Published:Updated:

'சீர்'-க்கு அர்த்தம் தெரியல. ஆனா, கெட்ட வார்த்தைலாம் தெரியுது!'' - 'பிக் பாஸ்' பிரபலங்கள் குறித்து ஸ்ரீபிரியா #BiggBossTamil

'சீர்'-க்கு அர்த்தம் தெரியல. ஆனா, கெட்ட வார்த்தைலாம் தெரியுது!'' - 'பிக் பாஸ்' பிரபலங்கள் குறித்து ஸ்ரீபிரியா #BiggBossTamil
'சீர்'-க்கு அர்த்தம் தெரியல. ஆனா, கெட்ட வார்த்தைலாம் தெரியுது!'' - 'பிக் பாஸ்' பிரபலங்கள் குறித்து ஸ்ரீபிரியா #BiggBossTamil

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வலம் வருகிறார் ஓவியா. கடந்த வாரம் 'பிக் பாஸ்' வீட்டில் இருக்கும் பலரும் ஓவியாவை வெளியில் அனுப்ப வாக்களித்திருந்தார்கள். ஆனால், பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை லட்சக்கணக்கானோர் ஓவியாவுக்கு ஆதரவு தந்தனர். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் #saveoviya என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ட்ரெண்ட் ஆனது. 'ஓவியாவை வெளியேற்றினால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம்... விஜய் டி.வியே பார்க்க மாட்டோம்' என்கிற அளவுக்குத் தெறிக்கவிட்டார்கள். இதில், பல பிரபங்களும் இணைந்ததுதான் அட்டகாசம். அதில் ஒருவர், நடிகை ஶ்ரீபிரியா. நிகழ்ச்சி குறித்து அவ்வளவு ஆர்வத்துடன் பேசினார். 

''ட்விட்டரில் ஜூலி மற்றும் ஓவியா பற்றி அடிக்கடி பதிந்துவருகிறீர்களே...'' 

''ஆமாம்! எனக்கு ஓவியாவை ஆரம்பத்திலிருந்தே பிடிக்கும். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு, அவங்க அவங்களாகவே இருக்காங்க. அது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. தொடர்ந்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்த்துட்டிருக்கேன். அந்த நிகழ்ச்சி வழியே நிறைய விஷயங்களை மாற்றிக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.'' 

''உங்களைப் போன்ற பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கிறீர்களா?'' 

''இதுல என்ன தப்பு? பலரும், 'நீங்களுமா இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறீங்க?'னு ஆச்சரியமா கேட்கறாங்க. ஆரம்பத்திலிருந்து அந்த நிகழ்ச்சி பற்றி எல்லோரும் பேசிட்டிருந்ததால் ஒரு ஈர்ப்பு வந்து பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப நல்லா இருக்கவே தொடர்ந்து பார்க்கிறேன். ஏன் நாங்கெல்லாம் பார்க்கக் கூடாதா? உங்களை மாதிரிதான் நாங்களும். இந்த நிகழ்ச்சியால் கலாசாரம் கெட்டுப்போகுதுனு அபத்தமா பேசுறாங்க. நம்ம டி.வியில் ஒளிபரப்பாகிவரும் முக்கால்வாசி சீரியல்களில் தவறான உறவுகளை காண்பிக்கிறாங்க. அதனால் மட்டும் கலாசாரம் கெடலையா?'' 

''ஜூலி ஒரு சந்தர்ப்பவாதினு ட்விட்டர்ல பதிஞ்சிருக்கீங்களே...'' 

''ஆரம்பத்தில் ஜூலியை எல்லோரும் ஒதுக்கிறாங்களோனு நினைச்சேன். அவங்க இரண்டு, மூன்று எலிமினேஷன் லிஸ்டிலிருந்து தப்பிச்சாங்கனுதான் சொல்லணும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஜூலி தன்னை மாத்திகிறாங்க. அது எல்லா இடத்திலும் ஒத்து வராது. ஜூலிக்கு அடிபட்டபோது பெண்களில் யாருமே உதவ முன்வராதபோது ஓவியாதான் ஆதரவாக இருந்தாங்க. கடைசியில் அவங்களையே ஜூலி தப்பா பேசி தனக்கான சப்போர்ட்டை தேடிக்கிட்டாங்க. இப்படிப் பலமுறை நடந்திருக்கு. அதனால்தான் ஜூலியைச் சந்தரப்பவாதினு சொல்றேன்.'' 

''உங்களுக்கு ஓவியாவை இந்த அளவுக்குப் பிடிக்க என்ன காரணம்?'' 

''ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? 'நான் நானா இருக்கணும்' என்கிற விஷயத்தை ஓவியாகிட்ட கத்துக்கிட்டேன். சின்னப் பொண்ணா இருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு பொறுமையாக ஹேண்டில் பண்றாங்க. இக்கட்டான நேரத்தில் தன்னால் பிரச்னை வரக்கூடாதுனு ஓர் இடத்தைவிட்டு விலகறது எவ்வளவு பக்குவமான விஷயம். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டு, யாரைப் பற்றியும் பேசாமல், எதுக்கும் கலங்காமல், எப்பவும் சந்தோஷாமா இருக்காங்க. இப்படிப் பல நல்ல விஷயங்களால் பலரும் ஓவியாவை விரும்புறாங்க. அதனால்தான் எனக்கும் பிடிச்சிருக்கு.'' 

''உங்கள் வீட்டில் இருக்கிறவங்களும் 'பிக் பாஸ்' பார்க்கிறார்களா?'' 

''பொதுவாக என் கணவர் எந்த டி.வி நிகழ்ச்சியையும் தொடர்ந்து பார்க்க மாட்டார். ஆனால், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கிறார். ஓவியா எவிக்சன் ஆகும்போதெல்லாம், அவங்களைக் காப்பாற்ற நானும் ஓட்டுப் போட்டிருக்கேன்.'' 

''இந்த நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்னா எதைச் சொல்வீங்க?'' 

''ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு கேரக்டர் இருக்கும். அது தவறில்லை. ஆனால், பொதுவான ஓர் இடத்தில், பல பேர் பார்த்துட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் தகாத வார்த்தைகளால் பேசறது ரொம்ப தப்பு. ஒவ்வொருத்தருக்கும் அடுத்தவர் மீது தனிப்பட்ட அபிப்ராயம் இருக்கலாம். கோபத்தில் பேசத்தோன்றலாம். அது இயற்கைதான். ஆனால், பொது இடத்துல கடைப்பிடிக்கவேண்டிய நாகரிகத்தை மீறிக்கூடாது. காயத்ரி அதை அடிக்கடி மீறுவதாக தோணுது.'' 

''காயத்ரி பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?'' 

''எனக்கு பெரிய ஷாக்கா இருக்கு. காயத்ரியின் அப்பாவான ரகு அண்ணாவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அவ்வளவு தன்மையான, மென்மையான மனிதர். அவர் மனைவி கிரிஜாவும்தான். அவங்களுடைய பெண்ணா இப்படிப் பேசுறதுனு அதிர்ச்சியாக இருக்கு. சரளமாக கெட்ட வார்த்தைகள் பேசறாங்க. 'சீராக இருக்கு'னு சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியலை. ஆனால், தமிழில் இருக்கிற கெட்ட வார்த்தைகள் அத்தனையும் தெரிஞ்சிருக்கு. பெரியவங்களோ, சின்னவங்களோ யாராக இருந்தாலும் அவங்களின் நடத்தைப் பொதுவெளியில் நாகரிகமாக இருக்கணும். நாம் ஒன்றாக இணைந்து வாழும்போது விட்டுக்கொடுத்தல், பகிர்தல் போன்ற விஷயங்கள் அடிப்படை குணங்களாக இருக்கணும் என்பதை இந்த நிகழ்ச்சியிலிருந்து நான் கத்துக்கிட்டேன்.''