Published:Updated:

‘விக்ரம் வேதா’ வசனகர்த்தா இப்ப ‘காலா’ல பிஸி! - பெர்சனல் பகிர்கிறார் வசனகர்த்தா மணிகண்டன்! #VikatanExclusive

‘விக்ரம் வேதா’ வசனகர்த்தா இப்ப ‘காலா’ல பிஸி! - பெர்சனல் பகிர்கிறார் வசனகர்த்தா மணிகண்டன்! #VikatanExclusive
‘விக்ரம் வேதா’ வசனகர்த்தா இப்ப ‘காலா’ல பிஸி! - பெர்சனல் பகிர்கிறார் வசனகர்த்தா மணிகண்டன்! #VikatanExclusive

ஜி.எஸ்.டி என்கிற மகாபாரதப் போருக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் துளிர்த்திருக்கும் முதல் தளிர் 'விக்ரம் வேதா.' அது தளிர் மட்டும் விடாமல் அழகாகப் பூவும் பூத்திருப்பது டபுள் மகிழ்ச்சி. 'எல்லா கதையிலயும் ஒரு நல்லவன் இருப்பான்; ஒரு கெட்டவன் இருப்பான். ஆனால், இந்தக் கதையில் ரெண்டு பேருமே கெட்டவனுக.’ இப்படி ஸ்மார்ட்டாகவும் ஷார்ட்டாகவும் வசனங்கள். இந்த வசனங்களுக்கெல்லாம் சொந்தக்காரர், படத்தில் ‘சுகுர்’ கட்டிங்கில் புதுப் போலீஸாக நடிக்கவும் செய்திருக்கும் மணிகண்டன். சூப்பர் ஸ்டாரின் காலா படப்பிடிப்பில் இருந்தவரை போனில் பிடித்தபோது:

 "நான் ‘நாளைய இயக்குநர்’ல 'சூது கவ்வும் நலன்’, 'முண்டாசுப்பட்டி ராம்’, ‘இன்று நேற்று நாளை ரவிகுமார்’னு பல பேரோட குறும்படங்கள்ல நடிச்சிருக்கேன். நாளைய இயக்குநர் சீஸன் 2 ல ‘என் இனிய பொன் நிலாவே’ங்கற படத்துக்கு சிறந்த வசனத்துக்கான அவார்டும், சிறந்த நடிகருக்கான அவார்டும் கெடச்சது.

சூது கவ்வும் படத்துல விஜய் சேதுபதி அண்ணன் கூட நடிக்க வாய்ப்பு கெடச்சது, சில காரணங்களால பண்ணமுடியல. நடந்திருந்தா அது பெரிய ப்ரேக்கா இருந்திருக்கும். ஆனால், ஒரு நாள் நலன் சார் போன் பண்ணி 'காதலும் கடந்து போகும்’ ஸ்க்ரிப்ட் கொடுத்துப் படிக்கச் சொன்னார். முடிச்சதும், கார் ஓட்டத் தெரியுமான்னு கேட்டார். தெரியாதுன்னு சொன்னேன். ‘போய்க் கத்துக்க, அந்த முரளி கேரக்டர் நீதான்டா பண்ற’ன்னுட்டார்.

8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷும் அப்படித்தான் பழக்கம். “நீ படம் பண்ணினா, கண்டிப்பா நான் மெயின் கேரக்டரா நடிப்பேன் மச்சி”னு விளையாட்டா சொல்லிக்கிட்டு இருப்பேன். ஆனா, ஒரு நாள் போன் பண்ணி இந்த கால் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரம் உனக்குதான்னு சொன்னார். ஆனா, மனசுக்குள்ள அந்த ரவுடிப் பய கதாபாத்திரம் மேலதான் குட்டி ஆசை. எப்படியோ கடைசி நேரத்துல அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் வராததனால நான் ஆசைப்பட்ட கதாபாத்திரம் எனக்கே கெடச்சது.

ரெண்டு படத்துக்குமே விகடன் விமர்சனத்துல, “...உடன் நடித்திருக்கும் மணிகண்டன் கவனிக்கப்பட வேண்டியவர்”னு ஸ்பெஷல் மென்ஷனிங் கொடுத்தாங்க. பல பேர் இப்ப கவனிக்கறாங்கன்னா அதுக்கு இதுவும் ஒரு பெரிய காரணம் தலைவா.

“வசனம், நடிப்புனு மட்டும் இல்லாம முழுநீள இண்டிபெண்டன்ட் படம் இயக்குவது, யூடியூபில் சேனல் நடத்தறதுனு என்னென்னமோ பண்றீங்க...”

அவ்ளோ பெரிய பில்டப்பெல்லாம் இல்ல. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். மிடில் க்ளாஸ் வாழ்க்கை. போரூர்ல இருக்கோம், அடிப்படையில் நான் ஒரு இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட். ஆனா, எனக்கு ஆர்வம் பூரா மிமிக்ரியிலதான். நிறைய கல்ச்சுரல்ஸ்ல மேடை ஏறி ரஜினி, கமல், விஜயகாந்த், எம்.ஜி.ஆர், சிவாஜினு பல குரல்கள்ல பேசிக்கிட்டிருப்பேன். அப்பதான் ஃப்ரெண்டு பாத்துட்டு “நீ ‘கலக்கப் போவது யாரு”ல கலந்துக்க மச்சான்னு’ ஏத்திவுட்டான். கிட்டத்தட்ட ஐந்நூறு பேருல முட்டி மோதி கலந்துக்கிட்டு சீஸன் 4 'ரன்னர் அப்' ஆனேன். இதெல்லாம் காலேஜ் ரெண்டாவது வருடம் நடந்தது. 'பிக் எஃப்.எம்’ ல அப்பரன்டிஸா வேலை. அப்புறம் 'ஆஹா எஃப்.எம்' ல ஆர்.ஜே. 

சரி, நம்ம குரல வெச்சு வித்தியாசமா ஏதாச்சும் செய்யணும்னு தேடிக்கிட்டு இருந்தப்பதான், 'நான் கடவுள்' படத்துல டப்பிங் பேச, நண்பர் ஒருவர் மூலமா வாய்ப்பு கெடச்சது. ரஜினி சார் மாதிரி லுக்-அலைக் ஒருவர் படத்துல வருவார். அவருக்கு ரஜினி சார் மாதிரியே டப்பிங் பேசினேன். பாலா சார் 1,000 ரூபா சம்பளம் கொடுத்தார். டிஸ்கவரி சானல் அது இதுனு கொஞ்சநாள் போச்சு.  

 டிஸ்கவரில ஒரு ஆங்கில ஆவணப்படத்துக்குத் தமிழ் டப்பிங் வாய்ப்பு. கமல் சாருக்குத் தமிழ் டப்பிங் பேசினேன். எடிட்டர் ரெண்டு ட்ராக்ல எது உண்மையான கமல் சார் வாய்ஸ்னு குழம்பிப்போயிட்டார். டெல்லில இருந்து டீம் வந்து பாராட்டினாங்க. அப்ப கெடச்சதுதான் நாளைய இயக்குநர் வாய்ப்பு.

 “கொஞ்சம் மூச்சு வாங்கிக்கங்க ப்ரோ! நியூயார்க்ல ரெயின் ட்ரீ ஃபிலிம் ஃபெஸ்ட்ல சிறந்த திரைப்படத்துக்கான அவார்ட் வாங்கியிருக்கீங்க. என்ன படம் அது?”

ஃப்ரெண்டு ஒருத்தர் இண்டிபெண்டன்ட் படம் எடுக்கறேன், நீங்க நடிக்கணும்னு சொல்லிக் கூப்பிட்டார். ரொம்ப சின்ன டீம். நானே உதவி இயக்குநராவும் வேலைசெஞ்சு நடிக்கவும் செஞ்சேன். பாதியில தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் சண்டை. 60 சதவிகிதத்துக்கும் மேல எதுவும் படம் பிடிக்க முடில. படம் ட்ராப். அது எனக்கு 8 மாச க்ராஷ் கோர்ஸ் மாதிரி பின்னால உதவுச்சு.

அப்பறமா டெல்லி கணேஷ் சார் நடிப்புல “நரை எழுதும் சுயசரிதம்”னு ஒரு படம் பண்ணோம். நானும் நடிச்சேன். அதோட வசனங்கள நிறைய பேர் பாராட்டினாங்க. ரொம்ப லோ பட்ஜெட்ல எடுக்கப்பட்ட படம். 5டி ல ஷூட் பண்ணி பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினோம். பெரிய வரவேற்பு கிடைச்சது. அப்பதான் நியூயார்க்ல ”ரெயின் ட்ரீ ஃபிலிம் ஃபெஸ்ட்ல” சிறந்த படத்திற்கான அவார்ட் கெடச்சது. அது கொடுத்த தன்னம்பிக்கை என் வாழ்க்கைல பல மாற்றங்கள கொண்டு வந்திருக்கு.

கிட்னில கல்லு.  பெட் ரெஸ்ட்.  மருத்துவமனை பெட்ல இருந்து “பீட்சா 2” படத்துக்கு வசனம் எழுதினேன், அப்பறம் ”இன்று நேற்று நாளை” படத்துல ஒரு கேரக்டர்ல நடிக்க ரவிகுமார் வாய்ப்பு கொடுத்தார். ‘காஸி அட்டாக்’ படத்துக்கு உடனே தமிழ் வசனங்கள் எழுதணும்னு கேட்டாங்க, ஹெட்ஃபோன்ஸ் போட்டுட்டு லேப்டாப்ல ஒரே நைட்ல எழுதிக் கொடுத்தேன்”

இன்னிக்கு ஊரே பேசிட்டிருக்கிற  ”விக்ரம் வேதா” பத்தி சொல்லுங்க. எப்டி வாய்ப்பு கிடைச்சது?

ஒருநாள் விஜய் சேதுபதி அண்ணன்   ஃபோன் பண்ணி “டேய்... புஷ்கர், காயத்ரி ரெண்டு பேரும் உன் நம்பர் கேட்டாங்க, கொடுத்திருக்கேன். போய்ப் பாரு”னு சொன்னார். “ஏண்ணா, எதுக்குணா?”னு கேட்டுக் கேட்டு தொல்ல பண்ணேன் “அய்யோ சாமி, நீ போய்ப் பாருடா மொதல்ல”னு காண்டாகிட்டார்.

புஷ்கர், காயத்ரி ரெண்டு பேரும் எப்டி இருப்பாங்கன்னுகூடத் தெரியாது.  மொதல்ல நடிக்கத்தான் கூப்டிருந்தாங்க.  அப்பறம் என்ன நினைச்சாங்களோ, ஸ்க்ரிப்ட் கொடுத்து, படிக்கச் சொன்னாங்க. படிச்சுட்டு ப்ளஸ் மைனஸ்னு எல்லாத்தையும் எழுதிட்டுப் போனேன். வெறுமனே மைனஸ் மட்டும் எழுதாம அத ப்ளஸ்ஸா மாத்துறதுக்கான பாயின்ட்ஸையும்  கொண்டு போனேன். அது அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு. அப்பதான் “மணி நீங்களே வசனம் எழுதுங்க’னு சொல்லி புராஜக்ட்டைக் கையில ஒப்படைச்சாங்க. மனசார உழைச்சோம்.

தீபாவளி அன்னிக்கு நைட் தூங்காம முதல் பாதிக்கு வசனங்கள் முடிச்சேன்.   அந்த முதல்  இன்டெரோகேஷன் சீனோட வசனங்கள்... ரொம்ப யோசனைக்குப் பிறகு எழுதினது. சாதாரணமா எழுதின சில  வசனங்கள் மேடி சார் மற்றும் விஜய் சேதுபதி அண்ணன் டயலாக் டெலிவரில வேற லெவலுக்குப் போயிடுச்சு.  எல்லாரும் நல்லா இருக்குனு சொல்றாங்க. நான் இன்னும் தியேட்டர்ல ஆடியன்ஸோட பார்க்கல. சீக்கிரம் பார்க்கணும்.

விஜய் சேதுபதிய அண்ணன்னு சொல்றீங்க. அவருக்கும் உங்களுக்குமான நெருக்கத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?

விஜய் சேதுபதி அண்ணாவும் நானும் காதலர்கள்னேகூட சொல்லலாம். ‘காதலும் கடந்து போகும்’ சமயத்துலதான் முதல் தடவை பாத்தேன். அதுக்கு முன்னாடியே ‘யார்டா இந்த மனுஷன் இப்டி நடிக்குறார்னு’ வியந்து பாத்துருக்கேன். அவர் எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். ஷூட்டிங் டைம்ல அவ்வளவா பேச மாட்டார். மொரட்டுத்தனமா இருப்பார். ஒரு விதமான இடைவெளி இருந்திட்டே இருந்துச்சு. ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்ல மழை. அந்த மழைக்கு ஒதுங்கின சமயம்தான் பர்சனலா அண்ணனோட பேச வாய்ப்பு கெடச்சது. அங்க எங்களுக்குள்ள நடந்த உரையாடல் மறக்கவே முடியாது தலைவா. அப்டியே காதலர்கள் மாதிரி ஃபோன் நம்பர்ஸ் மாத்திக்கிட்டோம். அன்கண்டிஷனல் லவ் கேள்விப்பட்டிருக்கீங்களா? அதுதான் எங்களுக்குள்ள இருக்கு. இதுதான் இதுக்குதான்னு காரணம் சொல்ல முடியாத அன்பு. எல்லா நிலைமைலயும் எனக்கு உதவியா இருந்திருக்கார்.

செட்ல எதாச்சும் பிரச்னைனாகூட எனக்காக வந்து “இல்ல அவன் மேல தப்பு இருக்காது. அப்டியே தப்பு இருந்தாலும் இனிமே பண்ணமாட்டான்”னு சப்போர்ட் பண்ணுவார்.    ஒரு நாள் நைட் ஷூட் பேக் அப் பண்ண  லேட் ஆகிடுச்சு, அவர் கார்லயே வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய், அவர் மனைவிகிட்ட சொல்லி சாப்பாடு செஞ்சு சாப்பிட வெச்சுட்டு, அதே கார்ல என்னை வீட்டுக்கு அனுப்பிவெச்சார். அவ்ளோ பெரிய மனுஷன் இதெல்லாம் பண்ணணும்னு அவசியமே இல்ல. மதியம் எப்பவுமே அவர்கூடதான் சாப்பிடணும். வரலைனா “சார்கிட்ட ஒவ்வொரு வாட்டியும் வந்து கெஞ்சணுமா, ஒழுங்கா நீயே வந்துரு”னு அவரோட கேரவன்லதான் கூட்டிட்டுப் போய் சாப்பிட வெப்பார். அவங்க வீட்ல செய்யுற மீன் ஐட்டம் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். பர்சனலா நிறைய விஷயங்கள் பகிர்ந்துக்குவார். அன்னிக்கு அந்த மழை மட்டும் பெய்யலைனா இதெல்லாம் நடந்திருக்காது தலைவா. ஐ லவ் சேதுணா!

வார்த்தைக்கு வார்த்தை தலைவா தலைவானு சொல்றீங்களே.. காலா வாய்ப்பு எப்டி கிடைச்சது. ரஜினி சார்  என்ன சொல்றார்?

“என்னோட தேடல் தொடர்ந்து போய்க்கிட்டே இருக்கு தலைவா. அப்படியான தேடலின் ஒரு பயணமா,  யூடியூப்ல ‘டீ கடை தாட்ஸ்’னு ஒரு சேனல் ஆரம்பிச்சு “சரி பேசிப் பாப்போம்”னு வெப் சீரீஸ் பண்ணியிருக்கேன். அதுல ஒரு எபிசோட் பார்த்து பா.ரஞ்சித் சார்  ஃபோன் பண்ணிப் பாராட்டினார். “செம சூப்பரா இருக்கு. நான் எல்லா எபிசோட்ஸும் பாக்குறேன். ஆல் தி பெஸ்ட்”னு சொன்னார்.   கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவர் ஆஃபீஸ்ல இருந்து ஃபோன், ஆடிஷனுக்கு வரச் சொல்லி. கைவிட்டு எண்ண முடியாத அளவுக்கு ஆடிஷன்ல வடிகட்டினாங்க. ஒரு வழியா கடைசில “நீங்க செலெக்ட் ஆகிட்டீங்க. வாழ்த்துகள்”னாங்க. தலைவர் மாதிரி காலேஜ்ல மிமிக்ரி பண்ணிட்டு சுத்திட்டு இருந்தேன், பாலா சார் படத்துல அவர மாதிரி டப்பிங் பேசி லைஃப்ல பெரிய டர்னிங் பாயின்ட் அமைஞ்சது, இப்ப தலைவர் கூடவே ராப்பகலா நடிச்சிட்டிருக்கேன்.

 ஆல் த பெஸ்ட் ப்ரோ!

அடுத்த கட்டுரைக்கு