Published:Updated:

''கல்யாணமான புதுசுல ’நீங்கதான் எல்லாம்’னு பினாத்தியிருக்கேன்!'' - 'ஜீ டான்ஸ் லீக்' தீபக் மனைவி சிவரஞ்சனி

''கல்யாணமான புதுசுல ’நீங்கதான் எல்லாம்’னு பினாத்தியிருக்கேன்!'' - 'ஜீ டான்ஸ் லீக்' தீபக் மனைவி சிவரஞ்சனி
''கல்யாணமான புதுசுல ’நீங்கதான் எல்லாம்’னு பினாத்தியிருக்கேன்!'' - 'ஜீ டான்ஸ் லீக்' தீபக் மனைவி சிவரஞ்சனி

ஜீ தமிழ் சேனலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் 'நண்பேன்டா' நகைச்சுவை நிகழ்ச்சியின் புரொடியூசர் யார் தெரியுமா..? முன்பு ஒளிபரப்பான 'ஜோடி டான்ஸ் லீக்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த தீபக்கின் மனைவி சிவரஞ்சனிதான். விஜய் டி.வியில் பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான 'கிராண்ட் மாஸ்டர்' நிகழ்ச்சிக்கு அசோசியேட் புரொடியூசராக பணிபுரிந்தவர். பிறகு, பல வருடங்களாக தன்னுடைய பிசினஸில் கவனம் செலுத்திவந்தவர், தற்போது ஜீ தமிழ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். ஒரு பரபரப்பான மாலை நேரத்தில் அவருடன் பேசினோம்... 

''நீங்க தனியாக கம்பெனி நடத்துகிறீர்களாமே...'' 

''ஆமாம்! 'அக்னித் என்டர்பிரைசஸ்' என்கிற பேக்கிங் மெட்டீரியல் கம்பெனியை ஐந்து வருடங்களாக நடத்திட்டிருக்கேன். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு எங்கள் மெட்டீரியல்களை கொடுக்கிறோம். இந்த கம்பெனியை ஆரம்பிச்சுக் கொடுத்தவர் என் அப்பா.'' 

''உங்கள் அப்பா ஒரு கம்பெனியை ஆரம்பித்துக் கொடுத்ததுக்கு தீபக் எதுவும் சொல்லலையா?'' 

''அவர் 'பிக் பேங்க் கிரியேஷன்ஸ்' என்கிற கம்பெனியை நடத்துறார். எப்பவும், யாரையும் யாரும் சார்ந்திருக்கக் கூடாதுனு நினைப்பவர் தீபக். 'நான் அதைச் செய்யட்டுமா? இதைச் செய்யட்டுமா?'னு தீபக்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு செய்யறதில்லை. அவருடம் அதை எதிர்பார்க்க மாட்டார். என் கம்பெனியை ஆரம்பிச்சபோது முதல்ல சந்தோஷப்பட்டது தீபக்தான்.'' 

''விஜய் டி.வியிலிருந்து ஏன் விலகுனீங்க?'' 

''பிரச்னைனு எதுவுமில்லை. என் குழந்தை பிறந்தபோது அவனுக்கு முழுமையாக நேரம் ஒதுக்கிப் பார்த்துக்கணும்னு வேலையை விட்டேன். மகன் கொஞ்சம் வளர்ந்ததும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல், வேலைப் பார்க்க நினைச்சேன். அப்பா கம்பெனி ஆரம்பிச்சுக் கொடுத்தார். விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு இந்த வேலையைப் பார்கிறோமேனு தோணுச்சு. அந்த நேரத்தில் கிடைச்ச வாய்ப்புதான், ஜீ தமிழின் 'நண்பேன்டா' நிகழ்ச்சி. இப்போ, பிஸினஸ் ப்ளஸ் டிவின்னு ரெண்டையும் ஹேப்பியா பண்ணிட்டிருக்கேன்.'' 

''உங்க கணவருக்கு நீங்கதான் காஸ்ட்டியூம் டிசைனரா?'' 

''அப்படியெல்லாம் இல்லைங்க. அவர் எது நல்லா இருக்குனு கேட்பார். அப்போ செலக்ட் பண்ணிக்கொடுப்பேன். மத்தப்படி அவருக்கு என் நெருங்கிய தோழி மஹாதான் காஸ்ட்டியூம் டிசைனர். இப்போ, ஜீ தமிழ் 'ஜீ டான்ஸ் லீக்' நிகழ்ச்சியில் அவருக்கான அத்தனை காஸ்ட்டியூமும் மஹாதான்.'' 

''தீபக் வெளியில் கலகல பார்ட்டியாக இருக்கிறார்.. வீட்டில் எப்படி?'' 

''நீங்க பார்க்கிற அதே ஆள்தான் வீட்டிலும். அவரும் பையன் அக்னித்தும் பண்ற சேட்டைகளை இன்னிக்கு முழுக்க சொல்லிட்டே இருக்கலாம். எனக்கு வருத்தமான ஒரு விஷயம், தீபக் ஷூட்டிங்னு கிளம்பிட்டால், ரெண்டு நாள் ஆனாலும் போன் பண்ண மாட்டார். 20 மணி நேரம் ஓய்வில்லாமல் நிகழ்ச்சி பண்ணுவார். எல்லாம் முடிஞ்சு அடிச்சுப் போட்ட மாதிரி வருவார். 'ஏன் இப்படி கஷ்டப்படுத்திக்கிறீங்க?'னு கேட்பேன். ஓய்வு நேரத்தில் நாங்க எல்லாரும் சேர்ந்தால், கொண்டாட்டம்தான்.'' 

''உங்கள் மகன் பற்றி...'' 

அக்னித் எங்களுடைய இன்னொரு உலகம். மூன்றாம் வகுப்பு படிக்கிறான். சமத்துப் பையன். சுதா ராஜா என்கிற பாட்டு டீச்சரிடம் பாட்டு கத்துக்கறான். உத்ரா உன்னி கிருஷ்ணனின் ஆசிரியர் அவர்.'' 

''கணவர், குழந்தைகள், வீடு, பிசினஸ் இப்போது சேனல் வேலை, எப்படி இருக்கு இந்த பிஸியான லைஃப்?'' 

''எனக்கு எப்பவும் எதையாவது பண்ணிட்டே இருக்கணும். வீட்ல வேலைகளை முடிச்ச பிறகும் சும்மா இருக்க மாட்டேன். எதையாவது இழுத்துப்போட்டு செய்ய ஆரம்பிச்சுடுவேன். என்னதான் பெமினிசம் பேசினாலும், நம்முடைய வெற்றிகளில் ஃபேமிலி சப்போர்ட் ரொம்ப தேவை. நான் ஒரு வேலைல இருந்தாலோ, வீட்டுக்கு வர லேட் ஆனாலோ 'பிரஷர் பண்ணிக்காதே, வீட்டு வேலைகளை நான் பார்த்துக்கிறேன். மெதுவா வா'னு தீபக் சொல்லிடுவார். கல்யாணமாகி பத்து வருஷம் ஆச்சு. என்னைச் சார்ந்து அவரோ, அவரைச் சார்ந்து நானோ இருக்கிறதில்லை. கல்யாணமான புதுசுல 'நீங்கதான் எல்லாமே'னு அவர்கிட்டே பினாத்தியிருக்கேன். 'அப்படியில்லை. நீ நீயாக இரு. நீ சொல்றது வசனத்துக்குச் சரியா இருக்கலாம். நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது. எனக்காக எதையும் நீ மாத்திக்க வேண்டாம்'னு சொன்னார். எனக்கு அப்போ அது கஷ்டமாக இருந்தாலும், இப்போ நினைச்சுப் பார்க்கும்போது புரியுது. நல்லவேளை, என் பிதற்றலை அவர் எடுத்துக்கலை'' என்று சிரிக்கிறார் சிவரஞ்சனி.