ஸ்பெஷல் 1
Published:Updated:

‘போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!’

கு.ஜெயச்சந்திர  ஹாஷ்மி

சில நாட்களுக்கு முன்பு, ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருந்தபோது, த்ரிஷாவின் 31-வது பிறந்தநாள் பற்றிய ஜெயச்சந்திர ஹாஸ்மியின் போஸ்ட், நம்மை வெகுவாக ஈர்த்தது. அதை அப்படியே அவள் விகடனுக்கு கட்டுரையாக்கித் தரும்படி கேட்டோம். இதோ அந்தக் கட்டுரை..!

சில நாட்களுக்கு முன், நடிகை த்ரிஷாவின் 31-வது பிறந்தநாள் வந்தது. இதையொட்டி ஃபேஸ்புக்கில் போடப்பட்ட பெரும்பாலான பதிவுகள், 'த்ரிஷா ஆன்ட்டி ஆயாச்சு’ என்பதையே மீண்டும் மீண்டும் சுட்டின. இதே ஃபேஸ்புக்கில் சிலநாட்களுக்கு முன் அஜீத்தின் 43-வது பிறந்தநாள் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு முன் ரஜினியின் 63-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அடுத்த மாதம் விஜய்யின் 40-வது பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் குவியும்.

நடிப்புக்கு வயது என்றுமே தடையில்லை என்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அது நாயகனுக்கு மட்டும் செல்லும் என்பது, நாயக வழிபாட்டின் வெளிப்பாடு. நடிகன், தலைமுறைகள் கடந்தும் ரசிக்கப்படுவதும், வயதும் கவர்ச்சியும் இருக்கும்வரை மட்டும் நடிகைகள் ரசிக்கப்படுவதும், பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனோபாவமே!  

‘போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!’

ரஜினி, கமலுக்கும், விஜய், அஜீத்துக்கும் ஆகாத வயதா... த்ரிஷாவுக்கு ஆகிவிட்டது? இதுபோன்று ஒரு கதாநாயகி, ஒரு பெண், அவள் உடல் சார்ந்து மட்டுமே ரசிக்கப்படும் அவலமான ரசனையை குறை சொல்லும்முன், இதற்கெல்லாம் அடிப்படையான தமிழ் சினிமாவில், பெண்கள், நாயகிகள், எப்படிக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள் என்று பார்ப்பதும் மிக அவசியம்.

நகைச்சுவை, பாடல், கதை என்று அனைத்துப் பிரிவுகளிலும் பெண் என்பவள், தமிழ் சினிமாவில் எவ்வளவு கீழ்த்தரமாக சித்திரிக்கப்படுகிறாள் என்று நம் காலத்திய படங்களைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் தெரியும்.

சமீபகால சினிமாவில், காதலிகளைத் திட்டிப் பாடும் பாடல்கள்தான் 'டிரெண்ட்’. அதை முட்டாள்தனமான வரிகளுடன் ஒரு பாட்டாக்கிவிட்டால், படம் ஹிட்டாகிறதோ இல்லையோ, அந்தப் பாடல் நிச்சயம் ஹிட். படத்துக்கு விளம்பரத்தையும் தேடித் தந்துவிடும். ஆனால், இதுபோன்ற பாடல் வரிகளுக்கும், படத்தில் அது வரும் சூழலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

உதாரணத்துக்கு 'கொலவெறி’ பாடல். காதலி வெளிநாட்டுக்குப் போகிறேன் என்று சொல்வாள். இத்தனைக்கும் காதலோடுதான் சொல்வாள். காதல் வேண்டாம் என்றுகூட சொல்லமாட்டாள். ஆனால், காதலன் பீச்சுக்குப் போய், அவள் தன்னை ஏமாற்றிவிட்டாள், தன்னை விட்டுப் போய்விட்டாளென 'ஒய் திஸ் கொலவெறி’ பாடுவான்.

'ஏழாம் அறிவு’ படத்தில் 'யம்மா யம்மா’ பாடல் மெலடியில் காதலிகளைத் திட்டுகிறது. படத்தில் அதுவரையிலான காட்சிகளில் அந்தப் பெண் காதல் என்ற நோக்கில் நாயகனிடம் பழகியிருக்கக்கூட மாட்டாள். நாயகனே தவறாகப் புரிந்துகொண்டு, 'பெண்களின் காதல் கைக்குட்டை போல’ என்று தத்துவம் உதிர்ப்பான்.

இவற்றைவிட இன்னொரு அற்புதப் பாடல், 'மயக்கம் என்ன’ படத்தின் 'அடிடா அவள’ பாடல். படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் அதுவரையில் காதலே வந்திருக்காது. ஆனால்... என் காதல் போச்சு, கண்ணீர்தான் மிச்சம், காதலி என்னென்ன சூது செய்தாள் என்றவாறே அப்பாடல் முழுவதும் எழுதப்பட்டிருக்கும்.

இன்னொரு அருவருக்கத்தக்க பாடல், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப்பாடல். ஒரு பெண்ணை நாயகன் சைட் அடிப்பான். நன்றாக கவனியுங்கள்... சைட் மட்டும்தான் அடிப்பான். அதில் எங்கும் காதலே இருக்காது. அந்தப் பெண் இவனை காதலிப்பது போல் எந்த ஒரு சமிக்ஞையும் தந்திருக்கவே மாட்டாள். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் என்று கேள்விப்பட்டவுடன், 'இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா’ என்று அறிவுபூர்வமான பாடலைப் பாடுவான் நாயகன்.

ஒரு பெண், ஒருவனைக் காதலிக்காமல் போவதால் மட்டுமே, அவள் தவறானவளாகி விடுவாளா? படம் பார்க்கும் ரசிகனைத் தங்களுக்கு வெகு கீழே, சொல்லப்போனால் முட்டாளாகவே நினைத்திருக்கும் சூழலில்தான் இதுவெல்லாம் நடக்கும். இதில் கொடுமை என்னவென்றால், காதலில் வெற்றி பெற்றவனும் இதுபோன்ற பாடல்களுக்கு, வசனங்களுக்குக் கைதட்டுகிறான்.

பெண்கள் மீதான இந்த ஏளனத்தை, கொஞ்சம் கொஞ்சமாக அத்தனை இளைஞர்கள் மனதிலும் விதைத்து, கல்லாப்பெட்டியை நிரப்பியபடியே இருக்கிறது சினிமா. முன்புபோல இப்போதெல்லாம் 'லவ் ஃபெயிலர்’ என்பது ஓர் உணர்வுப் பிரச்னையாக இல்லாமல், 'பிரேக் அப்’ என்பது சமூக அந்தஸ்தாகவே சித்திரிக்கப்படுகிறது. அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்த வரிகளெல்லாம், எத்தகைய வன்மையான, எள்ளலான உணர்வை அவர்கள் தோழிகளின் மேல் ஏற்படுத்தும்..!

சினிமாவில் வருவதுபோலவே தங்கள் கல்லூரி வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை, ஊர் வாழ்க்கை, நண்பர்களுடனான வாழ்க்கை என்று அனைத்தையும் கட்டமைத்து வாழும் ஆசை இங்கே பரவலாக இருக்கிறது. இந்நிலையில் பெண்களை தவறாக சித்திரிக்கும் இந்தப் போக்கு, நிஜ வாழ்விலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தூண்ட ஒரு காரணியாக அமைந்துவிடக்கூடும்.

‘போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!’

சொல்லப்போனால், இதுதான் வன்மையான ஆபாசம். பெண்கள் தொப்புள் தெரிந்தாலோ, ஸ்லீவ்லெஸ் போட்டபடி வந்தாலோ, 'கலாசாரம் பாழாப்போச்சே’ என்று அதை வெட்டச் சொல்லும் சென்ஸார் போர்டின் காதுகளுக்கும் கண்களுக்கும் இதெல்லாம் போகாதா? ஒரு பெண்ணை எவ்வளவு கேவலமாகத் திட்டியும் உங்களால் வசனம் எழுதி, அப்படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நிலையில்தான் இந்த சமூகத்தில் பெண்களின் நிலை இருக்கிறதா? இதுவே அரசியல், சாதி பற்றி பேசும் ஒரு படத்தை இங்கே வெளியிட்டுவிட முடியுமா?

ரசிகனுக்கு என்ன பிடிக்குமோ... அதை கொடுப்பது நல்ல கலை அல்ல. என்ன தேவையோ, அதைப் பிடிக்கும் விதத்தில் கொடுப்பதுதான் சிறந்த கலை. எப்படி ஸ்டார் வேல்யூ, ஹீரோயின் இடுப்பு, காமெடி, சண்டை என்று இதெல்லாம் வணிக சினிமாவின் வெற்றிக் கூறுகளாக நிறுவப்பட்டதோ, அதேபோல் காதலிகளை, பெண்களை... காதலில் கல்தா கொடுப்பவர்களாக, ஏமாற்றிக் கூடுதாவுபவர்களாக காட்டுவதும் ஒரு கூறாகவே நிறுவப்பட்டு வருகிறது. இன்றுவரை அது வெற்றிபெற்றும் வந்திருக்கிறது என்றால், அது எவனோ ஒருவன் சினிமா திரை வழியாக நம்மேல், நம் அம்மா, அக்கா, தங்கைகள் மேல், நம்மைச் சுற்றியுள்ள பெண்கள் மேல் துப்பிக்கொண்டிருக்கும் எச்சில்தான்.

இதை துடைக்கக்கூட கைதூக்காமல், கைதட்டிக் கொண்டிருக்கிறோம்... இத்தனை நாளாக. இனியாவது பதிலுக்குத் துப்புவோமே... 'போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்’ என்று!