Published:Updated:

சாய் பல்லவியின் தெலுங்கு என்ட்ரி மாஸா, பீஸ் பீஸா? - ஃபிதா படம் எப்படி? #Fidaa

பா.ஜான்ஸன்
சாய் பல்லவியின் தெலுங்கு என்ட்ரி மாஸா, பீஸ் பீஸா? - ஃபிதா படம் எப்படி? #Fidaa
சாய் பல்லவியின் தெலுங்கு என்ட்ரி மாஸா, பீஸ் பீஸா? - ஃபிதா படம் எப்படி? #Fidaa

சினிமாவில் எல்லா இயக்குநருக்கும், எப்போதும் கை கொடுக்கும் ஒரு ஜானர், ரொமான்ஸ். இதற்கு முன் தமிழ் தெலுங்கில் இயக்கிய 'அனாமிகா' தோல்விக்குப் பிறகு, 'ஃபிதா'வில் சேகர் கம்முலாவும் ரொமான்ஸ் ஜானரையே கையிலெடுத்திருக்கிறார். சாய் பல்லவி தெலுங்கில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா படம்?

வருண் (வருண் தேஜ்) தன் சகோதரர்களுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். பெற்றோரை இழந்துவிட்டதால் அண்ணனுக்குத் திருமணம் செய்துவைத்து மீண்டும் குடும்ப சூழலை ஏற்படுத்த விரும்புகிறார் வருண். இந்தியாவில் வரன் அமைய திருமண வேலைகளுக்காக இந்தியா செல்கிறார்கள் மூவரும். அங்கு மணப்பெண்ணின் தங்கை பானுமதியை (சாய் பல்லவி) சந்திக்கிறார் வருண். எந்த நேரம் எப்படி நடந்து கொள்வாள் எனத் தெரியாத அவளின் குறும்பு, கோவம், சிரிப்பு எல்லாமும் வருணுக்குப் பிடிக்கிறது. சாய் பல்லவிக்கும் வருணின் மீது விருப்பம். பிறகு என்ன பிரச்சனை? இருக்கிறது. மருத்துவம் பயிலும் வருணுக்கு மேல்படிப்புக்காக அமெரிக்காவின் டாப் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க ஆசை. சாய் பல்லவிக்கும் ஓர் ஆசை இருக்கிறது, தனக்கென ஒரு ராஜகுமாரன் வருவான், பறக்கும் குதிரையில் வந்து தன்னை அழைத்துச் செல்வான் என எல்லாப் பெண்களும் கனவு கண்டால், குதிரையை லாயத்தில் கட்டிவைத்துவிட்டு ராஜகுமாரனை தன் ஊரில், தன் வீட்டில், தன்னுடனே தங்கவைத்துவிட வேண்டும் என்பதுதான் அது. இந்த அமெரிக்க - இந்திய காதலில் வரும் சிக்கல், ஈகோ, அழுகை தாண்டி இருவரும் இணைந்தார்களா, இல்லையா என்பதுதான் 'ஃபிதா'

நெடு நெடு உயரம், விளம்பர மாடல் போன்ற தோற்றம் என மீண்டும் ஒருமுறை ஹீரோவாக வலம் வந்திருக்கிறார் வருண் தேஜ். காமெடிகள், சாய் பல்லவியிடம் கோவத்தில் கத்துவது போன்ற காட்சிகளில் மட்டும் நடிக்கிறார், ரொமான்ஸ் மட்டும் வருவேனா என அடம்பிடிக்கிறது. சாய் பல்லவியின் தந்தையாக நடித்திருக்கும் சாய் சந்த், அக்காவாக நடித்திருக்கும் சரண்யா பிரதீப், வருணின் நண்பனாக வரும் சத்யம் ராஜேஷ் என அத்தனை கதாபாத்திரங்களும் பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். வொச்சிந்தே, ஹே பில்லகாடா பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கவர்கிறார் இசையமைப்பாளர் ஷக்தி காந்த் கார்த்திக். கிராமத்தின் புத்துணர்வு, அமெரிக்கன் அழகு இரண்டையும் கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் குமார். 

மேல் சொன்ன அத்தனை பேரையும் மீறி தன்னை மட்டும் கவனிக்க வைத்திருக்கிறார் சாய் பல்லவி. தெலுங்கு டப்பிங்கையும் அவரே பேசியிருப்பது இன்னும் சிறப்பு. ஹீரோ மீது காதல் கொள்கிறார், தேவையே இல்லாமல் கோபப்படுகிறார், மழையில் நனைகிறார், ஆடுகிறார், பாடுகிறார் என செய்யும் ஒவ்வொரு விஷயமும் அத்தனை அழகு. படத்தின் மொத்த கதையும் அவரைச் சுற்றித்தான் நகர்கிறது. அதற்கு ஏற்ற வலிமையான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார் சாய் பல்லவி. வருண் மீது காதல் வைத்துக் கொண்டு, வம்படியாக வெறுப்பை வரவழைத்துக் கொண்டு நடந்து கொள்வது, என்ன பிரச்சனை என எதுவும் சொல்லாமல் கோபப்படுவது என அவரின் கதாபாத்திரமே கொஞ்சம் வித்தியாசமானது. வழக்கமான எந்த ஹீரோயின் வரைமுறைக்குள்ளும் அடங்காத குறிப்பாக தெலுங்கு சினிமாவின் சம்பிரதாய ஹீரோயினாக இல்லாமல், புதிதான அவரது கதாபாத்திர வடிவமைப்பு பெரிதும் கவர்கிறது.

இயக்குநர் சேகர் கம்முலாவுக்கு மிக எளிதாக ஆடியன்ஸை எமோஷனில் ஆழ்த்தும் படியான காட்சிகளைக் கொடுக்க முடியும். அவரின் முந்தைய படங்களான 'ஹேப்பி டேஸ்' படத்தின் எக்ஸ்டன்ஷன் போன்ற 'லைஃப் இஸ் பூயூட்டிஃபுல்' படங்கள் அதற்கு உதாரணமாக சொல்லலாம். அதுவேதான் 'ஃபிதா'லும் தொடர்கிறது. குடும்ப சென்டிமென்ட், தந்தை மகள் பாசம், காதல் தோல்வி என எல்லாவற்றிலும் சேகரின் டச். இந்தியாவிலிருக்கும் வரை இயல்பாக நகரும் கதை, அமெரிக்கா சென்ற பின் தடுமாற ஆரம்பிக்கிறது. ஒரு காதல் ஜோடிக்குள் வரும் பிரச்சனைகள், சொல்ல முடியாமல் தவிக்கும் உளவியல் சிக்கல்கள் என எடுத்துக் கொண்ட களம் ரசிக்க வேண்டியது. ஆனால், அதை  எந்த சுத்தி வளைப்பும் இல்லாமல் சொல்லியிருந்தால் க்ளைமாக்ஸ் காட்சி ஏற்படுத்தியிருக்கும் தாக்கமே வேறாக இருந்திருக்கும்.