Published:Updated:

"ஷாருக்கான்-ரஜினிகாந்த் ரெண்டு பேர் கிட்டயும் ஒரே ரியாக்ஷன்தான்!" - ஆஷ்னா சவேரி ப்ரேக் டைம் சாட்

சுஜிதா சென்
"ஷாருக்கான்-ரஜினிகாந்த் ரெண்டு பேர் கிட்டயும் ஒரே ரியாக்ஷன்தான்!" - ஆஷ்னா சவேரி ப்ரேக் டைம் சாட்
"ஷாருக்கான்-ரஜினிகாந்த் ரெண்டு பேர் கிட்டயும் ஒரே ரியாக்ஷன்தான்!" - ஆஷ்னா சவேரி ப்ரேக் டைம் சாட்

சந்தானம் நடித்த ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி. அடுத்ததாக 'இனிமே இப்படித்தான்' படத்திலும் ஆஷ்னா-சந்தானம் ஜோடி சேர்ந்து நடித்தது,  கிசு கிசுக்களை கிளப்பியது. இப்போது நடிகர் ஆரியுடன் சேர்ந்து நடிக்கும் 'நாகேஷ் திரையரங்கம்' வரும் டிசம்பர் மாதம் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து பிரம்மா.காம்  படத்திலும் நடிக்கிறார். இவ்வளோ பிஸியிலும் நடிப்பைத் தவிர வேற நிறைய ஆசைகள் இருக்கின்றன ஆஷ்னாவுக்கு. அது என்னவெனத் தெரிந்துகொள்ளவே இந்த ப்ரேக் டைம் இன்டர்வியூ.

"சினிமா என்ட்ரி எப்படி?"

நான் காலேஜ்ல படிச்சுட்டு இருந்தப்போ பார்ட் டைம் மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். அது மூலமா நிறைய விளம்பரங்கள்ல நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. கூடவே டிவி வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு. ஒருநாள் இயக்குநர் ஸ்ரீநாத்கிட்ட இருந்து வந்த போன் கால்தான் என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துருக்கு. அந்த வாய்ப்பு மூலமாத்தான் நான் 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்துல நடிக்குறதுக்கான வாய்ப்பு வந்துச்சு."

"ஷாருக் கானுடன் நடித்த அனுபவம்.."

"நான் SRKயோட பெரிய ஃபேன். அவரோட  ஒரு ஃப்ரேம்லையாவது நடிக்கணும்'ன்றது என்னோட நீண்ட நாள் ஆசை. அந்தக் கனவு 'டாடா டீ' விளம்பரம் மூலமா நிறைவேறிருச்சு.  இந்த விளம்பரத்தை இயக்கியது பால்கி சார். அவரோட வேலை பாக்குறத்துக்கு ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்'ன்னு நினைக்கும்போது, அதே விளம்பரத்துல ஷாருக் சாரும் இருந்தது டபுள் சந்தோஷம். நான் ஷாருக்கோட நிறைய பேசணும்னு நெனச்சு வச்சுருந்தேன். ஆனா, ஆன் தி ஸ்பாட்ல அவரைப் பார்த்ததும் எனக்கு பேச்சே வரலை. ரொம்ப படபடப்பா இருந்துச்சு.ஒரு குழந்தைக்கு கை நிறைய சாக்லேட்டும், ஐஸ் கிரீமும் குடுத்தீங்கன்னா எப்படி இருக்குமோ, அதை விட அதிகமா சந்தோஷப்பட்டேன். ஒரு விளம்பரப் படத்துக்கான ஷூட்டிங் சாதாரணமா ஒரு நாள் முழுக்க நடக்கும். ஆனா, ஷாருக் சார் வெறும் மூன்று மணி நேரத்துல எல்லாத்தையும் முடிச்சுட்டாரு."

"தொடர்ந்து சந்தானத்துடன் ரெண்டு படம் நடிச்சிருக்கீங்களே.."

"வாய்ப்பு வந்ததுனால சேர்ந்து நடிச்சேன். அது மட்டுமில்லாம எனக்கு காமெடி படங்கள் ரொம்பப் பிடிக்கும். சென்ட்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் மூவீஸ்ல ஈசியா நடிச்சுடலாம். ஆனா, காமெடி படத்துல நடிக்குறதுதான் ரொம்பக் கஷ்டம். அதுலயும் நான் ஒரு அறிமுக நடிகை. என்னை பெர்ஃபெக்ட்டா காமெடி பண்ண வச்சது சந்தானம் சார்தான். அவர் வந்தாலே ஷூட்டிங் ஸ்பாட் கல கல'ன்னு மாறிடும். மத்த ஜானர் மூவீ மாதிரி காமெடிக்குத் தனி ரசிகர் கூட்டம் கிடையாது. காமெடின்னு வந்துட்டா எல்லாருமே அதை ரசிப்பாங்க. என்னங்க சரிதானே...?"

"ட்ரீம் ரோல் அண்ட் ட்ரீம் ஹீரோ"

"வேற யாரு சூப்பர் ஸ்டார்தான். அவரோட சேர்ந்து ஒரு படமாவது பண்ணனும். அப்புறம் சூர்யா சாரோட நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ட்ரீம் ரோல்...எப்பயுமே பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதையில நடிக்குறதுதான். சுருக்கமா சொல்லணும்னா கஹானி வித்யா பாலன் மாதிரி."

"நாகேஷ் திரையரங்கம்’ படத்தோட டைட்டில் சம்பந்தமா நிறைய சர்ச்சைகள் கிளம்புச்சே..."

"ஆமாம். ஆனந்த் பாபு சார் படத்தோட டைட்டில் இப்படி இருக்கக்கூடாதுன்னு கேஸ் போட்டாங்க. ஆனா, இந்தப்படத்துக்கும் நாகேஷ் சாருக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. இது முழுக்கமுழுக்க ஹாரர் திரைப்படம். பேய்க் காட்சிகள் எல்லாமே இந்த தியேட்டர்லதான் நடக்கும். படத்தோட ஹீரோ ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோக்கர். நாகேஷ் தியேட்டர் அவரோட குடும்பச் சொத்து. ஹீரோவோட தங்கச்சி கல்யாணத்துக்காக இந்தத் தியேட்டரை விற்க வேண்டிய சூழ்நிலை. சென்ட்டிமென்ட்டும் பேய்க் காட்சிகளும் மாறிமாறி வரும். படத்தோட முக்கியமான சில காட்சிகள் இந்தத் தியேட்டர்லதான் நடக்கும். அதுக்காகத்தான் இந்த படத்துக்கு 'நாகேஷ் திரையரங்கம்'ன்னு பேரு வச்சிருக்கோம்."

"ரஜினியைச் சந்தித்த அனுபவம் பற்றி"

"நான் மலேசியா போயிட்டு இருந்தப்போ ரஜினி சாரை ஃப்ளைட்ல சந்திச்சேன். அப்போ ரஜினி சார் கபாலி ஷூட்டிங்காக போயிட்டு இருந்தாரு. அவர் ஃப்ளைட்ல எனக்கு பக்கத்து சீட்டுன்னு சொன்னதும் நிறைய விஷயங்களை பேசணும்'ன்னு மனசுல நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, எப்படி SRKவைப் பார்த்ததும் திகைச்சுப் போனேனோ, அதே மாதிரித்தான் ரஜினி சாரைப் பார்த்ததும் என்ன பேசுறதுன்னே தெரியாம முழிச்சுட்டு இருந்தேன். ஆனா, சார் என்கிட்ட, 'நல்ல ஹார்ட் ஒர்க் பண்ணுங்க. உங்களோட எல்லா படமும் வெற்றியடைய வாழ்த்துகள்'னு சொன்னார்."

"நீங்க ஃபிட்னெஸ்ஸை பராமரிக்குறதுக்காக அதிக மெனக்கெடுவீங்க தானே.."

'ஆமா...அது ஹீரோயினுக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் ஃபிட்னெஸ்'ன்றது அவசியமானது. நான் ரொம்ப ஒல்லியா இருக்குறதுக்கும், ஸீரோ சைசுக்கும் சப்போர்ட் பண்ண மாட்டேன். அதெல்லாத்தையும் தாண்டி உடல் ஆரோக்கியமா வச்சுக்கிறதுதான் முக்கியம். தினமும் ஒரு மணி நேரமாவது இதற்காக ஒதுக்கிடுவேன். ஜிம் வொர்க் அவுட், யோகா மற்றும் தியானதுக்காக நிறைய ட்ரைனிங் கூட எடுத்திருக்கேன். டயட் கண்டிப்பா கடைபிடிக்கணும். நான் பக்கா வெஜிடேரியன். அதனால டயட் எனக்கு ரொம்ப ஈஸியான விஷயமும் கூட."

"தமிழ் டப்பிங் பத்தி யோசிச்சுருக்கீங்களா?"

"கண்டிப்பா தமிழ் டப்பிங் பண்ணுவேன். நடிக்கிறதோட சேர்த்து டப்பிங்லயும் எனக்கு ஆர்வம் இருக்கு. அதுக்காக தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். யாராவது தமிழ்ல பேசுனா தமிழ்லேயே பதில் சொல்வேன். இப்படி டப்பிங் மட்டும் இல்ல. பயணங்களும் ரொம்பப் பிடிக்கும். வாசிப்புப் பழக்கமும் எனக்கு அதிகம்."

"பாய்ஃ பிரண்ட், கல்யாணம் பத்தி..."

"இதுவரைக்கும் யாரும் இல்லங்க. அப்படி ஒருத்தரை சந்திச்சா 'I'm very much willing to accept it and I'm looking forward for it' என்று வெட்கத்துடன் முடித்தார்.