Published:Updated:

“எங்க வீட்டில் டபுள் டமாக்கா” - குஷியில் தேவதர்ஷினி!

“எங்க வீட்டில் டபுள் டமாக்கா” - குஷியில் தேவதர்ஷினி!
“எங்க வீட்டில் டபுள் டமாக்கா” - குஷியில் தேவதர்ஷினி!

ல வருடங்களாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் காமெடி, குணச்சித்திரம் என பின்னியெடுத்து மக்களின் மனதில் பச்சை குத்தியதுபோல ஒட்டிக்கொண்டவர் தேவதர்ஷினி. 2011-ம் ஆண்டு அவர் நடித்த 'காஞ்சனா' படத்தின் அண்ணி கேரக்டர் இன்று வரை அனைவரையும் ரசித்துச் சிரிக்கவைக்கிறது. அந்தப் படத்துக்காக, தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகை விருதைப் பெறுகிறார். அதேநேரம், அவரது கணவர் சேத்தனும் 'உதிரிப்பூக்கள்' சீரியலுக்காக சிறந்த குணச்சித்திர நடிகர் விருதினைப் பெறுகிறார். ஷூட்டிங் பிஸியிலும் தேவதர்ஷினி குரலில் அவ்வளவு குஷி! 

“ஒரே நேரத்தில் இரண்டுப் பேருக்கும் விருது... எப்படி ஃபீல் பண்றீங்க?” 

''ரொம்ப சந்தோஷமா இருக்கு. டபுள் டமாக்கா மாதிரி. பல வருஷங்களுக்கு முன்னால் செஞ்ச வேலைக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கிறதை நினைக்கிறப்போ ரொம்ப குஷியா இருக்கு.'' 

“உங்கள் இரண்டு பேரில் யார் முதலில் வாழ்த்துக்களைப் பகிர்ந்தது?”

“நான்தான் சேத்தனுக்கு வாழ்த்துச் சொன்னேன். 'உதிரிப்பூக்கள்' சீரியலில் அவர் அப்பா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 'இந்த வயசிலேயே அப்பா ரோலா?'னு ஒரு மாதிரி இருந்துச்சு. ஆனால், எல்லோரும் ரசிக்கிற அளவுக்கு இருந்துச்சு அந்த கேரக்டர். தொடர்ந்து அந்த சீரியலைப் பார்த்தேன். இந்த விருது சந்தோஷத்தை என் அப்பா, அம்மாவுக்குப் போன் பண்ணி சொன்னேன். 'உனக்கும் விருது கிடைச்சிருக்கு. வாழ்த்துக்கள்'னு அவங்க ஸ்வீட் சர்பிரைஸ் கொடுத்தாங்க. அப்போதான் எனக்கு விருது கிடைச்சதே தெரியும். உடனே, நியூஸ் பேப்பரைப் பார்த்தேன். சேத்தனும் எனக்கு வாழ்த்துச் சொன்னார். ரெண்டுப் பேரும் ஹய்ஃபை சொல்லிக்கிட்டோம். எனக்கும் சரி, அவருக்கும் சரி, இது இரண்டாவது விருது. முதல்முறை 'பார்த்திபன் கனவு' படத்துக்காக, நகைச்சுவை நடிகைக்கான ஸ்டேட் அவார்டு கிடைச்சது. சேத்தனுக்கும் இதற்கு முன்னாடி ஒரு சீரியலுக்குக் கிடைச்சது. மத்தப்படி, ரெண்டுப் பேருக்குமே மயிலாப்பூர் அகாடமி நிறைய விருதுகள் கொடுத்திருக்கு.'' 

“உங்க பொண்ணு என்ன சொன்னாங்க?'' 

“ 'நீங்க இரண்டு பேரும் வாங்கிட்டீங்க. அப்போ எனக்கு விருது?'னு ஆசையா கேட்டாங்க. 'பெரியவளாகி நீயும் வாங்கு'னு கட்டி அணைச்சுக்கிட்டேன். விருது வாங்கின கையோடு, குடும்பமா வெளியில் போய் சாப்பிடப்போறோம்.'' 

“நடிகர் லாரன்ஸ் என்ன சொன்னார்?'' 

“எனக்கு விருது கிடைச்சதை தெரிஞ்சதும் அவருக்குத்தான் முதல்ல போன் பண்ணினேன். 'அப்படியா சூப்பர் சூப்பர். அடுத்த படத்துக்கு டேட் வெச்சுக்கங்க. அதுக்கும் அவார்டு வாங்கிடலாம்'னு சொன்னார். அடுத்த போன், கோவை சரளா அம்மாவுக்கு. 'சரளாம்மா, எனக்கு இந்த விருதை வாங்கவே ஒரு மாதிரி இருக்கு. நீங்க இருக்கும்போது எனக்கு எப்படி?'னு தயங்கினேன். அதுக்கு அவங்க, 'நான் இதோடு மூன்று ஸ்டேட் அவார்டு வாங்கிட்டேன். உன் திறமைக்கு நியாயமான விருது இது. வாழ்த்துக்கள்'னு சொன்னாங்க. 'காஞ்சனா' படத்தில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்க காரணம், லாரன்ஸ் மாஸ்டரும் சரளா அம்மாவும்தான். ஷூட்டிங் ஸ்பாட்லயே நிறைய சீன்கள் மாறும். 'ரொம்ப நல்லா பண்றாங்க. இந்தப் பொண்ணை இன்னும் இப்படிப் பண்ணச் சொல்லலாம்'னு படத்தில் நிறைய இடங்களில் வாய்ப்புக் கொடுத்தாங்க. சரளாம்மா ஒரு இடத்தில்கூட தான் பெரிய நடிகை என்கிற ஆட்டிடியூடை காண்பிச்சதில்லை. அவங்கக்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்.'' 

''இப்போ என்னென்ன புராஜெக்ட்டுல இருக்கீங்க?'' 

''விஜய் நடிக்கும் 'மெர்சல்', சுசீந்திரன் சார் படம், பிரசாந்த் நடிக்கும் 'ஜானி', விஜய் சேதுபதி நடிக்கும் '96' எனப் பல படங்களில் நடிக்கிறேன். அதர்வா நடிக்கும் 'செம்ம போத ஆகாத' படத்தில் சேத்தனும் நானும் நடிக்கிறோம். தெலுங்கில் அனுஷ்கா படத்திலும், பெயர்வைக்காத இன்னொரு படத்திலும் நடிச்சுட்டிருக்கேன். டி.வியில் 'சன்டே கலாட்டா' தொடர்ந்திட்டிருக்கு.'' 

''எப்பவும் ஒரே மாதிரி உடம்பை ஃபிட்டா வெச்சிருக்கீங்களே எப்படி?'' 

''கடவுள் கொடுத்த கிஃப்ட். இருபத்தஞ்சு வயசு வரை ஸ்லிம்மா இருந்தேன். இப்போ வயசாக வயசாக ரொம்ப அக்கறை எடுத்துக்க வேண்டியிருக்கு. என் தங்கையின் ஃபிட்னஸ் ஸ்டூடியோவுக்கு அடிக்கடிப் போவேன். ஆனாலும், எந்த விதத்திலும் சாப்பாட்டைக் குறைச்சுக்கிறதில்லை. வஞ்சனை இல்லாம சாப்பிடுவேன். நல்ல மனநிலையும், சந்தோஷமான சூழலோடும் இருந்தாலே உடம்பு நாம சொல்ற பேச்சைக் கேட்கும்'' எனக் கன்னத்தில் குழி விழச் சிரிக்கிறார் தேவதர்ஷினி.