Published:Updated:

``இயக்குநர் ஷங்கர் என்னை நடிக்கச் சொன்னார்`` - டாப் 10 மூவிஸ் சுரேஷ் குமார்.

உ. சுதர்சன் காந்தி.
``இயக்குநர் ஷங்கர் என்னை நடிக்கச் சொன்னார்`` - டாப் 10 மூவிஸ் சுரேஷ் குமார்.
``இயக்குநர் ஷங்கர் என்னை நடிக்கச் சொன்னார்`` - டாப் 10 மூவிஸ் சுரேஷ் குமார்.

டாப் 10 மூவிஸ் என்றாலே நம் கண்முன் கோட் சூட் போட்டுக்கொண்டு `இந்த வாரம், முதல் இடத்தைப் பிடித்திருப்பது...` என்று கம்பீரமான குரலோடு நிற்கும் சுரேஷ் குமார்தான் நினைவுக்கு வருவார். இந்த ஷோ ஆரம்பித்தது முதல் இன்று வரை அசராமல் தொகுத்து வழங்கியும், அவ்வப்போது சன் டிவி-யில் செய்தி வாசிப்பாளராகவும் இருக்கும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சுரேஷ் குமாரிடம் ஒரு ஜாலி பேட்டி. 

``

மீடியா மீதான ஆர்வம் எப்படி வந்தது?''

``எனக்கு தமிழ்மீது ஆர்வம் அதிகம். 1990-களில் தூர்தர்ஷன் மட்டும்தான் இருந்தது. அதில் ஷோபனா ரவி, வரதராஜன் மாதிரியானவங்க செய்தி வாசிக்கிறதைப் பார்த்து, நான் அசந்துபோவேன். அப்புறம், நான் செய்தி வாசிச்சா எப்படி இருக்கும்னு நினைச்சு, அவங்கள மாதிரியே நானும் பேசிப் பேசி பார்ப்பேன். ஆர்வம் இருந்ததே தவிர, அதுக்கான எந்த முயற்சியும் எடுக்கலை. பிறகு, 1994-ல் மெட்ரோ சேனல் வந்த பிறகு, `செய்தி வாசிப்பாளர்கள் தேவை, தொகுப்பாளர்கள் தேவை'னு விளம்பரம் வந்துச்சு. அதுக்கு விண்ணப்பிச்சேன். அப்படியே போயிட்டிருக்கு.''

``மீடியா பயணம் பற்றி...''

``நான் தூர்தர்ஷனுக்கு விண்ணப்பிச்சு பல மாசம் கழிச்சு, இன்டர்வியூவுக்கு வரச்சொல்லி தபால் வந்தது. அப்போ நான் தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துட்டிருந்தேன். இதோட வேலை என்னன்னே தெரியாது. ஒரு ஆசையில போயிட்டேன். `படிச்சதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதனால நம்மள தாழ்வா நினைப்பாங்களா?'னு நினைச்சுட்டே போனா, அங்கே 3,000 பேர் இருந்தாங்க. ஒவ்வொருத்தரும் முதுகலைப் பட்டதாரி. அப்புறம் அதுல நான் தேர்வாகி, தூர்தர்ஷன்ல ஒன்றரை வருஷம் அறிவிப்பாளரா இருந்தேன். 1996, செப்டம்பர் 5, மதியம் 12 மணிக்கு முதன்முதலாக பச்சை நிறச் சட்டை போட்டு நேரலையில `வணக்கம். சென்னை தொலைக்காட்சி நிலையம், மாநகர அலைவரிசையில் நண்பகல் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது'னு பேசினேன்.

அப்புறம், அப்படியே போக, செய்தி வாசிப்பாளருக்கு நடந்த தேர்வில் தேர்வானேன். இதுல தேர்வானதுக்குப் பிறகு, நிறைய ஹார்ட் வொர்க் செய்தேன். அப்போ, சந்தியா ராஜகோபாலன், ஷோபனா ரவி இவங்களோடு சேர்ந்து செய்தி வாசிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவங்க நிறைய ஆலோசனை கொடுத்தாங்க. அங்கே இருந்த நண்பர் ஒருத்தர், சன் டிவி-யில் இருந்தார். அவர் சொல்லித்தான் சன் டிவி-க்கு வந்தேன். அப்ப நிறையபேர் `அரசியல் சார்ந்த சேனல் வேணாம்'னு சொன்னாங்க. ஆனா, எனக்குப் பிடிச்சிருந்தது, சேர்ந்தேன். ஜனவரி 28, இரவு 10 மணிக்கு சன் டிவி-யில் அதே பச்சை நிறச் சட்டை போட்டு செய்தி வாசிச்சேன். அப்புறம், அதே வருஷம் ஆகஸ்ட் 13 `டாப் 10 மூவிஸ்' பண்ணச் சொன்னாங்க. அப்போ ஆரம்பிச்சு இப்போ வரை  பண்ணிட்டிருக்கேன். நவம்பர் வந்தா 1,000-வது வாரம். 20 வருஷங்களா ஒரே சேனல், ஒரே நிகழ்ச்சி, ஒரே தொகுப்பாளர் இடைவெளி இல்லாமல் இதுதான் முதல்முறை.''

``உங்கள் வாழ்வில் நெருக்கமான நண்பர்கள்?''

``பொதுவா நான் எல்லோரையும் நண்பர்னு சொல்ல மாட்டேன். காரணம், எனக்குத் தீமை விளைவிச்ச நண்பர்கள் அதிகம். அந்த விரக்தியில் நான் அவ்வளவாக யார்கிட்டயும் சீக்கிரம் பழகிட மாட்டேன். ஆனா, இப்போ நிறைய நல்ல மனிதர்கள் கூட இருக்காங்க. குறிப்பிட்டு சொல்லணும்னா, நான் சன் டிவி-க்கு வர காரணமா இருந்த நண்பர் அருள் பிரகாஷ். அப்புறம் என் உடன் பிறவா சகோதரர் விவேக்.''  

``மீடியாவில் மறக்க முடியாத சம்பவங்கள்?''

``சுனாமி வந்தபோது நான் செய்தி வாசிச்சது, கலைஞர் கைதானபோது, இரட்டைக்கோபுரம் விபத்து நடக்கும்போது நான் ஸ்டூடியோவிலிருந்திருக்கேன். கலாநிதி சார் என்னை புரொஃபசர்னுதான் கூப்பிடுவார். சன் நியூஸ் சேனல் ஆரம்பிக்கும்போது, கலாநிதி மாறன் சார்கூட காலையில 3 மணியிலிருந்து நாள் முழுக்க இருந்தது சுவாரஸ்யமா இருந்தது.''  

``பேராசிரியராகவும் மீடியா பெர்சனாலிட்டியாகவும் எப்படி டைம் மேனேஜ் பண்றீங்க?''

``24 மணி நேரம்கிறதே நிறைய டைம்தான். எனக்குப் பிடிக்காத வார்த்தை `பொழுதுபோக்கு`. கிடைக்கிற நேரத்தை நல்லபடியா பயன்படுத்தலாம். அதை ஏன் போக்கணும்? திங்கள் முதல் வெள்ளி வரை காலேஜ்ல வேலை. சனி, ஞாயிறுகளில் எல்லாம் டிவி-க்கு முன்னாலிருந்து நேரத்தைச் செலவிடுறாங்க. நான் டிவி-க்கு உள்ளே போயிருக்கேன். அவ்வளவுதான் வித்தியாசம். இரவு 12 மணிக்குதான் ஷூட் இருக்கும். போயிட்டு 2 அல்லது 3 மணிக்கு வந்திடுவேன். 365 நாளும் பிஸியா இருக்க கொடுத்துவெச்சிருக்கணும்.''

``அப்போ இருந்த மீடியாவுக்கும் இப்போ இருக்கும் மீடியாவுக்கும் உள்ள வித்தியாசம்?''

``அப்போ கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்னா அசந்துபோய்ப் பார்ப்போம். இப்போ அதெல்லாமே சாதாரணமாகிடுச்சு. அப்போ டெலி பிராம்டர்ல நியூஸை ஃபீட் பண்ணிப் படிக்கணும். கொஞ்சம் தவறுச்சுன்னாலும் நியூஸ் மாறிடும். இப்போ அப்படி இல்லை. கேமரா, லைட்ஸ் எல்லாமே மாறிடுச்சு. ட்ங்ஸ்டன் லைட் வெளிச்சத்துல நியூஸ் வாசிக்கும்போது வியர்த்துக் கொட்டும். இப்போ கூல் லைட்ஸ் வந்திடுச்சு. அப்போ, இவங்க பேர்னு சுலபமா சொல்லிடுவாங்க. ஆனா, இப்போ நிறைய சேனல்கள் வந்ததுனால புரொஃபஷனல் அடையாளம் இல்லாமப்போயிடுச்சு.''

``சினிமா வாய்ப்பு வந்திருக்கணுமே...''

``பொதுவா, டிவி-யில வேலை பார்க்கிறவங்க அடுத்து சினிமாவுக்குப் போகக் காரணம், டிவி-யில இருக்கும்போது கிடைச்ச தொடர்புகள்தான். இயக்குநர் ஷங்கரைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கிடைச்சது. `என்ன சார்... அடுத்த புராஜெக்ட்ல படம் பண்ணலாமே... இன்ட்ரஸ்ட் இருந்தா நம்பரை அசிஸ்டென்ட்கிட்ட கொடுத்துட்டு போங்க..` னு சொன்னார். `இல்லை சார், எனக்கு டைரக்‌ஷன்தான் இன்ட்ரஸ்ட். உங்களோடு வொர்க் பண்றேன்'னு சொன்னேன். ஆனா, அதுக்கு வாய்ப்பு இல்லாமப்போயிருச்சு. அப்புறம், டிவினா நான் சொல்றதுக்கு ஏற்றமாதிரி ஷெட்யூல் போடுறாங்க. சினிமாவுல அப்படிப் பண்ண முடியாது. என் வேலையும் பாதிக்கும். அதை மீறி, ஒரு படத்துல சீமான் பைலட் ரோல் கொடுத்து பண்ணச் சொன்னார். எனக்கு அதுல உடன்பாடு இல்லை. செய்தி, டாப் 10, பேராசிரியர் இது எல்லாமே எனக்கு நேர்கோட்டில் இருக்கிற மாதிரி இருக்கு. சினிமா அப்படி இருக்காது.''

``லைஃப் டைம் டார்கெட் என்ன?''

``ஒரு மனுஷனுக்குத் தேவை சம்பாத்தியம், மன நிறைவு, சமூகத்தில் மரியாதை. இது எல்லாமே எனக்குக் கிடைச்சிருச்சு. இருந்தும் என்கிட்ட `சினிமாவுக்குப் போறது எப்படினு தெரியலை', `இது எப்படிப் படிக்கிறதுனு தெரியலை'னு சொல்றாங்க. அதனால, வீடியோக்கள்   மூலமா சமுதாயதுக்கு நல்ல செய்தி சொல்லணும். அப்புறம், ஆன்மிகத்துல ஆர்வம் அதிகமாகியிருக்கு. நிறைய ஆன்மிகவாதிகளின் தொடர்புகள் கிடைச்சிருக்கு. காசு கொடுத்து என்ன வேணும்னாலும் பண்ணலாம். ஆனா, ஆன்மிவாதி ஆக முடியாது. அதுபற்றி அவ்வளவா யாருக்கும் தெரியலை. எனக்கு இப்போ லிங்க் கிடைச்சிருக்கு. அப்புறம், இத்தனை படங்களுக்கு விமர்சனம் பண்ணியிருக்கோம். ஆனா, நான் நினைச்ச மாதிரி ஒரு படம் பண்ணணும்னு எனக்கு ரொம்ப ஆசை. நிச்சயமா ஒரு படமாவது டைரக்ட் பண்ணுவேன்.''

``சுரேஷ் குமார்  ஒரு பேராசிரியாரா... மீடியா பெர்சனாலிட்டியா..?''

``ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே வேலைதான். டிவி-யிலயும் பேசுறோம்; வகுப்புலயும் பேசுறோம். ஆனா, வகுப்புக்கு வந்துட்டா டிவி பற்றி யோசிக்க மாட்டேன்; பேச மாட்டேன். ஏன்னா, பசங்க ட்ராக் மாறிடும். பாடம் எடுக்கும்போது சின்னத் தவறு செஞ்சா, அது 100 அல்லது 150னு மாறும். அதுவே  டிவி-யில தவறு செஞ்சா, அது பல கோடி தவறுகளா மாறும். ஆக, கேமரா முன்னாடி ரொம்ப பொறுப்புணர்வுடன் இருப்பேன். மாணவர்கள் மத்தியில் அவ்வளோ அன்பு கிடைக்குது. அதற்கு முக்கியக் காரணம் மீடியா.''

``அப்போதிலிருந்து இப்போது வரை ஒரே மாதிரி இருக்கீங்களே?''

`` `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்`னு சொல்வதுபோல மனசு சுத்தமா எந்தக் கெட்டதும் நினைக்காம இருந்தாலே போதும், இளமைக்கு மனசுதான் காரணம். வயசுங்கிறது ஒரு எண் அவ்வளவுதான். அப்புறம், பழக்கவழக்கங்கள், சத்துடைய சாப்பாடு, கொஞ்சம் உடற்பயிற்சி போதும். மனசு சந்தோஷமா இருக்கும்.''

``எத்தனையோ படங்கள் விமர்சனம் பண்ணியிருக்கீங்க... உங்களுக்குப் பிடித்த படம்... நீங்க யாருடைய ரசிகர்?''

``எனக்குப் பிடித்த படம் `வேதம் புதிது'. அப்புறம் `ஆட்டோகிராஃப்'. நான் கமல்ஹாசனுடைய ரசிகன்.''

`` `பிக் பாஸ்' பற்றி உங்கள் கருத்து...''

`` `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு கமல் ஒரு தொகுப்பாளர், அவ்வளவுதான். இந்த கான்செப்ட், வெளிநாட்டு சேனலுடையது. ஒரு என்டர்டெயின்மென்ட் மீடியாவைப் பொறுத்தவரையில் மக்கள் விரும்புகிறார்களா... இல்லையானுதான் பார்க்கணும். அது அவங்களுக்கு விருப்பப்பட்டதா இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, எனக்கு இது பிடிக்கவில்லை.''

``உங்களைத் திருப்திப்படுத்தாத படத்தை ஸ்க்ரிப்ட் காரணமாக மெச்சிப் பேசியதுண்டா?''

`` `டாப் 10' நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, எல்லா ஊர்களிலிருந்தும் அந்தப் படத்தைப் பற்றியத் தகவல்களை அனுப்பி, இங்குள்ள விமர்சன குழு ஸ்க்ரிப்ட் தயாரித்து அதை நான் தொகுத்து வழங்குகிறேன். இந்த விமர்சன குழுவில் நானும் ஒருவன். ஒரு படத்தின் மைனஸை வெளிப்படையாக `சரியில்லை'னு சொல்லாம, `இது இன்னும் நன்றாக இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்...`னு சொல்லிடுவேன். அப்படிச் சொன்னாலே அது சரியில்லைனு புரிந்துகொள்வார்கள். ரேங்கிங், ஒவ்வொரு ஊரிலுள்ள மக்களின் முடிவு. ஆனால், ஸ்க்ரிப்ட் நாம எழுதுறது. `ஆட்டோகிராஃப்' படத்துக்கு, பல வாரங்கள் நான்தான் முழுக்க ரசிச்சு ஸ்க்ரிப்ட் எழுதினேன்.'' 

``இப்போ யூடியூபில் எல்லாரும் விமர்சனம் செய்கிறார்களே...''

``விமர்சனம் எழுதுறதுங்கிறது எக்ஸாம் பேப்பர் திருத்துவதுபோல. அதைப் பற்றித் தெரிஞ்சால்தான் திருத்த முடியும். அதுபோல, சினிமா பற்றித் தெரிஞ்சவங்கதான் விமர்சனம் பண்ண முடியும். எல்லாருமே கைத்தட்டி விசில் அடிக்கலாம். ஆனா, விமர்சனம் என்பது சினிமா பற்றித் தெரிஞ்சா மட்டும்தான் பண்ண முடியும், பண்ணணும். ஒரு படம் சரியில்லாமகூட இருக்கலாம். அது உன்னோட கருத்து. அதைப் பத்திரிகையிலோ சமூக வலைதளங்களிலோ இடம்பெறும்போது அதற்கு நாம் தகுதியான நபராங்கிறதைப் புரிஞ்சுக்கணும். இது ஒரு பொழுதுபோக்கா இருக்கலாம். அதே சமயம் இதுக்காக உழைக்கிற அத்தனை பேரையும் நினைச்சுப்பார்க்கணும். எனக்கும் ஆரம்பத்துல சினிமா பார்க்கிறதைத் தவிர ஒண்ணும் தெரியாது. இதுக்காக, நான் இசை கத்துக்கிட்டேன், எப்படி டப் பண்றாங்க, ஸ்டன்ட் சீன் எப்படி எடுக்குறாங்க, என்னென்ன லைட்ஸ் இருக்கு, கேமரா எப்படி உபயோகிக்கிறாங்கனு எல்லாத்தைப் பற்றியும் கத்துக்கிட்டேன். இன்னும் முழுமையா கத்துக்கிட்டேனானு தெரியலை. அதேபோல, விமர்சனம்கிறது உள்ளது உள்ளபடி ப்ளஸை ப்ளஸாவும் மைனஸை மைனஸாவும் சொல்லணும். தனக்குத் தெரியாத துறை பற்றித் தவறாகப் பேசி, ஒருவன் பாதிக்கிறான்னா, அது மிகப்பெரிய குற்றம். விமர்சனம் பண்ணுங்க... அதுக்கான தகுதியை உருவாக்கிக்கிட்டுப் பண்ணுங்க.''