Published:Updated:

''உனக்கு ஏடாகூடமா அடிபட்டா எவன் கட்டிப்பான்?'' - நிஜ 'டங்கல்' கதை

மு.பார்த்தசாரதி
''உனக்கு ஏடாகூடமா அடிபட்டா எவன் கட்டிப்பான்?'' - நிஜ 'டங்கல்' கதை
''உனக்கு ஏடாகூடமா அடிபட்டா எவன் கட்டிப்பான்?'' - நிஜ 'டங்கல்' கதை

சேலம் மாவட்டம், சேலத்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா, ஓர் கபடி வீரர். ஊரில் இருக்கும் பல கபடி வீரர்களுக்கு இவர்தான் கோச். வலது கை இல்லாதபோதும் கபடியில் கை தேர்ந்தவரான அப்துல்லா மீது கிராமமே மதிப்பு வைத்திருக்கிறது. தன் இளம் வயதில் எப்படியாவது இந்தியாவுக்காக விளையாடி பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தவரை குடும்ப வறுமை, தையல் தொழிலுக்குத் தள்ளியது. தன்னால் முடியாததை தன் பிள்ளைகள் சாதித்துக் காட்டுவார்கள் என்ற சவாலோடு வாழ்ந்து வரும் அப்துல்லாவுக்கு மூன்று பெண் பிள்ளைகள்.

இப்போது உங்களுக்கு 'டங்கல்' படம் ஞாபகம் வருமே? அப்துல்லாவுக்கும் மகாவீர் சிங்குக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. அப்துல்லாவின் மூன்றாவது மகள் நிஷா பானு தந்தையின் கனவை நிறைவேற்றிவரும் தங்க மகள். சிறு வயதிலிருந்தே கபடி விளையாட்டில் கலக்கிவரும் நிஷா, வீடு நிறைய பதக்கங்களை குவித்திருக்கிறார். 

“என் அப்பா கிராமத்தில் இருக்கிற அண்ணன்களுக்கு கபடி கத்துக்கொடுக்கிறதைப் பார்த்துப் பார்த்து நானும் விளையாட ஆசைப்பட்டேன். 'நீ ஒரு பொண்ணு. உனக்கு எதுக்கு விளையாட்டு? அதிலும் கபடியில் நிறைய  அடிபடும். ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா உன்னை எவன் கல்யாணம் கட்டிக்குவா'னு அம்மா திட்டுவாங்க. அதையெல்லாம் மீறி அப்பாகிட்ட அடம்பிடிச்சு கபடி கத்துக்கிட்டேன். ஆறாங்கிளாஸ் படிச்சுட்டிருந்தப்போ  முதல்முறையா கபடி போட்டிக்குப் போறேன்னு சொன்னதும், அக்கம்பக்கம் இருக்கிறவங்க என் அம்மாகிட்ட, 'பொம்பளைப் புள்ளயை எல்லாருக்கும் மத்தியில் விளையாட விடுறது நல்லாவா இருக்கும்'னு சொன்னாங்க. அதிலும், ஒரு முஸ்லீம் பொண்ணு விளையாடறதா சொன்னதும் பயங்கர எதிர்ப்பு. 'இன்னிக்கு இவ விளையாடப்போனா அதைப் பார்த்து ஊர்ல இருக்கிற மத்த புள்ளைகளும் விளையாடணும்னு சொல்லும். விடக்கூடாது'னு பயமுறுத்தினாங்க'' என்று நிஷா பானு சொல்லும்போதே, நமக்குள் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. 

மற்றவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாத அப்துல்லா, நிஷாவை தைரியமாக களத்தில் இறக்கியிருக்கிறார். நிறைய ஆண்கள் இருந்த இடத்தில் நிஷாபானுவின் முதல் ஆட்டம் ஆரம்பமாகி இருக்கிறது. அவர் விளையாடிய வேகத்தைப் பார்த்து, எதிர்ப்பு தெரிவித்த அத்தனை பேரும் வாயடைத்து நின்றிருக்கிறார்கள்.

''அதுக்கப்பறம் தினம் தினம் ஸ்பெஷல் ட்ரெயினிங்தான். காலையில் அஞ்சு மணிக்கு எழுந்து ரன்னிங், எக்சர்சைஸ், பிராக்டிஸ்னு வாழ்க்கை பரபரப்பா ஓடுச்சு. ஸ்கூல் லெவல் போட்டிகளில் பெஸ்ட் பெர்ஃபார்ம் பண்ணி அசத்தினேன். பத்தாம் வகுப்பு வரை கபடியிலேயே முழுமையா கவனம் செலுத்திட்டு இருந்த என்னை பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர்கள்தான் தடகள விளையாட்டு பக்கம் திசை திருப்பினாங்க'' என்கிறார் நிஷா பானு.

மூன்று பெண் பிள்ளைகளுக்குப் பிறகு அப்துல்லாவுக்கு இரண்டு பையன்கள் பிறந்திருக்கிறார்கள். குடும்ப வறுமை காரணமாக நிஷாவின் சகோதரிகள் இருவரும் மற்ற மூவருக்காக தங்கள் படிப்பை நிறுத்திவிட்டு தையல் தொழிலையே கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் கபடி மற்றும் தடகள விளையாட்டில் முழு கவனம் செலுத்துவது நிஷா பானு மட்டும்தான்.

“ஆரம்பத்தில் பொம்பளைப் புள்ளைகளுக்கு எதுக்கு படிப்பு, விளையாட்டுன்னு யோசிச்சிருக்கேன். ஆனா, இன்னிக்கு நிஷாதான் என் பேரை காப்பாத்திட்டிருக்கா. என் மத்த பெண்களின் தியாகமும் நிஷாவை இந்த இடத்துக்கு உயர்த்தி இருக்கு. இப்போ நிஷாவுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமா ரயில்வே வேலை கிடைச்சிருக்கு. அவளை எங்க கிராமத்து மக்கள் தலையில் வெச்சுக் கொண்டாடுறாங்க” என்கிறார் நிஷாவின் அம்மா ஜுலானி.

“எங்க ஊர்ல முதல்முறையா டி ஷர்ட் போட்ட பொண்ணு நிஷாவாதான் இருக்கும். அவ ஹேர்கட் பண்ணிட்டு ஷாக்ஸும் டிஷர்ட்டும் போட்டுக்கிட்டு முதல்முறையா வெளியே வந்தபோது அத்தனை பேரும் ஆச்சரியமா பாத்தாங்க. 'பொம்பள பிள்ளைக்கு அழகே கூந்தல்தான். அதை ஏன் வெட்டுனீங்க'னு பலரும் கேட்டாங்க. அதையெல்லாம் சிரிச்சிட்டே கடந்தோம். வெளியூர்ல நடக்கும் போட்டிகளுக்கு எப்படி தனியா அனுப்பறதுன்னு பயமா இருக்கும். ஆனால், நிஷா தைரியமா போவாள். அவள் ஜெயிச்சு வாங்கிவந்த வெள்ளிப் பதக்கமும் தங்க மெடலும் வீடு முழுக்க நெறஞ்சி கெடக்கு. ஆனா, கஷ்டம் மட்டும் தீர்ந்த பாடில்லை. மனசுக்குள்ளே நம்பிக்கையோடு இருக்கும் நிஷா, எல்லாத்தையும் மாத்திக்காட்டுவா” என தன்னம்பிக்கையோடு பேசுகிறார் நிஷாவின் அக்கா. 

“இப்போ நான் போல் வாட் விளையாடினாலும் கபடிதான் எனக்குள்ளே விளையாட்டு ஆர்வத்தை உண்டு பண்ணிச்சு. கபடியை விட்டு தடகளத்துக்கு வந்ததுக்கு காரணம், இந்தியாவிலிருந்து இன்னும் யாருமே போல் வாட்ல சாதிக்கலை. நான் தொடர்ந்து ஐந்து வருஷமா நேஷனல் லெவலில் ஜெயிச்சுட்டிருக்கேன். இரண்டு முறை வெள்ளியும், கடைசியா தங்கமும் ஜெயிச்சேன். என் டார்கெட் இந்தியாவுக்காக தங்கம் ஜெயிக்கிறது. எந்த ஒரு வெளிச்சமும் இல்லாம இருந்த எனக்கு உதவி பண்ணின என் கோச் இளம்பரிதி சாருக்காகவும், நம்ம பொண்ணு ஒருநாள் நம் ஆசையை நிறைவேத்திடுவான்னு காத்திருக்கும் என் அப்பாவுக்காகவும், எனக்காக படிப்பை நிறுத்திட்ட சகோதரிகளுக்காவும் நான் ஜெயிக்கணும். நிச்சயமா 2020 ஒலிம்பிக்ல நீங்க என்னை ஒரு சாதனைப் பெண்ணாகப் பார்ப்பீங்க.” 

நம்பிக்கை வார்த்தைகளில் வைரமாக மின்னுகிறார் நிஷா பானு.