Published:Updated:

அந்த நக்கல், நையாண்டி, சிரிப்பு... இதனால்தான் வேதாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்! #VikramVedha

தார்மிக் லீ
அந்த நக்கல், நையாண்டி, சிரிப்பு... இதனால்தான் வேதாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்! #VikramVedha
அந்த நக்கல், நையாண்டி, சிரிப்பு... இதனால்தான் வேதாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்! #VikramVedha

விக்ரமாதித்தனின் தோளில் ஏறி ஒரு கதை சொல்லுமாம் வேதாளம். கதை முழுக்கச் சொல்லிவிட்டு அந்தக் கதையிலிருந்து ஒரு கேள்வியை விக்ரமாதித்தனிடம் முன் வைக்கும். கேள்விக்கு சரியான பதில் சொல்லாவிட்டால் விக்ரமாதித்தனின் தலை வெடித்துவிடும். அதே சமயம் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் திரும்பவும் வேதாளம் முருங்க மரம் ஏறிவிடும். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டப் படம்தான் 'விக்ரம் வேதா'. இந்தப் படத்தில் வேதா ஏன் எல்லோருக்கும் ஃபேவரைட்? ஒரு கத சொல்லட்டா சார்?

சிம்பிள் இன்ட்ரோ:

பிரபல ரவுடியான வேதாவை என்கவுன்ட்டரில் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விக்ரமின் தலைமையில் தனிப்படை ஒன்று இயங்கிக் கொண்டு இருக்கும். வேதாளமோ யார் கண்ணிலும் படாமல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் வேதா வெளியில வந்துட்டார் என்ற தகவல் தெரிந்ததும் ஒட்டுமொத்த போலீஸ் படையும் வேதாவின் ஏரியாவுக்குப் பாயும். இந்த சலசலப்பிற்கு நடுவில் ஒரு ஆள் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி வடை சாப்பிட்டுக் கொண்டே நடந்து வருவார். மிஞ்சிய வடையை கீழே போட்டுவிட்டு கையில் இருக்கும் துப்பாக்கியை வெளியில் எடுத்து வைத்துவிட்டு விக்ரமிடம் சரண்டைவார். அவர்தான் வேதா. ஊரே தேடும் ஆள் சிம்பிளாய் வந்து 'புடிச்சிக்கோ சார்' என நிற்பது... கெத்துதானே சத்யா?

நக்கல், நையாண்டி :

இனி ஒவ்வொரு முறை பரோட்டா சாப்பிடும் போதும் இந்தப் பட வசனம்தான் ஞாபகம்தான் வரும். காரணம், 'பரோட்டா சாப்பிடுவது எப்படி?' என்பதற்கு விஜய் சேதுபதி தனி விளக்கவுரையே தருவார். 'மொதோ பரோட்டாவைக் கொஞ்சம் பிச்சு எடுத்து அதுக்குள்ள நல்லிக்கறி துண்டு ஒண்ணை எடுத்து வை, அந்த பரோட்டா துண்டை எடுத்து குழம்புக்குள்ள மூணு டிப் அடி, அப்படியே கண்ணை மூடி வாயில போட்டு ரசிச்சு சாப்பிடு' என சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறும். படத்தில் இருமுறை மாதவனிடம் 'நீ சிரிச்சா ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க சார்' என்று விஜய் சேதுபதி சொல்லுவார். மேடியின் ஸ்மார்ட் சிரிப்பு ஊருக்கேத் தெரிந்த ஒன்றுதான். ஆனால் விஜய் சேதுபதி க்ளைமாக்ஸில் சிரிக்கும் அந்த சிரிப்பில் நக்கல், நையாண்டி, மாஸ் என எல்லாமே கலந்துகட்டித் தென்படும்.  

'தனனனனனா' பன்ச் டயலாக்குகள் :

'எப்பவுமே பிரச்னைன்னா, அந்த பிரச்னைய பார்க்காத. அந்தப் பிரச்னைக்கான காரணம் என்னான்னு பாரு' எனும் டயலாக்கை எழுதியது வேற ஆளாக இருந்தாலும், அதை விஜய் சேதுபதியின் மாடுலேஷனில் சொல்லிக் கேட்கும் போது தனி கெத்துதானே. மாதவனிடம் அடி வாங்கிக்கொண்டிருக்கும்போது சில சீரியஸான விஷயங்களைச் சொல்லி 'உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா' என டைமிங் காமெடி செய்வார். 'தனனனனனனா...' என்ற பிஜிஎம்மும், அந்த கெத்து நடையும் படம் முடிந்து வெளியே வந்தப் பிறகும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.  

ஒரு கத சொல்லட்டா சார்? :

வேதா, விக்ரமிடம் 'ஒரு கத சொல்லட்டா சார்?' என்று சொன்னாலே போதும், ஆடியன்ஸ் சீட் நுனிக்கு வந்துவிடுகிறார்கள். காரணம், ஒவ்வொரு முறை அவர் கதை சொல்லும்போதும் அதில் இருக்கும் சுவாரஸ்யங்கள்தான். 'விக்ரம் சார்' - இந்த 'சார்' படத்தின் க்ளைமாக்ஸ் வரை விஜய் சேதுபதியின் வாயில் பயணித்துக் கொண்டேதான் வந்தது. என்னதான் அடி வாங்கினாலும், என்கவுன்ட்டரில் போட நினைத்தாலும், போலீஸ் என்பதால் கடைசி வரை விக்ரம் சார்தான்.