Published:Updated:

நடிகர் திலகம் சிவாஜியின் முதற்படம் பராசக்திக்கு எழுதப்பட்ட ‘பொளெர்’ விமர்சனம்

நடிகர் திலகம் சிவாஜியின் முதற்படம் பராசக்திக்கு எழுதப்பட்ட ‘பொளெர்’ விமர்சனம்
நடிகர் திலகம் சிவாஜியின் முதற்படம் பராசக்திக்கு எழுதப்பட்ட ‘பொளெர்’ விமர்சனம்

நடிகர் திலகம் சிவாஜியின் முதற்படம் பராசக்திக்கு எழுதப்பட்ட ‘பொளெர்’ விமர்சனம்

தமிழத்திரையுலகின் நடிப்புக்கு இலக்கணமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவரது நினைவுநாள் இன்று!

1928 ம் ஆண்டு அக்டோபர் 1 ந்தேதி தஞ்சை சூரக்கோட்டையில் சுதந்திரப்போராட்ட வீரர் சின்னய்யா - ராஜாமணி தம்பதிக்குப் பிறந்தவர் வி.சி. கணேசன் என்கிற விழுப்புரம் சின்னய்யா கணேசன். இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருந்ததால் படிப்பைத் துறந்து அரிதாரம் பூசிக்கொண்டார். சக்தி நாடக சபா, கே.ஆர் ராமசாமியின் நாடகக்குழு, அவ்வை தி.க ஷண்முகத்தின் நாடகக்குழு எனப் பல நாடகக் குழுக்களைக் கடந்து 40 களின் இறுதியில் அறிஞர் அண்ணாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். திமுகவில் எம்.ஜி.ஆருக்கு முன்னதாக முக்கியத்துவம் பெற்ற நடிகராக இருந்தவர் சிவாஜிகணேசன். 

மங்கள கான சபா குழு சென்னையில் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் நாடகங்கள் நடத்திவந்தபோது அந்த நாடகத்திற்கு அன்றைக்கு சினிமாவில் சிறுசிறுவேடங்களில் நடித்துவந்த ஒரு நடிகர் தினமும் நாடகம் பார்க்க வருவார்.  ஒருமுறை கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து அந்த நடிகர்,  நேரில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். பொன்னிற மேனி, கருகுரு முடி, கருணை குணம் இவற்றால் கவரப்பட்ட கணேசன், அவருடன் நட்பானார். அந்த பழக்கம் நாளடைவில் அவர்களை அண்ணன் தம்பிகளாக்கியது. உணவு வேளைகளில் கணேசன் வராமல் தன் சொந்த மகனுக்கு ஒருநாளும் உணவு பரிமாறியதில்லை சத்தியபாமா என்ற அந்த தாய். ஒரே இலையில் உணவோடு உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட அவர்கள்தான் பின்னாளில் திரையுலகைக் கட்டி ஆண்டார்கள். அந்த அண்ணன் எம்.ஜி.ஆர். 

காஞ்சியில் அண்ணாவின் வீட்டில் தங்கி திராவிட நாடு இதழ்ப் பணியில் உதவியாக இருந்தபடியே நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் கணேசன். அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். சிவாஜியாக நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசி நடிக்க ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்க கணேசனுக்கு உள்ளுர ஆசையிருந்தாலும் வசனத்தைத் தவிர அண்ணா எதிர்பார்த்த விஷயங்கள் அவரிடம் இல்லை. அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை பரிந்துரைத்தார்.

ஒரு மதிய வேளையில் எம்.ஜி.ஆரை கையோடு காஞ்சிக்கு அழைத்துவந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திரையுலகில் புதிய வீச்சுக்கு அந்த நாள் அடித்தளம் இட்டது. சிவாஜியாக நடிக்க எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டார். நாடகத்தில் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் சில காரணங்களால் நாடகத்தில் நடிக்க மறுத்து ஒதுங்கிக்கொண்டார். அதேசமயம் நாடக ஆசிரியர் அண்ணாத்துரையின் எழுத்து மீது பெரும் காதல் புத்தது அவருக்கு. வாய்ப்பு இப்போது கணேசனுக்கு வந்தது. சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியம் நாடகத்திற்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்தார் பெரியார். கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனை காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சிமுகர்ந்தார். கணேசன் , 'சிவாஜி' கணேசன் ஆனார்.

நேஷனல் பிக்சர்ஸ் நடத்திவந்த பெருமாள் முதலியார் ஒருமுறை சிவாஜியின் நாடகத்தைப் பார்க்கநேர்ந்தது. கணேசனின் நடிப்பு பிடித்துப்போய்விட்டது அவருக்கு. சில நாள்களில் தான்எடுக்கவிருந்த படத்திற்கு கதாநாயகனாக கணேசனை ஒப்பந்தம் செய்தார். பராசக்தி என்ற  அந்தப்படம் வளர்ந்துவந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. 

படத்திற்கு பைனான்ஸ் செய்துவந்த ஏ.வி.எம் செட்டியார் ஒருநாள் படப்பிடிப்பை காணவந்தார். சிறிதுநேரத்திற்கு பின் ஏ.வி.எம், பெருமாள் முதலியாரிடம் அதிருப்தியான குரலில் சொன்னார். பையன் நல்லாத்தான் இருக்கான். கொஞ்சம் குதிரைமூஞ்சியா இருக்கே. உடம்பும் ஒல்லியா இருக்கு... இத்தனை ஆயிரம் பணம் போட்டு எடுக்கிறோம். எதுக்கு விஷப்பரீட்ஷை. கே.ஆர்.ராமசாமி இல்லேன்னா டி.ஆர் மகாலிங்கத்தை வெச்சி எடுத்துக்கலாம். பையனை செட்டில் பண்ணி அனுப்பிடு”- இடிவிழுந்ததுபோலானது சிவாஜிக்கு. சினிமாக்கனவு கண்ணெதிரில் கலைந்துகொண்டிருந்தது. ஆனால் பெருமாள் முதவியார், எதுக்கும் அண்ணாகிட்ட ஒருவார்த்தை கேட்டிடலாம் என அப்போதைககு முடிவை தள்ளிப்போட்டார். தகவல் அண்ணாவுக்கு சென்றபோது, ராமசாமி நிறைய படங்கள்ல நடிச்சிட்டு வர்றார். புதுப்பையனைப் போட்டே முடிங்க... நல்லா நடிப்பான்... என சிவாஜிக்கு வாழ்வு கொடுத்தார். சில மாதங்களுக்கு சிவாஜிக்கு நல்ல ஓய்வும், சத்தான உணவும் தந்து அவரை குண்டாக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர். 

படத்தில் குணசேகரன் வேடத்தில் சிவாஜி அறிமுகமானார். தமிழ்சினிமாவில் ஒரு புதிய சகாப்தம் உருவானது. எஸ்.எஸ் ராஜேந்திரனுக்கும் இதுவே முதல்படம். பராசக்தி படம் முழுக்க முழுக்க சமூக சீர்திருத்தக்கருத்துகளைப் பொட்டில் அடித்தாற்போல் பேசியது. அன்றைய சமூகத்தில் அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். நாத்திகக் கருத்துக்களை பேசிய பராசக்தியை ஆஸ்திகர்கள் வசைபாடித்தீர்த்தனர். நாத்திகர்கள் கொண்டாடினர். திராவிட இயக்க வரலாற்றில் பராசக்திக்குத் தனியிடம் உண்டு. 
பராசக்தி படம் அன்றைக்கு சமுதாயத்தில் ஏற்படுத்திய எதிர்வினைக்கு உதாரணமாக அன்றைக்கு பிரபல சினிமா இதழான குண்டூசி அதற்கு எழுதிய விமர்சனத்தை இங்கு தருகிறோம். விமர்சனத்தை படியுங்கள்...

ஆஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! தெய்வ நிந்தனைத் திருப்பணி நிறைந்த ''பராசக்தி"

ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பிரசாரம் செய்ய விரும்பி செய்யப்படும் ஒரு காரியமானது, அதற்கு நேர்மாறான பலனை அளிக்குமானால், அந்த முயற்சியில் முனைந்தவர்களைக் குறித்து நாம் அனுதாபப்படத்தான் வேண்டும்! அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் நேஷனல் பிக்சர்ஸின் ''பராசக்தி". ஆஸ்திகத்தை அழித்து, நாஸ்திகத்தை வளர்த்துவிடநினைத்து செய்யப்பட்ட முயற்சியான "பராசக்தி", நாஸ்திகம் நசித்து, ஆஸ்திகம் பலப்படவேதான் வழி செய்திருக்கிறது. ஆகவேதான், 'ஆஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்' என்று குறிப்பிட்டேன்.

 

ஏதோஒரு பராசக்தி கோயில் பூசாரி. கோயிலின் உள்ளேயே ஓர் அபலையைக் பலாத்காரம் முயற்சிக்கிறான் என்று கதை ஒன்றைக் கையாண்டு, அதை மனதில் கொண்டு வசனங்களை எதுகை மோனை பிராஸங்களுடன் 'தீட்டி', கடவுளை மனம் கொண்ட மட்டும் தூஷணை செய்யப்படுகிறது இப்படத்தில். இதைப் பார்த்து, வெறுப்புற்று ஆஸ்திகர்கள் நாஸ்திகர்களாக மாறி விடுவார்கள் என்பது சம்பந்தப் பட்டவர்களின் எண்ணமாயிருக்கலாம். ஆனால், அது வீண் கனவாக முடிந்ததோடு மட்டுமின்றி ஆஸ்திகத்தை பலப்படுத்தி விட்டது. 'எத்தகைய பதிதனாயினும், இவ்வளவு அக்கிரமமான காரியத்தை தெய்வ சன்னிதியில் செய்யத் துணிவு கொள்ள மாட்டான்' என்பது அவர்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல; ''அடடா, நாம் இனி பிரதி தினமும் கோவிலுக்குப் போயாக வேண்டும். அப்படிப் போனால் தான் எங்காவது பதினாயிரம் இடத்தில்  ஓரிடத்திலாவது இப்படி நடப்பதாயிருந்தாலும் அதைத் தடுக்க முடியும்" என்ற எண்ணம் தான் நிலைத்து அவர்களது ஆஸ்திகமனப்பான்மை ஸ்திரப்படுகிறது. இந்த ஒரு ''பராசக்தி"யில்லை; இதை விட விஷமப் பிரசாரம் நிறைந்த படங்கள் அநேகம் வந்தாலும் நம் மக்களின் ஆஸ்திக மனத்தைக் கலைத்துவிட முடியாது!

'பராசக்தி வெறுங் கற்சிலை' என்று அழுத்தம் திருத்தமாக' பிரசாரம் செய்கிறார் கதாசிரியர். ஆனால், படக் கதையிலேயே பல இடங்களில் பல்டி அடித்திருக்கிறார். பராசக்தியின் சன்னிதியிலே கல்யாணியைக் கற்பழிக்க முயன்றானே பூசாரி, அவனால் அது முடிந்ததா? பூசாரியின் தயவிலே ஜீவனம் நடத்தும் அவன் கையாள், சரியான தருணத்தில் தூக்கத்திலிருந்து எழுந்து, அலட்சிய மணியை அடிக்க - அதனால் பூசாரியின் காரியம் கைகூடாமல் போக வழி செய்தது பராசக்தியின் அருள்தானே. அது மட்டுமா? பூசாரி உடலெல்லாம் ரண காயம் ஏற்பட்டு ஊர் சிரிக்க உயிர் தப்பினான். 'தெய்வம் நின்றுதான் கொல்லும்' என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? 

கல்யாணி ஆற்றுப் பாலத்திலிருந்து குழந்தையைக் கீழே வீசுகிறாள். அதே தினம், அதே நேரம் விமலா உல்லாசப் படகில் வருகிறாள்; வீசி எறியப்பட்ட குழந்தை தவறாமல் அந்தப் படகில் வந்து விழுகிறது; அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்ததும், ஒரு சிறு காயம் கூடப் படாமல் குழந்தை உயிர் பிழைக்கிறது. - இதெல்லாம் பராசக்தியின் அருளில்லாமல் சாதாரணமாக முடியக்கூடிய காரியங்களா?
அருமைத் தங்கை கல்யாணி. அவள் கல்யாணத்திற்கு வர முடியாத அருமை அண்ணன்மார் மூவர், சிங்கப்பூரில் தவிக்கின்றனர். ஒருவன் மட்டும் பணத்துடன் கிளம்புகிறான். அதற்குள் தங்கை கல்யாணி ஒரு குழந்தைக்குத் தாயாகி, அதே தினம் கணவன், தந்தை இருவரையும் இழந்து கதியற்றவளாகி இட்லி சுட்டு விற்றுப் பிழைக்கிறாள். பணத்துடன் வந்த அண்ணன் குணசேகரன், சென்னை நகர் அடைந்து, ஒரு விலைமகளால் ஏமாற்றப்பட்டு பணத்தைப் பறி கொடுக்கிறான். பிறகு, காரியப் பைத்தியமாக மாறி தங்கையைத் தேடிவந்து, தான் இன்னாரென்று காட்டிக்கொள்ளாமலே அவளுக்கு உதவி வருகிறான்.

காமுகன் ஒருவனது செயலினால் கல்யாணி அங்கு விட்டுக் கிளம்பி, ஒரு பிளாக்மார்க்கெட் பேர்வழியிடம் சிக்கித் தப்புகிறாள். இதற்கிடையில் சிங்கப்பூரிலிருந்து நடையிலேயே கிளம்பிய சந்திர சேகரன், ஞானசேகரன் ஆகிய மற்ற இரு சகோதரர்களும் வழியில் குண்டு வீச்சு சமயம் பிரிந்து விடுகின்றனர். தமிழ்நாட்டை அடைந்த சந்திரசேகரன் நீதிபதியாகி விடுகிறான். ஞானசேகரன், மூடவனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு புரட்சிப் பண்ண ஆரம்பிக்கிறான். பூசாரியினால் கற்பழிக்கப் படவிருந்த கல்யாணி தப்பி பசியால் துடித்த குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்று கைதாக்கப்படுகிறாள். 

நீதிபதி சந்திரசேகரன் முன், அந்தக் குற்றவிசாரணை ஆரம்பமாகிறது. குற்றவாளி தன் தங்கை என் அறிந்த நீதிபதி மூளைக் கலக்கம் அடைகிறார். தங்கையைத் தேடிவந்த குணசேகரன் பூசாரி செய்ய நினைத்த அட்டூழியத்தை அறிந்து அவனை வாள் கொண்டு தாக்கி கைதாகிறான். வழக்கு நடைபெறுகிறது. குழந்தை உயிர் தப்பிவிடவே கல்யாணிக்கு விடுதலை கிடைக்கிறது; பூசாரியைத் தன் தற்காப்புக்காகவே தாக்கியதாக குணசேகரனுக்கு மன்னிப்புக் கிடைக்கிறது. குடும்பம் ஒன்று சேர கதை சுபமாக முடிகிறது. இதுதான் படக்கதை. கதையில் ஒரு புதுமையுமில்லை. படக் கதைக்கும் பெயருக்கும் 'குலாம் காதருக்கும் கோகுலாஷ்டமிக்கும்' உள்ள சம்பந்தம்தான் இருக்கிறது. பராசக்தியின் மீது வசை புராணம் பாடப்படுகிறதே, அதற்காக இந்தப் பெயர் கொடுத்தார்களோ என்னவோ?

நாடகமாகப் பிரபலமானது இந்த "பராசக்தி" நாடகம் நடிக்கப்பட்ட போதே இந்த நாடகத்தைத் தடை செய்ய வேண்டுமென கிளர்ச்சிகள் நடந்தது உண்டு. நாடகக் கதையை திரைக்கு ஏற்றபடி, முக்கியமாக கடவுளையும் சர்க்காரையும் சமூகத்தையும் தாக்கு தாக்கென்று தாக்க இடம் வைத்து - மாற்றி அமைத்திருக்கிறார் மு.கருணாநிதி. தமது உத்வேகத்தில் அதற்காக வரம்பைக் கூட கடந்து கீழ்த்தரமான அளவுக்குச் சென்றிருக்கிறார். பல நூறு ரூபாய் நோட்டுகளைப் பறிகொடுத்த - சூட்டும் கோட்டும் அணிந்த - படித்த நாகரிக வாலிபனுக்கு உடனே போலீஸில் புகார் செய்யத் தோன்றாதது ஆச்சர்யமே. இதற்காக அந்தப் பாத்திரம் கதையின் பின்பகுதியில் கூறும் சமாதானம் சிரிக்கத்தான் செய்கிறது. இறுதியில், நீதிமன்றக் காட்சியில் கல்யாணி மீதும், குணசேகரன் மீதும் வழக்கு நடக்கும்போது, மைனர் வேணு, பிளாக்மார்க்கெட் நாராயண பிள்ளை, ஏமாற்றிப் பணம் பறித்த விலைமகள் இவர்களெல்லாம் அங்கு எப்படி, ஏன் வந்தார்கள் என்பதைப் படம் பார்ப்பவர்களின் கற்பனா சக்திக்கே விட்டிருக்கிறார்கள்!

மக்கள் பக்தியுடன் காவடி எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கிண்டல் செய்யவே 'பாடைக் காவடி' எடுப்பதாக உள்ள கட்டம் புகுத்தப்பட்டிருக்கிறது. கதையின் தொடர்ச்சிக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. இது விஷமத்தனமான - விஷமான அறிவிலிகளின் செயலாகும். இதைவிட மக்களின் மனதைப் புண்படுத்தும், கீழ்த்தரமான குரூரமான கற்பனை இருக்கவே முடியாது.
இப்படத்தின் வசூல் வெற்றிக்கு ஒரு காரணம் படத்தின் வசனங்கள், உணர்ச்சி ததும்பும் நடையிலே படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார் மு.கருணாநிதி என்பது மறுக்க முடியாத உண்மை கடவுளை இழிவு படுத்தும் இடங்களிலும் சர்க்காரையும் சமூகத்தையும் விளாசும் கட்டங்களிலும் மட்டுமின்றி, படம் முழுவதிலுமே வசனங்கள் உள்ளத்தைத் தொடும் முறையில் இருக்கின்றன.
"இட்லி விற்றுப் பிழைப்பது தமிழ் நாட்டில் தாலி அறுத்தவர்களின் தாசில் உத்தியோகம்" என்கிறார் வசனகர்த்தா. அவருக்குப் பழக்கமான, அவருக்குத் தெரிந்த ஒரு சில விதவைகள்தான் உலகம் என்று நினைத்திருக்கும் அவரது குறுகிய நோக்கத்தையே இது காட்டுகிறது.
'பரஸ்திரீயை நாடிப்போவேன்' என்று ஒரு கணவன் சொல்லும்போது, 'நானும் வேறு புருஷனைத் தேடிக் கொண்டு போகிறேன்' என்று ஒரு ஸ்திரீ சொல்லுவது தமிழ்நாட்டுப் பெண்மணிகளையே அவமதிப்பதாகும் என்பதை தமது ஆவேசத்தில் வசன கர்த்தா மறந்து விட்டார் போலும்!

பைத்தியத்தின் வாயிலாக பஜனைகள் வருண ஜபம், காவடி எடுத்தல் இவற்றைப்பற்றியெல்லாம் பிதற்றவைத்திருக்கிறார். ஆம்; எல்லாம் ஒரே பிதற்றல்தான், அர்த்தமற்ற முறையிலே காந்திஜி செய்த காரியம் ஒன்றும் இழுக்கப்படுகிறது. “பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டர், ஏழு குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய நல்லதங்காள், இந்தக் கதைகளைத் தடை செய்யாத அரசாங்கம் குழந்தையைக் கொல்ல முயன்ற கல்யாணியைக் குற்றம் கூறுவது தவறு” என்று வசனகர்த்தா கூறுவது அர்த்தமற்ற வாதம். அக்கதைகள், நடந்த காலத்தையும் அப்போதய சூழ்நிலையையும் பற்றி நிதானமாக ஆழ்ந்து யோசித்தால் அவருக்கே அது தெரியவரும்.

புதிய முகம் கணேசனைத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்ப்பட ரசிகர்களின் பாராட்டுதலுக்கு உரியவர்கள் நேஷனல் பிக்சர்ஸார். இப்படத்தில் நடிப்பில் முதல் ஸ்தானத்தை குணசேகரனாக வரும் கணேசனுக்குத்தான் அளிக்க வேண்டும். நல்லதொரு கதாபாத்திரத்தில் தோன்றி பிரமாதமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுவிட்டார் அவர். காரியப் பைத்தியமாக மாறும் கட்டத்திலிருந்து இவரது நடிப்பில் காணப்படும் விறுவிறுப்பு படிப்படியாக முன்னேறி, படத்தின் இறுதிக் கட்டத்தில் உச்சநிலையை அடைகிறது. வசனங்களை அழுத்தம் திருத்தமாக உணர்ச்சியுடன் பேசுகிறார். இவரது எதிர்கால வெற்றிக்கு இப்படம் நல்ல சூசனையாகும். சிற்சில இடங்களில் மட்டும் நாடக மேடை வாசனை வீசுகிறது.

நீதிபதியாக வரும் சஹஸ்ரநாமத்திற்கு படத்தில் அதிக சந்தர்ப்பங்கள் இல்லை யெனினும், உள்ளவரை வெகு நன்றாக நடித்துள்ளார். நீதிமன்றத்திலே, குற்றவாளி தன் தங்கை என அறிந்ததும் அவரது நடிப்புப் பிரமாதம். பிச்சைக்காரர்களை மகாநாடு கூட்ட அழைக்கும் சகோதரன் ஞானசேகரனாக வரும் எஸ்.எஸ்.ராஜேந்திரனது நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. தன் தங்கையைப் பற்றி அறிந்து துடிக்கும்போதும், இறுதியில் தன் குடும்பத்தினரைக் காணும் கட்டத்திலும் அவரது நடிப்பு மயிர்க்கூச்செறியச் செய்கிறது. நடிகர்களில் இம்மூவரைத் தவிர, மற்றவர்களுக்கு அதிகமாக வேலையில்லை. பிளாக் மார்க்கெட் நாராயண பிள்ளையாக வரும் வி.கே.ராமசாமி இப்படத்தில் தம் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். புஸ்தகங்களின் பெயரைக் கொண்டே இவர் கல்யாணியிடம் பேசுவதாக உள்ள இடம் தமாஷாக இருக்கிறது. ஆனால் அது உபயோகிக்கப்படும் கட்டம், புத்தக ஆசிரியர்களை இழிவு படுத்துவதாகவே படுகிறது.
நடிகைகளில் கல்யாணியாக வரும் ஶ்ரீரஞ்சனி நன்கு நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நடிகையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தன் தமையன்மார் கல்யாணத்துக்கு வராமை குறித்து வருந்தும் போதும், நீதிமன்றக் காட்சியில் வாதாடும் கட்டத்திலும் இவரது நடிப்பு நன்கு சோபித்துள்ளது . விதவையாக சித்தரிக்கப்பட்டுள்ள இவர் பாடாமலிருந்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது மேலும் இரக்கம் ஏற்பட்டிருக்க இடமுண்டு. தவிர படத்தின் விறுவிறுப்பும் பாதிக்கப்பட்டிருக்காது. குணசேகரனைக் காதலிக்கும் விமலாவாக பண்டரி பாய் கச்சிதமாய் நடித்திருக்கிறார். குணசேகரனுடன் வாதாடும் கட்டங்களில் உணர்ச்சியுடன் பேசி, நடித்திருக்கிறார், மற்ற பெண் கதா பாத்திரங்களுக்கு படத்தில் அதிகமாக வேலை இல்லை.

பாட்டுகள் அனைத்துமே கருத்து நிறைந்தவையா யிருக்கின்றன. முக்கியமாக "கா...கா...கா...", "தேசம் ஞானம்" ஆகிய இரு பாராட்டுகளையும் குறிப்பிட வேண்டும். பாரதியாரின் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாட்டையும் சரியான கட்டதில் பாட வைத்திருக்கிறார்கல். பாட்டுகள் யாவும் இனிமையாகப் பாடப்பட்டுள்ளன.

ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட வேலைகள் திருப்திகரமாக உள்ளன. ஒலி - ஒளிப் பதிவுகள் தரமாயிருக்கின்றன. முக்கியமாக ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டிய முறையில் இருக்கிறது. ஆடம்பரமான ஸெட்டுகள் எதுவுமில்லை.

டைரக்‌ஷனைக் குறித்து பிரமாதமாகக் குறிப்பிட எதுவும் இல்லை. பல இடங்களில் நாடகம் போலவே நகருகிறது. நாடகங்களிலே, அடுத்து வரும் பெரிய காட்சி ஒன்றுக்கு முன், அது தயாராகும் வரை காலம் கடத்த, வேறு ஒரு காட்சி இருக்கும். அதுபோல படக் கதையின் காட்சிகள் அமைந்துள்ளன. விமலா தன் காதலன் குணசேகரனுடன் காதல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாகக் கனவு காண்கிறாள். கனவுக் காட்சியிலே "புதுப் பெண்ணின் மனதை" என்று ஒரு பாட்டையும் பாடி விளையாடுகின்றனர். இதை விமலா மட்டுமே கனவு காண்கிறாள். ஆனால், படத்தின் இறுதியிலோ குணசேகரன் இதே பாட்டை முணு முணுத்துப் பாடுவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம்?
"பராசக்தி" ஒரு படமல்ல. பிரசங்க மேடை; அங்கே மதம் இழிவு படுத்தப்படுகிறது; பிராத்தனைகள் கிண்டல் செய்யப்படுகின்றன; ஹிந்து மதக் கோட்பாடுகள் நையாண்டி செய்யப்படுகின்றன. படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்தால், ஒரு குறிப்பிட்ட காட்சியின் மகாநாட்டுக்குப் போய், அவர்களது தீப்பொறி பறக்கும் பேச்சுகளைக் கேட்டு விட்டு வந்த உணர்ச்சியே ஏற்படுகிறது. மொத்தத்தில், இப்படத்தை 'நஞ்சு கலந்த பால் அன்னம்' என்றுதான் நான் குறிப்பிட விரும்புகிறேன். நடிப்பு அம்சம் சிறந்து விளங்கும் படத்திலே, கட்சிப் பிரசார விஷ(ம)ம் புகுத்தப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு