Published:Updated:

செல்லுபடியாகுமா இந்த கரன்சி... ‛ரூபாய்’ படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
செல்லுபடியாகுமா இந்த கரன்சி...  ‛ரூபாய்’ படம் எப்படி?
செல்லுபடியாகுமா இந்த கரன்சி... ‛ரூபாய்’ படம் எப்படி?

கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட மூவருக்கு, திடீரென கத்தைக் கத்தையாகப் பணம் கிடைத்தால்..? `ரூபாய்' படத்தின் ஒன்லைன் இதுதான்.

சந்திரன் (பரணி) மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன் (பாபு) இருவருக்கும் `பரணி பாபு' எனும் லாரிதான் சொத்து, சொந்தம், பந்தம் எல்லாமே. இருவரும் தேனியிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி ஏற்றி வருகிறார்கள். மறுநாளுக்குள் தேனிக்குத் திரும்பி, 18,000 ரூபாய் கடன்தொகையைக் கட்ட வேண்டும். இல்லையேல், டெம்போ பறிமுதல் செய்யப்படும் எனும் இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறார்கள். காய்கறி ஏற்றி வந்ததற்கும் குறைவான கூலியே கிடைக்க, மிச்சப் பணத்தை எப்படிப் புரட்டுவது என நொந்துபோகிறார்கள். அந்தநேரத்தில் வீடு காலிசெய்ய லாரி தேடி அலைந்துகொண்டிருக்கும் சின்னி ஜெயந்த் (குங்குமராஜன்) இவர்களின் கண்ணில் பட, 2,000 ரூபாய்க்கு டீல் பேசி லாரியை ஸ்டார்ட் செய்கிறார்கள்.

சின்னி ஜெயந்துக்கு சொந்தம் எனச் சொல்லிக்கொள்ள ஒரே மகள், ஆனந்தி (பொன்னி). அவரைப் பார்த்ததும் சந்திரனின் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஓர் உருண்டை உருள்கிறது. குடி மாறிச் செல்லவிருந்த வீடு, கடைசி நேரத்தில் கிடைக்காமல்போய்விடுகிறது. வீடு புரோக்கரும் `வேற வீடு காட்டுறேன். பின்னாலேயே வாங்க' என 5,000 ரூபாயை வாங்கிக்கொண்டு சந்து பொந்துக்குள் புகுந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். வீடு கிடைக்காமல் வீட்டுச் சாமான்களோடு சின்னி ஜெயந்தும் அவரின் மகள் ஆனந்தியும் லாரியிலேயே தங்கிவிடுகிறார்கள். இதனால், கிஷோர் ரவிச்சந்திரனுக்கும் சின்னி ஜெயந்துக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.

மறுபுறம் இரவோடு இரவாக வங்கியில் ஓட்டை போட்டு 2 கோடியே 30 லட்சம் ரூபாயை ஆட்டைப்போடுகிறார் கொடூரக் கொள்ளையன் ஹரீஷ் உத்தமன். கொள்ளையடித்த பணப்பையை போலீஸிடமிருந்து மறைக்க, பரணி பாபு லாரியில் சாமானோடு சாமானாக மறைத்து வைத்துவிடுகிறார். ஒருகட்டத்தில் கிஷோர் ரவிச்சந்திரனுக்கும் சின்னி ஜெயந்துக்கும் மோதல் முற்றிவிட, லாரியில் இருக்கும் சாமான்களைத் தூக்கி நடுரோட்டில் எரிகிறார் கிஷோர். அப்போது அந்தப் பணப்பையும் கீழே விழுந்து சிதற, நால்வரும் அதிர்ச்சியில் உறைந்துப்போகிறார்கள். அவர்கள் அந்தப் பணத்தை என்ன செய்தார்கள், அந்தப் பணம் அவர்களை என்ன செய்தது என்பதை தியேட்டரில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

`கயல்' படத்தின் அதே ஜோடி. அந்தப் படத்தில் வருவதுபோல் ஆனந்தியைப் பார்த்ததும் சந்திரனுக்கு மனசுக்குள் இடியும் மின்னலுமா அடிச்சுப் பிரிச்சு மேஞ்சுட்டுப்போயிடுது. `கயல்' படத்தில் வருவது போன்றே இந்தப் படத்திலும் சந்திரனுக்கும் அவரின் நண்பருக்கும் வீடு, விலாசம் என எதுவும் கிடையாது. `கயல்' படத்தில் வருவது போன்றே இந்தப் படத்திலும் ஆனந்திக்காக எதையும் செய்யத் துணிகிறார் சந்திரன். `கயல்' படத்தில் வருவது போன்றே அழகாய் இருக்கிறார் ஆனந்தி; தேவையான அளவு நடித்திருக்கிறார். கிஷோர் ரவிச்சந்திரன் கவனம் ஈர்க்கிறார். `கில்பான்சி', `பில்போத்ரி' இல்லாத சின்னி ஜெயந்த், குங்குமராஜன் எனும் கதாபாத்திரத்தில் அளவாக, அழகாக நடித்து, தான் அனுபவம் வாய்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். வழக்கம்போல் ஹரீஷ் உத்தமனைப் பார்த்தாலே பீதியாகிறது. படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பாக நடித்து, படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

`கயல்' மட்டுமல்ல, பிரபுசாலமனின் மற்ற படங்களையும் ஞாபகப்படுத்துகிறது இளையராஜாவின் ஒளிப்பதிவு. `மைனா'வுக்கு ஒரு `ஜிங்கு ஜிக்கா', `கும்கி'க்கு ஒரு `சொய்ங் சொய்ங்', `கயல்'க்கு ஒரு `டியாலோ டியாலோ'போல் `ரூபாய்'க்கு ஒரு `டுக்கும் டுக்கும்' கொடுத்திருக்கிறார் இமான். `பிரபுசாலமன்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருப்பாரோ!' எனச் சந்தேகப்படும் அளவுக்கு படத்தில் அவ்வளவு பிரபுசாலமன் டச். மாரடைப்பால் சுருண்டு விழும் சின்னி ஜெயந்தை, உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆபரேஷன் செய்து உடனே டிஸ்சார்ஜும் செய்கிறார்கள். இது அனைத்தும் ஒரே நாளில் நடந்ததா, அடுத்தடுத்த நாள்களில் நடந்ததா என்ற எந்த விளக்கமும் இல்லை.

தான் ஒருகாலத்தில் வாழ்ந்த வீட்டை, பல ஆண்டுகள் கழித்து சென்று பார்க்கிறார் சின்னி ஜெயந்த். தற்போது வேறொருவருக்கு சொந்தமானதாக இருக்கும் அந்த வீட்டை, அப்போதே காசு கொடுத்து பத்திரப் பதிவுசெய்து சின்னி வாங்கிவிடுகிறார். இதுவும் ஒரே நாளில் நடந்ததா, அடுத்தடுத்த நாள்களில் நடந்ததா என்ற எந்த விளக்கமும் இல்லை. காரணம், படம் முழுக்க மொத்தமே மூன்று செட் ஆடைகள்தான் நால்வருக்கும். வில்லனோ ஒரு சட்டையோடு, அதுவும் ரத்தக்கறை படிந்த அந்தச் சட்டையோடுதான் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறார். படத்தில் வரும் சின்னச் சின்னக்  கதாபாத்திரங்கள் அனைத்தும் கொதிக்கும் எண்ணெயில் கொட்டிய கடுகைப்போல `கடுகடு'வென்றே பேசுகிறார்கள். ஹரீஷ் உத்தமனின் கார் தாம்பரத்தில் யூடர்ன் அடிப்பது, எங்கேயோ இருக்கும் அவரின்  முதலாளிக்குத் தெரிகிறது. ஜி.பி.எஸ். ஆனால், ஹரீஷ் உத்தமனோ பணப்பையில் 100 மீட்டர் இடைவெளியில் இருந்தால் கண்டுக்கொள்ளகூடிய டிரான்ஸ்மிட்டரைப் பொருத்திவிட்டு, தலையைப் பிய்த்துக்கொண்டு திரிகிறார். முக்கியமாக, புது 500, 2,000 ரூபாய் தாள்களும், பழைய 500,1,000 ரூபாய் தாள்களும் படத்தில் ஆங்காங்கே ஆள்மாறாட்டம் செய்கின்றன. 

`பணத்தாசை, தீமைகளுக்கு வேர்' என்ற மெசேஜோடு படத்தை முடிக்கிறார் இயக்குநர் அன்பழகன். ஆனால், தான் வாழ்ந்த வீடு, தன்னுடைய லாரி, தன் காதலி எனக் கதாபாத்திரங்கள் எமோஷனலாக யோசிப்பதால்தான் அவ்வளவு பிரச்னையும் ஏற்படுகின்றன. `பணத்தை எடுத்துக்கொண்டு தூரதேசத்துக்கு ஆமை போல் ஊர்ந்தே சென்றிருந்தாலும், எந்தத் தீமையிலும் சிக்கியிருக்க மாட்டார்களோ' எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. அதேபோல், ராசியில்லாத, அபசகுனம்கொண்ட, தொட்டால் துலங்காத அதனாலேயே எல்லோரும் ஒதுக்கிவைக்கும் கதாபாத்திரமாக குங்குமராஜன் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். முடிவில் அது சரிதான் என்பதுபோலவே முடித்திருக்கிறார்கள். இப்படி ரூபாயில் சில ஓட்டைகள். ஆனாலும், இயல்பான நடிப்பு, உறுத்தாத ஒளிப்பதிவு, மிரட்டும் வில்லன், ஆங்காங்கே தெறிக்கும் வசனங்கள், காமெடிகளுக்காகப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.

அப்படியே `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' விமர்சனமும் படிச்சுருங்க...