Published:Updated:

சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்! உஷார் பெண்களே

சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்! உஷார் பெண்களே
சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்! உஷார் பெண்களே

சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்! உஷார் பெண்களே

சினிமாவின் மீது மக்களுக்கு எப்போதும் பெரும் மோகம் உண்டு. குறுகிய காலத்தில் ஒரே நேரத்தில் பேரும்புகழும் கிடைப்பதால் சினிமாவில் நடிக்க பலரும் ஆசைப்படுவது உண்டு. அப்படி நடிக்கும் ஆசையில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறுவது காலம் காலமாக நடப்பது உண்டு. அப்படி வந்தவர்களில் சிலர் அதிர்ஷடத்தினால் பெரிய நடிகையாவது உண்டு. பலர் சில மோசடிக்காரர்களிடம் சிக்க வழிதவறிச்சென்று வாழ்க்கையைப் பறிகொடுத்து நிற்பதும் உண்டு. 

எம்.ஜி.ஆர் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒருசமயம், ஒருநாள் அவரது தி.நகர் இல்லத்தில் 3 சிறுமிகள் அவரைக் காணவந்தனர். உதவியாளர்கள் விசாரித்ததில் தாங்கள் சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதற்காக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் எம்.ஜி.ஆரைப் பார்த்துவாய்ப்பு கேட்க வந்துள்ளதாகவும் சொன்னார்கள். படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆருக்குத் தகவல் போனபோது எம்.ஜி.ஆர்,“ அவர்களை வெளியே அனுப்பாதீர்கள். அங்கேயே இருக்கச்செய்யுங்கள் வருகிறேன்” என்றதோடு மதிய உணவு இடைவேளையில் அங்கு வந்தார்.

அந்தப் பெண்களிடம் பேசியபோது அவர்கள் சொன்னது உண்மை என்று எம்.ஜி.ஆருக்குப் புரிந்தது. அதேசமயம் வாய்ப்பு கிடைக்காமல் தாங்கள் திரும்ப ஊருக்குப் போவதில்லை என அவர்கள் உறுதியாக இருப்பதும் தெரிந்தது. சகஜமாகப் பேசி அவர்களின் ஊர், பெயர் மற்ற விவரங்களைப்பெற்ற எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தன் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி சகஜமாக்கி உணவருந்தச் செய்தார். அவர்களிடம் அன்பாகப் பேசுவதுபோல் பேசிவிட்டு வெளியேறியவர், தன் உதவியாளரிடம் சொல்லி அவர்கள் இருந்த அறையைப் பூட்டிவிடச் சொல்லிவிட்டு, உதவியாளர் மூலம் அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்து வரச்சொன்னார்.

மதுரையிலிருந்து அந்த பெற்றோர் வரும்வரை அவர்களை வெளியே விடவில்லை. பெற்றோர்கள் வந்ததும் அவர்களைக் கடிந்துகொண்ட எம்.ஜி.ஆர், “நல்லவேளை என்னிடம் உங்கள் பெண்கள் வந்தார்கள். தவறான நபர்களிடம் அவர்கள் சிக்கியிருந்தால் அவர்களின் எதிர்காலம் வீணாகியிருக்கும். ஜாக்கிரதை. இனிப் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க முயலுங்கள்” என அறிவுரை சொல்லி அனுப்பினார். 

ஆனாலும் சினிமா உலகில் இன்னமும் சினிமாவில் நடிக்கவைப்பதாகக்கூறி பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடும் ஒரு கும்பல் இருந்துகொண்டுதான் உள்ளது. 

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சினிமா ஒளிப்பதிவாளர் ஒருவர் மருத்துவரான இளம்பெண் ஒருவரையே சினிமாவில் வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு பரபரப்பாகியுள்ளது. ஜின்சன் லோனப்பன் என்ற அவர் மலையாளத் திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஜான்சி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்தபோது ஒரு படப்பிடிப்பில் இருந்த ஜின்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. ஜான்சிக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை அறிந்துகொண்ட ஜின்சன், பல நடிகர்கள் இயக்குநர்களுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்களைக் காட்டி அவர்களிடம் சொல்லி ஜான்சிக்கு வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. அதேசமயம், ஜான்சியைத் தன் வலையில் விழ வைக்க தனக்கு அமானுஷ்ய விஷயங்கள் அத்துப்படி என அவரிடம் கதைவிட்ட ஜின்சன், ஜான்சியைப்பற்றி அவரது வீட்டு வேலையாள் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு அதை ஜான்சியிடம் தன் மந்திரசக்தியில் இந்த தகவல்களைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லி அசத்தினார். இதை நம்பி ஜின்சனுடன் நெருக்கமானார் ஜான்சி. 

ஜான்சியின் சினிமா ஆசையைப் பயன்படுத்தி அவரிடம் பலமுறை லட்சக்கணக்கான ரூபாயையும் ஜின்சன் பெற்றதாகத் தெரிகிறது. நட்பின் உச்சகட்டமாக, தந்திரமாகப் பேசி பலமுறை ஜான்சியை பாலியல் ரீதியாகவும் ஜின்சன், பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று ஜான்சியை நம்பவைத்த ஜின்சன், 'சினிமாவில் நீ புகழ்பெற்றபின் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” எனக்கூறி பலமுறை ஜான்சியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. நடிப்பு ஆசைகாட்டி ஜான்சியிடமிருந்து  அடிக்கடி பணம் பெற்றதாகத் தெரிகிறது.

ஜின்சனின் வேடம் கலையும் நாள் வந்தது. ஒருமுறை ஜான்சியின் வீட்டிற்கு வந்த அவர் மறதியாக தனது செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டுப்போய்விட்டார். அப்போதுதான், ஜின்சனின் மனைவி போனில் பேச ஜின்சனின் மோசடி அனைத்தும் தெரியவந்து அதிர்ச்சியடைந்தார் ஜான்சி. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜான்சி, உடனடியாக இதுகுறித்து எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜின்சன் லோனப்பன் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் , ரூ.33 லட்சம் ரூபாயை ஏமாற்றி பறித்துக்கொண்டதாகவும் புகாரில் தெரிவித்தார். 

உடனடியாக ஜின்சனின் சொந்த ஊரான கொடுங்கல்லுாருக்குச் சென்ற போலீஸார் அவரைக் கொத்தாகப் பிடித்து கைது செய்தனர். இப்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் ஜின்சன்.

நடிப்பு ஆசைக்காக தன் வாழ்வை இழந்துவிட்டு நிற்கும் ஜான்சிகளைப் பாடமாகக் கொண்டு விழிப்படையவேண்டும் பெண்கள்..!

அடுத்த கட்டுரைக்கு