Published:Updated:

ஜெய், காளை, தலைமகன்... - இந்தப் படங்களை இப்போ ரீ ரிலீஸ் பண்ணுங்க ப்ளீஸ்!

ஜெய், காளை, தலைமகன்... - இந்தப் படங்களை இப்போ ரீ ரிலீஸ் பண்ணுங்க ப்ளீஸ்!
ஜெய், காளை, தலைமகன்... - இந்தப் படங்களை இப்போ ரீ ரிலீஸ் பண்ணுங்க ப்ளீஸ்!

இது ரீ ரிலீஸ் காலம். 'கர்ணன்' தொடங்கி 'கோ' வரை எல்லாப் படங்களையும் ரீ - ரிலீஸ் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஹிட் படங்களை மட்டும்தான் ரீ ரிலீஸ் செய்யவேண்டுமா என்ன? அந்தக் காலத்தில் ஃப்ளாப்பான நல்ல படங்களையும் இப்போது ரீ ரிலீஸ் செய்யலாமே...! அப்படி என்ன படம் இருக்குது? என யோசிக்கப்போகும் தயாரிப்பாளர்களுக்கு உதவ நாங்களே ஒரு லிஸ்ட் தயாரித்திருக்கிறோம். படிச்சுட்டு பாத்து பண்ணுங்க.

நரசிம்மா:

கேப்டன், விஸ்வரூப நரசிம்ம அவதாரம் எடுத்தப் படம். ஷெர்லாக் ஹோல்ம்சை மிஞ்சிய மைண்ட் கேம்கள், மிஷன் இம்பாசிபிளை முந்திய சண்டைக் காட்சிகள் என எல்லாமே வேற லெவல். அதிலும் நகத்தை கடித்துத் துப்பிவிட்டு லிப்ஸ்டிக் கறையோடு சிரிக்கும் அந்த முகம்... அடடா! கேப்டன் - வடிவேலு இருவரும் முட்டிக்கொள்வதற்கு முன் வந்த படம். இப்போது கேப்டனுக்கும் படங்கள் இல்லை, வடிவேலுக்கும் படங்கள் இல்லை என்பதால் இதைத் தூசித்தட்டி ரீ ரிலீஸ் செய்யலாம்.

பாபா:

ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் இது. யெஸ், இனிமேல் கதை எழுதவோ, படம் தயாரிக்கவோ கூடாது என ரஜினியை மனம் மாற்றிய படமாயிற்றே. ஒன், டூ, த்ரீ என லெமன் இன் தி ஸ்பூன் ரேஸுக்கு போவதுபோல வரங்களை தீர்க்கும் ஃபேன்டஸி படம். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகளை மனதில் வைத்து, 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்', 'நான் யோசிக்காம பேசமாட்டேன், பேசுனபிறகு யோசிக்க மாட்டேன்' என அவர் பேசிய பன்ச்கள் இப்போதைய சூழ்நிலைகளுக்கும் பொருந்துவதால் அந்தப் படத்தை திரும்பவும் ரிலீஸ் செய்யலாம்.

தலைமகன்:

கேப்டனின் நூறாவது படம் சூப்பர்டூப்பர் ஹிட். 'நாமளும் அதே மாதிரி தட்டுறோம், தூக்குறோம்' என யாரையும் நம்பாமல் தானே களமிறங்கினார் சுப்ரீம் ஸ்டார். படம் சூப்பராக ஓடியது... தியேட்டரை விட்டு. அதன்பின் அவர் ஹீரோவாக நடித்த எல்லாப் படங்களும் இப்படித்தான். இழந்த பெருமையை மீட்டெடுக்க மீண்டும் இதே படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம். அப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்த நயன்தாராவுக்கு இப்போது சரத்தை விட ரசிகர்கள் அதிகம். எனவே திரும்ப தியேட்டர்ல போடவேண்டியது மஸ்ட்டு!

காளை:

சின்ன சூப்பர்ஸ்டார் சிம்பு ஏகப்பட்ட வில்லன்களை முட்டித் தூக்கிய படம் இது. உலக திரைப்பட வரலாற்றிலேயே ஹீரோ, வில்லன், பெரிய வில்லன் மூன்று பேருக்கும் ஒரே பெயர் இருந்தது இந்தப் படத்தில்தான். அண்டர்டேக்கர் ஹேர்ஸ்டைலில் வந்து மிரட்டுவது, பொலிரோவை சிங்கிள் மிதியில் தள்ளிவிடுவதென சிம்பு கேரக்டராகவே வாழ்ந்திருந்தார். 'ஏஏஏ' படம் 'எதிர்பாராத' விதமாக தோல்வியடைந்ததால் வருத்ததிலிருக்கும் சிம்பு ரசிகர்களை இந்தப் பட ரீ ரிலீஸின் மூலம் கூல் செய்யலாம்.

ஜெய்:

ஒரு காலத்தில் உலக அழகியோடு ஜோடி சேர்ந்தவர் பாவம் இப்போது ஃபேஸ்புக்கில், 'ஹேப்பி பர்த்டே பிரண்ட்' என போஸ்ட் போட்டுக்கொண்டிருக்கிறார். 'வரணும் திரும்ப வரணும்' என விரும்பும் பிரசாந்த் அதற்கு தன் 'ஜெய்' படத்தை ரீ ரிலீஸ் செய்யத்தான் வேண்டும். எட்டு வயதிலேயே பாம் போடுவது(நிஜ குண்டு பாஸ்!), வீச்சருவா வஜ்ரவேலுவோடு (வாட்டே எ பேருய்யா!) மல்லுகட்டுவது என நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருந்தார் பிரசாந்த். பார்க்கணும் இந்தப் படத்தை திரும்ப தியேட்டர்ல பார்க்கணும்.

புலிவால்:

இந்தப் படத்தில் விமலும், பிரசன்னாவும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்வதன் மூலம் இருவரும் முதல்முறையாக ஃபார்முக்கு வந்துவிடப்போவதில்லை. ஆனாலும், இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கவேண்டிய கட்டாயம் தமிழ் குடிமக்களுக்கு இருக்கிறது. காரணம்..... ஓவியா. பிக் பாஸ் ஷோவை போரடிக்காமல் பார்க்க வைப்பதே ஓவியா என்னும் ஒற்றை அழகிதான். அதற்கு நன்றிக்கடனாக இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்ய வைத்து ஹிட் படமாக்க வேண்டும் என்பது ஓவியா ஆர்மியின் சார்பில் வைக்கப்படும் கோரிக்கை.