Published:Updated:

''மத்தவங்க மாதிரி நானும் உன்கிட்ட பயந்துட்டேதான் பேசுறேன்னு சொல்வார்!'' - ஷ்ரேயா ரெட்டி

''மத்தவங்க மாதிரி நானும் உன்கிட்ட பயந்துட்டேதான் பேசுறேன்னு சொல்வார்!'' - ஷ்ரேயா ரெட்டி
''மத்தவங்க மாதிரி நானும் உன்கிட்ட பயந்துட்டேதான் பேசுறேன்னு சொல்வார்!'' - ஷ்ரேயா ரெட்டி

''மத்தவங்க மாதிரி நானும் உன்கிட்ட பயந்துட்டேதான் பேசுறேன்னு சொல்வார்!'' - ஷ்ரேயா ரெட்டி

"நடிப்புக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்துட்டேனே தவிர, சினிமா குடும்பத்தைச் சேர்ந்த நான் இன்னும் சினிமாவை மறக்கலை. இனி தொடர்ந்து நடிக்கலாம்னு முடிவுப் பண்ணிட்டேன்" என உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை ஷ்ரேயா ரெட்டி. 'அண்டாவ காணோம்' திரைப்படம் மூலம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். 

"பத்து வருஷம் கழிச்சு கம்பேக் கொடுக்கிறதை எப்படி ஃபீல் பண்றீங்க?" 

"ரொம்ப சந்தோஷம். 'அண்டாவ காணோம்' படத்தில் சாந்தி என்கிற பவர்ஃபுல் கேரக்டரில் நடிச்சிருக்கேன். சினிமாவில் என் ரோல் பல வருஷத்துக்குப் பேசும்படியா இருக்கணும்னு ஆசைப்படுவேன். அதை நிறைவாக உணரும் வகையில் இந்தச் சாந்தி கேரக்டர் அமைஞ்சது. நான் வைத்திருக்கும் அண்டாவை மையப்படுத்தித்தான் மொத்த கதையும் நகரும்.'' 

"அண்டாவை மையப்படுத்தி கதைக்களமா? கேட்கவே சுவாரஸ்யமா இருக்கே...'' 

"ஆமாம்! இப்படியும் ஒரு கதையை எடுத்து, சுவாரஸ்யமாக்க முடியுமான்னு பார்க்கும் ரசிகர்களை வியக்கவைக்கும். அந்த வியப்புதான் என்னையும் ஈர்த்துச்சு. படத்தில் கமிட் ஆனேன். இதுவும் மாஸ் மசாலா படம்தான். சென்டிமென்ட், காமெடி எனப் பல விஷயங்கள் இருக்கும். பழைய 'திமிரு' ஈஸ்வரி மாதிரி அடிதடியான மிரட்டல் ரோலில் நடிச்சது சவாலாக இருந்துச்சு." 

"எதனால் இவ்வளவு பெரிய இடைவெளி?" 

"ஸ்கிரீனில் வந்தோம், நாலு டயலாக் பேசினோம் என நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் கேரக்டர் எல்லோரின் நினைவிலும் நிற்கணும். எனக்கும் மனநிறைவைக் கொடுக்கணும். அப்படித்தான் 'திமிரு' படத்தில் நடிச்சேன். இப்போவரை அந்தப் படம் எனக்கான அடையாளமா இருக்குது. வில்லி வேடம்னாலும் அது ஹீரோவுக்கு இணையா பேசப்பட்டது. அப்புறம், கல்யாணமாச்சு. குடும்பம், குழந்தைகளைப் பார்த்துக்கிறதைத் தாண்டி தனக்கான அடையாளத்தையும் மிஸ் பண்ணிடாம இருக்கிறது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியம். அதனால், 'வெயில்', 'பள்ளிக்கூடம்', 'காஞ்சிவரம்' போன்ற படங்களில் நடிச்சேன். 'திமிரு' படத்தில் பயங்கர வில்லியா நடிச்சுட்டு அடுத்த மூணு படங்களில் ரொம்பவே பாசிட்டிவான, சாஃப்ட் கேரக்டர்களில் நடிச்சு நிரூபிச்சேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தாலும், கனமான கதைக்களத்துடன் இல்லை. அதனால்தான் பெரிய இடைவெளி ஏற்பட்டுச்சு." 

"நடிக்காமல் இருந்த காலத்தில், சினிமாவை விட்டு விலகியிருக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டுச்சா?" 

"இல்லவே இல்லை. பத்து வருஷமா சினிமாவில் இல்லைன்னாலும், சினிமா பின்னணியோடுதானே இருந்தேன். என் கணவர் விக்ரம் கிருஷ்ணா படத் தயாரிப்பாளர். கொளுந்தனார் விஷால் நடிகர். தினமும் சினிமா பற்றிப் பேசுவோம். கதை விவாதங்களில் பங்கெடுப்பேன். என் ஃப்ரெண்ட்ஸ் பலரும் சினிமாப் பிரபலங்கள்தான். அதனால், அப்படி ஒரு ஃபீல் வந்ததே இல்லை.'' 

"அந்த ஈஸ்வரி கேரக்டர், நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்குமா?" 

(பலமாக சிரிப்பவர்) "அடாவடியான 'திமிரு' ஈஸ்வரி கேரடக்டர்ல நடித்ததுக்குப் பிறகு பலரும் அந்த கேரக்டரை மனசுல வெச்சே என்னை அணுகுவாங்க. ரெண்டு ஸ்டெப் பின்னாடி நின்னுதான் பேசுவாங்க. அது ஒரு பொண்ணுக்கு பலம்னுகூட நினைக்கிறேன். ஒருத்தர் எங்கிட்ட என்ன மோட்டிவ்ல பழகுறார் என்பதைத் தெரிஞ்சுகிட்டு அதுக்கேற்ப பேசுவேன். ஃப்ரெண்ட்ஸ் பலரும், 'திமிரு பொண்ணு, திமிரு பிடிச்சப் பொண்ணு' எனக் கிண்டல் செய்வாங்க. 'மத்தவங்களைப் போல நாங்களும் பயத்தோடுதான் பேசுறோம்'னு விக்ரம் கிருஷ்ணாவும், விஷாலும் அப்பப்போ கிண்டல் பண்ணுவாங்க. அந்த ஈஸ்வரி கேரக்டர் கிடைச்சதுக்குச் சந்தோஷப்படுறேன்." 

"கொளுந்தனார் விஷால் வீட்டில் எப்படி?" 

"அவர் ரொம்பவே அன்பாக நடந்துக்குவார். அண்ணியா என்மேல ரொம்பவே மதிப்பு வெச்சிருக்கார். பல வருஷமா இந்தத் துறையில் இருந்தாலும், பலரும் முன்வந்து சினிமாப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்க மாட்டாங்க. ஆனா, விஷால் தைரியமா முன்னாடி வந்து குரல் கொடுக்கிறார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க பொதுச்செயலாளர் எனப் பல பொறுப்புகளில் சிறப்பா இயங்கறார். அவருக்கு எப்பவுமே என் வாழ்த்தும் ஆதரவும் உண்டு." 

"மனைவி, அம்மா, மருமகள்... எந்தப் பொறுப்பு ரொம்ப பிடிச்சிருக்கு?" 

"மூணு பொறுப்புகளையுமே மனநிறைவா உணர்கிறேன். எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியலை. எனக்கு ஸ்போர்ட்ஸ்னா ரொம்ப விருப்பம். அதைப் பற்றி யார் பேசினாலும், நேரம் போறதே தெரியாத அளவுக்கு பேசிட்டே இருப்பேன். நல்ல கதைகள் அமைந்தால், நிச்சயம் தொடர்ந்து நடிப்பேன்'' எனப் புன்னகைக்கிறார் ஷ்ரேயா ரெட்டி. 

அடுத்த கட்டுரைக்கு