Published:Updated:

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்?

நா.சிபிச்சக்கரவர்த்தி
`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்?
`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்?

`என்ன நினைச்சுக்கிட்டு, என்ன சாதிக்கணும்னு இந்த `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள வந்தீங்க?' என நிகழ்ச்சியின் முதல் நாளில் கமல் கேட்ட கேள்விக்கு ஆரவ் சொன்ன பதில், `எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் இந்த சினிமாவுக்குள் இருப்பது ரொம்ப கஷ்டம். அதனால, இந்த `பிக் பாஸ்' எனக்கான ஓப்பனிங்கா இருக்கும்னு நினைச்சுதான் வந்தேன். என் முழு முயற்சியையும் உழைப்பையும் போட்டு இங்கே இருப்பேன். எனக்கான மேடையை நான் உருவாக்குவேன்' என்றார்.

ஆரவ், `பிக் பாஸ்' வீட்டுக்குள் வொர்க்அவுட் செய்துகொண்டே ஓவியாவுடன் பேசும்போதுதான் `யாருப்பா இந்தப் பையன்?' என முதன்முதலில் கவனிக்கப்பட்டார். அதன் பிறகு ஓவியாவும் இவரும் காதலைப் பற்றிப் பேசிக்கொண்டது, `பிக் பாஸ்' ஸ்கூலில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பாடம் கற்றது, இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடியது என ஜோடியாகவே வீட்டுக்குள் வலம் வந்தார்கள். விஜய் டி.வி-யும் இருவருக்கும் இடையே `காதல் மலர்ந்தது' எனத் தலைப்பிட்டு புரொமோஷன் செய்து லைக்ஸ் குவித்தது. ஒருகட்டத்தில் வீட்டினுள் இருந்த போட்டியாளர்களே இருவரையும் சேர்த்துவைத்துக் கிண்டலடிக்கத் தொடங்கினர். நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும் `சம்திங் சம்திங்' என முனுமுனுத்துக்கொண்டனர். 

இந்த ஆரவ் யார்... இந்த நிகழ்ச்சிக்குள் எப்படி வந்தார்? 

ஆரவ், சொந்த ஊர் நாகர்கோவில். ஆனால், இவரின் குடும்பம் பல ஆண்டுகளாக வசித்துவருவதோ திருச்சியில். ப்ளஸ்டூ  வரை திருச்சியில் படித்தவர், கல்லூரிப் படிப்புக்காகத்தான் சென்னை வந்திருக்கிறார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்து பிரபல பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதுதான், ஆரவ்வுக்கு மாடலிங் மீதும் சினிமா மீதும் ஆர்வம் வந்தது. தொடர்ந்து ஜிம்முக்குப் போய் உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டார். பைக் ப்ரியரான இவர், நண்பர்களுடன் அடிக்கடி பைக்கில் லாங் ட்ரிப் போவது வழக்கம். 2012-ம் ஆண்டு கல்லூரி முடித்தவுடன் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலைகிடைத்தது. வீட்டின் வற்புறுத்தல் காரணமாக அந்த வேலையில் சேர்ந்தாலும், சினிமாவுக்கான தன் தேடலையும் தொடர்ந்தார். இதை இவரின் குடும்பத்தினர் ரசிக்கவில்லை. 

இரண்டு வருடங்கள் கழித்து அந்த வேலையையும் விட்டுவிட்டு முழு நேர மாடலானார். பல தயாரிப்பாளர்கள் அலுவலகங்களின் கதவைத் தட்டி வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணா என்கிற பிரபல புகைப்படக்காரரின் அறிமுகம் கிடைத்தது. ஆனந்த கிருஷ்ணா போகும் இடமெல்லாம் ஆரவையும் அழைத்துச் சென்றார். ஆரவை வைத்து பல மாடலிங் ஷூட்டையும் நடத்தினார். பார்த்துப் பழகியதும் பிடித்துவிடும் குணம் உடையவராம் ஆரவ். அதனால், பல தயாரிப்பாளர்களும் `நீங்க பேசுறது பழகுறது எல்லாமே பிடிச்சிருக்கு. ஆனா, ஃபேஸ் வேல்யூ இல்லையே...' என சில இடங்களில் நிராகரிக்கப்பட்டார். ஆனாலும் தொடர் முயற்சியால் `வா அருகில் வா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். விஜய் ஆண்டனி நடித்த `சைத்தான்' படத்தில் ஃப்ளாஷ்பேக்கில் வரும் நெகட்டிவ் ரோலில் நடித்தார். அடுத்த படத்துக்காகக் காத்திருந்தபோதுதான் `பிக் பாஸ்' அழைப்பு வந்தது. சினிமாவுக்குள் நுழைய, இது நல்ல வாய்ப்பு என உடனே ஒப்புக்கொண்டார். 

``ஆரவ்... ரொம்ப நல்ல பையன். சட்டுனு கோபப்பட மாட்டான்.  எல்லோரையும் புரிஞ்சு நடந்துப்பான். `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குக் கூப்பிடுறாங்கனு சொன்னதும் என்கிட்ட `நான் அதுல கலந்துக்கிறது சரியா?'னு கேட்டான். `கமல் சார் தொகுத்து வழங்குறார். உன் எதிர்கால சினிமா கனவுக்கு நிச்சயமா இது ஒரு நல்ல மேடையா இருக்கும்'னு சொன்னேன். அதே மாதிரி அவனை இப்போ எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க, ரொம்ப மகிழ்ச்சி'' என ஆரவ் பற்றி ஆர்வமாகப் பேசுகிறார் புகைப்படக் கலைஞர் ஆனந்த கிருஷ்ணா. 

``அவன் இந்த நிகழ்ச்சியில கலந்துக்க கிளம்பும்போது என் வீட்டுல டி.வி-யே கிடையாது. அவனுக்காகத்தான் இப்போ புது டி.வி வாங்கி நிகழ்ச்சியைப்  பார்க்கிறேன். அவனுக்கு அவன் குடும்பத்தின் மீதும், கடவுளின் மீதும் பக்தி அதிகம். ஆள் பார்க்க மார்டனா இருந்தாலும், பக்கா டிரெடிஷனல் பையன். இந்த நிகழ்ச்சியில் அவன் நிச்சயம் ஜெயிப்பான். அதே மாதிரி அவனுக்கான சினிமா வாய்ப்பும் இனி கிடைக்கும்னு நினைக்கிறேன்'' என்றவரிடம், ஓவியாவுக்கும் ஆரவுக்கும் இடையே ஓடும் மெல்லிதான காதல் பற்றிக் கேட்டேன். பதறியவர்...

``ஆரவை எனக்கு நாலு வருஷமா தெரியுங்க. அவன் நல்ல பையன். அவன் ஒருநாளும் இப்படிப் பண்ண மாட்டான். ரொம்பத் தெளிவான பையன். `நம்ம ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பார்த்துட்டிருப்பாங்க... இப்படிப் பண்றதை எல்லாம் பார்த்தால் கஷ்டப்படுவாங்க'னு அவனுக்குத் தெரியும். இனிமே பாருங்க... ஆரவ் நடவடிக்கையில் மாற்றம் இருக்கும்'' என்கிறார்.  

ஆரவ் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும்!

படங்கள் :  வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணா