Published:Updated:

''ஓவியாவின் அந்தக் குணம்... நிச்சயம் எனக்கே ஆச்சரியம்!'' - நெகிழும் பிரியா ஆனந்த் #BiggBossTamil

''ஓவியாவின் அந்தக் குணம்... நிச்சயம் எனக்கே ஆச்சரியம்!'' - நெகிழும் பிரியா ஆனந்த் #BiggBossTamil
''ஓவியாவின் அந்தக் குணம்... நிச்சயம் எனக்கே ஆச்சரியம்!'' - நெகிழும் பிரியா ஆனந்த் #BiggBossTamil

"கமல் சாருக்காகத்தான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. ஓவியாவின் இயல்பான மற்றும் தைரியமான குணங்களை ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்" என உற்சாகமாகிறார், நடிகை பிரியா ஆனந்த். சில தினங்களுக்கு முன்பு, ஓவியாவுக்கு ஆதரவாக, 'கூட்டத்தில் ஒருத்தி' என்ற வாசகத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை ஷேர் செய்திருந்தார். 

"சினிமா பிரபலங்களின் பெர்சனல் விஷயங்களை தெரிஞ்சுக்க முடியறதால், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நிறையப் பேர் பார்க்கிறாங்க. அந்த நிகழ்ச்சி மூலமாக நிறைய விஷயங்களை கத்துக்கிட்டிருக்கேன். அதிலும் நடிகை ஓவியாவின் தைரியம் ரொம்பவே வியக்கவைக்குது. அவங்களை நான் நேரில் பார்த்ததில்லை. இப்போ பார்க்கணும்னு தோணுது. 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே இருக்கிறவங்க, ரியல் லைஃப்ல நடக்கிற மாதிரி, முகத்துக்கு முன்னாடி, பின்னாடி என மாறி மாறி பேசுறதைப் பார்க்க முடியுது. அதெல்லாம் ஒருத்தருக்கு எவ்வளவு பெரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தெரிஞ்சுக்க முடியுது. 

ஓவியா ஆரம்பத்திலிருந்து ஒரே மாதிரியான ஆட்டிடியூட்டோடு இருக்காங்க. அவங்களை கார்னர் பண்ணி சுத்தியிருக்கிறவங்க தொந்தரவு கொடுக்கிறாங்க. நமக்கெதுக்கு வம்புன்னு, மத்தவங்களுக்காக ஓவியா தன்னை மாத்திக்கலை. எல்லோரும் எதிர்த்தாலும், யாருக்கும் ஜால்ரா போடாமல் துணிச்சலா இருக்காங்க. ஒவ்வொரு பிரச்னையையும் எதிர்கொள்ளும் விதம், துணிச்சலோடு கேள்வி கேட்கிறது, ஒருத்தர் அடிச்சுடுவேன்னு சொல்றப்போ, 'எங்கே அடிங்க பார்க்கலாம்'னு தில்லா இருக்கிறதெல்லாம், 'வாவ்!' ரகம். 

வாழ்க்கையில் எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கிறது ரொம்பவே கஷ்டம். ஆனா, நமக்குப் பிடிச்ச மாதிரியே எல்லாச் சூழ்நிலையிலும் இருக்கிறது அதைவிட கஷ்டம். ஒரு விஷயத்தை கடந்துபோக, ரொம்பவே நம்மை மாத்திக்கிட்டா, நம்ம மனசாட்சியின் கேள்விக்கே பதில் சொல்ல முடியாது. நமக்கு ஒரு பிரச்னை வந்தாலும், யாருக்காகவும் ஒரிஜினல் குணத்தை மாத்திக்காமல் இருக்கணும்னு ஓவியாவின் செயல்பாடுகள் உணர்த்துது. 'யார் எனக்கு சப்போட் பண்றாங்களோ இல்லையோ, நான் என்னை சப்போர்ட் பண்ணிக்கிறேன்'னு ஓவியா சொன்னது ரொம்பவே பிடிச்சிருந்தது. அந்த செல்ஃப் மோட்டிவ் விஷயத்தை ஃபாலோ பண்ணினாலே பிரச்னைகளை சால்வ் பண்ணிக்க முடியும். ஐ லவ் ஓவியா'' என்கிற பிரியா ஆனந்த், இந்த நிகழ்ச்சிமூலம் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக கூறுகிறார். 

"நடந்ததை திரிச்சும் நடக்காததை நடந்த மாதிரியும் நம்மகிட்ட பலர் பேசுவாங்க. அதையெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு நம்மளை ரொம்பவே வறுத்திக்கக்கூடாது. இது உண்மையா இல்லையான்னு சம்பந்தப்பட்ட நபர்களிடமே மனம்விட்டு பேசிட்டால் பிரச்னை சால்வ் ஆகிடும். மேலும், எப்பவுமே நாம நாமளா இருக்கிறதுதான் உண்மையான வெற்றி. 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே நிறைய கேமரா இருக்கிறதால், யார் என்ன பேசுறாங்க, எப்படி நடந்துக்கிறாங்கன்னு தெரியுது. ரியல் லைஃப்ல நம்ம மனசாட்சிதான் கேமரா. அதுக்குக் கட்டுப்பட்டு, மத்தவங்களுக்குக் கெடுதல் நினைக்காமல் வாழ்ந்தால் போதும். இந்த விஷயங்களை எல்லாம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக கத்துக்கிட்டேன். சினிமாக்காரங்க உலகம் வேற மாதிரியானது. அவங்க வசதியா, பிரச்னை இல்லாமல் வாழ்றாங்கன்னுதான் பலரும் நினைச்சுட்டிருக்காங்க. ஆனா, எங்களுக்குள்ளும் பல பிரச்னைகள் இருக்குது. பொது மக்களுக்கு வரும் பிரச்னைகள் மாதிரியே, அன்றாடம் சக துறையினராலே நாங்களும் பல பிரச்னைகளை சந்திக்கிறோம். இதை 'பிக் பாஸ்' மூலம் மக்கள் தெரிஞ்சுட்டிருப்பாங்க'' என்ற பிரியா ஆனந்த், ட்விட்டர் பதிவு பற்றிச் சொன்னார். 

'இந்த நிகழ்ச்சியைப் பற்றி நெட்டிசன்ஸ் போடும் மீம்ஸ் உள்பட பல விஷயங்களைப் பார்த்து ரசிக்கிறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி ஓவியாவுக்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பல தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதுக்கு பலரும் மீம்ஸ், ட்ரோல், வீடியோ போட்டு எதிர்ப்பை தெரிவிச்சாங்க. நான் ஹீரோயினா நடிச்சிருக்கும் 'கூட்டத்தில் ஒருத்தன்' பட ஸ்டில் மாதிரி, ஓவியாவை உயர்வா சித்தரிச்சு ஒரு போட்டோவைப் போட்டிருந்தாங்க. அது செம ட்ரெண்ட் ஆச்சு. அது எனக்கு ரொம்பவே பிடிச்சதால் நானும் அதை என் ட்விட்டர் பேஜ்ல ஷேர் பண்ணினேன். வெள்ளிக்கிழமை எபிசோடு ரொம்ப சுவாரஸ்யமா போச்சு. அந்த எபிசோடைப் பார்க்க ரொம்பவே ஆவலா இருந்தேன். அந்த நேரத்துலதான் 'அது இது எது' நிகழ்ச்சியில், எங்க 'கூட்டத்தில் ஒருத்தன்' டீம் கலந்துகிட்டோம். அந்த நிகழ்ச்சி முடியவே அதிகாலை ரெண்டு மணி ஆகிடுச்சு. அதனால் 'பிக் பாஸ்' பார்க்க முடியலையேன்னு, 'அது இது எது' நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த்தை கிண்டலா திட்டினேன். அடுத்த நாள் அந்த எபிசோடைப் பார்த்துட்டேன். செம ஹேப்பி" எனச் சிரிக்கிறார் பிரியா ஆனந்த்.