Published:Updated:

``ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்களைப் பிடிக்காது!” - சினிமாவுக்கு வந்த கவிஞர் அ.வெண்ணிலா

``ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்களைப் பிடிக்காது!” - சினிமாவுக்கு வந்த கவிஞர் அ.வெண்ணிலா
``ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்களைப் பிடிக்காது!” - சினிமாவுக்கு வந்த கவிஞர் அ.வெண்ணிலா

`` `சினிமாவில் நான்’ என்பது என் நீண்ட நாள் யோசனை. லிங்குசாமி சார் `ரன்’ படத்தில் அனுஹாசன் கேரக்டரில் நடிக்கக் கூப்பிட்டார். அப்ப எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்த நேரம். அதனால் நடிக்க மறுத்தேன். பலர் பாட்டு எழுதக் கூப்பிட்டனர். `இது புலிவாலைப் பிடிக்கும் விஷயம். ஃபேமிலி - சினிமா ரெண்டையும் பேலன்ஸ் பண்ண முடியுமா?’னு நினைச்சு தவிர்த்தேன். இப்ப பிள்ளைகள் வளர்ந்துட்டாங்க. 'காதலில் விழுந்தேன்’ பட இயக்குநர் பி.வி.பிரசாத் ’என் அடுத்த படத்துக்கு வசனம் எழுதுறீங்களா?’னு  கேட்டதும் ஆர்வம் வந்துடுச்சு. இப்ப அவரோட  `சகுந்தலாவின் காதலன்’ படத்தில் அசோசியேட் டைரக்டரும்கூட!’’ - புதுக்கலையைக் கற்கும் ஆர்வம் ப்ளஸ் சந்தோஷத்துடன் பேசுகிறார் கவிஞர் வெண்ணிலா.

``வீடு, இடம், நகை... இப்படி ஏதோ ஒரு தேவை நம்மைச் சந்தோஷப்படுத்தும்னு நம்பி ஓடிட்டே இருக்கோம். ஆனா, இது எல்லாத்தையும் கடந்து மனித உறவுகளும் அதன் உண்மையான அன்பும்தான் காலத்துக்குமான சந்தோஷம். அப்படி நிலையான சந்தோஷத்தைத் தரும் அன்பைப் பற்றி இந்தப் படம் பேசும். நான் சீரியஸாகப் படம் பார்க்கும் ஆள் கிடையாது. நண்பர்கள் சொல்லும், பத்திரிகைகள் சிலாகிக்கும் படங்கள்னு தேர்வுசெய்து பார்ப்பேன். என் 17-வது வயசு வரை அப்பா-அம்மாதான் எங்களை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. அப்படி வளர்ந்த என்னை, `நீங்க டைரக்‌ஷனுக்கும் வரணும்’னு சொல்லி பிரசாத் ஷூட்டிங் கூட்டிட்டு வந்தார். போகப்போக இந்த ஆர்ட் ஃபார்ம் மீது அவ்வளவு காதல் வந்துடுச்சு. ஒரு திரைப்படம் உருவாகிற இடமும் அப்ப நம் மனோநிலையையும் மகிழ்ச்சியா இருந்துச்சு. சினிமா தயாரிப்பில் உள்ள ஒவ்வொருத்தரும் அந்த மனோநிலையைத் தக்கவெச்சுக்கிட்டு அதுக்குள்ளேயே அவங்க உழல்றது புதுசா இருந்துச்சு. ஸ்பாட்டில் இயக்குநர் தொடங்கி லைட்மேன் வரை ஆள்களைக் கவனிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ‘நமக்கு வசதியான மீடியாவா இருக்கே’னு இங்கே வந்து பார்த்ததும் லயிச்சுப்போயிட்டேன். இந்தப் படத்தில் முதல் நாள் தொடங்கி மியூசிக், எடிட்டிங், புரொடக்‌ஷன்னு இந்த எட்டு மாசங்கள்ல ஒரு விநாடியைக்கூட நான் மிஸ் பண்ணலை. இதுக்கு முன்னாடி சினிமாவுக்கு வந்திருந்தா, இவ்வளவு சுதந்திரமா வேலை செஞ்சிருக்க முடியுமானு தெரியலை!’’

``இப்ப வசனகர்த்தா, இணை இயக்குநர். எதிர்காலத்தில் படம் இயக்க வாய்ப்பிருக்கா?’’
`` `இன்னும் ரெண்டு வருஷங்கள்ல ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆ.வெண்ணிலா’னு வருதா இல்லையானு பாருங்க’னு பிரசாத் என்கிட்ட சவால்விட்டிருக்கார். அதுக்கான ஸ்கோப் இருக்கிறதாத்தான் நான் நினைக்கிறேன். ஒரு எழுத்தாளரா என்னென்ன பண்ணமுடியும்னு எனக்குத் தெரியும். இதுக்கிடையில தொழில்நுட்ப விஷயங்களையும் கற்கும்போது ஒரு திரைப்படம் இயக்குவது எளிதான விஷயமாத்தான் நினைக்கிறேன். நிச்சயம் படம் இயக்குவேன்!’’

``எழுதிய வசனம் ஒன்றாகவும், அது சினிமாவாகும்போது வேறொன்றாகவும் வருவது இங்கு வாடிக்கை. வசனகர்த்தாவை சினிமாவில் ஊறுகாயாகத்தானே பயன்படுத்துகிறார்கள்?’’ 

‘‘அதுக்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு இருப்பதைப் பார்த்தேன். ஸ்க்ரிப்ட் எழுதும்போது அதன் எல்லை குறைவா இருக்கு. பிறகு, ஃபீல்டில் ஆர்ட்டிஸ்ட்டோடு டிஸ்கஸ் பண்ணும்போது இன்னுமே கொஞ்சம் நல்லா வர்றதைப் பார்க்கிறேன். ஸ்பாட்டில் வசனகர்த்தா இருப்பதற்கான தேவை அதிகமாகுது. நான் அசோசியேட் இயக்குநராக ஸ்பாட்டில் இருந்ததால், எல்லா மாற்றங்களும் என் மூலமாகத்தான் நடந்துச்சு.

ஹீரோ, ஹீரோயினிடம் காதலைச் சொல்லும் ஒரு காட்சி. ‘லவ்வைச் சொன்னால் தப்பாகிடுமோ’ எனத் தயங்குவான். ஏன்னா, அவன் ஹீரோயினுக்கு அவ்வளவு கெடுதல் பண்ணியிருப்பான். சொல்லாமல்விட்டால் ஹீரோயினை இனி எப்பவுமே பார்க்க முடியாது என்ற நெருக்கடி. `என்னை விட்டுட்டுப் போயிடாத’ என்பான். உடனே ஹீரோயின், `மனசைக் கெடுக்கிறதுகூட பாவம்தான். ஆனா, நான் எந்தவிதத்துல உன் மனசைக் கெடுத்தேன்னு தெரியலை. அப்படி நான் பண்ணியிருந்தேன்னா என்னை மன்னிச்சுடு’ என்பாள். தனக்குக் கெடுதல் பண்ண ஹீரோ காதலைச் சொல்லும்போதுகூட ரொம்ப நாசுக்கா பதில் சொல்ற மாதிரி எழுதியிருந்ததை, பசுபதி சார் உள்பட எல்லாருமே பாராட்டினாங்க.''

‘‘ ‘ஆணாதிக்கத்தின் உச்சகட்டம். இங்கே நடிகைகளைத் தவிர வேறு யாரும் சர்வைவ் பண்ண முடியாது’னு சினிமாவைப் பற்றி ஒரு பார்வை இருக்கு. பெண்ணியவாதியான நீங்கள், இங்கு என்ன மாதிரியான மாற்றங்களைப் பண்ணிவிட முடியும்?’’

‘‘அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்னு நினைச்செல்லாம் வரலை. இது முழுக்க முழுக்க பிசினஸ். சினிமாவில் நடிகைகளின் இடம்குறித்து தனியா பேசுற அளவுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. ஆனா, இங்கே பெண்ணுக்கான இடம் ஆதிக்கத்தால் மறுக்கப்படுறதா நான் நினைக்கலை. ரொம்பவே சுதந்திரமா இருக்கு. கொண்டாடுற விஷயமாவும் இருக்கு. தவிர, ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்னு யோசிக்கும் அளவுக்கு இங்கே யாருக்குமே நேரம் இல்லை. மேக்கிங், அதுக்கு நம் பங்களிப்பு என்னனுதான் ஓடுறாங்க. ஒருவேளை எனக்கு அமைஞ்ச டீம் நல்லதா இருக்கிறதுகூட அதுக்குக் காரணமா இருக்கலாம். ஆனா, சினிமாவில் உள்ள பெண்களைப் பற்றிய பார்வை வெளியே வேற மாதிரி இருக்கு என்பது உண்மைதான்.’’

‘‘ ‘உடல்ரீதியா பெண்கள் ஆண்களைவிட பலம் குறைந்தவர்கள். அவர்களுக்குப் பாலியல் சுதந்திரம் பற்றியப் புரிதலும் குறைவா இருப்பதுதான் பிரச்னைகளுக்குக் காரணம்’னு ஒரு சாரார் சொல்வது பற்றி உங்கள் கருத்து?’’

‘‘பெண் உடல்ரீதியா பலவீனமானவர்கள்னு சொல்வதே தவறு. இதை, காந்தி மாதிரியான பெரியவர்கள் சொல்லிச் சொல்லி நம் மூளையில் ஏத்திட்டுப் போயிட்டாங்க. ஷேவ் பண்ணும்போது பிளேடு வெட்டினாலோ, குண்டூசி குத்தினாலோ மனைவி, அம்மாவைக் கூப்பிட்டு நான்கைந்து முறை காட்டும் ஆணால், பிரசவ வலியை எப்படி உணர முடியும்? கூலித் தொழிலாளிகளைத் தவிர அலுவலகம், வீடு என இயங்கும் ஆண் உடல் செய்யும் வேலையைவிட பெண் உடல் செய்யும் வேலை அதிகம். ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருக்கிறார்கள் என்றால், ஒருவருக்கு மூணு தோசை எனக் கணக்கிட்டாலே மொத்தம் 12 தோசையை தினமும் நின்றபடி நீங்கள் ஊத்திப்பாருங்களேன். ஒருநாள் ஊத்துவீங்க, அதிகபட்சம் ஒரு வாரம் ஊத்துவீங்க. `நான் சாப்பிடுற தோசையை வேணும்னா குறைச்சிக்கிறேன். ஆளை விடும்மா தாயே’னு ஓடிடுவீங்க. உடல் பலத்தை, மூட்டைத் தூக்கும் வேலையோடு நீங்க பொருத்திப்பார்க்கக் கூடாது. ஏன்னா, அவள் உடல் அந்த மாதிரி வேலைகளுக்குப் பழகலை. பிரசவ வலி, பசியைப் பொறுத்துக்கொள்வதுனு தொடர்ந்து வலியைத் தாங்கித் தாங்கியே அவள் உடல் பலமா மாறுது. 

அடுத்து செக்ஸுக்குக் கட்டுப்பாடு. சுதந்திரம் தேவையா தேவையில்லையா என்கிற விவாதமே தேவையில்லை. ஏன்னா, அது சம்பந்தப்பட்ட இருவர் சார்ந்தது. பிடிச்சிருந்தா போகப்போறாங்க; பிடிக்கலைனா வந்துடப்போறாங்க. அதை ஏதோ பெரிய விஷயமா விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆண்-பெண் புரிதல்தான் ரொம்ப அடிப்படை. ஆனா, உலகம் இதற்கு நேர் எதிராக இயங்க ஆரம்பிச்சுடுச்சு. ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்று, அந்த உறவு மாதிரியான அற்புதமான ஒரு விஷயம் உலகத்துல வேற எதையாவது சொல்ல முடியுமா? ஆண்-பெண் பாலின வேறுபாடு என்ற ஒரு முள்ளை நம் வீட்டுக்குள்ளேயும் மனசுக்குள்ளேயும் வெச்சக்கிட்டுப் படும்பாடுதான் இன்றைய பல பிரச்னைகளுக்குக் காரணம்.

இன்னும் சொல்லப்போனால், உலகின் சரிபாதியாக இருக்கும் பெண்ணின் ஆற்றலை முடக்குவதற்கான காரணமும் இந்தப் பாலினப் பாகுபாடுதான். ஒரு பெண் இரவு வேளையில் மூடிக்கிடக்கும் மில்லை பார்க்கப் போகிறாள் என்கிற அவளோட எனர்ஜி எவ்வளவு பெரியது? ஆனா, அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்முறையால், ‘ஜாக்கிரதையா இரு, வேலையைக்கூட விட்டுடு, இல்லைன்னா பத்திரிகைத் தொழிலே வேணாம்’ என எத்தனை அப்பா-அம்மாக்கள், கணவர்கள், அண்ணன்-தம்பிகள், நண்பர்கள் சொல்லியிருப்பார்கள்? அதனால் எத்தனை பெண்கள் வீட்டில் முடங்கியிருப்பார்கள்? பெண்ணின் சக்தி இந்த வேறுபாட்டால்தான் காலங்காலமாக முடக்கப்பட்டு கிடக்கிறது. இந்த உறவுச் சிக்கலை சமூகத்திலிருந்து எடுத்துட்டாலே வன்முறை, தாக்குதல் எல்லாமே போயிடும்னு நினைக்கிறேன்!’’

‘‘சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் பெண்களை, தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கைக் கவனிக்கிறீர்களா?’’

``ஆண்களுக்கு, புத்திசாலிப் பெண்களைப் பிடிக்காது. அப்படியே பிடித்தாலும் அவர்கள் கருத்து சொல்லக் கூடாதுனு நினைப்பார்கள். பெண்ணின் சுயமான எந்தச் சிந்தனையுமே ஆணுக்கு மிரட்சிதான். சுயமா பேசும், சிந்திக்கும் பெண்ணைப் பார்த்தாலே சமூகம் லேசா நடுங்கும். அதனால்தான் பெண்ணியம் பேசும் பல விடுகளில் அந்தப் பெண்களுக்கு மரியாதை இருப்பதில்லை. பொதுத் தளத்தில் சொல்லும் கருத்தை, அதே நடுநிலையோடு என்றைக்கு வேண்டுமானாலும் திருப்பி வீட்டுக்குள்ளும் சொல்ல முடியும் என்ற பயம். உடனே அந்தப் பெண்ணைப் பற்றி நடத்தை சார்ந்த தவறான கருத்துகளை சொல்வதன் மூலம் அவளின் நடவடிக்கைகளை நிறுத்த முடியும்னு நம்புறாங்க. எல்லா பெண்களும் துணிச்சலோடு இருப்பதில்லையே. அதனால் இந்த உத்தி பல நேரங்களில் அவங்களுக்குக் கைகொடுக்கவும் செய்யும். ஆதரவான குடும்பம், உறவுகள் இல்லாத வெட்டவெளியில் பெண் வாழ முடியாது. ஆதரவு இல்லை எனும்போது தன் கொள்கையை விட்டுவிடலாம் என்பதுதான் அவளுக்கு எளிதான வழியா இருக்கும். பெண்ணை அடக்குவதற்கான சாதாரண வழி, நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவதுதான். இதைத் தாண்டி பெண்கள் வரணும்!’’