினிமா என்ட்ரி சமயத்தில் நடிகை ஷாலினியும் பீக்ல இருந்ததால, 'பாப்' எனக்கு அடைமொழியாச்சு. ஒரு கட்டத்தில் சினிமாவில் ஒரே மாதிரி பாடறோம்னு எண்ணம் வந்தது. அதனால், சினிமா சான்ஸ் குறைஞ்சப்போ வருத்தப்படலை. கவனத்தை கணவர், குழந்தை மேல் திருப்பினேன். குடும்ப லைஃப் எனக்கு மனநிறைவைக் கொடுத்துச்சு. என் பையனை சில பயிற்சி வகுப்புகளுக்கு அழைச்சுட்டுப் போக ஆரம்பிச்சேன். அதுதான் குழந்தைகள் சூழந்த உலகத்துக்குள் நான் நுழைய காரணமா இருந்தது" என்கிற ஷாலினி, குழந்தைகளுக்கான மல்டி டேலன்ட் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். 

"என் பையன் ஆதித்யாவுக்கு மியூசிக், டான்ஸ், ஆக்டிங் எனப் பல திறமைகளுக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன். நிறைய முயற்சி செய்தும் அப்படி ஒண்ணு அமையலை. நமக்குத்தான் டான்ஸ், மியூசிக் தெரியுமே. நாமே பயிற்சி கொடுக்கலாமேனு என் பையனிடம் ஆரம்பிச்சேன். இந்தக் காலத்து குழந்தைகள் பலருக்கும் ஆக்டிங், டான்ஸ், மியூசிக் எனப் பல விஷயங்கள் தனித்தனியா கிடைக்குது. அவை எல்லாத்தையும் ஒரே இடத்தில் கொடுக்கும் ஒரு பயிற்சி பட்டறைதான் நான் நடத்தும் 'ட்ரெஷர் ட்ரோவ் புரொடக்‌ஷன்'. இங்கே நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். நான் நல்லா ஸ்கிரிப்ட் எழுதுவேன். அதில், இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விஷயங்கள் இருக்கும். அப்படி, 12 மாநிலங்களில் நடக்கும்படியான காட்சி அமைப்புகளால் ஸ்கிரிப்ட் தயார்செய்வேன். பேக்கிரவுண்டு போட்டோ விஷூவல்ஸோடு, அந்தக் கதைக்கான வசனம், நடனம், மியூசிக், பாட்டு, நடிப்பு எனப் பல விஷயங்களைக் குழந்தைகள் சேர்ப்பாங்க. அஞ்சு மாசத்துக்கு...குறிப்பா வீக் எண்ட் நாட்களில் இந்த வகுப்புகள் நடக்கும். அதில், பல துறையின் பிரபலங்கள் பங்கேற்று சொல்லிக்கொடுப்பாங்க. வாய்ஸ் பிராக்டீஸ், மியூசிக் சொல்லிக்கொடுக்கிறதில் என் பங்கு அதிகமா இருக்கும். 

பயிற்சி முடிஞ்சதும் பிரமாண்டமான ஸ்டேஜ் ஷோ நடக்கும். அந்த ஃபைனல் நிகழ்ச்சியைப் பார்க்க நிறைய பிரபலங்கள், பல அமைப்புகளைச் சேர்ந்தவங்க வருவாங்க. அவங்க குழந்தைகளின் திறமையைப் பார்த்து மதிப்பிடுவாங்க. இது, அந்த குழந்தைகளுக்கு பல தளங்கள்ல வாய்ப்புக் கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும். 'ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன்' சான்றிதழோடு, வருஷத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான செலவில் நடக்கும் இந்த ஃபைனல் நிகழ்ச்சியால் நிறைய குழந்தைகளின் திறமை வெளிவருது. குழந்தைகள் கூச்ச சுபாவம் இல்லாம எல்லா இடங்களிலும் தனித்துவமா செயல்பட முடியும். நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த வருடத்துக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்குது. குழந்தைகளோடு பயணிக்கிற அனுபவம் ரொம்பவே சுவாரஸ்யமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்குது" என்கிற ஹாலினி, மக்கள் கொடுத்த 'பாப்' பட்டத்தை நினைத்து இப்போதும் நெகிழ்கிறார். 

"சினிமாவுல கனெக்டடாக இல்லாட்டியும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கேன். சமீபத்தில்கூட என் குழந்தைப் பருவ புகைப்படங்களை மெர்ஜ் பண்ணி வீடியோவாக அப்லோடு செஞ்சேன். அதைப் பார்த்து பலரும், 'பாப் ஷாலினியா உங்க குரலை, டான்ஸை ரொம்பவே மிஸ் பண்றோம்'னு சொன்னாங்க. மக்கள் எனக்குக் கொடுத்த 'பாப்' அடைமொழியை எப்பவும் மறக்கமாட்டேன். மீண்டும் சினிமா வாய்ப்பு வந்தால் நிச்சயம் பாடுவேன். தனிப்பட்ட முறையிலயும் நிறைய ஆல்பங்களை செய்வேன். எப்பவும் மக்களை சந்தோஷப்படுத்திட்டே இருக்கணும். அதுதான் என் ஆசை" எனப் புன்னகைக்கிறார் ஷாலினி. 

பின் செல்ல