Published:Updated:

“ராஜா சார் ஆசிர்வதிச்ச பொண்ணு நான்!” - பாட்டுக் குயில் ப்ரணிதி

“ராஜா சார் ஆசிர்வதிச்ச பொண்ணு நான்!” - பாட்டுக் குயில் ப்ரணிதி
“ராஜா சார் ஆசிர்வதிச்ச பொண்ணு நான்!” - பாட்டுக் குயில் ப்ரணிதி

“போன உசுரு வந்திருச்சு...” என்று மெல்லியக் குரலில் ப்ரணிதி பாடும்போது, அந்தக் குரலுக்கு நம் இதயம் மெட்டு இசைக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ‘சுட்டி’ சூப்பர் சிங்கராக அறிமுகமாகி, தற்போது, யூடியூப் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாட்டு தேவதை. தற்போது, அமெரிக்காவில் வசித்துவரும் ப்ரணிதி, அலைபேசியில் பேசினார்.  

“யூடியூப்பில் பாட்டுப் பாடி கலக்குகிறீர்களே...” 

''நான் முதலாம் வகுப்பு படிக்கும்போதே, சென்னையில் இருக்கும் 'கே.எம் காலேஜ் ஆஃப் மியூஸிக் அண்டு டெக்னாலஜி'யில் சேர்ந்து மூன்று வருடங்கள் படிச்சேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடிதான், அப்பா எனக்கு யூடியூப் பக்கத்தை ஆரம்பிச்சுக் கொடுத்தார். என் குரல் நிறையப் பேருக்குப் பிடிச்சது. வந்த கமெண்ட்ஸ் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துச்சு. தேங்க்ஸ் அப்பா, அம்மா.'' 

''நீங்க பாடின முதல் பாட்டு எது?'' 

“ஐ திங்க்... நான் ரொம்ப குட்டியா இருக்கும்போது பாடியிருப்பேன். அதனால், ஞாபகமில்லை (செல்லமாகச் சிரிக்கிறார்). என்னுடைய மூணாவது வயசுல கே.எம் காலேஜ்ல ’ஒயிட் ஆரஞ்சு அண்டு கிரீன் பாட்டு’ பாடினது ஞாபகம் இருக்கு. அது ஒரு ஐரிஷ் பாட்டு. எனக்குக் கிடைச்ச முதல் கைதட்டல் அந்தப் பாட்டுக்குத்தான். அந்த மேடையை என்னால மறக்க முடியாது.” 

“இவ்வளவு நல்லாப் பாடறீங்களே உங்க மியூஸிக் டீச்சர் யாரு?''

“நான் நிறைய பேர்கிட்ட மியூசிக் கத்துக்கிட்டேன். கே.எம் காலேஜ்ல வெஸ்டர்ன் மியூசிக் கத்துக்கிட்டேன். இப்போ, முர்துசா முஸ்தாஃபா கான் சார்கிட்ட இந்துஸ்தான் கத்துக்கிறேன். எனக்கு இசையைக் கத்துக்கொடுத்த ஒவ்வொருத்தருமே முக்கியமானவங்க.'' 

'' ’சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் பாடும் வாய்ப்பு எப்படி கிடைச்சது?'' 

''ஒருநாள் இமான் சார், அவரோட ஸ்டியோவுக்கு வரச் சொன்னாரு. நான் பாடியிருந்த ‘மிருதா மிருதா’ பாட்டைப் பாராட்டினார். அப்புறம், ’சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் வரும் ’லங்கு லங்கு லபகரு’ பாட்டு பத்தி சொல்லி, ஒருதடவை அந்தப் பாட்டைப் பாடிக் காட்டினார். அதே மாதிரி நானும் பாடினேன். இரண்டு, மூணு இடத்துல திருத்திக்கச் சொன்னார். 'சூப்பர் ப்ரணிதி, நான் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமே பாடி முடிச்சிட்டே'னு பாராட்டினார்.''

''இப்போ என்ன படிக்கிறீங்க?'' 

''அமெரிக்காவின் ஹவாய்ல இருக்கிற ’சால்ட் லேக் எலிமெண்டரி’ ஸ்கூல்ல ஃபோர்த் கிரேட் படிக்கிறேன்.''

''ப்ரணிதிக்கு ரொம்ப பிடிச்ச உணவுகள்?'' 

''ம்.... தோசை, சிக்கன் பிரியாணி, இறால் தொக்கு ரொம்பப் பிடிக்கும்.''

''பாட்டு தவிர ஓய்வு நேரத்தில் என்ன பண்ணுவீங்க?'' 

''எனக்கு கிராஃப்ட் வொர்க் பண்ண ரொம்பப் பிடிக்கும். கதைப் புத்தகங்கள் படிப்பேன்.'' 

''உங்க ஸ்வீட் வாய்ஸின் ரகசியம் என்ன ப்ரணிதா?'' 

''சில குரல் பயிற்சிகள் செய்வேன். ஐஸ்கிரீம், சாக்லேட் அதிகமா சாப்பிட மாட்டேன்.'' 

''இளையராஜாவை சந்திச்சீங்களாமே...'' 

''எஸ்... எஸ்... ஒருநாள் ராஜா சார் ஸ்டுடியோவிலிருந்து வாய்ஸ் டெஸ்ட் பண்ண கூப்பிட்டாங்க. அப்பா இதைச் சொன்னதும், சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சேன். அவ்வளவு ஹாப்பி! அவரை நேர்ல பார்த்ததும் எனக்கு என்ன பேசுறதுனே தெரியலை. தமிழ் வெஸ்டர்ன் சாங் ஒண்ணு பாடச் சொன்னார். ’தனி ஒருவன்’ படத்தில் வரும், 'காதல் கிரிக்கெட்’ பாட்டைப் பாடிக் காட்டினேன். 'ரொம்ப நல்லாப் பாடுறேம்மா'னு ஆசீர்வாதெம் செஞ்சார். இது, என் குரலுக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்!'' 

“அடுத்த ப்ளான்?”

“எல்லா ஸ்டைலிலும் பாடணும். இசையைப் பத்தி இன்னும் நிறைய கத்துக்கணும். கூடிய சீக்கிரமே பியானோவும் கிட்டாரும் கத்துக்கப்போறேன்.”