Published:Updated:

நீங்கள் பாவைகளல்ல... கைப்பாவைகள்!

முகத்தில் அறையும் ஒரு நிஜ சினிமா!பொன்.விமலா

நீங்கள் பாவைகளல்ல... கைப்பாவைகள்!

முகத்தில் அறையும் ஒரு நிஜ சினிமா!பொன்.விமலா

Published:Updated:

'இந்தியப் பெண், சுதந்திரமானவள்தானா?’ என்கிற கேள்விக்கு... ஆழமாகவும், அழுத்தமாகவும் பதில் சொல்லி, காண்போரை அதிரவைக்கிறது... 'த வேர்ல்டு பிஃபோர் ஹெர்’ (The world before her) எனும் ஆங்கில சினிமா! உண்மையில் இது வழக்கமான கற்பனை சினிமாவல்ல... நூற்றுக்கு நூறு நிஜம். ஆம், படத்தில் வரும் சம்பவங்கள், காட்சிகள், மனிதர்கள், வசனங்கள் என அனைத்தும் முழுக்க முழுக்க நிஜம்! காரணம், இது ஓர் ஆவணப் படம்!

நீங்கள் பாவைகளல்ல... கைப்பாவைகள்!

இந்தோ - கனடியன் வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நிஷா பஹுஜா என்பவரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படம், பல விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது. பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளாரான அனுராக் காஷ்யப், இந்தியாவின் மெட்ரோ சிட்டிகளில் இருக்கும் பி.வி.ஆர் குரூப் தியேட்டர்களில் மட்டும் ஒரு வாரத்துக்கு இதைத் திரையிட்டிருக்கிறார். வசூலை எதிர்பார்க்காமல் வெளியிடப்பட்ட இந்தப் படம், எதிர்பார்த்தது போலவே பலருடைய விழிகளையும் அகலமாய் விரிய வைத்திருக்கிறது!

தங்கள் வாழ்க்கையைத் தங்களுக்காக வாழ முடியாதபடி இந்திய பெண்கள் எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒருவரி உண்மை!

ஒருபக்கம் 'மிஸ் இந்தியா’ போட்டிக்காக நடுத்தர வர்க்க பெண்கள் வளைத்துப்போடப்படுவதையும், இன்னொரு பக்கம் மதம் என்கிற பெயரில் இதேபோல நடுத்தர வர்க்க பெண்கள் ஒழுக்கப் பயிற்சிகளுக்காக கட்டாயப் படுத்தப்படுவதையும் கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது படம்.

'மிஸ் இந்தியா’ கனவோடு இருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ருஹி, மும்பை மாநகரத்தின் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்படுகிறாள். இதேபோல நாடெங்கிலும் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்களுடன் சேர்த்து அழகுப் போட்டிக்காக இவர்களுக்கு தரும் பயிற்சிகளும், சிகிச்சைகளும்... அதிர்ச்சி ரகம்!

பெண்களை பிகினியில் வெளிப்படுத்துகிறார்கள். பெண்களின் கூச்சத்தை பேசிப்பேசியே கரைக்கிறார்கள். அவிழ்த்தலும் தொடுதலும் சகஜமாக்கப்படுகிறது. 'ஒரு பெண் நிற்கும்போதுகூட சாதாரணமாக நிற்கக் கூடாது... அவள், அழகை வெளிப்படுத்தப் பிறந்தவள், எனவே, மார்பை தூக்கி நிறுத்தி வசீகரிக்க வேண்டும்’ என்பது போன்ற போதனைகள் சொல்லித் தரப்படுகின்றன. மூளைச்சலவை ஒருபக்கம் என்றால், உடலின் பாகங்களை அழகாக்க ஊசிகள் போடப்பட்டு இவர்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பது கொடுமையின் உச்சம்!

நீங்கள் பாவைகளல்ல... கைப்பாவைகள்!

இன்னொரு பக்கம், இந்துமதம் சார்புடைய அமைப்பான 'துர்கா வாஹினி’யில் பயிற்சியாளராக இருக்கிறாள் பிரச்சி எனும் பெண். இந்தியப் பெண்களின் ஒழுக்கம் இதுதான் என்று கட்டுக்கோப்பான மனநிலையுடன் வாழ்பவள், யோகா மற்றும் தற்காப்புக் கலையை மற்ற பெண்களுக்கும் பயிற்றுவிக்கிறாள். 'பெண் என்பவள் கணவனுக்கு சேவை செய்யக் கூடியவள்; அவளுக்கு பிறப்பை தந்திருப்பதே பிள்ளைகளைப் பெற்றுப் போடத்தான்' என்கிற போதனைகளைத் திணித்துக்கொள்கிறாள். தனக்குக் கீழ் பயிற்சிபெறும் சிறுமிகளைப் போராளிகளாக உருவாக்குகிறாள்.

''உலகமயமாக்கலுக்குப் பிறகு 'நவீன இந்தியா’வின் உருவாக்கத்தில் பெண்கள் எப்படியெல்லாம் கைப்பாவைகளாக பயன்படுத்தப்படுகிறார்கள், அவர்களின் உடல் எப்படி உலகமயமாக்கலின் அங்கமாக விளங்குகிறது என்பதை ஆவணப் படமாக்க நினைத்தபோதே, அதற்கு மாறான இன்னொரு ஒடுக்குமுறையையும் பதிவு செய்ய முடிவெடுத்தேன். இரண்டு வெவ்வேறான பாதைகளின் வழியே பெண்ணுடல் ஆதிக்கம் செலுத்தப்படுவதை பார்வையாளர்கள் உணரும் வண்ணம் பதிவு செய்திருக்கிறேன்'' என்கிறார் இயக்குநர் நிஷா பஹுஜா!

நீங்கள் பாவைகளல்ல... கைப்பாவைகள்!

''இன்னும் வெளிச்சத்துக்கு..?!''

ந்தப் படத்தைப் பற்றி, திரையுலக சப்-டைட்டிலராக இருக்கும் நந்தினி மதன் கார்க்கியிடம் கேட்டபோது, ''உண்மையிலேயே... ஆச்சர்ய அதிர்ச்சிதான் படத்தைப் பார்த்ததும் ஏற்பட்டது. வித்தியாசமான இருவேறு தளங்களிலும் இருக்கும் உண்மைகளை, 'இந்தப் பக்கம் சரி... அந்தப் பக்கம் தவறு’ என்று சொல்லாமல் உள்ளது உள்ளபடி பகிரங்கப்படுத்தியுள்ளனர். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பார்த்து ஒரு பக்கம் கொதிக்கும் அதேநேரம்... அதற்கு இணையான பயத்தை தரும் விஷயத்தை இன்னொரு பக்கம் தொட்டிருக்கிறார்கள். இரண்டு பக்கத்திலும் சரியும் தவறும் கலந்தே இருக்கிறது.

ஒரு பக்கம் அழகுப் போட்டிகளில் அழகைத் தேடும் புகழ் போதை. இன்னொரு பக்கம் மதம் சார்ந்த கட்டுப்பாடு. அழகுப் போட்டியில் கனவு காண்பதற்கான தன்னம்பிக்கையை சொல்லித் தரும் நேரத்தில், பெண்களை பல்வேறு விதங்களில் துன்புறுத்துகிறார்கள். துர்கா வாஹினி பயிற்சி முகாமிலோ... தற்காப்புக் கலையைச் சொல்லித்தரும்போதே பிற மதத்தவர்களை வெறுப்பதை சகஜமாக கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த இரண்டு துருவங்களுமே தவறு.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது, 'இன்னும் எந்தெந்த துறைகளெல்லாம் இப்படி வெளிச்சத்துக்கு வரவேண்டி உள்ளதோ' என்கிற எண்ணமே என்னை முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டது!'' என்று சொன்னார்.