Published:Updated:

"எந்த இடத்துலயும் நாங்க அப்பா-பொண்ணுன்னு சொல்லிக்க மாட்டோம்!" - எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர்

"எந்த இடத்துலயும் நாங்க அப்பா-பொண்ணுன்னு சொல்லிக்க மாட்டோம்!" - எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர்
"எந்த இடத்துலயும் நாங்க அப்பா-பொண்ணுன்னு சொல்லிக்க மாட்டோம்!" - எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர்

"அப்பாவின் ரத்தத்தில் ஊறிப்போன டப்பிங் ஆர்டிஸ்ட் கலை, எனக்குள்ளும் இருக்கிறதில் ஆச்சர்யமில்லை. வீட்டிலேயே பெரிய திறமைசாலி இருந்ததால, என் ஒவ்வொரு முயற்சியையும் தைரியமா வெளிக்கொண்டுவர முடியுது'' என்கிறார் ஐஸ்வர்யா பாஸ்கர். வளர்ந்துவரும் தமிழ் சினிமா டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள். 

"குழந்தைப் பருவத்திலேயே டப்பிங் பேச வந்துட்டீங்களா?'' 

"ஆமாம். அப்பாவும் அத்தை ஹேமமாலினியும் டப்பிங் ஆர்டிஸ்டா இருந்தாங்க. கார்ட்டூன் படங்களுக்கு டப்பிங் கொடுக்க குழந்தை குரல் தேவைன்னு அத்தை என்னை ஸ்டூடியோவுக்கு கூட்டிட்டுப் போனாங்க. விளையாட்டா மைக் முன்னாடி பேச ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு எட்டு வயசுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் கார்ட்டூன்னா குஷியாகிடுவோம். குழந்தையா எனக்கும் அந்த வொர்க் ரொம்ப உற்சாகமா இருக்கும். பார்ட் டைம் ஜாப் மாதிரியெல்லாம் நினைக்காமல் பிக்னிக் போகிற மாதிரி ஜாலியா டப்பிங் தியேட்டருக்குப் போவேன். ஒவ்வொரு கார்ட்டூன் கேரக்டரைப் பார்த்ததும் ஆட்டோமேட்டிக்கா சிரிக்க, பேச, ரசிக்க ஆரம்பிச்சுடுவேன். நான் டப்பிங் கொடுத்த கார்ட்டூன் படங்களைப் பத்தி ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்வேன். இப்படி என் குழந்தைப் பருவமே மறக்க முடியாத உற்சாக நினைவுகள் நிறைஞ்சது." 

"சினிமாப் பயணம் எப்படி ஆரம்பிச்சது?" 

"லயோலா காலேஜ்ல விஸ்காம் படிக்கிறப்போ நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ் எடுப்போம். அதில் நான் நடிக்கிறது குறைவுதான். ஆனா, நாங்க எடுக்கும் படங்களில் டப்பிங் விஷயத்தில் என் பங்களிப்பு பிரதானமா இருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து டப்பிங் கொடுத்துட்டு வந்தாலும், காலேஜ் வந்தபோது சுத்தமா வாய்ப்புகள் நின்னுடுச்சு. காலேஜ் முடிச்ச பிறகுதான் மறுபடியும் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. அப்படி 'இந்தியா பாகிஸ்தான்' படத்துல செகண்ட் ஹீரோயினா நடிச்சவங்களுக்கு டப்பிங் கொடுத்தேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. ஆஃபிஸ் வேலைகளில் இருந்த என் ஃப்ரெண்ட்ஸ் பலரும், 'கொடுத்துவெச்சவ நீ. சந்தோஷமா சினிமாவில் வொர்க் பண்றே. நாங்க அலாரம் அடிச்ச மாதிரி ஆஃபிஸ் போய்ட்டு வர்றோம். உன் ஜாப்தான் செம ஜாலி'னு உசுப்பேத்தினாங்க. அதுக்குப் பிறகு, முழு நேர டப்பிங் ஆர்டிஸ்டா வொர்க் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் 'கயல்' ஆனந்திக்குக் குரல் கொடுத்தது பெரிய ரீச் கிடைச்சுது. '144', 'மாலை நேரத்து மயக்கம்' 'என்னோடு விளையாடு' என இரண்டு வருஷத்தில் இருபதுக்கும் அதிகமான படங்களுக்கு டப்பிங் கொடுத்துட்டேன்." 

"அப்பாகிட்ட இருந்து டிப்ஸ் கிடைக்குமா?'' 

"நிறையவே! நான் குழந்தையா இருந்தபோதே, அப்பா டப்பிங் ஆர்டிஸ்டா கலக்கிட்டு இருந்தார். அப்பா டப்பிங் கொடுக்கிறதை லைவ்வா பார்த்திருக்கிறேன். 'காமராஜர்' படத்தில் அப்பாதான் காமராஜர் ரோலுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பார். அந்தப் படம் அப்பாவுக்குப் பெரிய ரீச் கொடுத்துச்சு. ஆயிரத்துக்கும் அதிகமான படங்களுக்கு அப்பா டப்பிங் கொடுத்திருக்கார். அதுல பெரும்பாலும், மொழி மாற்றுப் படங்கள். ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கும் எப்படி பேசணும்; எந்த இடத்தில் வாய்ஸ் மேலே போகணும், எந்த இடத்தில் கீழே போகணும், உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தணும்னு வீட்டில் பேசிக் காட்டுவார். என் வொர்க் பத்தி சரியான கமென்ட் கொடுப்பார். ஆனால், ஒருநாளும் எனக்காக யார்கிட்டயும் சிபாரிசு கேட்டதில்லை. எம்.எஸ்.பாஸ்கர் பொண்ணுனு நானும் சொல்லிக்க மாட்டேன். யாராச்சும் தெரிஞ்சு கேட்டால்தான் சொல்லுவோம். 'உனக்குன்னு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கோ. அதுதான் உயர்வைக் கொடுக்கும்'னு அப்பா சொல்வார்.'' 

"அப்பாவை டப்பிங் ஆர்டிஸ்டா பிடிக்குமா... நடிகராக பிடிக்குமா?" 

"டப்பிங் ஆர்டிஸ்டா அவரைப் பிடிச்சாலும், அவரின் குணச்சித்திர நடிப்புக்கு நான் பெரிய ரசிகை. டப்பிங், நடிப்பு என எதுவா இருந்தாலும், தி பெஸ்ட் கொடுக்கணும் என்பதில் உறுதியா இருப்பார். நானெல்லாம் கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவள். அப்பா அப்படியில்லை. இந்த உயரத்துக்கு வர அவர் பட்ட கஷ்டம் ரொம்ப அதிகம். இதை ஒவ்வொரு கட்டத்திலும் பார்த்து வளர்ந்தவள் நான். டப்பிங், சீரியல், சினிமா என தனக்கான அடையாளத்தை பெற அவர் பல வருஷம் இரவு பகலா கஷ்டப்பட்டிருக்கிறார். ஆனா, எங்களைக் கஷ்டத்தின் நிழல் படாத அளவுக்கு அன்பு காட்டி வளர்த்தார். அப்பாவுக்குப் பல மொழிகள் தெரியும். வெளியூருக்குப் போனா, அந்த மொழி மக்களோடு கலந்து பழகுவார். அப்படி, அப்பா மாதிரி பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கணும், நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன்." 

"உங்க குரலில் வெளிவர இருக்கும் படங்கள் என்னென்ன?" 

" 'மாணிக்', 'நாகேஷ் திரையரங்கம்', 'அதி மேதாவிகள்' உள்பட ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. பல மொழிகளையும் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். எந்த கிளாஸுக்கும் போகாமல் நானே டான்ஸ் கத்துக்கிட்டேன். இப்போ ஷார்ட் ஃபிலிமிலும் நடிக்கிறேன். 'உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதை பெஸ்டா பண்ணு'னு அப்பா சொல்லிட்டே இருப்பார். எந்த விஷயத்தைச் செய்யும்போதும் அந்த வார்த்தையை நினைச்சுட்டுதான் ஆரம்பிப்பேன்'' எனப் புன்னகைக்கிறார் ஐஸ்வர்யா பாஸ்கர்.