Published:Updated:

அந்த ஒரு தப்பு, விஜய்யுடன் மூன்றாவது ஹேண்ட்-ஷேக்! - ஏ.ஆர்.முருகதாஸ் சர்ப்ரைஸ்

அந்த ஒரு தப்பு, விஜய்யுடன் மூன்றாவது ஹேண்ட்-ஷேக்! - ஏ.ஆர்.முருகதாஸ் சர்ப்ரைஸ்
அந்த ஒரு தப்பு, விஜய்யுடன் மூன்றாவது ஹேண்ட்-ஷேக்! - ஏ.ஆர்.முருகதாஸ் சர்ப்ரைஸ்

அந்த ஒரு தப்பு, விஜய்யுடன் மூன்றாவது ஹேண்ட்-ஷேக்! - ஏ.ஆர்.முருகதாஸ் சர்ப்ரைஸ்

விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முகாமில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக ஆஜரானார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.  

''நான், 'கத்தி' படத்துல விவசாயிகள் பிரச்னையைச் சொன்னதற்கு முன்பே... விவசாயிகள் பிரச்னையை மக்கள்கிட்ட கொண்டுபோனது, விகடன்தான். இப்ப என்கிட்ட, 'நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடி 'கத்தி' படத்தில் கையில் எடுத்த விவசாயிகள் பிரச்னை, இப்ப நடந்திட்டிருக்கு'னு சொல்லுறாங்க. ஆனா, ஆறு வருஷத்துக்கு முன்பே இப்படி ஒரு பிரச்னை வரப்போகுதுனு அபாயச்சங்கு ஊதினது விகடன்தான். விகடனில் வந்த கட்டுரைகளைப் படிச்சுதான் மீத்தேனைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். படத்துலயும் சேர்த்தேன். அதே மாதிரி ரெண்டு தேர்தலுக்கு முன்னாடி, ஒரு பெரிய கட்சி வடிவேலுங்கிற காமெடியனை நம்பி தேர்தலில் களமிறங்கிச்சி. அதைப் பார்த்து ரொம்ப வேதனைப்பட்டேன். பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம், அண்ணாவால் வளர்க்கப்பட்ட ஒரு கட்சி, ஒரு காமெடியனை நம்புறாங்களே... அதைவிட, வடிவேலு சொன்னால் நாம எல்லாரும் ஓட்டுப்போட்டுருவோம்னு அவங்க நம்பினது, என்னை அவமானப்படுத்திருச்சி.

அப்புறம், விகடனில் வெளிவந்த ஒரு போட்டோதான் அந்தத் தேர்தலின் முடிவையே மாற்றியது.  ஆள்பவர்கள் மேல நேர்மையா, ஆணித்தரமா விமர்சனம் வைக்கிறது விகடன் மட்டும்தான். பொழுதுபோக்குக்காக எழுதுற பேனா என்னுடையது. பொழுது விடியுறதுக்காக எழுதுற பேனா உங்களுடையது. இது, உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமை. ஐ.ஏ.எஸ் சகாயம், டிராஃபிக் ராமசாமி போன்ற நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருப்பவர்களைத் தூக்கிப்பிடித்து, மக்களிடம் கொண்டுசென்றது விகடன்தான். அப்புறம், எப்பவும் கேட்கிற பத்து கேள்விகளையே கேட்காம, நீங்க  பேட்டி எடுக்குற  பிரபலத்தின் மனசுல மறைஞ்சுகிடக்குற விஷயங்களைக் கொக்கிபோட்டு இழுக்கிற மாதிரியான கேள்விகள் கேளுங்க. உண்மையை உரக்கச் சொல்லுங்க. உறைக்கிற மாதிரி சொல்லுங்க'' என்றவர், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.

 ''உங்களை சினிமாவுக்கு வரத் தூண்டிய விஷயம் எது?''

''என் சின்ன வயசுல ரெண்டு அதிசயத்தைப் பார்த்து ரொம்ப வியந்திருக்கேன். ஒண்ணு, எங்க வீட்டு முன்னாடி இருந்த தார் ரோடு எங்கே எல்லாம் போகும்னு நினைச்சு ஆச்சர்யப்பட்டிருக்கேன். ரெண்டாவது, எங்க ஊர்ல அப்ப ரெண்டு சினிமா தியேட்டர்கள் இருந்துச்சு. அதுல, மேல வட்டமா, புரொஜெக்டர் மூலமா சினிமா இயக்கப்படுவதை அதியசமாப் பார்த்திருக்கேன். அப்படித்தான் எனக்குள்ள சினிமா ஆர்வம் வந்திருச்சினு நினைக்கிறேன். நான் பாரதிராஜா, பாக்கியராஜ் மாதிரி ஆகணும்னு ஆசைப்பட்டு ஊருல இருந்து வந்தேன். இப்போ, என் ஊர்ல இருந்து என்னைப் பார்த்து வர்றவங்க... 'இவனே வந்து ஜெயிச்சுட்டான்; நாம ஜெயிக்க மாட்டோமா'ன்னு வர்றாங்க.'' 

''ஜி.எஸ்.டி வரி பற்றி உங்க கருத்து என்ன?''

''நம்ம கட்டுற பணமெல்லாம் எங்க போகுதுனு எனக்கும் கோபம் இருக்கத்தான் செய்யும். ஆனா, இப்போ எல்லாருமே வரிகட்டுறதால விலைவாசி ரெண்டு மூணு வருஷத்துல குறையும்னு சொல்றாங்க. பார்ப்போமே.''

'' 'ஸ்பைடர்' படத்துக்கு அப்புறம் யார்கூட படம் பண்ணப்போறீங்க? அதுல என்ன மெசேஜை எதிர்பார்க்கலாம்?''

''இதை, பிரஸ்மீட் வெச்சு சொல்லணும்னு நினைச்சேன். ஆனா, உங்களுக்காக இங்கேயே சொல்றேன். இன்னும் அதிகாரபூர்வமா உறுதியாகலை. ஆனா, கிட்டத்தட்ட உறுதியான மாதிரிதான். நானும் விஜய் சாரும் மூணாவது முறையா இணையுறோம். சீக்கிரமே முறையான அறிவிப்பு வரும். அதுல, என்ன மெசேஜ் சொல்லப்போறேன்னு இன்னும் விஜய் சார்கிட்டயே சொல்லலை. பொதுவா, மெசேஜ் சொல்லணும்கிறதுக்காக நான் படம் எடுக்க மாட்டேன். அந்தக் கதைக்குத் தேவைப்படுற மெசேஜை உள்ளே சேர்க்கிறதுதான் வழக்கம்." 

''பெரிய ஹீரோக்களை வெச்சு மட்டுமே படம் எடுக்குறீங்க. புதுமுகங்களை வெச்சு லோ பட்ஜெட்ல படம் பண்ற ஐடியா இருக்கா?''

''பெரிய பட்ஜெட் படமோ சின்ன பட்ஜெட் படமோ உழைப்பு ஒண்ணுதான். பெரிய ஹீரோ படங்கள்ல, நினைக்கிறதைச் சொல்ல முடியுற பட்ஜெட் சுதந்திரம் இருக்கும். ஆனா, புதுமுகங்களை வெச்சுப் பண்றப்போ, அப்படிப் பண்ணமுடியாது. அதுக்காக, புதுமுகங்களை வெச்சு படம் பண்ணவே கூடாதுனு இல்லை. மூணு ஸ்கிரிப்ட் இருக்கு. சீக்கிரமே புதுமுகங்களை வெச்சு ஒரு சின்ன பட்ஜெட் படம் பண்ணணும்"

''சிறுகதை எழுதியிருக்கீங்க, அடுத்து நாவல் எழுதுற ஐடியா இருக்கா?''

''நான் ஏற்கெனவே ஒரு நாவல் எழுதியிருக்கேன். இப்போ, நாவல் எழுதுற ஆசை இல்லை. ஆனா, 'ஓ பக்கங்கள்' மாதிரியான ஒரு தொடரை விகடன்ல எழுதணும்னு ஆசை. பார்ப்போம்.'' 

''ரீமேக் படங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன? 'மெளனகுரு' படத்தை ரீமேக் பண்ணணும்னு ஏன் தோணுச்சு?''

''மொழியைத் தாண்டி மக்களோட ரசனை ஒண்ணுதான். நாம ஹாலிவுட் படங்களை ரசிச்சுப் பார்க்கத்தானே செய்றோம். உணர்ச்சிகளுக்கு மொழி ஒரு தடையா இருக்கவே முடியாது. அப்படி உணர்ச்சிகளைக் கடத்துற படங்களை ரீமேக் பண்றதுல தப்பு இல்லை. 'மெளனகுரு' படத்தைப் பொறுத்தவரை, கதை எனக்குப் பிடிச்சிருந்தது. அதை, ஒரு பெண்ணை மையமா வெச்சு பாலிவுட்ல பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு. 'மெளனகுரு' இயக்குநர் அப்போ வேற ஸ்க்ரிப்ட் வேலைகள்ல இருந்ததால, நானே இயக்கவேண்டியதா இருந்தது.''

''ரஜினியை வெச்சு எப்ப படம் பண்ணுவீங்க?''

''எல்லோரையும் மாதிரி நானும் ரஜினி சாரோட ரசிகன்தான். அது என்னவோ தெரியலை, படம் பண்றதுக்கான சூழல் பொருந்தி வரலை. ஆனா, எதிர்காலத்துல நிச்சயம் வாய்ப்பு இருக்கு.''

''இப்போ எல்லாம் படம் ரிலீஸான அஞ்சாவது நிமிஷமே இணையத்துல வந்துடுது. இதை நீங்க கோபமா பார்க்கிறீங்களா இல்ல... நல்ல படம்னா கண்டிப்பா தியேட்டருக்கு வந்து பார்ப்பாங்கங்கிற நம்பிக்கை இருக்கா?''

'' 'துப்பாக்கி' படம் இலங்கைலதான் முதல்ல ரிலீஸ் ஆச்சு. அங்கே, படம் ஓடிட்டிருக்கும்போதே ஹீரோ என்ட்ரி முதல் இன்டர்வெல் ட்விஸ்ட் வரை எல்லாத்தையும் சோஷியல் மீடியால சொல்லிட்டாங்க. ஒவ்வொரு இயக்குநருக்கும் அவங்க படம் குழந்தை மாதிரி. அதை அரைகுறையா வெளியே எடுக்குறது எவ்வளவு பெரிய தப்பு? எடிட்டிங் டேபிள்ல படம் இருக்கும்போது லீக் பண்றாங்க. இதுவும் முறை இல்லையே. இன்னொரு விஷயம், விமர்சனம் பண்ண எல்லாருக்கும் உரிமை இருக்கு. படத்தை முழுசா பார்த்துட்டு விமர்சனம் பண்ணுங்க. தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டே அது சரியில்ல இது சரியில்லனு சொல்லாதீங்க.''

 
''நூறு கோடி, இருநூறு கோடி வசூல் எல்லாம் உண்மையா? இல்ல, விளம்பரத்துக்காக சொல்லப்படுதா?''

''படத்தோட வசூலை நாம ஒரு வழியில் கணக்கு பண்றோம். பாலிவுட்ல வேற மாதிரி கணக்கு பண்றாங்க. பாலிவுட்ல, தியேட்டர் வசூலை மட்டுமே கணக்கு பண்ணி, 100 கோடி வசூல்னு சொல்றாங்க. இங்கே, நாம தியேட்டர் வசூல், ஆடியோ ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு கலெக்‌ஷன்னு எல்லாத்தையும் சேர்த்து வசூல் கணக்கு சொல்றோம்.'' 

'ரமணா' படத்துல வர்ற டேட்டா சீன், 'துப்பாக்கி' இன்டர்வெல் ப்ளாக்ல வர்ற சீக்வென்ஸ் எல்லாம் தமிழுக்கு ரொம்பப் புதுசு. இந்தத் தேடல் எப்படி உருவாச்சு?''

''ஒரு கதை தோணும்போதே, அது தொடர்பா நடந்த நிஜ சம்பவங்கள் பற்றி தேடிப் படிக்கிறதுண்டு. டி.என்.ஏ-வை வெச்சு படம் பண்ணலாம்னு முடிவானதும், தமிழ்நாட்டுல இருந்து வெளிநாட்டுக்குப் போய் ஃபேமஸானவங்க இருக்காங்களானு தேடுறப்போதான் போதி தர்மர் பற்றி தெரிய வந்தது. இந்த மாதிரியான தகவல்களைக் கதைக்குள்ள கொண்டுவர்றப்போ, படத்தோட நம்பகத்தன்மை அதிகரிக்கும்.''

''ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு கவனம் ரொம்ப முக்கியம்னு சொல்வாங்க. அப்படி இருக்குறப்போ, 'துப்பாக்கி' படம் சிறுபான்மை மக்களைப் புண்படுத்தும்னு திரைக்கதை எழுதுறப்போ உங்களுக்குத் தோணலையா?''

''என் வாழ்க்கையில் நான் அடிக்கடி நினைச்சு வருத்தப்படுற தப்பு இது. 'துப்பாக்கி' படம் பார்த்துட்டு என் இஸ்லாமிய நண்பர் ஒருத்தர், 'ஏற்கெனவே இங்கே முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாத்தான் பார்க்குறாங்க. முஸ்லிம்கள் வேற, தீவிரவாதிகள் வேறன்னு புரியவைக்க நாங்க பல வருஷமா போராடிக்கிட்டு இருக்கோம். இந்தச் சூழ்நிலையில், நீங்க இப்படி ஒரு படம் எடுத்தா, எங்க மேல இருக்குற கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போயிடுமே'னு ரொம்ப வருத்தப்பட்டுச் சொன்னார். அது என்னை ரொம்பவே காயப்படுத்துச்சு. கதை எழுதும்போது, இந்தக் கோணத்தை  நான் யோசிக்கவே இல்லை. எழுதுறப்போ, அதீத கவனம் தேவைனு அப்பதான் உணர்ந்தேன். அந்தப் படம் யாரையாவது காயப்படுத்தியிருந்தா, அவங்ககிட்ட பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கறேன். அதே மாதிரி சாப்பாடு, தூக்கம் இல்லாம உழைக்கிற எத்தனையோ மருத்துவர்கள் இருக்காங்க. அவங்களை, 'ரமணா' படத்துல வர்ற காட்சி புண்படுத்தியிருந்தா, அதுக்கும் மன்னிப்பு கேட்டுக்கறேன்'' என்றார் முருகதாஸ். 

அடுத்த கட்டுரைக்கு