Published:Updated:

''நாடோடிகள் பட ஹீரோயின் தேர்வில் ரிஜெக்டானார்'' - ஓவியா பெர்சனல் சொல்லும் நண்பர்

வே.கிருஷ்ணவேணி
''நாடோடிகள் பட ஹீரோயின் தேர்வில் ரிஜெக்டானார்'' - ஓவியா பெர்சனல் சொல்லும் நண்பர்
''நாடோடிகள் பட ஹீரோயின் தேர்வில் ரிஜெக்டானார்'' - ஓவியா பெர்சனல் சொல்லும் நண்பர்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கொள்ளைக்கொண்ட ஓவியா சேச்சியின் பெர்சனல் போட்டோகிராஃபர் கொச்சினைச் சேர்ந்த அர்ஷல். ஓவியாவின் நண்பரும்கூட. அவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்கிறார்... 

 ''ஓவியா உங்களுக்கு எப்படி அறிமுகமானார்?'' 

'' 'நாடோடிகள் ' படத்துக்காக அனன்யா, அமலா பால், ஓவியா என மூன்று பேரின் ஆடிஷன் ஷூட்டிங்கை நான்தான் செய்தேன். இறுதியில் அனன்யாதான் தேர்வானார். அப்போதுதான் ஓவியாவை சந்தித்தேன். பிறகு பலமுறை அவரை ஃபோட்டோஷூட் எடுத்திருக்கிறேன்.'' 

''பொதுவாக அவர் எப்படிப் பழகுவார்?'' 

''எத்தனையோ பேரை போட்டோ ஷூட் பண்ணியிருக்கேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைப்பாக இருப்பாங்க. சில நேரங்களில் கஷ்டப்பட்டு போஸ் வாங்க வேண்டியிருக்கும். ஆனால், எத்தனை முறை சொன்னாலும், எவ்வளவு நேரம் ஆனாலும் அவர் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் போஸ் கொடுப்பார். ஒருமுறைகூட அவர் கோபப்பட்டோ, எரிச்சலாகியோ பார்த்ததில்லை. இந்த மாதிரி நல்ல ரேம்போ ஒரு மாடலுக்கு மிக குணம். அது அவர்கிட்ட அதிகமாகவே இருக்கு.'' 

''தமிழில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்க்கிறீர்களா?'' 

''ஆரம்பத்திலிருந்தே பார்க்கிறேன். ஓவியா என்கிற நம்ம பொண்ணுக்காகப் பார்க்கணும்னு தோணுச்சு. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்குப் போய் அவ்வளவு சுத்தமாக தமிழ் பேசக் கத்துக்கிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.'' 

'' 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவை காதலிப்பதாக ஓவியா சொல்லியிருக்காரே, நிகழ்ச்சிக்காக அப்படி சொன்னாரா?'' 

''அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஓவியா ரொம்பவே லவ்வபிள் கேரக்டர். மனசுல பட்டதை உடனே கேட்டுவிடுவார். அதற்காக, எதன்மீதும் பைத்தியமாக இருக்க மாட்டார். எதையும் ஈஸியாக எடுத்துப்பார். பக்கா கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட். நாம் எல்லாம் ஒருமாதிரி யோசித்தால், அவர் வேறு விதமாக யோசிப்பவர்.'' 

''சில நேரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடிக்கிற மாதிரி தோன்றுகிறதே...'' 

''அப்படியிருக்க வாய்ப்பே இல்லை. இரண்டு கேரக்டராக இருப்பவர்களுக்குத்தான் அந்தப் பிரச்னை வரும். ஓவியா எப்பவுமே இப்படித்தான். மனதில்பட்டதை சொல்லக் கூடியவர். தைரியமானப் பெண். ஈகோ இல்லாதவர்.'' 

''ஒரு தமிழ்ப் பையனை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறாங்களே...'' 

'''எனக்குத் தெரிந்து 80 சதவீத கேரள நடிகைகள் தமிழர்களைத்தான் திருமணம் செய்துட்டிருக்காங்க. தமிழர்கள் நல்ல கேரக்டராகவும், கேரிங்காகவும் இருக்காங்கனு நினைக்கிறேன். அப்படித்தான் ஓவியாவும் நினைச்சிருக்கலாம்.'' 

''ஓவியா, அவங்க அம்மாவைப் பற்றி ஃபீல் பண்ணிப் பேசினாங்களே...'' 

''திருச்சூரில் இருக்கும் அவங்க வீட்டுக்குப் போயிருக்கேன். அவங்க அம்மா கையால் சாப்பிட்டிருக்கேன். பக்கா புரொஃபஷனலா நடந்துப்பாங்க. பொண்ணோட சுதந்திரத்தில் தலையிடமாட்டாங்க. கடைசியா ஷூட்டிங் வந்தப்போதான் அவங்க அம்மா கேன்சரால் இறந்துட்டதைச் சொன்னாங்க. தன் குடும்பத்தில் வேறொருவருக்கு இதே பிரச்னை இருந்ததாகவும், அது அம்மாவுக்கும் தொடர்ந்ததாகவும் சொன்னாங்க. ஓவியாவின் கெரியரில் ஆரம்பத்திலிருந்து கூடவே இருந்தவர் அவர் அம்மா. இப்போ நீங்க பார்க்கும் ஓவியா வேற. அம்மா இறக்கிறதுக்கு முன்னாடி இருந்த ஓவியா வேற. எதையும் கண்டுக்காமல் தன் போக்கில் இருந்தவர் ஓவியா. சில நேரங்களில் சென்சிட்டிவாக இருப்பதும் உண்டு. அம்மாவின் இறப்புக்குப் பிறகு, எதன் மீதும் ஈடுபாடில்லாமல் இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் அவர் அம்மாவை நினைக்காமல் இருந்ததில்லை.'' 

''அவருக்கு நீங்க சொல்லிக்க விரும்பும் விஷயம்...'' 

''எந்தச் செயலைச் செய்வதாக இருந்தலும் சரி, பேசணும்னு நினைச்சாலும் சரி, பிளான் பண்ணித்தான் பண்ணுவார். எந்த விஷயத்தையும் திருப்திகரமாக செய்யணும்னு நினைப்பார். தத்துவார்த்தமா வாழ்க்கையை அணுகும் ஓவியா, இந்த நிகழ்ச்சியில் ஜெயித்தால், ஒரு நண்பராக, பெர்சனல் போட்டோகிராஃபராக நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். வாழ்த்துகள் டார்லிங்!''