Published:Updated:

‘இந்தத் தியேட்டர் எனக்கு மெக்கா மாதிரி. இங்கதான் என் உயிர் போகணும்!’ - அனுராக் தாத்தா கதை

தமிழ்ப்பிரபா
‘இந்தத் தியேட்டர் எனக்கு மெக்கா மாதிரி. இங்கதான் என் உயிர் போகணும்!’ - அனுராக் தாத்தா கதை
‘இந்தத் தியேட்டர் எனக்கு மெக்கா மாதிரி. இங்கதான் என் உயிர் போகணும்!’ - அனுராக் தாத்தா கதை

சினிமா டிக்கெட் விலையேற்றத்துக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வரும் கூட்டம்  எந்த அளவுக்கு இருக்கிறதென்று, சென்னையைச் சுற்றியுள்ள திரையரங்குகளுக்குச் சென்று விவரங்கள் சேகரித்துக் கொண்டிருந்தோம். அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கத்தின் உள்ளே நுழைந்ததும் டிக்கெட் கவுன்ட்டர் அறையின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த  ஒரு முதியவரிடம் "இந்த தியேட்டர் மேனேஜரை பாக்கணும்" என்றதும் சற்றும் தாமதிக்காமல் "நாந்தான் மேனேஜர் சொல்லுங்க" என்றார். எதற்காக வந்திருக்கிறோம் எனச் சொன்னதும் தன் பணியறைக்குள் எங்களை அழைத்துச் சென்றார். வேகமாக நடந்த அவரைப் பின்தொடர்ந்தோம். தனக்கென எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு முக்கியத்துவத்தின் மூலம் அவர் பரவசமடைகிறார் என்பதை உணர முடிந்தது.

தன் இருக்கையில் அமர்வதற்கு முன் எதிரே இருந்த இரண்டு நாற்காலியில் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு "டீ, காபி, கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது" என்றார். "இருக்கட்டும் சார்'' என்றதற்கு, " ம்ஹும். சாப்டுங்க. சொல்லுங்க என்ன விஷயமா வந்தீங்க? எந்த பத்திரிகை" எனக் கேட்டுக் கொண்டே  அறைக்கு வெளியே நின்றிருந்த பையனிடம் ரெண்டு டீ என்று சைகை காட்டிவிட்டு எங்களைப் பார்த்தார்.

"விகடன்ல இருந்து வர்றோம் சார், இப்ப ஜி.எஸ்.டிக்கு அப்புறம் உங்க தியேட்டர்ல கூட்டம் எப்டி இருக்குனு தெரிஞ்சிக்கலாமா"

"ஓ ஆனந்த விகடனா... படத்துக்கெல்லாம் மார்க் போடுவீங்களே..!"

"ஆமா சார்..  சார்  இந்த ஜி.எஸ்.டி ரேட் ஏத்துனதுக்கு அப்புறம் தியேட்டர்ல கூட்டம்லாம் எப்டி சார்"

பதில் சொல்லாமல் தன் பக்கமிருந்த பெரிய நோட்டுப் புத்தகத்தை எங்கள் பக்கம் திருப்பி "ஒரு ஷோவுக்கு எத்தன பேரு வந்து இருக்காங்கனு இந்த காலம்ல இருக்கும் பாருங்க" என்று மூக்குத் தண்டில் சரிந்த கண்ணாடியை நேர்ப்படுத்தினார். 

அவர் குறிப்பிடிருந்த இடத்தில்  33,47,29 என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. 

"இவ்ளோதானா சார்"

"இதுக்கு முன்னாடி இதவிட கொஞ்சம் அதிகமாக ஜனம் வந்தது. இப்போ டிக்கெட் வெல ஏறுனதுக்கு அப்புறம் கொறஞ்சிடுச்சு. ஆனா வெள்ளி, சனி, ஞாயிறுல சுமாரா க்ரவுட் வரும். மத்த நாள்லலாம் ஒக்காந்து தூங்க வேண்டியதுதான்..."

டீ கொண்டு வந்த பையன் அருகில் வந்தபோது பார்த்தோம். அவனின் இடது புருவத்தின் மேலே நெல்லிக்கனி அளவு வீங்கியிருந்தது. உடனிருந்த நண்பர் "என்ன ஆச்சுப்பா என்றார்" அவன் சொல்லலாமா வேண்டாமா என்று தயக்கத்துடன் அந்த மேலாளரைப் பார்த்தான்.

அவர் தொடர்ந்தார் " நேத்து ஒரு குடிகாரப்பயலோட டிக்கெட் கவுண்டர்ல பிரச்ன ஆயிப்போச்சுங்க.  சில்லறை இல்ல ஒரு பத்து ரூபா நோட்டா இருந்தா குடுங்கன்னு கேட்டதுக்கு, அவ்ளோ பிரச்னை பண்ணிட்டான். இவன் மடக்கப் போனான்... இவன ஒரு குத்து விட்டுட்டான்.. பாவம், ஏற்கனவே இவனுக்கு அந்த எடத்துல ஹீட்டால கட்டி வேற வந்து இருந்தது. அவன் குத்துனதும் அது இன்னும் பெருசா ஆய்டுச்சு. நம்ம ஆளுங்களுக்குதான் இந்திகாரனுங்கனா ஏன் இவ்ளோ எளக்காரம்னு தெரியல."

"போலீஸ கூப்ட வேண்டியதுதான... "

"எங்க ஆளுங்க ரவுன்ட் பண்ண ஆரம்பிச்சதும் திபுதிபுன்னு ஓடிட்டான். அவனுங்களை சொல்லி என்னங்க இருக்குது? இந்த ஜி.எஸ்.டி-க்கு அப்புறம் சில்றைக்கு டெய்லி பிரச்னை நடக்குது. எங்க தியேட்டர்க்கு வர ஆடியன்ஸ்ல கம்ப்யூட்டர்ல டிக்கெட் புக்  பண்ணிட்டு வர்றவங்க கம்மி. நேர்ல வந்து காசு கொடுத்துதான் வாங்குறாங்க. ஏற்கனவே இங்க காத்தடிக்குது. சில்றைக்கு நாங்க எங்கதான் போறது. டிக்கெட் வெலய ஏத்துனவங்க ஒரு ரவுண்டா ஏத்திருக்கக்கூடாதா.... சாட்டப் போயி பாருங்க.  நூத்தி ஆறு ரூபா, எண்பத்தி ரெண்டு ரூபா, பதினொரூபானு. ஏதோ நாங்கதான் டிக்கெட் ரேட்ட ஏத்துன மாதிரி எங்க ஆளுங்ககிட ரூடா பேசுறாங்க என்னத்த சொல்றது... நீங்க டீ சாப்டுங்க ஆறிடப்போது."

அவர் சொன்னதற்காக டீயை ஒரு முறை உறிஞ்சிவிட்டு "நீங்க எவ்ளோ நாளா சார் இந்த தியேட்டர்ல வேல செய்றீங்க" என்று கேட்டேன்.

"நானா.... நா வந்து.... நாப்பத்தைந்து வருஷமா இங்க வேல செய்றேன் தம்பி. நெயிண்டின் செவண்டி ட்டூல அனுராக்னு ஒரு இந்திப்படம் இங்க ரிலீஸ் ஆன சமயத்துல வேலைக்கு சேந்தேன்... அப்போலாம் எங்க தேட்டர்ல ஜேஜேஜேனு இருக்கும் கூட்டம். சோறு சாப்ட கூட எங்களுக்கு டைம் இருக்காது. இப்போ என்னடானா வேலையே செய்யாம வாங்குற சம்பளத்துல சோறு சாப்டவே புடிக்க மாட்டுது" சட்டைப் பையிலிருந்த தைலப்புட்டியைத் திறந்து நெற்றியின் இரு ஓரங்களிலும் தடவிக் கொண்டார். பின்பு அந்த தைலவிரல்களை மூக்கின் மீதுவைத்து மெல்லமாக மூச்சு இழுத்தார். அந்நேரம் அவர் கண்களும் மூடியது.

"இன்னைக்கு காலத்துக்கு ஏத்த மாதிரி உங்க தியேட்டர நீங்க ரெடி பண்ணா கூட்டம் வரும்ல சார்"

கற்சிலை கண் திறப்பது போல திடீரென திறந்தவர் "நீங்க வேற. தியேட்டர் உள்ள போயிப் பாருங்க. எவ்ளோ சூப்பரா ரெடி பண்ணி இருக்கோம்னு. மெத்து மெத்துன்னு சீட்டு ஜம்முனு ஏசிலாம் போட்டு வச்சிருக்கோம். ஆனா பாருங்க தள்ளினு வர்ற கேஸுங்கதான் அத யூஸ் பண்ணுது.  என் பேரன், பேத்தி மாதிரி இருக்கிற ஸ்கூல் பசங்கல்லாம் ஜோடியா வருதுங்க. பாக்கவே அவ்ளோ சங்கடமா இருக்கும் தெரியுமா!"

சரி, இப்டி எல்லா வகையிலும் உங்களுக்கு கஷ்டமா இருக்கிற இந்த இடத்துல நீங்க எதுக்கு வேல செய்யணும்?

"நல்லா கேட்டீங்க போங்க. என்ன பண்றதுன்னு தெரியமா இங்க புதுப்பேட்டைல இருக்கிற கூவத்துல விழுந்து செத்துப் போயிடலாமானு இருக்கிற ஒரு சூழல்லதான் எனக்கு இங்க வேலை கெடச்சது. என் குடும்பத்தையே சீர் பண்ணேன்.  இன்னைக்கு எல்லாம் நல்லா இருக்கோம். நா வேலை செய்யணும்னு கூட அவசியம் இல்ல. ஆனா என்னாலே டெய்லி இந்த தியேட்டர்க்கு வரமா இருக்கமுடியாது. ஜுரம் வந்தா கூட மாத்திர போட்டுட்டு இங்க வந்து படுப்பனே தவிர வீட்ல மொடங்கிட மாட்டேன். உயிர் போனாலும் இங்கதான் தம்பி போகணும். இது எனக்கு மெக்கா மாதிரி"- எனச் சொல்லி சிரித்துவிட்டு "வேற ஏதாவது தகவல் தெரியணுமா" என்றார்.

ஒரு நிறைவு வந்துவிட்டது போலத் தோன்றியதால் "இல்ல சார் போதும். உங்க பேர் என்னனு மட்டும் சொல்லிடுங்க"

"சொல்றேன். ஆனா எழுதும்போது பேர மாத்தி போட்டுடுங்க"

"அனுராக்னு போட்டுக்கலாமா சார்?"

"ஹாஹாஹா" என்று சிரித்தார்.