Published:Updated:

திட்டித் தீர்க்கவோ, பாராட்டிக் குவிக்கவோ... எதற்கும் கை கொடுக்கும் பாலா படங்கள்! #HBDBala

திட்டித் தீர்க்கவோ, பாராட்டிக் குவிக்கவோ... எதற்கும் கை கொடுக்கும் பாலா படங்கள்! #HBDBala
திட்டித் தீர்க்கவோ, பாராட்டிக் குவிக்கவோ... எதற்கும் கை கொடுக்கும் பாலா படங்கள்! #HBDBala

`அரை கிலோ கறி... நாலு நல்லி எலும்பு, அதுக்கு ஒரு தலை... அதுல கனம் வேறயா?' - விகடன் மேடையில் `தலைக்கனம் பிடித்தவராமே நீங்கள்?' என்ற வாசகரின் கேள்விக்கு இயக்குநர் பாலாவின் பதில் இது. இந்த ஒல்லி உருவம்தான், தமிழ் சினிமாவின் ரசனையை அகலப்படுத்தியது; கமர்ஷியலுக்குள் உழண்டுக்கொண்டிருந்த சினிமாவை, யதார்த்த உலகுக்குள் தமிழ் ரசிகர்களை அழைத்துச் சென்றது; `இப்படி ஒரு படத்தை இவரால் மட்டுமே எடுக்க முடியும்' என்ற பிம்பத்தை உருவாக்கியது. இவரின் படங்கள் `யாருடைய படத்தில் நடிக்க ஆசை?' என்ற கேள்விக்கு நடிகர், நடிகைகள் பெயரை பரிந்துரை செய்துகொண்டிருந்த நிலையை மாற்றி,  `இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க வேண்டும்' என்ற வார்த்தைகளை உதிர்க்கவைத்தது. `சேது', `நந்தா', `பிதாமகன்', `நான் கடவுள்', `அவன் இவன்', `பரதேசி', `தாரை தப்பட்டை' என தன் படங்களில் மனித உணர்வுகளைக் காட்சிப்பொருளாக்கி, யதார்த்தத்தைப் பேசுபொருளாக்கி, சக மனிதர்களின் வலியை பார்வையாளர்களுக்கும் கடத்திய கலைஞன் பாலாவுக்கு, இன்று பிறந்த நாள். 

`சினிமாவில் பாலா ஏன் தேவை?' என்ற கேள்வியின் கண்ணோட்டத்தில் பார்த்தால், பாலாவின் அவசியம் புரியும். ஒரு சினிமாவில் நல்ல கதை இருக்க வேண்டும். பாலாவின் படங்களின் பலமே அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள்தான். சமூகத்தில் யாரும் எட்டிப்பார்க்காத அவலங்களை, தனிமனித உணர்வுகளை, எல்லோரும் ஒதுக்கும் விஷயங்களை தன் படத்தில் பயன்படுத்தினார் பாலா. அவரின் படம், அதிரடி நாயகனின் ஆழமான காதல் உணர்வையும்,  வலையில் சிக்கியதால் மனநலக் காப்பகத்தில் தஞ்சம் அடைந்த தனி ஒருவனைப் பற்றியும் பேசியது; தாயின் அன்புக்காக ஏங்கிச் செத்தவனின் கதையைச் சொன்னது; காசியில் வாழும் அகோரிகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது; மறந்துபோன வரலாறுகளையும், அதில் இருந்த வலியையும்கூட சொன்னது.

பாலாவின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். `சேது' படத்தில் முதல் பாதியில் ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருந்த `சீயான்' இரண்டாம் பாதியில் மனநலக் காப்பகத்தில் நிர்கதியாக நின்றார். தாய்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த `நந்தா', அம்மாவின் கையாலேயே சாவைச் சந்தித்தார். சுடுகாட்டில் பிறந்து சமூகத்தோடு ஒட்டாத ஒரு `பிதாமகன்', சமூகத்தைச் சந்தித்துவிட்டு `இந்தச் சமூகத்தில் வாழ்வதைவிட சுடுகாடே மேல்!' எனக் கிளம்பினான். தமிழ்நாட்டின் தலைக்குமேல் இருக்கும் அகோரிகளின் வாழ்க்கையையும், தமிழ்நாட்டின் இருள் உலகில் இருக்கும் பிச்சைக்காரர்களின் உலகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டிருந்தது, `நான் கடவுள்'. வாழ்வாதாரத்துக்காக தேயிலைத் தோட்ட வேலைக்குப் போய் செத்துப் பிழைத்தவர்களின் உண்மைக் கதையை `பரதேசி'யில் கண்முன் கொண்டுவந்தார். 

பாலாவின் கதாபாத்திரங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத புது மனிதர்களாக இருப்பார்கள். அவர் படங்களில்தான், ஹீரோ வெட்டியானாக இருப்பதை, அகோரியாக அலைவதை, தோட்டத் தொழிலாளியாக அடிவாங்குவதைப் பார்க்க முடியும். அப்படிக் காட்டப்படும் ஹீரோக்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஏற்றுக்கொள்ளும்விதமாக திரைக்கதை அமைக்கவேண்டும். அந்தப் பக்குவம் பாலாவிடம் இருக்கிறது. தவிர, தான் செதுக்கிய ஒரு கதாபாத்திரம் தன்னையும் மீறி அதிக பலத்தோடு திரைவடிவம் பெறும்போது, அதைக் கவனமாகக் கையாளும் திறனும் பாலாவுக்கு உண்டு. அதற்கு அவரது திரைக்கதையும், கேரக்டர்களின் உருவாக்கமுமே சிறந்த உதாரணங்கள்.

பாலாவின் படங்களில் நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன; அவர் திணிக்கும் கருத்துகளின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன. அவரின் படங்களின் முடிவுகளில் பல கருத்து முரண்கள் இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், திட்டித்தீர்க்கவோ, பாராட்டிக் குவிக்கவோ... பாலாவின் படங்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவை. ஏனெனில், வணிக சினிமா வட்டத்துக்குள் இருந்துகொண்டு தமிழ் சினிமாவைத் தலைநிமிர செய்த சில இயக்குநர்களில் பாலா முக்கியமானவர்.

சந்தோஷமான தருணங்களில் இயக்குநர் பாலா, `எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன். நான் வாழ யார் பாடுவார்...' என்ற பாடலைக் கேட்பாராம். அவருடைய பிறந்த நாளான இன்று, அவர் வாழ நாம் பாடலாம்!