Published:Updated:

''100 படங்கள்ல கிடைக்காதது ஒரு சீரியல்ல கிடைக்கலாம்!’’ - கெளசல்யா ஃப்ளாஷ்பேக்

''100 படங்கள்ல கிடைக்காதது ஒரு சீரியல்ல கிடைக்கலாம்!’’ - கெளசல்யா ஃப்ளாஷ்பேக்
''100 படங்கள்ல கிடைக்காதது ஒரு சீரியல்ல கிடைக்கலாம்!’’ - கெளசல்யா ஃப்ளாஷ்பேக்

"தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்தான் என் கெரியர்ல சிறப்பான அடையாளங்களைக் கொடுத்திருக்குது. ஹோம்லியான படங்களில் நடிச்சதாலதான், இப்போவரை ரசிகர்கள் மறக்காம இருக்காங்க. சில வருஷ இடைவெளிக்குப் பிறகு, பழையபடி தொடர்ந்து நடிச்சுட்டிருக்கேன்" என தன் வசீகர சிரிப்புடன் பேசுகிறார் நடிகை கெளசல்யா. 

"90-களில் ஹீரோயினா கலக்கிய அனுபவத்தை எப்படி உணர்கிறீர்கள்?" 

"பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நான், ஏழாவது படிக்கிறப்போவே மாடலிங் மூலமா மீடியா ஃபீல்டுக்குள்ள வந்துட்டேன். என் போட்டோஸைப் பார்த்து மலையாள டைரக்டர் பாலசந்திர மேனன், ‘ஏப்ரல் 19’ படத்தில் ஹீரோயினா அறிமுகப்படுத்தினார். அப்போ, என் வயசு பதினாறு. அடுத்த வருஷமே தமிழில் 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தில் அறிமுகம். அந்தப் படம் பெரிய ஹிட். குறிப்பா என்னோட சிரிப்பு ரொம்பவே அழகா இருக்குதுன்னு சொல்லுவாங்க. அதனாலயே நிறைய வாய்ப்புகள் வர, அடுத்தடுத்து நிறைய தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்ல நடிச்சேன். நடிச்ச பெரும்பாலான படங்கள் ஹிட்தான்."

"நடுவில் பெரிய பிரேக் விழுந்தது எதனால்?" 

"2000-ம் வருஷம் வரைக்கும் ஹீரோயினா நடிச்சுட்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எல்லோரும் மாதிரி எனக்கும் ஹீரோயின் வாய்ப்புகள் குறைஞ்சது. அக்கா, அண்ணி கேரக்டர்கள் வந்தது. செலெக்ட்டிவா நடிச்சேன். 2008-ம் வருஷம் 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் நடிச்சப் பிறகு பிரேக் எடுத்துகிட்டேன். அப்போ, நான் இனிமேல் நடிக்கவே மாட்டேன்னு நிறைய ரூமர்ஸ் வந்துச்சு. அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கலை. 2014-ம் வருஷம் 'பூஜை' படம்மூலம் கம் பேக் கொடுத்து, தொடர்ச்சியா நடிச்சுட்டிருக்கேன். சமீபத்தில், 'சங்கிலி புங்கிலி கதவைத் தொற' படம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு." 

"நான்கு மொழி நாயகி நீங்க. எந்த மொழிப் படங்கள் ரொம்பப் பிடிக்கும்?" 

"படங்களில் நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளைக் கத்துகிட்டேன். என் தாய்மொழியான கன்னடம் உள்ளிட்ட நாலு மொழிப் படங்களிலும் நடிக்கிறேன். ஒவ்வொன்றுமே ஏதாச்சும் ஒரு வகையில் ஸ்பெஷல்தான். தமிழில் நடிச்ச ஹோம்லி கேரக்டர்ஸ் ரொம்பவே ஸ்பெஷலா அமைஞ்சது. அதனால தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும்.'' 

"நடிகர் விஜய்கூட ரெண்டுப் படங்களில் நடிச்ச அனுபவம் பற்றி..." 

"அவரும் நானும் 'பிரியமுடன்' படத்தில் ஜோடியா நடிச்சோம். அந்தப் படத்தில் வரும் 'பூஜா வா பூஜா வா' பாட்டுக்காக பாலைவனத்தில் என்னை முதுகில் தூக்கிட்டு நடக்கிற காட்சிகள். அப்போ பல காமெடியான விஷயங்கள் நடந்துச்சு. 'எப்படா சாங் ஷூட் முடியும்'னு கிண்டலா பேசிப்போம். 'திருமலை' படத்தில் நடிக்கும்போது. அந்த பழைய சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பேசிப்போம். விஜய் அமைதியானவரா இருந்தாலும், பேசும் கொஞ்ச நேரத்தில் கலகலப்பாக்கிடுவார். அவர் முன்னைவிட இப்போதான் ரொம்பவே ஹேண்ட்ஸமா இருக்கார்." 

"சினிமா டு சீரியல் பயணத்தை எப்படி பார்க்கிறீங்க?" 

''சன் டிவியின் ‘மனைவி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தேன். சினிமாவில் கிடைச்சதுக்கு இணையான ரீச் இங்கும் கிடைச்சுது. 100 படங்கள்ல கிடைக்காதது ஒரு சீரியல் மூலமா நமக்கு பேர், புகழ் எல்லாம் கிடைக்கும். அடுத்தடுத்து பல மொழி சீரியல் வாய்ப்புகள் வந்துச்சு. சினிமான்னா அடிக்கடி ஒவ்வொரு ஊரா போகணும். சீரியல்களுக்கு அலைச்சல் இருக்காது. தினமும் அவங்க வீட்டுக்குள்ளேயே போறதால், குடும்பத்தில் ஒருத்தரா நினைக்கறாங்க. நூறு படங்களில் நடிச்சாலும், ஒரு சீரியல்ல நடிச்ச கேரக்டர் பெயரைத்தான் கூப்பிட்டு உற்சாகப்படுத்துவாங்க." 

"இருபது வருஷ சினிமா பயணத்தை நிறைவா உணர்கிறீங்களா?" 

"நிச்சயமா! வெரைட்டியான பல ரோல்களில் நடிச்சுட்டேன். எட்டு அல்லது பத்து வருஷங்கள்தான் பெரும்பாலான ஹீரோயின்களுக்கான காலம். பிறகு, கேரக்டர் ரோல்களில் நடிக்கணும் என்பது, இங்கே எழுதப்படாத ரூல்ஸா இருக்குது. ஹாலிவுட்ல பெண்கள் நாற்பது வயசைத் தாண்டிய பிறகும் ஹீரோயினா நடிச்சு கலக்கறாங்க. அப்படி ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் இங்கே நிறைய வரணும். அதை ரசிகர்களும் ஏத்துக்கணும். அப்போ இன்னும் வித்தியாசமான வேடங்களில் எங்களாலும் நடிக்க முடியும்." 

"உங்களுடைய அப் கம்மிங் படங்கள் பற்றி..." 

" 'கூட்டாளி', 'மாதங்கி' உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. தொடர்ந்து பெரிய திரையிலும் என்னைப் பார்க்கலாம்" எனப் புன்னகைக்கிறார் கெளசல்யா.