Published:Updated:

''அவரால பெண்களுக்குப் பாதுகாப்பில்லைனு சொன்னதை தாங்கிக்க முடியல'' - கலங்கும் நடிகர் பரணியின் மனைவி #BiggBossTamil #VikatanExclusive

''அவரால பெண்களுக்குப் பாதுகாப்பில்லைனு சொன்னதை தாங்கிக்க முடியல'' - கலங்கும் நடிகர் பரணியின் மனைவி #BiggBossTamil #VikatanExclusive
''அவரால பெண்களுக்குப் பாதுகாப்பில்லைனு சொன்னதை தாங்கிக்க முடியல'' - கலங்கும் நடிகர் பரணியின் மனைவி #BiggBossTamil #VikatanExclusive

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் என் கணவர் கலந்துகிட்ட ரெண்டு வாரத்தில் அவரை ரொம்ப நல்லாப் புரிஞ்சுகிட்டேன். அவருக்கு அங்கே நிறைய கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கு. எல்லாத்தையும் கடவுள் பார்த்துகிட்டுதான் இருக்கார். இப்போ, இனிமையான வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்துட்டு இருக்கோம்'' என நெகிழ்ந்து பேசுகிறார் நடிகர் பரணியின் மனைவி ரேவதி. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பரணி பங்கெடுத்தது, அதற்கு பிறகான தவிப்புகளைப் பற்றி பேசுகிறார். 

"நிச்சயம் வெற்றிபெறும் நம்பிக்கையோடுதான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போனார். அவரைப் பிரிஞ்சு இருந்த ரெண்டு வாரமும் மனஉளைச்சலும் கவலையுமா இருந்துச்சு. அவருக்கு யாரையும் காயப்படுத்த தெரியாது. உதவும் குணம்கொண்டவர். 'மத்தவங்க வம்புக்கு இழுத்தாலும் கோபப்படாமல் பொறுமையைக் கடைபிடிங்க' எனச் சொல்லித்தான் அனுப்பினேன். அவரும் கடைசிவரை பொறுமையா இருந்ததை அந்த நிகழ்ச்சியைப் பார்த்த மக்களுக்குத் தெரிஞ்சிருக்கும். 

அந்த நிகழ்ச்சிக்குள் போன அடுத்தடுத்த நாட்களில், அவர் பட்ட கஷ்டத்தைப் பார்த்து நானும் குடும்பத்தாரும் ரொம்பவே துடிச்சுப்போனோம். 'அப்பாவை ஏம்மா இப்படி செய்றாங்க?'னு கேட்கும் குழந்தைகளுக்குப் பதில் சொல்ல முடியலை. எடிட் செய்யப்பட்ட ஒரு மணி நேர நிகழ்ச்சியிலேயே இவ்வளவு சித்திரவதைன்னா, பார்க்காத மத்த நேரங்களில் இன்னும் எவ்வளவு கஷ்டங்களை சந்திக்கிறாரோனு பதறினேன். 'சாப்பிட்டாரா, தூங்கினாரா'னு தவிப்போடு ஒவ்வொரு நாளையும் நகர்த்தினேன். தினமும் கோயிலுக்குப் போய், அவர் நல்லபடியா திரும்பி வந்தா போதும்னு வேண்டிக்கிட்டேன். அந்த நேரத்துல உறவினர்கள், நண்பர்கள், சினிமா துறையினர், நலம் விரும்பிகள்னு பலரும் போன் பண்ணி  எனக்கு ஆறுதல் சொன்னாங்க. அவர் மேலே சுமத்தப்பட்ட அந்தப் பழிச்சொல் என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு" என ஆதங்கத்துடன் நிறுத்தியவர், சற்றே மெளனித்து பிறகு தொடர்கிறார். 

"எந்தக் கஷ்டமான டாஸ்க் வெச்சிருந்தாலும் அவர் ஜெயிச்சிருப்பார். ஆனா, தப்பே பண்ணாதவரை, 'இவரால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை'னு அபாண்டமா சொன்னா எப்படி தாங்கிக்க முடியும்? ஒரு மனைவியா அந்தக் குற்றச்சாட்டை கேட்டு ரொம்பவே வேதனைப்பட்டேன். அவர் இடத்தில் தன் சகோதரர்களை ஒப்பிட்டுப் பார்த்திருந்தா அப்படி ஒரு பொய் குற்றச்சாட்டைச் சொல்லி இருப்பாங்களா? ஜூலிக்குப் பிரச்னை வந்தப்போ, அவங்களுக்கு ஆதரவாகப் பேசின ஒரே நபர் என் கணவர்தான். கடைசியில் அவங்களே இவரை ஆதரிக்காததைப் பார்த்து நொறுங்கிட்டேன். கல்யாணமான நாலு வருஷத்தில் நான் அதிகம் கஷ்டப்பட்டது, இந்த ரெண்டு வாரத்தில்தான். அவருக்கு மது, புகை என எந்தப் பழக்கமும் கிடையாது. ஒருத்தர் அமைதியா இருக்கிறதாலே எல்லோரும் சேர்ந்து பழி சுமத்தறது கொடுமையானது. தப்புச் செய்தவங்களை ஆண்டவன் பார்த்துக்குவார். 

'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியே வரும்போது, யார்கிட்டயும் பேசாமல் அவங்க முகத்தில்கூட முழிக்காமல் அவர் வந்ததை நினைச்சு சந்தோஷப்படறேன். அவர் வந்ததும் என் பொண்ணும் பையனும் கட்டிப்பிடிச்சு அழுதுட்டாங்க. அவருக்கு ஸ்வீட் கொடுத்தேன். குளிச்சுட்டு கோயிலுக்குப் போனோம். நான்வெஜ் சமைச்சுக் கொடுத்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறமா சந்தோஷமா சாப்பிட்டார். நாள் முழுக்க எங்களோடு சிரிச்சுப் பேசிட்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நிகழ்ச்சியில் கமல் சார்கூட அவர் பேசுறப்போ, 'குடும்ப உறவுகளை பிரிஞ்சு வெளிநாடுகளில், மிலிட்டரியில், கப்பல்களில், சுரங்கங்களில் வேலை செய்கிற ஆண்களுக்கு ராயல் சல்யூட்'னு சொன்னார். அவரோட உணர்வுகளை நானும் அனுபவிச்சதால் மனசார சொல்றேன், 'குடும்பத்தாரின் முகம் பார்க்காமல் நெடுந்தொலைவில் வேலைச் செய்துட்டிருக்கிற பல்லாயிரம் சகோதரர்களுக்கும், அவங்களுடைய மனைவிகளுக்கும்  சல்யூட் அடிக்கிறேன்'' என்று நெகிழ்ந்த ரேவதி, தொடர்ந்து பேசினார். 

"அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்திருக்கக்கூடாது. எதிர்ப்புகளைச் சமாளிச்சு வின்னராகி இருக்கணும்னு பலரும் சொல்றாங்க. அவர் வந்ததுதான் சரின்னு நான் நினைக்கிறேன். என் கணவரிடம் அன்பு வெச்சு சப்போர்ட் பண்ணின எல்லோருக்கும் நன்றியுள்ளவர்களா இருப்போம். சாதாரண பரணியா இருந்தவர், மக்களால்தான் 'பிக் பாஸ்' பரணியா மாறியிருக்காரு. மனிதர்கள் எப்படியெல்லாம் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டோம். உள்ளே இருக்கிற போட்டியாளர்கள் யார் மேலேயும் எங்களுக்குக் கோபம் கிடையாது. சின்ன ஆதங்கம் மட்டும் இருந்துச்சு. இப்போ அதுவும் போயிடுச்சு. போட்டியாளர்களில் சிறந்த ஒருவரை மக்கள் சரியா தேர்வு செய்வாங்க. என் கணவர் கசப்பான அனுபவங்களை மறந்துட்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டார். 'இவன் தந்திரன்' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சமுத்திரக்கனி அண்ணனின் படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கார். தொடர்ந்து நல்லபடியா நடிப்பார்" என தன் கணவர் பரணியின் கரம் பற்றி புன்னகைக்கிறார் ரேவதி.