Published:Updated:

‘நான் இப்போ செல்ஃபி க்வீன்!’ - குழந்தை நட்சத்திரம் அதித்ரீ கலகல!

‘நான் இப்போ செல்ஃபி க்வீன்!’ - குழந்தை நட்சத்திரம் அதித்ரீ கலகல!
‘நான் இப்போ செல்ஃபி க்வீன்!’ - குழந்தை நட்சத்திரம் அதித்ரீ கலகல!

நந்தினி சீரியலில் முதலில் அமைதியான குழந்தையாக இருந்து பின்னர் ஆக்ரோஷமான ஆவியாக மாறி தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் குழந்தை நட்சத்திரம் அதித்ரீ. குறும்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தவரின் வீட்டுக்குள் நுழைந்ததும் “இந்த தேவசேனா கிட்ட கேள்வி கேட்க வந்துருக்கீங்களா” என மழலை மொழி மாறாமல் வரவேற்றார்.  விளையாடிக் கொண்டே  நம்மிடையே பேசத் தொடங்கினார்.

“என்னோட அப்பா குருவாயூரப்பன். அம்மா தாரணி. எனக்கு ஒரு தங்கச்சியும் இருக்கா தெரியுமா அவ பேரு அக்‌ஷயா. நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்” என தன்னைப் பற்றி சொல்லும் அதித்ரீயை வீட்டில் ஜீஜூ என அழைக்கிறார்கள்.

 “ ‘நான்  ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்1 நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என்னோட அம்மா நான் ஸ்கூல்ல பண்ண சேட்டையெல்லாம் வச்சு ஒரு ஸ்கிரிப்ட் எழுதி எனக்கு சொல்லித் தந்தாங்க. அதை ஆடிஷன்ல பேசினேன். அதைப் பார்த்ததும் என்னை உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. அங்க ரொம்ப ஜாலியா இருக்கும். அந்த செட்ல பிரேக் விடும்போதெல்லாம்  குஷ்பு மேம்க்கு முத்தம் கொடுத்துட்டு வருவேன். எனக்கு குஷ்பு மேம்னா அவ்வளவு பிடிக்கும். அர்ச்சனா மேமும், பாக்கியராஜ் சாரும் என்னுடைய பிரெண்ட்ஸ்" என்று சிரிக்கிறார் அதித்ரீ.

நந்தினி சீரியல்ல ஆடிஷன் நடக்குதுன்னு என்னை கூப்டாங்க. அந்த ஆடிஷனுக்கு நிறைய பேர் வந்துருந்தாங்க. ஆனா நான் கொஞ்சம் கூட பயம் இல்லாம நடிச்சேன். அப்புறம் சுந்தர். சி மாமா நான் செலக்ட் ஆகிட்டேனு சொன்னாங்க. நந்தினி சீரியல் நாலு மொழியில வருது. நாலுலேயும்  நான் தான் தேவசேனா” என்றவாறே தன்னுடைய பொம்மையை கொஞ்சிகிறார்.

ஆரம்பத்துல ஷூட்டிங் போகும்போது கொஞ்சம் பயமா இருந்துச்சு. யார் கிட்டயும் பேச மாட்டேன். அமைதியா அம்மா கூடவே இருப்பேன். அதுக்கப்புறம் எல்லாரும் என்னுடைய பிரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. நான் விளையாடும்போது பாம்பு புத்துக்குள்ள பந்து விழுந்துரும். புத்துக்குள்ள கையை விட்டு ராஜ்கபூர் மாமா பந்தை எடுக்கச் சொன்னாங்க. நான் கைய விட மாட்டேன்னு ரொம்ப அடம் பிடிச்சேன். செட்ல உள்ள எல்லாரும் கையை புத்துக்குள்ள விட்டாங்க.. என்னோட அம்மாவும் விட்டாங்க. அம்மா விட்டதுக்கு அப்புறம்தான் நான் விட்டேன். இப்போ எனக்கு புத்து, பாம்பு, பேய் எது மேலயும் பயமே இல்ல. எங்க செட்லயே எனக்கு ரொம்ப பிடிச்சவங்க யு.கே.செந்தில் குமார் மாமாதான். எப்பவும் அவங்க கூடவேதான் இருப்பேன். 

எனக்கு ஸ்கிரிப்ட் சொல்லி கொடுக்குற மாமா எப்படி சொல்றாங்களோ அதை அப்படியே பண்ணிடுவேன். முதல்ல என்னோட கேரக்டருக்கு நான்தான் டப்பிங் பேசுனேன். இப்போ ஸ்கூலுக்கு போகணும்னு டப்பிங் பேசுறது இல்ல. சீரியலுக்காக நிறைய சாகசம்லாம் பண்ணிருக்கேன்.மாளவிகா மேம் சூட்டிங் வரும்போதெல்லாம் எனக்கு டிரெஸ், சாக்லேட் எல்லாம் வாங்கிட்டு வருவாங்க. என்னோட ஃபேவரெட் மாளவிகாதான். ஷூட்டிங் முடிஞ்சதும் ஸ்கூல்ல சொல்லி கொடுத்த பாடம் எல்லாத்தையும் ஒரே நாள்ல  படிச்சிருவேன். அதுனாலவே ஸ்கூல்ல எந்த மிஸ்ஸும் என்னைத் திட்டவே மாட்டாங்க” என்று சமத்தாக பேசும் அதித்ரீ வீட்டைச் சுற்றியுள்ள எல்லா வீட்டுக்கும் செல்லப் பாப்பா.  

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா..? எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. வெளில எங்க போனாலும் “தேவசேனா” னு என் கூட செல்பி எடுக்குறாங்க. நான் செல்பி குயின் ஆகிட்டேன்.. எங்க பேமிலியோட ஊட்டி போயிருந்தோம். அங்க ஒரு தீம் பார்க் போனோம். அங்க எனக்கு மட்டும் எல்லா ரைடும் ஃபிரீ.. எந்த கடைக்குப் போனாலும் எனக்கு எல்லாமே ஃபிரீ தான்” என புன்னகையோடே முடிக்கிறார் செல்பி குயின் அதித்ரீ.

பின் செல்ல