Published:Updated:

“நானும் எவ்வளவு நாள்தான் கெட்டவனாவே நடிக்கிறது..?!” - வேல.ராமமூர்த்தி கலகல

“நானும் எவ்வளவு நாள்தான் கெட்டவனாவே நடிக்கிறது..?!” - வேல.ராமமூர்த்தி கலகல
“நானும் எவ்வளவு நாள்தான் கெட்டவனாவே நடிக்கிறது..?!” - வேல.ராமமூர்த்தி கலகல

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களின் படங்கள் அதிக வரவேற்பை பெறுகிற காலகட்டம் இது. இந்த வருடத்திலேயே அதிக நல்ல படங்கள் புதுமுக இயக்குநர்களிடமிருந்து வந்துள்ளன. அப்படி ஒரு புதுமுக இயக்குநரின் படைப்பில் காமெடி சரவெடியாக உருவாகிவருகிறது, ‘பதுங்கி பாயணும் தல’. அந்தப் படத்தின் இயக்குநர் மோசஸ் முத்துப்பாண்டியிடம் பேசினோம்.

முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது..?

“நான் சீமான் அண்ணன், எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட உதவியாளரா ஒர்க் பண்ணுனேன். நாலு படம் ஒர்க் பண்ணுனதுக்கு அப்பறம் படம் பண்ணலாம்னு வரும்போது ஒரு த்ரில்லர் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுனேன். அப்போ தான் பேய்ப்பட ட்ரெண்ட் ஆரம்பமாச்சு. சரி, பேய்ப்படத்துக்கு ஒரு ஸ்கிரிப்ட் எழுதலாம்னு அதையும் எழுதுனேன். ’எல்லாமே பேய்ப்படமா வருது, நீங்க கமர்ஷியல் கதை இருந்தா சொல்லுங்க’னு தயாரிப்பாளர்கள் சொன்னாங்க. அதுக்கப்பறம் நான் ரெடி பண்ணுன ஸ்கிரிப்ட்தான் இந்த ’பதுங்கி பாயணும் தல’.
நடிகர் சிங்கம் புலியோட தம்பி சுதாகர் தட்சணாமூர்த்தி அண்ணன்தான் என்னை மீடியா பேஷன் புரொடக்‌ஷன்ஸ் கம்பெனிக்கு அழைச்சிட்டு போனார். அப்போ நான் சொன்ன கதை பிடிச்சுப்போக உடனே ஓகே சொல்லிட்டாங்க ஆமினா ஹுசேன் மேடம். இப்படித்தான் ஆரம்பமாச்சு என் முதல் படம்.’’

படத்தில் என்ன ஸ்பெஷல்..?

“இந்தக் கதையை நான் விஜய் சேதுபதிக்காகதான் எழுதினேன். ஆனால், பட்ஜெட் அதிகமாக போகும் அதனால் வேற நடிகரை தேர்ந்தெடுக்கச் சொன்னாங்க. அப்போதான் மைக்கேலைப் பார்த்தேன். படத்தோட கதை மதுரையைச் சுற்றிதான் நடக்கும். மைக்கேலை மதுரைப் பையனா மாற்ற என்னால முடியும்னு நினைச்சேன். அதே மாதிரி அவரும் தன்னை மாற்றிக்கிட்டு நல்லா நடிச்சிருக்கார். படத்தோட மிக முக்கியமான கதாபாத்திரம்னா அது வேல.ராமமூர்த்தி ஐயாவோட கதாபாத்திரம்தான். இந்தப் படத்துல ஹீரோவோட சித்தப்பாவா நடிச்சிருக்கார். ஹீரோவோட அம்மா, அப்பா இறந்ததுக்கு அப்பறம் ஹீரோவை அவர்தான் வளர்ப்பார். தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அண்ணன் பையனுக்கு சித்தி கொடுமை இருக்குமோனு பயந்துக்கிட்டு கல்யாணமே பண்ணிக்காம இருப்பார். எப்படியாவது தேர்தல்ல நின்னு ஜெயிக்கணும்கிறது தான் இவரோட ஆசை. ஆனா, ஒரு தேர்தல்லையும் அவரால ஜெயிக்க முடியாது. ஆனாலும் அவரை விடாம, ஹீரோ அண்ட் டீம் ’உங்கள நாங்க கண்டிப்பா ஜெயிக்க வைப்போம்’னு டார்ச்சர் பண்ணும். படம் முழுக்க காமெடிக்கு பஞ்சம் இருக்காது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மாதிரி கலகலப்பா போகும்.’’

வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து இந்தப் படம் எந்தளவுக்கு வித்தியாசமானதா இருக்கும்..?

“வழக்கமாக ஒரு கமர்ஷியல் படத்தில் ஓபனிங்ல ஒரு சாங் இருக்கும், அப்பறம் சண்டை இருக்கும், அப்பறம் செண்டிமெண்ட் சீன் வரும், மறுபடியும் பாட்டு, சண்டைனு போயிட்டு இருக்கும். பெரும்பாலும் காமெடிகுள்ள தான் கதையே இருக்கும். ஆனால் நான் இந்தப் படத்தில் கதைக்குள் தான் காமெடியை வச்சிருக்கேன். காமெடியும் படம் ஃபுல்லா இருக்கும். அது தான் இந்தப் படத்தின் வித்தியாசம்னு நான் நினைக்கிறேன். மைக்கேல், சிங்கம் புலி, சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தானு பக்கா காமெடி டீமை வச்சுதான் ப்ளே பண்ணிருக்கேன். படமும் நல்லா வந்திருக்கு. தயாரிப்பாளர் படத்தைப் பார்த்துட்டு இதே டீமை வச்சு அடுத்தப்படமும் பண்ணச்சொல்லிருக்காங்க.படம் ஹிட்டானதுக்கு அப்பறம்தான் டைரக்டருக்கு தயாரிப்பாளர் பரிசு தருவாங்க. ஆனா எனக்கு, இந்தப் படத்தைப் பார்த்ததுமே தங்க செயினை பரிசா கொடுத்தாங்க ஆமினா மேடம். நம்ம வேலையை சரியா செஞ்சிருக்கோம்கிற திருப்தி வந்திருக்கு.’’ என்றார் இயக்குநர் மோசஸ் முத்துப்பாண்டி.

படத்தைப் பற்றி ஹீரோ மைக்கேல் கூறும்போது, “நான் தொலைக்காட்சிகளில் சில ரியாலிட்டி ஷோ பண்ணிருக்கேன். பர்மா படத்தில் ஹீரோவா நடிச்சேன். அந்தப் படம் எனக்கான அடையாளத்தைக் கொடுக்கும்னு ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா, அது சில காரணங்களால் சரியா போகலை. அதுக்குஅப்பறம் ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். எல்லாத்தரப்பு ஆடியன்ஸ்கிட்டேயும் என்னைக் கொண்டு போகிற படமா அது இருக்கணும்னு நினைச்சேன். அதே மாதிரி எனக்கு அமைஞ்ச படம் தான் இது. இந்தப் படத்தோட கதையை மோசஸ் முத்துப்பாண்டி என்கிட்ட சொல்லும் போது எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. கண்டிப்பா இதை நாம பண்ணணும்னு நினைச்சேன். மதுரைப்பையனா நடிக்கிறதை நான் இயக்குநர்கிட்ட தான் கத்துக்கிட்டேன். நடை, பேச்சு, உடல் மொழினு எல்லாமே டைரக்டர் சொன்ன மாதிரி அப்படியே பண்ணுனேன். 

அதுமட்டுமில்லாம, படத்தோட ஷூட்டிங் எங்க நடந்துச்சோ அந்த ஊருலையே ஒரு வீடு எடுத்து அங்கையே தங்கி, அந்த ஊர் மக்கள் எப்படி பேசிறாங்க, பழகுறாங்கனு எல்லாத்தையும் நோட் பண்ணி இந்தப் படத்தில் யூஸ் பண்ணிருக்கேன். பொதுவா ஷூட்டிங்கிற்கு போனா ஹோட்டல்ல தான் ரூம் போட்டு தங்குவோம். ஆனா இந்த அனுபவம் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. இந்தப் படத்தில் நான் பண்ணின கொலம்பஸ் பாண்டியன் கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும் போது உங்களுக்கு ரொம்ப பழகுன பையன் மாதிரிதான் இருப்பான். அதுதான் இந்தப் படத்தோட ப்ளஸ்’’ என்று நச்சென முடித்தார். 

வில்லன் கதாபாத்திரங்களை அதிகமாக பண்ணின வேல.ராமமூர்த்தி, இந்தப் படத்தில் எப்படி காமெடி கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள அவரைத் தொடர்பு கொண்டோம். “மதயானைக்கூட்டம் படத்துல வீரத்தேவனா, சேதுபதியில வாத்தியாரா, கிடாரியில கொம்பையா பாண்டியனா பார்த்த வேல.ராம மூர்த்தியை இந்தப் படத்தில் வேற மாதிரி பார்ப்பீங்க. பெரிய காமெடி டீமே இந்தப் படத்தில் ஒர்க் பண்ணியிருக்கு. இந்த டீமோட என்னையும் கோத்துவிட்டுட்டாரு  டைரக்டர் முத்துபாண்டி. நான் முதல்ல பயந்தேன். நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, அதை விட்டுட்டு எப்படி இதில் நடிக்கிறதுனு யோசிச்சேன். ஆனா படத்தில் அந்த காமெடி டீமே என் கைகுள்ள தான் இருக்கும். இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் சுப்பையா பாண்டியன். என்னை முன்னிறுத்திதான் படத்தின் காமெடி காட்சிகள் எல்லாம் நடக்கும். இதுவரை நான் காமெடிப் படங்களில் நடித்தது இல்லை. நானும் எவ்வளவு நாள்தான் கெட்டவனாவே நடிக்கிறதுனு இந்தப் படத்தில் முதல் முறையா காமெடி கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். கண்டிப்பா இந்தப் படம் மக்களை திருப்திப்படுத்தும்’’ என்று முடித்தார் வேல.ராமமூர்த்தி.