Published:Updated:

திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த ‘அருவி’ படத்தின் அந்த ஒரு விசேஷம்!

திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த ‘அருவி’ படத்தின் அந்த ஒரு விசேஷம்!
திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த ‘அருவி’ படத்தின் அந்த ஒரு விசேஷம்!

டெல்லியில் நடைபெற்ற திரைப்படவிழா, சீனாவின் ஷாங்காய் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று கவனம் பெற்றிருக்கிறது, 'அருவி' திரைப்படம். சமூகப் பிரச்னைகளை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் களத்தோடு உருவாகியிருக்கும் இப்படம் குறித்துப் பேசுகிறார், புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். 

''ஹீரோயினை மையப்படுத்திய கதைக்கு புதுமுகம் அதிதி பாலன் எப்படி செட் ஆகியிருக்காங்க?"

'' 'பராசக்தி', 'சேது', 'பருத்திவீரன்' மாதிரி ஃபெர்பாமென்ஸ் பண்ற வாய்ப்பு இருக்கிற கதை இது. தவிர, புதுமுகங்கள் இருந்தாதான், இந்தக் கதைக்கும் நம்பகத்தன்மை இருக்கும்னு நினைச்சேன். கதை எழுதும்போதே, இந்தக் கேரக்டருக்கு நாம சிரமப்படவேண்டி இருக்கும்னு தெரியும். நிறைய பேரைப் பார்த்தோம். வடிகட்டுனோம். ஐநூறுக்கும் அதிகமானவங்களைக் கடந்து, அதிதி பாலன் இந்தக் கேரக்டருக்குள்ள வந்திருக்காங்க. சட்டம் படிச்சவங்க. நல்ல நடிகையாவும் வருவாங்க. நடிச்சோம் போனோம்னு இல்லாம, இந்தக் கதைக்காக நாங்க சொன்ன பல மனிதர்களைச் சந்திச்சு நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டாங்க.''

''மாற்று சினிமானு சொல்லிட்டீங்க. இந்தப் படம் சமூகத்துக்கு ஏன் தேவை?"

''இந்தக் கதையை ஒரு புள்ளியை மட்டுமே மையமா வெச்சு எழுதலை. 2013ல் எந்த விஷயத்தைப் பத்தி மக்கள் அதிகமா பேசிக்கிட்டு இருந்தாங்களோ, அதைத்தான் படமா எடுத்திருக்கேன். தவிர, அதைக் கதையா எழுதலை. அந்தப் பிரச்னைக்குப் பின்னாடியே டிராவல் பண்ணேன். அந்தப் பயணத்தோட முடிவுல எனக்கு ஒரு உண்மை கிடைச்சது. அந்த உண்மைக்கு வலிமை அதிகம்னு நினைச்சேன். நம்மளைச் சுத்தி நடந்ததை இந்தப் படம் மூலமா பிரதிபலிக்கிறேன். 'பராசக்தி' அண்ணன் - தங்கச்சி கதை, 'ரத்தக்கண்ணீர்' பணம் படைத்த ஒரு சுகவாசியோட கதை. ஆனா, திரைக்கதைகளில் ரெண்டு படங்களுமே முன்வெச்ச விஷயங்கள் வேற வேற. 'அருவி'யும் அப்படித்தான். அருவிக்கு நல்லவன், கெட்டவன், பணக்காரன், ஏழை பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோர்மீதும் கொட்டிக்கிட்டே இருக்கும். சந்தோஷமா நாம நனையலாம். அதுமாதிரி, பார்க்கிற பழகுற எல்லோர்கிட்டேயும் அன்பை மட்டுமே கொட்டுற ஒரு பெண், அவங்களைச் சுத்தி நடக்குற பிரச்னைகள்தான் கதை.''

''கே.எஸ்.ரவிக்குமார் ஒரு கமர்ஷியல் இயக்குநர். அவர்கிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள், உங்க மேக்கிங்கிற்கு எப்படிப் பயன்பட்டது?"

''சினிமா ஒரு பொதுமொழி. ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி புரிஞ்சுக்கிட்டுப் படம் பண்ணலாம். ஆனா, பிஸ்னஸ் பண்றதுக்கான தகுதிகளையெல்லாம் நான் கே.எஸ்.ரவிக்குமார் சார்கிட்டதான் வளர்த்துக்கிட்டேன். தொழில் பக்தியை அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். தயாரிப்பாளருக்கு எப்படி நேர்மையா இருக்கணும்ங்கிறதுக்கு அவர்தான் உதாரணம். 'மன்மதன் அம்பு', 'கோச்சடையான்', 'சாமி'யோட ஹிந்தி ரிமேக்னு அவரோட நான் வேலை பார்த்த படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட். ஷூட்டிங்ல அவரைப் பார்க்கும்போது, 'அப்டேட் பசங்கனு சொல்லிக்கிட்டு நாம ரொம்பத்தான் லூட்டி அடிக்கிறோமோ?'னு தோணும். ஏன்னா, கே.எஸ்.ரவிக்குமார் சாரோட டெடிகேஷன் அப்படி இருக்கும்!''

''படம் பார்த்தவங்க என்ன சொன்னாங்க?"

''ஷாங்காய் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவெல்ல இந்தியா சார்பாக கலந்துக்கிட்ட திரைப்படம் இது. தவிர, மும்பை, பஞ்சாப், டெல்லி, கேரளானு பல திரைப்பட விழாக்களில் ஸ்கிரீனிங் ஆகியிருக்கு. படம் பார்த்த எல்லாத் தரப்பு ஆடியன்ஸுக்கும் நான் சொல்ல வர்ற விஷயம் புரியுது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தை அவருடைய குழந்தைவும், என்னை குழந்தையைச் சுமக்கிற புள்ளத்தாச்சியாவும் கவனிச்சுக்கிட்டு இருக்கார். ஃபெஸ்டிவெல் ரவுண்டுக்குப் போயிட்டு வந்ததும், இங்கே ரிலீஸ் ஆகும்.''

பின் செல்ல