Election bannerElection banner
Published:Updated:

அந்த ஒருவருக்கு தனுஷ் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்! #HBDDhanush

அந்த ஒருவருக்கு தனுஷ் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்! #HBDDhanush
அந்த ஒருவருக்கு தனுஷ் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்! #HBDDhanush

அந்த ஒருவருக்கு தனுஷ் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்! #HBDDhanush

2002, தமிழ் சினிமா எப்போதும்போல அந்த வருடமும் காலில் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. டாப் ஸ்டார்கள் எல்லோரின் படங்களும் வெளியான ஆண்டு அது.  ரஜினியின் பாபா, கமலின் 'பஞ்சதந்திரம்', விஜயகாந்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான 'ரமணா', மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்', விஜய்யின் 'பகவதி', அஜித்தின் 'வில்லன்', விக்ரமின் 'ஜெமினி', லிங்குசாமி இயக்கிய 'ரன்' என வெளியான முக்கால்வாசி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தன. அதே 2002ன் மே மாதம் 'துள்ளுவதோ இளமை' என்ற படமும் வெளியாகிறது. அந்தப் படத்தைப் பற்றி மக்களுக்கு தெரிந்திருந்த இரண்டே விஷயம் கஸ்தூரி ராஜா இயக்கியிருக்கும் படம், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, விஜயகுமார் தவிர பலரும் படத்தில் புதுமுகங்கள். அதில் ஒருவர் தனுஷ். அன்று அந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு, 'நல்லா நடிச்சிருக்காப்லயே',  'இவனெல்லாம் எதுக்கு நடிக்க வந்தான்' என மன ஓட்டம் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், மிரட்டலான நடிப்பால் அசத்தப் போகும், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லைகள் தாண்டி ஆடப்போகும் ஒருவரின் அறிமுகத்துக்கு நாம்தான் ஐ-விட்னஸ் என அவர்கள் இப்போது பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அன்று தனுஷே போய் ஆடியன்ஸ் கையில் டிக்கெட்டைக் கொடுத்து "நான் பின்னால பெரிய நடிகனா வரப் போறேன். என்னோட முதல் படத்தை வந்து பாருங்க" என சத்தியம் செய்து அழைத்திருந்தாலும் யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதைச் சொல்லாமலே செய்துகாட்டி இன்னும் இன்னும் ஆச்சர்யங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தனுஷின் பிறந்தநாள் இன்று.

எல்லா நடிகர்களுக்கும் இப்படியான பயணம் அமையுமா அல்லது அமைத்துக் கொள்வார்களா என்பது தெரியாது. ஆனால், தனுஷ் தனக்கான பாதையை தன் திறமையை வைத்து வடிவமைத்துக் கொண்டவர். நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக என தனுஷுக்கு சினிமாவுக்குள்ளேயே வேறு வேறு முகங்கள். 

எல்லைகளற்ற நடிகன்

முதல் படமான 'துள்ளுவதோ இளமை' ரிலீஸான சமயத்தில், பி-கிரேடு படம் என்ற தோற்றத்திலேயே உருவகப்படுத்தப்பட்டது. அதனாலேயே படத்தில் தனுஷின் நடிப்பு எப்படி என படம் பார்த்தவர்கள் கவனித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒருவேளை, கவனித்திருந்தாலும் பல இடங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கும். பிறகு எப்போதுதான் தனுஷ் தன்னை ஒரு செம்மையான நடிகராக மாற்றிக் கொண்டார்? சட்டென ஒரு படத்தில் அது நடக்கவில்லை. 'காதல் கொண்டேன்’- படத்தில் சோனியா அகர்வாலிடம் 'நா இதோ இந்த மூலைல ஒரு நாய் மாதிரி இருந்துக்குறேன்' என சொல்லும் போது கொஞ்சம், 'அது ஒரு கனா காலம்' படத்தில் ப்ரியாமணி தனுஷைப் பார்க்க வரும் சிறைக் காட்சியின் போது கொஞ்சம், 'புதுப்பேட்டை' படத்தில் தன் குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு குழந்தையுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் எனப் படத்துக்குப் படம் தன் நடிப்பை மெருகூட்டிக் கொண்டே இருந்தார்.

ஏறக்குறைய 'புதுப்பேட்டை'யில் முழுமையாகவே நடிப்பு என்பது என்ன மாதிரி ப்ராசஸ் என்பதைப் புரிந்துகொண்டிருந்தார். ஆனால் அந்தப் புரிதலை பரிசோதித்துப் பார்க்க 'பொல்லாதவன்' வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பொல்லாதவனில் அந்த ஹாஸ்பிடல் காட்சியின் போது டேனியல் பாலாஜியிடம் 'போட்றா... போடு' என தனுஷ் சொல்லும் காட்சியில் புரிந்துகொள்ளமுடியும் அவர் முழுமையான நடிகனாக மாறிவிட்டதை. அதே போல 'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவைக் கட்டிப் பிடித்துவிட்டு, சட்டென விலக்கிவிட்டு காட்டும் உணர்வுகள், ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனிடம் "டேய், நீஞ் செய்யிறது எனக்குப் புடிக்கல, செத்துப் போயிர்றானு சொல்லியிருந்தா நானே செத்திருப்பேனேண்ணே" எனப் பேசும் காட்சி, 'மயக்கம் என்ன', '3' படங்களில் கோபத்தைக் காட்டும் பல காட்சிகள் என நிறைய நிறைய நடிகனாக வளர்ந்து கொண்டேதான் இருந்தார்.

இதுவரை சொன்னதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்குநர் கௌதம் மேனன். அவர் இயக்கத்தில் நடித்திருக்கும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'வில் தனுஷின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கலாம். ஹரி பட சூர்யாவுக்கும் கௌதம் பட சூர்யாவுக்கும் உள்ள வித்தியாசம்தான். தனுஷின் ஹாலிவுட் படத்திற்கும் அந்த மாதிரி ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு. அதற்குச் சரிசமமான எதிர்பார்ப்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகும் 'வடசென்னை' ட்ரையாலஜிக்கும், செல்வராகவனின் இயக்கத்தில் எப்போதாவது நடிக்கப் போகும் படத்துக்கும் உண்டு. வெற்றியும், செல்வாவும் மாறி மாறி தனுஷின் நடிப்பு பசிக்கு தீனி போடுபவர்கள். அந்த தீனி  தனுஷ் தனக்கான நடிப்பு எல்லைகளை மீண்டும் மீண்டும் விஸ்தாரமாக்கிக்கொள்ள உதவும் எரிபொருள் போன்றது. ‛இவ்வளவுதான்யா! இனி, இதைத் தாண்டி தனுஷ் நடிச்சிடப் போறதில்ல’ என்பதை எப்போதும் முடிவு செய்துவிட முடியாது. 

எளிமையான பாடகன்

முன்பு ஒரு பேட்டியின் போது "எவன்டி உன்னப் பெத்தான்" பாட்டுக்கு பயங்கர ரீச் இருக்கே எனக் கேட்டபோது, "அதெல்லாம் ட்ரெண்டுக்காகப் போடுறதுங்க, காலத்துக்கும் நிக்காது" என சொல்லியிருப்பார் யுவன். அதே கேட்டகரிதான், "நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு" பாடலும். அதைப் பாடியதால் தனுஷ் எனும் மகத்தான பாடகர் கிடைத்துவிட்டார் என்று புகழ்வதாக அர்த்தம் இல்லை. ஏழு வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கிய 'மயக்கம் என்ன' படத்தில் பாடுகிறார் தனுஷ். மறுபடி '3' படத்தில் பாடுகிறார், 'எதிர்நீச்சல்' படத்தில் பாடுகிறார்,  'வேலையில்லா பட்டதாரி', 'அநேகன்', 'மாரி' என தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கிறார். எந்தப் பாடலும் கேட்பவர்களுக்கு எரிச்சலூட்டவில்லை. இதெல்லாம் ஒரு பாட்டா என இசை ஞானத்தையும் காட்டவில்லை. அதற்கு பதிலாக அந்தப் பாடலை ஜாலியாக முணுமுணுத்துப் பார்க்கிறார்கள். அந்தப் பாடலை யாராலும் பாட முடிகிறது. தனுஷின் குரல் சம்திங் ஸ்பெஷல், கடவுளின் வரம், புரொஃபஷனல் என்பதை எல்லாம் தாண்டி, அந்தக் குரல் மிகவும் எளிமையானது. தங்களால் தனுஷ் பாடிய ஒரு பாடலை, அதே போல ரசித்து, ஏற்ற இறக்கத்துடன் பாட முடிகிறது என்பது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இது அவர் பாடும் பாடல்களின் ரீச்சுக்கும் பெரிதாக உதவியது. தமிழில் மட்டுமல்ல, கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'வஜ்ரகயா' படத்தில் பாட தனுஷுக்கு அழைப்பு வந்தது.

அந்தப் பாடல் பெரிய ஹிட்டும் ஆனது. காரணம் அந்த எளிமையான குரலாக, எல்லோரிடமிருந்தும் வெளிப்படக் கூடிய குரலாக இருந்தது. தனுஷ் மிகச் சிறந்த பாடகர் என்பதை நிரூபிப்பதற்காக இதை எழுதவில்லை. எந்த மீடியத்தின் மூலம் எல்லாம் என்டர்டெய்ன்மென்ட் செய்யலாம், அதை எவ்வளவு எளிமையாக வழங்கலாம் என தனுஷ் யோசித்ததை மட்டுமே சொல்ல நினைக்கிறேன். இப்போது கொண்டாட்டமோ, காதலோ, சோகமோ, காதல் தோல்வியோ, அம்மாவோ, சச்சினோ எல்லாவற்றுக்கும் தனுஷின் குரலில் ஒரு பாடல் இருக்கிறது. 

வேற மாறி பாடலாசிரியர்

பாடகராக அறிமுகமானதற்கு ஏழு வருடம் கழித்து தனுஷ் மீண்டும் பாடகராக மட்டும் வரவில்லை. பாடலாசிரியராகவும் வந்தார். 'மயக்கம் என்ன' படத்தில் இவர் எழுதிய ‛பிறை தேடும் இரவிலே’ பாடலில் இடம்பெற்ற வரிகள் சம்திங் ஸ்பெஷல். பாடல்களுக்கு என இருந்த க்ளிஷேவான வார்த்தைகளைக் கலைத்துப் போட்டு, தனுஷ் எழுதும் பாடலுக்கான முதல் வரி சுவாரஸ்யமானது. "நிஜமெல்லாம் மறந்துபோச்சே பெண்ணே உன்னாலே", "டெட்டி பியர கட்டி உறங்கிடும்", "ஊதுங்கடா சங்கு". '3' படத்தின் கொலவெறிடி ஹிட். ஸ்பெஷலான ஒன்றா என்றால் கண்டிப்பாக, ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மூலம் தனுஷ் மீது பாய்ந்த வெளிச்சம் பெரிது. தனுஷ் எனும் கலைஞனை இப்படி ஒரு பாடல் வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்று நிறுத்தும் என்றால் அது ஸ்பெஷலான பாடல்தானே.

ரஹ்மான் இசையில் தனுஷ் எழுதிய 'கொம்பன் சுறா', வேலை இல்லா பட்டதாரியில் 'போ இன்று நீயாக', 'பவர் பாண்டி'யில் 'வெண்பனி மலரே' போன்ற பாடல்கள் ஒரு நடிகரிடமிருந்து வெளிப்படுவது எக்ஸ்ட்ராடினரி வகையைச் சேர்ந்தது. இது தனுஷை சிறந்த பாடலாசிரியராக நிரூபிக்க  வேண்டி சொல்லப்பட்டவை அல்ல. இறுதியில் ஒரு பாடலோ, அதன் வரிகளோ உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை தனுஷ் எழுதும் பாடல்களும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. கொண்டாட்டமோ, சோகமோ ஏதோ ஓர் உணர்வை மற்றவருக்கும் கடத்துவதுதான் கலையின் வேலை. தனுஷ் எழுதும் பாடல்கள் அதைச் செய்கின்றன என்பதற்கான சின்ன நோட்டிஃபிகேஷனே இது.

தரமான தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் தனுஷ் குறித்துப் பார்க்கும் முன், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு பின்னால் உள்ள சின்ன ஃப்ளாஷ் பேக்கைப் பற்றிப் பார்ப்போம். "'இன்க்ளோரியர்ஸ் பாஸ்டர்ட்ஸ்'னு ஒரு ஜெர்மன் படம். அதை நானும், அனிருத்தும் பார்த்தோம். அதில் அடிக்கடி வுண்டர்பார், வுண்டர்பார்னு ஒரு வார்த்தையை யூஸ் பண்ணாங்க. என்னடா அது வுண்டர்பார்னு பார்த்தா அதுக்கு 'வொண்டர்ஃபுல்'னு  அர்த்தம்னு புரிஞ்சது. அந்தப் பெயரைத்தான் எங்களோட தயாரிப்பு நிறுவனத்துக்கு வெச்சோம்" இப்படித்தான் ஆரம்பித்தது தனுஷின் வுண்டர்பார். அதற்கு அர்த்தம் ஏன் தேடினார்கள் என்பதை அடுத்த பாராவில் பார்க்கலாம். இப்போது தயாரிப்பாளர் தனுஷுக்கு வரலாம். மனைவி ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தை தன்னுடைய ‛வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விநியோகம் செய்து ஆஃப் ஸ்க்ரீன் வேலைகளுக்குள் இறங்கினார் தனுஷ். தயாரிப்பாளராக அவர் அறிமுகம் செய்து வைத்தவர்கள் ஏராளம். 'மெரீனா' மூலமே அறிமுகமானாலும் தனி ஹீரோவாக சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியது தயாரிப்பாளர் தனுஷ்தான். அனிருத்தை இசையமைப்பாளராக நன்கு பரிச்சயப்படுத்தியதும் தனுஷ் தயாரித்த படங்கள்தான். 'காக்கா முட்டை' போன்ற எளிமையான படமோ, 'காலா' போன்ற பிரமாண்டப் படமோ எதுவாக இருந்தாலும் அதை எந்த உயரத்துக்கும் எடுத்துச் செல்வதில் தனுஷ் காட்டிய, காட்டிக் கொண்டிருக்கும் ஆர்வம் மிகப் பெரியது. தமிழ் போலவே இப்போது இரண்டு மலையாளப் படங்களைத் தயாரிக்க இருக்கிறார். இன்னும் பல தரமான கதைகளையும், இயக்குநர்களையும், நடிகர்களையும் வுண்டர்பார் வெளிக் கொண்டு வரும் என்பது உறுதி.

ஹீரோ இப்போ டைரக்டர் ஆனேன்

"எனக்கு அப்போ டைரக்‌ஷன் மேல ரொம்ப ஆசை. அதனால சின்ன வீடியோ கேமரா ஒண்ணை எடுத்துக்கிட்டு அனிருத், எங்க வீட்ல இருக்கவங்கன்னு எல்லாரையும் நடிக்க வெச்சு குறும்படம் எடுப்பேன். சில படங்கள்ல நானே ஹீரோவா நடிப்பேன். அத நானே எடிட்டும் பண்ணுவேன். அனிருத் மியூசிக் பண்ணுவார். அப்படி ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணும் போது, ஆக்சுவலா அதைப் பார்க்கறதுக்கு ஆளே கிடையாது. ஆனா, இதை ஒரு பேனர் பேர் வெச்சு ரிலீஸ் பண்ணா நல்லாயிருக்கும்னு அனிருத் ஃபீல் பண்ணாப்ல. அப்போ எங்களுக்கு அந்த வுண்டர்பார் வார்த்தை  ஞாபகம் வந்தது. கடைசில அதையே பேரா வெச்சு ரிலீஸ் பண்ணி நாங்களே பாத்துகிட்டோம்" இதுதான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடியதன் காரணம். இப்படி ஆரம்பித்தது தனுஷின் இயக்குநர் பயணம். தனக்குள் இருந்த இயக்குநர் ஆசையைப் பல இடங்களில் பதிவு செய்திருந்த தனுஷ் அதை செய்ய மட்டும் நிறையவே நேரம் எடுத்துக் கொண்டார். ஷூட்டிங் இடைவேளை நேரங்களில் எழுதுவது தனுஷின் பழக்கம். அப்படி எழுதத் துவங்கியதுதான் 'பவர் பாண்டி'யும். தனுஷ் படம் இயக்கப் போகிறார் என்றதும் பலருக்கும் அது ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கலாம், இவர் என்ன செய்துவிடப் போகிறார் என்றும் தோன்றியிருக்கலாம். ஆனால், இயக்குநராகவும் தரமான படத்தையே அளித்திருந்தார் தனுஷ். இப்போது 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் மூலம் கதாசிரியராகவும் களம் இறங்கியிருக்கிறார்.

'காதல் கொண்டேன்' படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து கொண்டிருந்தது. அப்போது தனுஷிடம் வந்து ஒருவர் "ஹீரோ எவரு?" எனக் கேட்கிறார். காதல் கொண்டேனில் தனுஷின் கெட்டப்பை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். எனவே, தனுஷ் தூரத்தில் இருக்கும் ஒருவரைக் கைகாட்டி அவர்தான் ஹீரோ எனச் சொல்கிறார். பிறகு எப்படியோ தனுஷ்தான் ஹீரோ என அவருக்குத் தெரிந்துவிட விழுந்து விழுந்து சிரிக்கிறார். பக்கத்திலிருக்கும் அனைவரிடமும் 'அங்க பாத்தியா அவர்தான் ஹீரோவாம்' எனக் கைகாட்டி சிரிக்கிறார். தூரத்திலிருக்கும் ஆட்டோக்காரரைக் கை காட்டி, "வீடு ஹீரோ ஆய்த்தே நுவ்வு கூட ஹீரோனே (இவன் ஹீரோன்னா, அப்போ நீ கூட ஹீரோதான்)" என ஏளனம் செய்கிறார். இன்றைய தனுஷின் இந்த வெற்றிக்கு அந்த ஆந்திராக்காரரின் சிரிப்பு கூட ஒரு காரணம்தான். ஆனால், அந்த ஒருவருக்கு தனுஷ் ஒரு நடிகனாக பலவருடங்கள் முன்பே பதில் சொல்லிவிட்டார் என்பதே தனுஷின் மிகப் பெரிய வெற்றி. தமிழில், இந்தியில் என இன்னும் அந்த பதிலைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார், சீக்கிரமே ஆங்கிலத்திலும் சொல்ல இருக்கிறார்.

ஹேப்பி பர்த் டே தனுஷ்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு