Published:Updated:

"ஓவியாவைப் பார்க்க வியப்பாவும், காயத்ரியைப் பார்க்க திகைப்பாகவும் இருக்குது! - 'வணக்கம் தமிழகம்' உமா #BiggBossTamil

"ஓவியாவைப் பார்க்க வியப்பாவும், காயத்ரியைப் பார்க்க திகைப்பாகவும் இருக்குது! -  'வணக்கம் தமிழகம்' உமா #BiggBossTamil
News
"ஓவியாவைப் பார்க்க வியப்பாவும், காயத்ரியைப் பார்க்க திகைப்பாகவும் இருக்குது! - 'வணக்கம் தமிழகம்' உமா #BiggBossTamil

"ஓவியாவைப் பார்க்க வியப்பாவும், காயத்ரியைப் பார்க்க திகைப்பாகவும் இருக்குது! - 'வணக்கம் தமிழகம்' உமா #BiggBossTamil

"போட்டிகள் சூழ்ந்த இந்த மீடியா உலகத்தில் லேட்டா நுழைஞ்சாலும் இப்போவரை என் இருப்பை தக்கவெச்சுட்டிருக்கிறதைப் பெருமையா நினைக்கிறேன். குடும்பத் தலைவியா இருந்தவள்... தொகுப்பாளினி, நடிகை என மாறினதை நினைக்கிறப்போ ஆச்சர்யமாக இருக்கு" - தன் மீடியா அனுபவத்தைப் புன்னகையுடன் நினைவுகூறுகிறார் 'வணக்கம் தமிழகம்' உமா. தற்போது, ஜீ தமிழ் 'பூவே பூச்சூடவா' சீரியலில் நடித்துவருகிறார். 

"முப்பது வயதில் தொடங்கிய மீடியா பயணத்தின் அனுபவம் பற்றி..." 

"ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு. ஸ்கூல் படிக்கிறப்பவும் இசை நிகழ்ச்சிகளில்தான் அதிகம் கலந்துப்பேன். பேச்சுத் திறமைகளில் கவனம் செலுத்தினதில்லை. பி.காம்., முடிச்சதும், கல்யாணமாகி குழந்தை குடும்பம்னு செட்டில் ஆகிட்டேன். 1992-ம் வருஷம் தமிழ்நாட்டின் முதல் தனியார் தொலைக்காட்சியாக 'சன் டிவி' ஆரம்பிச்சது. அந்த சேனலின் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நாமும் தொகுப்பாளர் ஆகலாமான்னு யோசிச்சேன். அடுத்த ஒரு வருஷத்திலேயே அந்த சேனலின் 'தொகுப்பாளர்கள் தேவை' விளம்பரத்தைப் பார்த்தேன். முயற்சி செய்து பார்க்கலாம்னு ஆடிஷன்ல கலந்துகிட்டு செலெக்ட் ஆனேன். அப்போ பத்து வயசு பொண்ணுக்கு அம்மாவா என்னோட முப்பது வயசுலதான், மீடியா பயணத்தைத் தொடங்கினேன்."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"தனியார் தொலைக்காட்சிகளின் முதல் செய்தி வாசிப்பாளரும் நீங்கதானே?'' 

"என்னோட மீடியா கிராஃப் ரொம்பவே வித்தியாசமானது. மகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, தொகுப்பாளினி வேலைக்குப் போவேன். பல துறைப் பிரபலங்களைப் பேட்டி எடுக்கிறது, திரை விமர்சனம், என வொர்க் பண்ணிட்டிருந்தேன். அப்போதான் செய்திகள் ஒளிபரப்பை சன் டிவி ஆரம்பிச்சது. முதல் செய்தி வாசிப்பாளர் ஆனேன். அதிக தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்துல, தேர்தல் நேரங்களில் லைவா இடைவிடாது செய்தி வாசிச்சிருக்கேன். நிறைய ஆச்சர்யங்களும் எக்கச்சக்க பாராட்டுகளும் கிடைச்ச காலம். என் நிகழ்ச்சிகள் வெற்றிபெற்றதால், 'முழு நேர தொகுப்பாளியாகவும், உங்க நிகழ்ச்சிகளை நீங்களே தயாரிக்கவும் செய்ங்க'னு சொன்னாங்க. பிறகுதான் நிகழ்ச்சி தயாரிப்பு வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சேன்." 

" 'வணக்கம் தமிழகம்' உமாவாகப் பெயர் பெற்ற அனுபவம்..." 

"சன் டிவியில புதுப் புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினோம். ஒரு கட்டத்தில் காலையில் 'வணக்கம் தமிழகம்' நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவுசெய்தாங்க. அதன் தொகுப்பாளினியா என்னை நியமிச்சாங்க. அப்போ நான் செய்தி வாசிப்பாளர், திரைவிமர்சனம் தொகுப்பாளினி உள்பட பல வேலைகளை செஞ்சுட்டிருந்தேன். 'இந்த நிகழ்ச்சியை எல்லா ரசிகர்களும் பிரேக் ஃபாஸ்ட் ஷோவாக தினமும் பார்க்கப் போறாங்க. அதனால், இதற்குத் தனித்துவமான வெற்றி கிடைக்கணும். இந்த நிகழ்ச்சியால் உங்களுக்கும் புகழ் கிடைக்கணும். அதனால், மற்றதை விட்டுட்டு, இந்த நிகழ்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துங்க'னு சொன்னாங்க. காலை நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்ப்பாங்களானு தயக்கமா இருந்துச்சு. ஆனா, 'வணக்கம் தமிழகம்' பெரிய ஹிட் ஆச்சு. எனக்கும் மிகப்பெரிய ரீச் கிடைச்சுது. தினமும் பல துறைப் பிரபலங்களை பேட்டி எடுத்ததால், நிறைய அனுபவங்கள் கிடைச்சுது. ஐந்து வருஷங்கள் 'வணக்கம் தமிழகம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். பண்டிகை நேரங்களில் பிரபலங்களைப் பேட்டியும் எடுத்தேன்." 

"தொகுப்பாளினி டு ஆக்டிங் பரிமாணம் எப்படி இருந்துச்சு?" 

"என் பொண்ணு பிளஸ் டூ படிச்ச காலகட்டத்தில் அவளுடன் அதிக நேரம் செலவிட முடிவுபண்ணி, தொகுப்பாளினி வொர்க்குக்கு சில மாசம் பிரேக் எடுத்திருந்தேன். மறுபடியும் சன் டிவிக்கே போக நினைச்சப்போ எனக்கான நிகழ்ச்சி அமையலை. அந்த சமயத்தில்தான் விஜய் டிவியிலிருந்து அழைப்பு வந்துச்சு. அங்கே இரண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். சில வருஷம் கழிச்சு ஜெயா டிவியில் 'வீட்டுக்கு வீடு லூட்டி' சீரியல்மூலம் நடிப்பு பரிணாமம். அதே சேனலில் 'செல்லமே செல்லம்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க ஆரம்பிச்சேன். மறுபடியும் நல்ல ரீச் கிடைச்சுது. அடுத்து, ஜீ தமிழ் சேனலில் 'ஒரு தாயின் சபதம்'. பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போ ஜீ தமிழில் 'பூவே பூச்சூடவா' சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன்.'' 

''சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தீங்களே...'' 

''ஆமாம்! மீடியா உமாவாக சில படங்களில் தோன்றினாலும், நடிகையா அறிமுகமானது 'சிவாஜி' படத்தில்தான். நடிகை ஷ்ரேயாவுக்கு அம்மாவா நடிச்சேன். பிறகு, 'வேல்', 'நண்பன்', 'உத்தமபுத்திரன்', 'விண்ணைத்தாண்டி வருவாயா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி' எனப் பல சினிமாக்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடிச்சிட்டேன். 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து மீடியாவில் எனக்கான அடையாளத்தை தக்கவெச்சிட்டிருக்கேன்.'' 

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பற்றி தொடர்ந்து ஃபேஸ்புக்ல கமென்ட் போடுறீங்களே..." 

"ஆரம்பத்திலிருந்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்த்துட்டிருக்கேன். ஓவியாவின் குணங்கள் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அந்த 'பிக் பாஸ்' வீட்டில் பலரது குணங்களும் மாறி, ஓவியா வருத்தப்பட்டப்போ எனக்கும் வருத்தமா இருந்துச்சு. அதனால், சோஷியல் மீடியாவில் ஓவியாவுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவுசெஞ்சேன். கஷ்டமான சூழலிலும் தன்னை மாத்திக்காம இருக்கும் ஓவியாவைப் பார்த்து வியப்படைஞ்சேன். நிகழ்ச்சிகளுக்காக காயத்ரி ரகுராமை சந்திச்சு பேசியிருக்கிறதால் அவங்களை எனக்குத் தெரியும். அப்படி நான் பார்த்துப் பேசின காயத்ரிக்கும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருக்கும் காயத்ரிக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. மரியாதையான, அன்பான பொண்ணாகத்தான் அவங்களைப் பார்த்திருக்கேன். இந்த நிகழ்ச்சி தொடங்கிறப்போ 'எல்லாருமே ரொம்ப நல்லவங்களா தெரியிறாங்க. இவங்களுக்குள்ளே எப்படிச் சண்டை வரும்'னு திகைப்பா யோசுச்சிருக்கேன். ஆனா, கொஞ்ச நாளிலேயே ஒவ்வொருத்தர்கிட்டயும் பல ரூபங்கள் வெளிப்படுறதைப் பார்க்க முடிஞ்சது. தொடர்ந்து பல ரூபங்களைப் பார்ப்போம்போலிருக்கு" எனச் சிரிக்கிறார் உமா.