Published:Updated:

‘அஜித் சார் மாதிரி கலக்கணும்!’ - ஜாலிகேலி நிவேதா பெத்துராஜ் #VikatanExclusive

‘அஜித் சார் மாதிரி கலக்கணும்!’ - ஜாலிகேலி நிவேதா பெத்துராஜ் #VikatanExclusive
‘அஜித் சார் மாதிரி கலக்கணும்!’ - ஜாலிகேலி நிவேதா பெத்துராஜ் #VikatanExclusive

“சினிமாவில் நடிக்கலாம்னு வந்துட்டு, நம்ம மேல நமக்கே நம்பிக்கை இல்லைன்னா, ரெண்டு படத்துலயே காணாம போயிட வேண்டியதுதான். நம்மால முடியுங்கிற நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கணும். இன்னொரு பக்கம் தப்பான கூட்டத்துலயும் சிக்கிடக் கூடாது. எங்க இருந்தாலும் நம்ம வேலையை ஒழுங்கா பண்ணாலே சினிமாத் துறையில் நிலைச்சு நிற்கமுடியுங்கிறதுதான் என் பாலிசி” தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் நிவேதா பெத்துராஜ். ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ எனத் தமிழில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடி. இதுக்கு நடுவே தெலுங்கிலும் செம பிஸி கேர்ள்.

“சினிமா என்ட்ரி எப்படி அமைஞ்சது?”

“மதுரைப் பொண்ணுன்னாலும், படிச்சது வளர்ந்தது எல்லாமே துபாய். அங்கே வேலை செய்துட்டே, பகுதிநேரமா மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். துபாயில் நடக்கும் ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துட்டு ஜெயிச்ச முதல் தமிழ்ப் பொண்ணு நான்தான். ‘மிஸ் இந்தியா’- ஆனதால, தமிழில் படம் நடிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. அதுமட்டுமல்லாம, சினிமாவுக்கு வரணுங்கிற ஆசை சின்ன வயசுலேருந்தே இருந்துச்சு. ஆனா அதற்கான எந்த முயற்சியும் இதுவரைக்கும் நான் எடுத்ததில்லை. நான் சரிப்பட்டுவருவேன்னு, சினிமா என்னைத் தேர்ந்தெடுத்திருக்குன்னுதான் எப்பவுமே நினைப்பேன்.”

“விண்வெளிப் படம் ‘டிக் டிக் டிக்’. எப்படி வந்திருக்கு?”

“நிலத்துலயும் வானத்துலயும் நடக்கிற மாதிரியான த்ரில்லர் படம்தான் ‘டிக் டிக் டிக்’. ஜெயம்ரவி சார் செம கூல். எதையாவது கத்துப்பார், இல்லைன்னா கத்துக்கொடுப்பார். படத்துக்காக நாங்க நிறையவே ரிஸ்க் எடுத்திருக்கோம். உயரம்னா எனக்குக் கொஞ்சம் பயம். ஆனா அந்தரத்துல தொங்கியெல்லாம் ஷூட்டிங்கில் நடிச்சுட்டேன். பொதுவா கிரிஸ்டோஃபர் நோலன் படங்களில் கிராஃபிக்ஸ் குறைவாதான் இருக்கும். அதுமாதிரி இந்தப் படத்திலும் முடிஞ்ச அளவுக்கு செட் போட்டுதான் படமாக்கியிருக்காங்க. குறிப்பா ‘விண்வெளியை ஒரிஜினலா செட் போட்டு அசத்தியிருக்கார் கலை இயக்குநர்.”

“உதயநிதி, சூரி கூட நடிச்ச அனுபவம்?”

“உதயநிதி நிறையவே நடிப்பில் முன்னேறியிருக்கார். நடிப்பு மட்டுமல்லாம நடனத்துலயும் இப்போ கலக்குறார். முன்னாடியெல்லாம் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் மூணு நாள் பயிற்சி எடுத்துப்பார். ஆனா இப்போ அரை மணிநேரப் பயிற்சியிலேயே ரகளையா டான்ஸ் ஆடுறார். ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்துல பார்த்திபன் சார்தான் என்னோட அப்பா. வில்லேஜ் பொண்ணா நடிச்சிருக்கேன்.  படப்பிடிப்பு நேரத்தில் பார்த்திபன் சார் பேசிட்டே இருப்பார். அவர் பேச்சு சிந்திக்கிற மாதிரிதான் இருக்கும். இருந்தாலும் இடைஇடையே கமென்ட் போட்டுட்டு சைலன்டாகிடுவேன். சூரியண்ணே நம்ம ஊர்க்காரர்ல... அவர் ஷூட்டிங்குக்கு வந்தா மட்டும், ஊர்க்காரங்க எல்லாருமே விசில் அடிச்சு வரவேற்பாங்க. ஷூட்டிங் நேரத்துல யார் வீட்டிலேயாவது புகுந்துடுவார். ஜாலியா பேசிட்டு இருப்பார். ‘ஒரு நாள் கூத்து’ படத்துக்குப் பிறகு, கமர்ஷியல் படங்கள் எப்படி நடிக்கணும்னு தெரியாது.  இவங்களோட நடிக்கும்போதுதான் நிறைய கத்துக்கிட்டேன்.”

“தமிழ் பேசும் நடிகைகள் நிறையபேர் வர ஆரம்பிச்சுட்டீங்களே?”

“இது எதிர்பார்த்த ஒரு விஷயம்தானே. ஆரம்ப காலத்துல பெண்களை நடிக்க அனுப்ப வீட்டில் அதிகமா யோசிப்பாங்க. அதனால மலையாள நடிகைகள் அதிகமா தமிழ் சினிமாவில் இருந்தாங்க. ஆனா இப்போ பெண்களை சுதந்திரமா விட ஆரம்பிச்சுட்டாங்க. பணம் சம்பாதிக்க யாரும் சினிமாவுக்கு வருவதில்லை. அவங்க திறமையைக் காட்ட மட்டும்தான் வர்றாங்க. இன்னும் நிறைய தமிழ் நடிகைகள் இனி வருவாங்க. தமிழ் நடிகைகளே தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது, அதுவும் அவங்க சொந்தக்குரலில் டப்பிங் பேசும்போது படம் இன்னும் உயிரோட்டமா மாறுங்கிறதுதான் உண்மை. நம்ம ஊர்ல நாம வாழாம வேற யாரு வாழமுடியும். மற்றவங்களையும் வாழ வைக்கலாம். அதுக்கு முன்னாடி நாமும் வாழ்ந்துக்கணும்.”

“சமீபத்தில் உங்களைக் கடுப்பேத்தின விஷயம்?”

“வெட்டி பந்தா பண்ணுறவங்களைக் கண்டாலே பிடிக்காது. தமிழ்நாட்டுல பிறந்துட்டு தமிழ்ல பேசவே யோசிக்கிறவங்களையெல்லாம் பார்த்தாலே பிடிக்காது. அந்த மாதிரியான மனிதர்களை நிறையவே கடந்துட்டேன். கடைகளுக்குப் போய் பாரதியார் புத்தகத்தைப் படிக்க வாங்கினாலே வேற்று கிரக மனுஷி மாதிரி பார்க்குறாங்க. அப்படிப் பார்த்த நபர் யாருன்னு சொல்ல மாட்டேன்.”

“எதிர்காலத் திட்டம்?”

“நடிப்புக்கு லீவ் கிடைச்சதுன்னா, இரண்டு ப்ளான் வச்சிருக்கேன். ஸ்கிரிப்ட் எழுதி, டைரக்‌ஷன்ல இறங்கணும். அப்படியில்லைன்னா கார் ரேஸிங். ரேஸிங்குக்காக மெட்ராஸ் மோட்டார் க்ளப்பில் முறையா பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன். அஜித் சார் மாதிரி ரேசிங்ல மிரட்டலாம்னு ஒரு திட்டம் இருக்கு. வாழ்க்கையில் என்னவேணாலும் நடக்கலாங்கிறதுனால எது நடக்குதோ அதை அப்படியே ஏத்துக்கவேண்டியதுதான். இருக்கிறது ஒரே லைஃப். அதைப் பிடிச்சமாதிரி வாழ்ந்திட்டுப் போய்டலாமே! ”

பிடிச்சது? அம்மா

ரசிச்சது?  ‘காற்றுவெளியிடை’ 

படிச்சது? HR -MANAGEMENT

பிடிச்ச ஹீரோ ? விஜய்

பிடிச்ச ஹீரோயின்? சிம்ரன்
 
பிடிச்ச இயக்குநர்? கிரிஸ்டோஃபர் நோலன்

10, 12  - மார்க் என்ன? இரண்டுலயுமே 74 சதவிகிதத்துக்கு மேலதான். 

ஆசை? இயக்குநராவது. 

எதிரி? நான்தான்.  

கெட்ட பழக்கம்? எல்லாத்தையும் நம்புவேன்.