Published:Updated:

“அந்த 4 பேரைச் சொல்லி ஒரு பயனும் இல்லை” - ‘தரமணி’ சென்சார் குறித்து இயக்குநர் ராம்

“அந்த 4 பேரைச் சொல்லி ஒரு பயனும் இல்லை” - ‘தரமணி’ சென்சார் குறித்து இயக்குநர் ராம்
“அந்த 4 பேரைச் சொல்லி ஒரு பயனும் இல்லை” - ‘தரமணி’ சென்சார் குறித்து இயக்குநர் ராம்

ஓர் இயக்குநர் தான் நினைத்தது மாதிரியான சினிமாவைப் படம்பிடித்து விட்டாலும், மக்களின் பார்வைக்காக அந்தப்படம்  திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் தணிக்கைத் துறை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படவேண்டுமென்பது விதி. சில சமயம் அதனால் படத்தின் உள்ளடக்கம்  சிதைக்கப்படும்போது,  தாங்கள் சொல்ல வந்த கருத்தின் வீரியம் மக்களிடம் போய் சேரவில்லை என்று சில  இயக்குநர்கள் புலவும்பதை அவ்வப்போது நாம் காணலாம். அதேசமயம், இந்தப் புலம்பல்களும், குற்றச்சாட்டுகளும் சமூகத்தில் நிகழ்பவைகளை விமர்சனமாக அல்லது அப்பட்டமாக  தன் திரைப்படத்தில் முன்வைக்கும் படைப்பாளிகளிடமிருந்து மட்டுமே அதிகம் எழுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளும்போது 'புனிதம்' என்னும் கற்பிதத்தை இந்த நாடு எவ்வளவு  பத்திரமாக அடைகாத்து வருகிறது என்பதும் புலப்படும். இதற்கான இன்னொரு பக்க நியாயம்  தணிக்கைத் துறை அதிகாரிகளிடமும் இருக்கிறதென்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதே. நேற்று இயக்குநர் ராம்  அவர் இயக்கி வெளியாக இருக்கும் ‘தரமணி’ பட போஸ்டரிலேயே தணிக்கைத் துறை இயங்கும் விதத்தை இரண்டு வரிகளில்  குறிப்பிட்டிருந்தது  ஒரு  விவாதமாக எழும்பியிருக்கிறது. இதுபற்றி அவரிடம் உரையாடியதிலிருந்து... 

“தணிக்கைத் துறையின் மீது  ஒரு விமர்சனமாக இதை முன்வைக்கிறீர்களா?”

 “தணிக்கைக் குழுவின் மீது விமர்சனம் கிடையாது. ஆண்களைப் பற்றிய ஒரு பார்வையும், பெண்களைப்  பற்றிய ஒரு பார்வையும் தணிக்கைத் துறை எப்படிப்  பார்க்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். ‘UA'விலிருந்து என் படம் ‘ A'வாக  மாறியதுக்கு பெண் குடிப்பது மாதிரி காட்சி வெச்சு இருக்கிறத ஒரு விஷயமா சொன்னாங்க. ஆகவே அத பொதுவெளியில பதிவு செஞ்சேன்.” 

“சரி, A சான்றிதழோட படம் வர்றதுல இருக்கிற பாதிப்பு இன்னும் இருக்குன்னு நெனைக்கிறீங்களா?”

 “நிச்சயமாக இருக்கு. இது ஒரு வியாபாரப் பிரச்னையா மாறும். பெண்கள் வருவாங்களா, குடும்பங்கள்  வருமான்னு விநியோகஸ்தர்கள் யோசிப்பாங்க. அந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கும். ஒரு படத்தோட  வணீகரீதியான வெற்றிக்கு சென்ஸார் போர்டுக்கும் பங்கு இருக்கு.” 

“இந்தப்  படத்தில் சில காட்சிகளை வைத்தே ஆக வேண்டுமென வாதாடினீர்களா?” 

“என் படத்துக்குனு  இல்ல, எல்லாப் படத்துக்கும் நாம இந்தக் காட்சியை ஏன் வெச்சோம்னு  அதோட  சூழ்நிலையையும்,  கதைக்கான அவசியத்தையும் சொல்லுவோம். அவங்க அவங்களோட தரப்பு நியாயத்தையும் சொல்லுவாங்க. சென்சார்கிறது  ஒரு சிஸ்டமாக இருக்கிறப்போ  என் படத்தப் பார்த்துத் தணிக்கை செய்கிற நாலு பேரை மட்டும் குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. தவிர, இந்தியாவுல மக்கள் எப்படி  இயங்குகிறாங்க, நாம  வைக்கிற  காட்சிகளுக்கு  எப்படி  ரியாக்ட் பண்ணுவாங்க, என்பதத்தான் அந்தந்த  சென்சார் அதிகாரிகளும் பிரதிபலிக்கிறாங்க. இதையும் நாம பொருட்படுத்தி ஆகணும்.”

 “தரமணியின் படைப்பு சுதந்திரத்தை தணிக்கைக்குழு முழுக்கவும் கட்டுப்படுத்தியபிறகுதான் படம் வெளிவர போகிறது என்கிற விதத்தில் இதை அணுகலாமா?”

“நிச்சயமா இல்ல. தரமணியைப் பொறுத்தவரை  ஜனநாயகத்தன்மையுடன்தான்  இந்தப்படம் தணிக்கை செய்யப்பட்டு வெளிவருது. நிறைய விஷயங்களை ஏத்துக்கிட்டாங்க. சில வார்த்தைகளை மட்டும் ம்யூட்  செய்திருக்காங்க . அதுவும் நியாயமாக இருந்தது. ஏத்துக்கிட்டேன். அதே சமயத்தில் இது அடல்டரி படம் கிடையாது. இதுல செக்ஸ் கிடையாது. ஆனா பதிமூணு வயசுக்கு கீழ் உள்ளவங்க பார்க்கவேண்டிய படமாக எல்லாப் படங்களும் இருக்கிறதில்ல.  அந்தமாதிரி ஒரு படம் ‘தரமணி’.  பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களோட உளவியல் சிக்கல்களைப் பேசியிருக்கேன். இது அவங்க பாக்க வேண்டிய படமாகத்தான் நான் நெனக்கிறேன். அதுல A வாங்குறதுதான் நியாயம்னும் சொல்றேன்.”

 “அப்போ A சான்றிதழ்தான் வேணும்னு  நீங்களே கேட்டீங்களா?”

“இல்லை. படத்துல பதினாலு இடத்துல கட் செஞ்சி UA எடுத்துக்கோன்னு சொன்னாங்க. நீங்க A கொடுத்தாலும் பரவாயில்ல. ஆனா அந்த காட்சிகள எடுக்காதீங்கன்னு சொன்னேன். ஏன்னா  இந்தப் படத்த நான் எடுத்துக்கான நோக்கங்கள் அந்தக் காட்சிகள்ல இருக்கு. இளைஞர்களோட வெளிப்படையாக  நான் நடத்துகிற உரையாடல்தான் தரமணி படம். அதுனால சில விஷயங்கள்ல  நான் பிடிவாதமா இருந்ததுக்குக்  கிடைச்ச பரிசுதான்  A சர்ட்பிகேட்.  என்னோட நோக்கத்தை நிறைவேத்தி இருக்கேனான்னு படம் பற்றிய நியாயமான விமர்சனங்கள் வரும்போதுதான் தெரியும். பாக்கலாம்.”