Published:Updated:

`தேவர் மகன்' முதல் `பிக் பாஸ்' வரை... கமலும் கமல் சார்ந்த சர்ச்சைகளும்!

கே.ஜி.மணிகண்டன்
`தேவர் மகன்' முதல் `பிக் பாஸ்' வரை... கமலும் கமல் சார்ந்த சர்ச்சைகளும்!
`தேவர் மகன்' முதல் `பிக் பாஸ்' வரை... கமலும் கமல் சார்ந்த சர்ச்சைகளும்!

`கமல், தொடர்ந்து மதங்களை இழிவுபடுத்துகிறார். அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யுங்கள்' - `உத்தமவில்லன்' வெளியானபோது, இந்திய தேசியலீக் கட்சி இப்படிச் சொன்னது. இன்று, `பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார் என்பதற்காக, `கமல்ஹாசன் படங்கள் ஓடும் திரைப்படங்களை அடித்து நொறுக்குவோம்' என்கிறது மக்கள் கட்சி. கூடவே, `அவர் அரசியலுக்கு வந்து பேசட்டும்' என அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்பட பல அரசியல் தலைவர்களும் கமல்ஹாசனைச் சுற்றவிட்டு சுண்ணாம்பு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கமல், சர்ச்சையைக் கிளப்புகிறார்; கமல் படங்கள் பிரச்னையாகின்றன... என்ற வார்த்தைகளும் வாதங்களும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. 

``சாதி வன்முறையை விதைக்கிறார்', `சாதி வெறியை வளர்க்கிறார்...' என `தேவர்மகன்' வெளியானபோது வெடித்தது பிரச்னை. கமல் நடித்து பிரச்னையான முதல் படம் `தேவர் மகன்'. `இந்திய சினிமாவின் திரைக்கதை உதாரணத்துக்கான படங்களில் முக்கியமான படம் `தேவர் மகன்'' என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள். `நல்ல திரைக்கதைதான். ஆனால், மோசமான முன்னுதாரணம்' எனவும் மறுக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் இந்தப் படம் குறித்துப் பேசிய கமல், `நியாயமா, இரு சாதிகளுக்கு இடையிலான விஷயங்களை உரக்கப் பேசியிருக்கணும் இந்தப் படம். எல்லோரும் பார்க்கணும்கிற நோக்கத்துல உருவாக்கின படம் இது. `பாகப்பிரிவினை' படத்துக்கும் `தேவர் மகன்' படத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை' எனப் பதில் சொன்னார் கமல். எதிர்வினைகள் எப்படி இருந்தாலும், கமல் தன் படத்துக்கு நியாயம் பேசினாலும், `தேவர் மகன்' என்ற தலைப்பு இன்றைய பல சாதிய சினிமாக்களுக்கான முன்னோடியாக நிற்பது, மோசமான முன்னுதாரணம்தான். 

கமல்ஹாசனின் படைப்புகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த `ஹேராம்' படமும் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது. `விஸ்வரூபம்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, `இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவாகச் சித்திரித்திருக்கிறார்' என எதிர்ப்பு தெரிவித்தவர்கள், `ஹேராம்' படத்துக்கும் அதே அஸ்திரத்தைக் கையில் எடுத்திருந்தார்கள். பிறகு, மகாத்மா காந்தியின் பிம்பம் தவறாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதாகப் பிரச்னை எழுந்தது. 

`தேவர் மகன்' படத்துக்குப் பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட கமல், தன் படத்துக்கு `சண்டியர்' எனத் டைட்டில் அறிவிக்க, அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள்... எனப் பலரும் துண்டைப் போட்டு பிரச்னைக்கு இடம்பிடித்தார்கள். ` `சண்டியர்' என்ற தலைப்பை மாற்றியே ஆகவேண்டும்' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பெரும் பிரச்னைகளைக் கிளப்ப, பிறகு `விருமாண்டி' என்ற டைட்டிலுடன் இந்தப் படம் வெளியானது. `மரண தண்டனைக்கு எதிரான படம்', `சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பு', `நல்ல கதை' எனப் பலரும் பாராட்டிய இந்தப் படத்துக்கு `சண்டியர்' என்ற தலைப்பும் அதன்மூலம் எழுந்த பிரச்னைகளுமே வெற்றியைக் கொடுத்தன. கொடுமை என்னவெனில், கமல் பயன்படுத்திக் கைவிட்ட `சண்டியர்' என்ற டைட்டிலுடன் சிறிய பட்ஜெட் படம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அந்தப் படத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கிருஷ்ணசாமி உள்பட!

`விருமாண்டி' வெளியான அதே ஆண்டில் வெளியான பிளாக் பஸ்டர் காமெடிப் படம், `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்'. `சண்டியர்' தலைப்புக்கு சிலர் போர்க்கொடி தூக்கியதைப்போல, `இந்தப் படம் எங்கள் தொழிலை இழிவுபடுத்துகிறது' எனக் கிளம்பினார்கள் டாக்டர்கள். `சண்டியர்' படத்துக்கு இறங்கிவந்த கமல், இந்தப் படத்தை அதே பெயரில் வெளியிட்டார். கமல் படங்கள் மீது சர்ச்சை அல்லது புகார்களைக் கிளப்பினால் கவனம் பெறலாம் என்ற நிலையை `விருமாண்டி', `வசூல்ராஜா' படங்கள் ஏற்படுத்திவிட, அடுத்த ஆண்டு வெளியான `மும்பை எக்ஸ்பிரஸ்' படத்துக்கும் சில அரசியல் தலைவர்கள் குரல் உயர்த்தினார்கள். `இந்தப் படத்தின் தலைப்பு முழுக்க ஆங்கிலத்தில் இருக்கிறது' என்பதுதான் குற்றச்சாட்டு. பிரச்னையைக் கிளப்பியவர் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். 

`தசாவதாரம்' என்ற கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கான அறிவிப்பைக் கேட்டவுடனேயே ஆர்வமாக இருந்திருப்பார்கள்போல சில இந்து அமைப்புகள். சொல்லிவைத்ததுபோல, படம் ரிலீஸான நேரத்தில் `இந்தப் படம் சைவர்களுக்கு, வைணவர்களுக்குமான மோதல் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது' என எதிர்ப்பு வந்தது. படத்தில் `கடவுள் இல்லைன்னு சொல்லலை. இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்' என கமல் பேசிய வசனத்தை ஆய்வுசெய்து குழம்பினார்களோ என்னவோ... பிறகு படமும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வசூலில் சாதனை படைத்தது.

`விஸ்வரூபம்' - பெயருக்குத் தகுந்தாற்போல பெரும் சர்ச்சைகள் கிளம்ப அவற்றைச் சாதாரணமாகக் கடந்துவிடாமல் விஸ்வரூபம் எடுத்து சர்ச்சைகளைச் சந்தித்தார் கமல். பல அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்தன. பேச்சுவார்த்தை நடந்தது. படத்தை வெளியிட அரசே தடை விதித்தது. சில காட்சிகள் நீக்கப்பட்டன. படம் வெளியாகி, வெற்றிபெற்றது. இந்தப் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு காட்டியதால், இதன் பிறகு வெளியான `உத்தமவில்லன்' படத்துக்கு வழக்கம்போல இந்து அமைப்புகள் எதிர்ப்பு காட்டின. 

இடையில் கொஞ்சம் அடங்கிய `கமல் எதிர்ப்பு', தன் படத்துக்கு `சபாஷ் நாயுடு' என டைட்டில் வைத்ததில் மீண்டும் பற்றிக்கொண்டது. சாதி பெயரைக் குறிப்பிட்டு டைட்டில் வைக்கவேண்டிய கட்டாயம் கமலுக்குக் கிடையாது. ஆனால், வைத்தார். நெட்டிசன்கள் புகுந்து விளையாடினார்கள். எதற்கும் அசராமல், `முதலில், உங்கள் தெருவில் இருக்கும் சாதிப் பலகைகளை நீக்குங்கள்' எனத் தடாலடியாகச் சொல்லிவிட்டு, ஷூட்டிங்கைத் தொடர்ந்தார்.

தன் திரைப்படங்கள் மீது, திரைப்படங்கள் வெளியாகும்போது, திரைப்படங்களில் தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள், காட்சிகள்மீது சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழும்போது மாற்றிக்கொண்ட அல்லது `இதுதான் சரி' எனத் துணிந்து சொன்ன கமல்ஹாசன், சமீபகாலத்தில் பேசும் பேச்சு எல்லாமே சர்ச்சைகள்தான். `பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியதிலிருந்து கமல்மீதும் அவர் கையாளும் வார்த்தைகள்மீதும் எக்கச்சக்கமான எதிர்வினைகள் வந்து விழுகின்றன. `அடுத்தவர் அனுமதியோடு அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கலாம்' என்கிறார். `பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மகாபாரதத்திலேயே நடக்கின்றன' எனப் பேசிய கமல்மீது `மகாபாரதத்தை இழிவுபடுத்துகிறார்' என்று வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. `நீங்கள் சைவம் சாப்பிட்டுவிட்டு கோபப்படலாமா?' என `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புவிடம் கேட்ட கேள்வி பிரச்னையை உருவாக்க, `சைவம் இங்கு மட்டும்தான் மதத்தோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது' என்று பதில் சொன்னார் கமல். `பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் கலாசாரம் கெடுகிறது எனக் கிளம்பியிருக்கும் அமைப்புகளுக்கு `முத்தக் காட்சியில் தான் நடித்தபோது கெட்டுப்போகாத கலாசாரம், இப்போது கெட்டுப்போகாது' எனப் பதில் சொன்னார். அரசின்மீது நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார், விமர்சனங்களை வைக்கிறார். ``சட்டம் என்னைப் பாதுகாக்கும். நீதி மீது நம்பிக்கை இருக்கிறது'' என்றார் கமல். 

டான்ஸர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்... எனப் பன்முகக் கலைஞனாக, இந்திய சினிமாவின் முகங்களில் ஒன்றாக இருப்பவர் கமல்ஹாசன். அவர்மீது ஏன் இத்தனை சர்ச்சைகளும் பிரச்னைகளும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன? இந்தக் கேள்விக்குப் பதில் ஒன்றுதான். `பல நேரங்களில் கமல்மீது சர்ச்சைகளைத் திணிக்கிறது சமூகம். சிலநேரம் கமல்ஹாசனே திணிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்!'