Published:Updated:

“வள்ளி, வெண்ணிலா... என்னோட ஃபேவரைட் யார் தெரியுமா!?” ‘வள்ளி’ சீரியல் வித்யா கலகல

கு.ஆனந்தராஜ்
“வள்ளி, வெண்ணிலா... என்னோட ஃபேவரைட் யார் தெரியுமா!?” ‘வள்ளி’ சீரியல் வித்யா கலகல
“வள்ளி, வெண்ணிலா... என்னோட ஃபேவரைட் யார் தெரியுமா!?” ‘வள்ளி’ சீரியல் வித்யா கலகல

“நடிச்சது போதும், கல்யாணம் செஞ்சுக்கிட்டு குடும்பப் பொறுப்புகளை கவனிக்கலாம்னு நினைச்ச நேரத்தில்தான் 'வள்ளி' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. புது குடும்ப உறவுகளாக, சக நடிகர்களின் அன்பு கிடைச்சிருக்கு. தவிர, தமிழ் ரசிகர்களின் பேரன்பினால், நாலு வருஷத்தைத் தாண்டி இந்த சீரியலில் சந்தோஷமா நடிச்சுட்டிருக்கேன்'' எனப் புன்னகைக்கிறார் வித்யா. சன் டிவி 'வள்ளி' சீரியலில் வள்ளி, வெண்ணிலா என டூயல் ரோலில் அசத்துபவர். 

"ஆக்டிங் பயணம் தொடங்கியது எப்படி?" 

"ஒன்பதாவது படிக்கிறப்போ நிறைய விளம்பரப் படங்களில் நடிச்சுட்டிருந்தேன். அதைப் பார்த்து சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. பல படங்களில் முக்கிய ரோல்களில் வர ஆரம்பிச்சேன். ஸ்கூல்ல எனக்கு 'ஸ்பெஷல்' கவனிப்பு இருக்கும். பிளஸ் டூ முடிச்ச சமயத்தில் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சதால், கரெஸ்ல எம்.பி.ஏ படிச்சுக்கிட்டே நடிப்பைத் தொடர்ந்தேன். ஒரு தமிழ் படம் உள்பட 17 மலையாளப் படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன்." 

"சினிமா ஹீரோ, உங்க ரியல் ஹீரோ ஆனது எப்படி?" 

(பலமாகச் சிரித்தவர்), "கணவர் வினு மேனன் ஃபேமஸான மலையாள நடிகர். அவரும் நானும் ஒரு மலையாளப் படத்தில் நடிச்சிருக்கோம். ஆனா, ஜோடியாக இல்லை. எங்க ரெண்டு குடும்பமும் நட்போடு இருந்துச்சு. அதனால், பெற்றோர்கள் பார்த்து செய்த கல்யாணம்தான் இது. கல்யாணத்துக்குப் பிறகுதான் காதலிக்க ஆரம்பிச்சோம். இப்போ வரைக்கும் காதலிச்சுக்கிட்டே இருக்கோம்.'' 

''சினிமா டு சீரியல் அனுபவம் எப்படி ஆரம்பிச்சது?" 

''கல்யாணத்துக்குப் பிறகு புகுந்த வீட்டில் கிடைச்ச அன்புக்கு ஒப்பீடே சொல்ல முடியாது. என் வீட்டில் நான்தான் முதல் ஆர்டிஸ்ட். ஆனால், அவர் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையா சினிமா நட்சத்திரங்களாக இருக்காங்க. 'நீ நடிக்கிறது உன்னுடைய விருப்பம்'னு சொன்னாங்க. கல்யாணமாகி ஆறு மாசம் கழிச்சு, 'வள்ளி' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. கதைப் பிடிச்சு இருந்ததால் ஒப்புக்கிட்டேன். 'வள்ளி' சீரியலில் முதலில் ஹீரோயினா நடிச்சது நடிகை உமா. அவங்க கல்யாணமாகி ஃபாரீன்ல செட்டில் ஆகிட்டாங்க. 222 எபிசோடுக்குப் பிறகு நான் வந்தேன். ஆரம்பத்தில் ரொம்ப சிரமமா இருந்துச்சு. அப்புறம் பழைய கதையைத் தெரிஞ்சுகிட்டு நடிக்க ஆரம்பிச்சேன். எனக்காக கதையில் சில மாற்றங்களையும் செஞ்சாங்க. தமிழே தெரியாத நான், சிரமப்பட்டு டயலாக் டெலிவரி செய்வேன். நைட் டைம்தான், சீரியலுக்கான ப்ரைம் டைம். ஆனால், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்குப் பெரிய ரீச் கிடைச்சிருக்கு. அதுக்குத் தமிழ் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுதான் காரணம். இப்போ 1350 எபிசோடு கடந்து ஓடிட்டிருக்கு. ஆயிரத்தைத் தாண்டி நடிக்கிறோம்னு நினைக்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.'' 

"வள்ளி, வெண்ணிலா இருவரில் உங்க ஃபேவரைட் யார்?" 

"பார்வையில்லாத வெண்ணிலா கேரக்டரில் நடிக்கிறது பெரிய டாஸ்க். ஒரே நாளில் ரெண்டு கேரக்டர்களையும் மாறி மாறி நடிப்பேன். வெண்ணிலா ரோலுக்காக பார்வை இல்லாத மாதிரி நடிக்கிறப்போ தலைவலி அதிகமா இருக்கும். நடிப்புக்குப் பெரிய சவாலா இருக்கிறதால், வெண்ணிலாதான் என் ஃபேவரைட். என்னதான் வலி இருந்தாலும் ரசிகர்களின் பாராட்டும் அன்பும் அதையெல்லாம் மறக்கடிச்சுடும்." 

"நடிகை ஜோதிலட்சுமியை ரொம்பவே மிஸ் பண்றீங்களாமே..." 

"நான் இந்த சீரியல்ல நடிக்க வந்ததும் பாட்டி ரோலில் ஜோதிலட்சுமி அம்மா என்ட்ரி ஆனாங்க. சினிமாவில் பலரும் தயங்கும் கவர்ச்சி வேடத்தில் நடிச்சு புகழ்பெற்றவங்க. பெரிய ஆர்டிஸ்ட் என்கிற பந்தா இல்லாமல், என்னைச் சொந்த பொண்ணு மாதிரி நடத்துவாங்க. ஒரு சாக்லேட் வாங்கினாலும் எனக்கும் சேர்த்தே வாங்கிக் கொடுப்பாங்க. என் பிறந்த நாள், கல்யாண நாள்னு பல பெர்ஷனல் விஷயங்களை தெரிஞ்சுகிட்டு முதல் ஆளா பாராட்டுவாங்க. நடிப்புக்கு நிறைய டிப்ஸ் கொடுத்து ஊக்கப்படுத்துவாங்க. வீட்டிலிருந்து எனக்காக சமைச்சுக் கொண்டுவருவாங்க. 'உன் அம்மா மாதிரி என்னை நினைச்சுக்கோ'னு, பாசத்தைக் கொட்டுவாங்க. போன வருஷம் ஒரு வாரத்துக்கான அவங்க போர்ஷனை முடிச்சுட்டு போன சில தினங்களில் இறந்துட்டாங்க. தகவல் கேட்டு கதறி அழுதேன். அவங்க இழப்பை ஒவ்வொரு நாளும் உணர முடியுது. இப்போ, ஜோதி அம்மாவின் இடத்தை நடிகை லதா அம்மா சிறப்பா செய்யறாங்க.'' 

"நீங்களும் உங்க கணவரும் பயணப் பிரியர்களாமே..." 

"ஆமாம்! ரெண்டுப் பேருக்கும் டிரைவிங்னா ரொம்பப் பிரியம். கணவர் நடிப்புடன் சென்னையிலும் கேரளாவிலும் பிசினஸையும் கவனிச்சுகிறார். எனக்கு சென்னையில் ஷூட்டிங் இருந்தால், ரெண்டுப் பேரும் காரில்தான் வருவோம். ஷூட்டிங் இல்லாத நாட்களில் இந்தியா முழுக்க காரிலேயே சுத்துவோம். தொடர்ந்து 24 மணி நேரம் காரிலேயே பயணம் செய்த அனுபவம் நிறைய உண்டு. நானும் சூப்பரா கார் ஓட்டுவேன். நிறைய பயணம் செஞ்சு, பல மொழி மனிதர்களைத் தெரிஞ்சுக்கணும்னு எங்களுக்கு ஆசை. எங்க டிராவல் ஆசைக்கும் ஃபேமிலி நபர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறாங்க. லைஃப் செம ஹேப்பியா டிராவல் ஆகிட்டிருக்கு."