Published:Updated:

கோபாலகிருஷ்ணன் டு திலீப்... ஜனங்களின் நாயகன் வளர்ந்த, வீழ்ந்த கதை!

ம.கா.செந்தில்குமார்
கோபாலகிருஷ்ணன் டு திலீப்... ஜனங்களின் நாயகன் வளர்ந்த, வீழ்ந்த கதை!
கோபாலகிருஷ்ணன் டு திலீப்... ஜனங்களின் நாயகன் வளர்ந்த, வீழ்ந்த கதை!

திலீப் - நடிகை விவகாரத்தின் ஆரம்பப் புள்ளி, கேரளா அல்ல துபாய்! ‘மலையாள சினிமாவே இவரின் கைக்குள். ரியல் எஸ்டேட் பிசினஸில் டாப்...’ நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் சமீபத்தில் கைதான மலையாள நடிகர் திலீப் பற்றி, இப்படிப் பல அதிர்ச்சித் தகவல்கள். இவற்றில் எது உண்மை, எது வதந்தி எனத் தெரிந்துகொள்வதற்கு முன், யார் இந்த திலீப்... இவர் எப்படி இந்த அளவுக்கு வளர்ந்தார் என்பதை முதலில் பார்ப்போம்.

யார் இந்த திலீப்?
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர்கள் பத்மநாபன் பிள்ளை-சரோஜம் தம்பதி. இவர்களுக்குக் கோபாலகிருஷ்ணன், அனுப் என்கிற இரண்டு மகன்கள், சபீதா என்கிற மகள் என மொத்தம் மூன்று பிள்ளைகள். இவர்களில் கோபாலகிருஷ்ணனுக்கு மற்றவர்களை அச்சு அசலாக இமிடேட் பண்ணும் வித்தை பள்ளியில் படிக்கும்போதே கைவந்தகலை. பிறகு, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்தார். அப்போது கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் கோபாலகிருஷ்ணனின் மிமிக்ரி பிரதானமாக இடம்பெறும். இந்த வரிசையில் தன் நண்பர்கள் நாதிர்ஷா, அபி ஆகியோருடன் இணைந்து ஓணத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கிய ‘தே மாவெளி கொம்பத்து’ என்ற காமிக் ஆல்பம் அப்போதே மிகப் பிரபலம்.

இங்கு நடிப்புப் பயிற்சி தரும் கூத்துப்பட்டறைபோல, அங்கே `கலாபவன்’ அமைப்பு பிரபலம். கலாபவன் மணி, நடிகர் ஜெயராம் உள்பட பலரும் அங்கு பயிற்சி பெற்றவர்கள்தான். அந்தக் கலாபவன் அமைப்பில் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அங்கு மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாகத் தொடர்ந்தார். பிறகு, ஏஷியாநெட் சேனலில் வந்த `கோமிகோலா’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்தச் சமயத்தில்தான் கோபாலகிருஷ்ணனுக்கு நடிகர் ஜெயராமின் நட்பு கிடைத்தது. அவர்தான், ‘சினிமாவில் வளர இதெல்லாம் செய்’ என கோபாலகிருஷ்ணனை வழிநடத்தியுள்ளார். பிறகு, கோபாலகிருஷ்ணனை இயக்குநர் கமலிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிடுகிறார் ஜெயராம். 1991-ம் ஆண்டில் ‘விஷ்ணுலோகம்’ என்ற படம்தான், உதவி இயக்குநராக கோபாலகிருஷ்ணன் வேலைபார்த்த முதல் படம். பிறகு, ‘என்னோடு இஷ்டம் கூடமோ’ என்ற படத்தில் கோபாலகிருஷ்ணனை, கமல் சின்ன கேரக்டரில் நடிக்கவைக்கிறார். தவிர, கமல் தன் இயக்குநர் நண்பர்கள் பலரிடம் கோபாலுக்கு வாய்ப்பு வழங்கும்படி பரிந்துரையும் செய்கிறார்.

`மனதே கொட்டாராம்’. இது இயக்குநர் சுனிலின் படம். இதற்கு முன்பு கோபாலகிருஷ்ணன் ஓரிரு படங்களில் முகம் காட்டியிருந்தாலும் இதுதான் அவர் ஹீரோவாக அறிமுகமான படம். அதில் இவரின் கேரக்டர் பெயர்தான் திலீப். இந்தப் படம் நல்ல வரவேற்பும், கோபாலகிருஷ்ணனின் நடிப்புக்கு நற்பெயரும் கிடைத்ததால் `திலீப்’ என்ற அந்தப் பட கேரக்டர் பெயரே கோபாலகிருஷ்ணனுக்கு நிரந்தர பெயரானது. தொடர்ந்து சிறிதும் பெரிதுமான கேரக்டர்களில் பல படங்களில் நடித்தார். இவரின் நேரமா, நல்ல கதைகளாக அமைந்த மலையாள சினிமாவின் அமைப்பா எது எனத் தெரியவில்லை... ‘சல்லாபம்’, ‘பஞ்சாபி ஹவுஸ்’, ‘உதயபுரம் சுல்தான்’... என இவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து வென்றன. நல்ல படமோ, கெட்ட படமோ சினிமாவில் வெற்றிதானே ஒருவரை அடையாளப்படுத்தும். அந்த வகையில் திலீப் எளிதில் அனைவராலும் அடையாளம் காணப்பட்டார்.

இந்த வரிசையில் லால் ஜோஸ் இயக்கி 2002-ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘மீசை மாதவன்’. அந்தப் படத்துக்கு அப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில் திலீப்புக்கே ஆச்சர்யம். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் சிறப்பு விருது இவருக்குக் கிடைத்தது. ஓவர்நைட்டில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் எனச் சொல்லலாம். அதில் திலீப்புக்கு ‘திருடன் மாதவன்’ என்ற கேரக்டர். இதில் திலீப்புக்கு ஜோடி காவ்யா மாதவன். 2005-ம் ஆண்டில் இயக்குநர் லால் ஜோஸுடன் மீண்டும் இணைந்து ‘சாந்துபொட்டு’ படத்தில் நடித்தார். இந்தப் படமும் வெற்றி. இதுவும் அவருக்குச் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் சிறப்பு விருதைப் பெற்றுத்தந்தது. ‘ரன்வே’. இது திலீப்புக்கு ஆக்‌ஷன் முகம் தந்த படம். இது பழைய வசூல் சாதனைகள் பலவற்றை முறியடித்து, புது சாதனைகளை நிகழ்த்தியது. திலீப் புகழ்பெற்ற நடிகரானார். 2010-ம் ஆண்டின் தொடக்கத்தில் சித்திக் இயக்கத்தில் இவர் நடித்து மலையாளத்தில் ஹிட் அடித்த ‘பாடிகார்ட்’ படம்தான் தமிழில் விஜய் நடித்து ‘காவலன்’ ஆகவும், இந்தியில் சல்மான்கான் நடித்து ‘பாடிகார்ட்’ ஆகவும் வெளிவந்து வெற்றிகளைக் குவித்தது.

இதற்கிடையில் திலீப் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். அப்படி டி.வி.சந்திரன் இயக்கிய ‘கதாவாசேஷன்’ படத்தில் தயாரித்து நடித்தார். அந்த வரிசையில் இவர் நடிக்காமல் தயாரித்த படம்தான் ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’. வினித் ஸ்ரீனிவாசன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இன்று தமிழ், மலையாளத்தில் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகராக இருக்கும் நிவின்பாலி, இந்தப் படத்தில்தான் ஹீரோவாக அறிமுகம்.

2010-ம் ஆண்டில் திலீப் ‘கார்யஸ்தன்’ என்ற படம் மூலம் தன் சினிமா வாழ்வில் சதம் அடித்தார்.  2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் வெளிவந்த ‘டூ கன்ட்ரீஸ்’ என்ற படம் திலீப்பின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். மலையாள சினிமா வரலாற்றில் முதல்முறையாக அதிகபட்ச தொகையை வசூல் செய்த படம். 50 கோடி ரூபாயைக் குவித்தது. `ஒப்பம்', `பிரேமம்', `புலிமுருகன்' போன்ற படங்களுக்கு முன்னோடி இந்த ‘டூ கன்ட்ரீஸ்’. இப்படி இவர் நடித்துள்ள 150-க்கும் மேற்பட்ட படங்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் கமர்ஷியல் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகார மையமானது எப்படி?
150 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் மம்மூட்டி, மோகன்லால் போல் திலீப், அர்ப்பணிப்பான நடிகர் கிடையாது. அதாவது, ‘யாரும் செய்ய முடியாத கேரக்டரில் நடிக்க வேண்டும். ஆகச்சிறந்த நடிகன் எனப் பெயர் எடுக்க வேண்டும், தேசிய விருது வாங்க வேண்டும்’ என மெனக்கெடும் நடிகர்களில் திலீப்புக்கு இடம் இல்லை. அந்த இடத்துக்கு அவர் ஆசைப்பட்டதும் அல்ல. ஆனால், அப்படியான நடிகர்களைவிட திலீப்பின் படங்களுக்கு நிச்சயமான வருமானம் இருந்தது. அதனால் இவருக்கென அங்குள்ள அரசியல், நடிகர்கள், ரசிகர்கள் மத்தியில் ஒரு வட்டம் உருவானது. அந்தச் சமயத்தில் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. சீனியர் நடிகர்கள் அனைவரும், ‘நமக்கு ஏன் வம்பு? நம் படம், நம் வருவாய், நம் அவார்ட்...’ எனச் சுருங்கிக் கிடந்தபோது, அதை திலீப் பயன்படுத்திக்கொண்டார். அந்தப் பண நெருக்கடியைத் தான் தீர்ப்பதன் மூலம் ‘அம்மா’வின் செல்லப்பிள்ளை ஆகலாம் என யோசித்தார்.

‘அனைத்து நடிகர்களையும் வைத்து ‘அம்மா’வுக்காக ஒரு படம் எடுப்போம். அதை நானே தயாரிக்கிறேன். அதில் வரும் வருவாய் அனைத்தும் ‘அம்மா’வுக்கு’ என்றார். ‘யாரோ ஒருத்தன் முயற்சி பண்றான். சில நாள் கால்ஷீட்தானே’ என்று அனைவரும் தலையாட்டினர். அப்படித்தான், ‘டிவென்டி:20’ படம் ‘அம்மா’வுக்காகத் தயாரானது. மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ்கோபி, ஜெயராம் என அனைத்து சீனியர் நடிகர்களுடன் இணைந்து திலீப்பும் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றி. அதன்மூலம் ‘அம்மா’ வசதியான சங்கமானது. பிறகு, அங்கு திலீப் சொல்வதுதான் சட்டம்.

‘திலகனுக்குத் தடை. அவரை வைத்து யாரும் படம் எடுக்கக் கூடாது’ என்றது. ‘அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர் வினயனின் படங்களில் யாரும் நடிக்கக் கூடாது’ என்றது. இப்படி திலீப்புக்கு எதிராக இருந்தவர்கள் மீதெல்லாம் `அம்மா' தன் கோர முகம் காட்டத் தொடங்கியது. தடை இருந்தாலும் புதுமுகங்கள், குட்டையானவர்கள் எனப் புதுப்புது சாதுர்யங்களுடன் படம் எடுத்த வினயனின் பெரும்பாலான படங்கள் வென்றன என்பது வேறுகதை.

இதற்கிடையில் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பக்கம் திலீப்பின் பார்வை திரும்பியது. அவர்களின் சங்கத்திலும் திலீப்பின் தாக்கம் தொடர்ந்தது. இதற்கிடையில் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே கடந்த ஆண்டு இறுதியில் முட்டல் ஏற்பட்டது. ‘அதிக பங்குத்தொகை கேட்டு புதிய படங்களை வெளியிடுவதை தியேட்டர்கள் நிறுத்திக்கொண்டன. இன்று முடியும்... நாளை முடியும் என்று நினைத்த ஸ்ட்ரைக், ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்தது.

ஒருகட்டத்தில் விநியோகஸ்தர்கள் புதிய படங்களை வெளியிட சம்மதித்தாலும் தயாரிப்பாளர்கள் இறங்கி வர ஒப்புக்கொள்ளவில்லை. இந்தச் சமயத்தில் விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இல்லாத தியேட்டர்களாகத் தேடிப்பிடித்து தங்களது படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவுசெய்தனர். இன்னொரு பக்கம், கேரளத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் கேரளா முழுவதும் 100 தியேட்டர்களைப் புதிதாக நிர்மாணிக்கத் தீர்மானித்து. முதல்கட்டமாக 35 தியேட்டர்களின் கட்டுமானப் பணியை ஆரம்பித்தது. தியேட்டர் உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் முரண்படும்போது, இந்த 100 தியேட்டர்கள் தயாரிப்பாளர்களைப் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளும் என்பது கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் எண்ணம்.

இந்தச் சமயத்தில்தான் திலீப் இந்தப் பிரச்னைக்குள் வருகிறார். கேரளாவில் அவருக்குச் சொந்தமாக தியேட்டர்கள் உள்ளதாலும் தயாரிப்பாளர் என்பதாலும் அவர் தாமாக உள்ளே வந்து பிரச்னை குறித்துப் பேசுகிறார். அரசும் தயாரிப்பாளர் பக்கம் நிற்பதை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டார். தியேட்டர் உரிமையாளர் சங்கத்தில் உள்ளவர்களிடம் பேசி, அவர்களில் பாதி உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுத்து புதிய சங்கம் ஒன்றை உருவாக்குகிறார். ஒருமாத காலத்துக்கும்மேல் நீடித்து வந்த வேலைநிறுத்தம், திலீப்பின் அதிரடியால் முடிவுக்கு வந்தது. இதனால் மலையாள சினிமாவின் அனைத்துத் தரப்பும் இந்த ஜனங்களின் ஹீரோவான திலீப்பை தங்களின் ரியல் ஹீரோவாகக் கொண்டாடத் தொடங்கியது. ‘இப்படியான பிரச்னைகளைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்வதில் திலீப் கில்லாடி’ என்கின்றனர் சிலர்.

பலாத்கார வழக்கில் சிக்கியது எப்படி?
ஒரு பக்கம் பரபரப்பாக சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த திலீப், நடிகை மஞ்சுவாரியாரைக் காதலித்து 1998-ம் ஆண்டு அக்டோபரில் திருமணம் செய்தார். இவர்களுக்கு 17 வயதில் மீனாட்சி என்கிற மகள் உள்ளார். இந்தச் சமயத்தில்தான் மஞ்சுவும் திலீப்பும் மனக்கசப்பால் பிரிந்தனர். இந்த மனக்கசப்புக்குக் காரணம் காவ்யா மாதவன். அதாவது காவ்யாவுடன் திலீப் தொடர்பு வைத்திருப்பது மஞ்சுவுக்குத் தெரியவருகிறது. இதனால் 2015-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்துகொள்கின்றனர். அடுத்த ஆண்டே காவ்யா மாதவனைக் கொச்சியில் வைத்து மறுமணம் செய்கிறார் திலீப்.

இந்தச் சமயத்தில்தான் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள நடிகை ஒருவர் கொச்சியில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தக் கும்பல் நடிகையை வீடியோ, புகைப்படங்கள் எடுத்துள்ளது. பிறகு, பல்சர் சுனி உள்ளிட்ட குற்றவாளிகள் நாளடைவில் கைதுசெய்யப்பட்டனர். `திலீப்புக்கும் காவ்யாவுக்கும் இருந்த தொடர்பை அந்த நடிகை வேவு பார்த்து மஞ்சுவாரியாரிடம் தெரிவித்ததால் கோபமடைந்த திலீப், அவரைப் பழிதீர்க்க ஆள்களை ஏவி இப்படிச் செய்துவிட்டார்' எனப் பரவலாகப் பேசப்பட்டது. மீடியாக்களும் இதையே கிசுகிசுத்தன.

இதனால் பீதியடைந்த திலீப், போலீஸாரிடம் ஒரு புகார் தருகிறார். அதில், ‘கைதானவர்கள் ஒன்றரைக் கோடி ரூபாய் கேட்கிறார்கள். `இல்லையென்றால் நீங்கள்தான் இந்தக் குற்றத்தைச் செய்யச் சொன்னீர்கள் என்று வாக்குமூலம் அளிப்போம்’ என என்னை மிரட்டுகிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் இது பொய் புகார் என்பது உறுதியானது. மேலும், கைதான டிரைவர், திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் கொச்சியில் நடத்தும் ‘லக்ஷ்யா’ என்ற துணி ஷோரூமில் வீடியோ ஃபுட்டேஜ்கொண்ட மெமரிகார்டைச் சேர்ப்பித்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அதற்கு வலு சேர்க்கும் வகையில் அந்த டிரைவர் லக்ஷ்யாவுக்குக் குறிப்பிட்ட தேதியில் வந்து சென்றதற்கான சிசிடிவி ஃபுட்டேஜும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. மேலும், நவம்பர் 2016-ம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 2017-ம் ஆண்டு வரை வெவ்வேறு மொபைல் எண்களிலிருந்து திலீப்பின் மேலாளருக்கு, கைதான டிரைவர் பேசியுள்ளதை போலீஸார் உறுதிசெய்தனர். தவிர, அந்த டிரைவர் சிறையில் இருந்தபோது ஏப்ரல் 12-ம் தேதி அன்று திலீப்பின் முகவரிக்கு எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் குற்றத்துக்கு மூளையாக இருந்தது திலீப் என்பது உறுதியானது.

பிறகு, திலீப்பிடம் 13 மணி நேரம் இடைவிடாது மாரத்தான் விசாரணை நடத்தியது போலீஸ். அதைத் தொடர்ந்து, இந்த மாதம் 10-ம் தேதி திலீப்பைக் கைதுசெய்த போலீஸ், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாள்கள் நதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தது. 19 வகையான ஆவணங்களின் அடிப்படையில் இந்தக் கைது நடந்ததாகக் கூறுகிறது போலீஸ்.

மஞ்சுவுக்கு இன்ஃபார்மர் என்ற கோபம் மட்டும்தானா?

திலீப் இந்த அளவுக்குப் புகழ்பெற காரணம், அவர் ஒரு நல்ல நடிகர் என்பதால் மட்டும் அல்ல;  ஒரு புராஜெக்ட், ஒரு நிகழச்சி... என ஒருங்கிணைப்பதில் கில்லாடி என்பதாலும்தான். இதை அவரின் எதிரிகள்கூட ஒப்புக்கொள்வார்கள். வெளிநாடுகளில், ஏராளமான நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் திலீப். அதில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகளை அழைத்துச்சென்று ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். குறிப்பாக, துபாயில் அதிக நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். துபாயில் மலையாளிகள் அதிகம் என்பதும் கேரளாவில் இருந்து சென்று அங்கு அதிகம்பேர் தொழில் செய்கிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். அப்படிப் போகும்போது திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏதோ பிடிக்கவில்லை என்கிறார்கள். குறிப்பாக, அந்த நடிகை தமிழில் நடித்துவிட்டு அங்கு சென்ற பிறகு, திலீப்பால் அவருக்குத் தொல்லைகள் அதிகரித்தன.

ஒருவரைத் தனக்குப் பிடிக்கவில்லை என்றால், தன் பணம், ஆள் பலம் மூலம் தன் வழிக்கு அவரைக் கொண்டு வர திலீப் முயற்சிசெய்வார். வழிக்கு வரவில்லை என்றால், அவரைத் திரைத் துறையைவிட்டே ஓரங்கட்டுவதற்கான வேலைகளைப் பார்ப்பாராம். அதற்கு திலகன், வினயன் போன்றோரை உதாரணமாகச் சொல்கிறார்கள். அப்படி, அந்த நடிகையையும் வழிக்குக் கொண்டுவர சில வேலைகள் செய்ய, அதனால் அவர் தமிழில் நடிக்க வந்ததாகவும் மீண்டும் மலையாளம் சென்று அவர் பரபரப்பாகப் படங்கள் நடிக்க ஆரம்பித்ததால் அது பிடிக்காமல் சில வேலைகள் செய்ததாகவும் கூறுபவர்களும் உண்டு. `எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப்போல, தனிப்பட்ட விரோதத்திலிருந்த மஞ்சுவாரியார், தொழிலிலிருந்து அவரால் ஓரங்கட்டப்பட்ட நடிகை, நடிகர்கள் சேர்ந்து அவருக்கு எதிராக சில வேலைகள் செய்துள்ளனர். அவை எல்லாம் சேர்ந்துதான் அந்த நடிகை மீது திலீப்புக்குக் கோபம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்கள். ‘அவர் போலீஸுக்குப் போக மாட்டார். கூனிக்குறுகி சினிமாவைவிட்டே ஒதுங்கிவிடுவார் என நினைத்து செய்திருக்கலாம்' என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அந்த அதீத தைரியமே கடைசியில் சிக்கவைத்துவிட்டது.

திலீப்புக்கு ‘அம்மா’ ஆதரவளித்தது ஏன்?

`திலீப்பின் அதிகாரம் `அம்மா'வில் ஓங்கியிருந்தாலும், சீனியர் நடிகர்கள் இத்தனை நாள் அமைதி காத்தது ஏன்?' என்பதுதான் பலரின் கேள்வி. அவர் `அம்மா'வுக்கு நிதி திரட்டித் தந்தார் என்பதுதான் காரணம் என வெளியே சொல்கிறார்கள. ஆனால், `அவர் சீனியர் நடிகர்களைத் தன் தொழில் பார்ட்னர்களாக இணைத்துக்கொண்டதும், அவர்களின் கறுப்புப் பணத்தைத் தன் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் இவர் வெள்ளையாக்கித் தந்ததும்தான் `அம்மா'வின் அமைதிக்குக் காரணம்' என்கிறார்கள். ஆனால், நிலைமை கைமீறிப்போய் திலீப்பைக் கைதுசெய்த பிறகு, வேறு வழியில்லாமல் அவரை அவசர அவசரமாக `அம்மா'விலிருந்து நீக்கியுள்ளார்கள்.

திலீப்புக்கும் ஆதரவு உண்டு
அங்கு திலீப்புக்கு ஆதரவும் இல்லாமல் இல்லை. ‘அவர் குற்றவாளி அல்ல. குற்றம்சாட்டப்பட்டவர்தான். அப்படிப்பட்ட ஒரு சீனியர் திரைக்கலைஞரை முன்னறிவிப்பு தந்து, விளக்கக் கடிதம்கூட பெறாமல் எப்படி அடுத்தடுத்து பல சங்கங்களிலிருந்து நீக்க முடியும்? அதுவும் நீக்கும் முடிவை எடுத்த கூட்டம்கூட சங்கத்தில் நடைபெறவில்லை. மம்மூட்டியின் வீட்டில் அவசர அவசரமாகக் கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஒருதலைபட்சமான முடிவு’ என்று சங்கங்களிலேயே எதிர்க்குரல்கள் எழுந்துள்ளன.

‘இந்த வழக்கை வைத்து ‘மிக மோசமான கொடுங்கோலன்’ என்ற பிம்பம் மீடியாவின் உதவியுடன் திலீப்பைச் சுற்றிக் கட்டமைக்கப்படுகிறது. அதற்கு அவரின் தொழில் எதிரிகள் உடந்தையாக உள்ளனர். சீனியர் கலைஞர் வி.எம்.சி ஹனிஃபா இறந்தபோது அவரின் குடும்பத்துக்கு உதவியது, நலிவுற்ற சீனியர் கலைஞர்களுக்கு உதவி வருவது என இவர் நீங்கள் போற்றும் சீனியர் கலைஞர்களைவிட சிறப்பானவர். மேலும், பல நடிகர்கள் ‘தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற அகங்காரத்துடன் திரைத் துறையினரிடம்கூட விலகி நிற்கும்போது, திலீப் ஒருவர்தான் அவர்களில் ஒருவராக நிற்பவர்’ என்று அவரின் பாசிட்டிவ் பக்கங்களும் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

எது எப்படியோ, அந்த நடிகைக்கு நடந்த இந்தத் துயரம் இனி இன்னொரு பெண்ணுக்கு நடக்காமல் இருக்க, இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் உயர்ந்தபட்ச தண்டனை பெறவேண்டும் என்பது முக்கியமானது. அது மக்களில் ஒருவராக இருந்தாலும் சரி, மக்களின் நாயகனாக இருந்தாலும் சரி!