Published:Updated:

நிவின்பாலி நடிக்கவிருக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' இவர்தான்! #KayamkulamKochunni

நிவின்பாலி நடிக்கவிருக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' இவர்தான்! #KayamkulamKochunni
நிவின்பாலி நடிக்கவிருக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' இவர்தான்! #KayamkulamKochunni

நிவின்பாலி நடிக்கவிருக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' இவர்தான்! #KayamkulamKochunni

திகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்ளைக்காரராகவும், ஏழை எளிய மக்கள் மனதில் கதாநாயகனாகவும் படர்ந்து வளர்ந்த கொச்சுண்ணி, பணக்காரர்களிடம் கொள்ளையடித்த பணத்தை ஏழைகளுக்குச் செலவு செய்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றுதான் நிவின்பாலி நடிக்கவிருக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' என்ற புதிய படம். யார் இந்தக் கொச்சுண்ணி? 

ஆங்கில நாட்டுப்புறக் கதைகளின் நாயகன் 'ராபின்ஹூட்' என்றால், கேரள நாட்டுப்புறக் கதைகளுக்கு கொச்சுண்ணிதான் முதல் ஹீரோ. கொச்சுண்ணியின் முழுமையான வரலாறு கச்சிதமாகப் பதிவு செய்யப்படவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம் ஆழப்புழாவில் பிறந்தவர் கொச்சுண்ணி. பிறந்த ஊர் காயங்குளம் என்பதால், 'காயங்குளம் கொச்சுண்ணி' ஆனார். ராபின்ஹூட் நாயகர்கள், சந்தனக் கடத்தல் வீரப்பன், திருடன் மணியம்பிள்ளை... என பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் அதே அறிமுகம்தான் கொச்சுண்ணிக்கும்... அரசாங்கம் அல்லது சட்டத்தின் பார்வையில் எப்படியோ, ஏழைகளுக்கு நல்லவர்!

ஏழ்மையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் கொச்சுண்ணி. குடும்பத்தில் நிலவிய கடுமையான வறுமை, கொச்சுண்ணியின் அப்பாவைத் திருடன் ஆக்கியது. கொச்சுண்ணிக்குப் பள்ளிக்கூடம் பக்கமாக எட்டிப்பார்க்க முடியாத நிலையைக் கொடுத்தது. நண்பர் ஒருவருடைய உதவியால், தனது 10 வயதில் எவ்வூர் என்ற ஊரில் இருந்த மளிகைக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார். கிடைக்கும் வருமானம் தனக்கும், கொஞ்சமாக குடும்பத்திற்கும் அனுப்பி வைக்கிறார். கடுமையான உழைப்பாளியான கொச்சுண்ணியை கடை முதலாளிக்குப் பிடிக்கும். மழை வெள்ளச் சூழல் ஒன்றில் தன்னைக் காப்பாற்றிய பிறகு, முதலாளிக்கு கொச்சுண்ணியை ரொம்பவே பிடித்துப் போனது. சம்பளத்தை உயர்த்தி சந்தோஷப்படுத்துகிறார். 

இந்தச் சூழலில்தான், களரி கற்றுக்கொடுக்கும் ஒருவர் தன் மாணவர்களுக்குப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கும் காட்சிகளைப் பார்க்கிறார், கொச்சுண்ணி. தனக்கும் அதன்மீது ஆர்வம் வர, களரி ஆசிரியரிடம் முறையிட்டார். அவனுடைய அப்பா ஒரு திருடர் என்பதை அறிந்த களரி ஆசிரியர், 'இவனுக்குக் களரி கற்றுக்கொடுத்தால், களரியைத் திருட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்' என நினைத்து, மறுத்துவிட்டார். அவர் சொல்லிக்கொடுக்கலைனா என்ன... நாமே சுயமாக களரி கற்றுக்கொள்ளலாம் எனக் கிளம்பிய கொச்சுண்ணி, ஆசிரியர் கற்றுக்கொடுக்கும் வித்தைகளை ஒளிந்துகொண்டு பார்த்து, இரவு நேரங்களில் பயிற்சி எடுத்தார். கொச்சுண்ணியின் இந்த ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர், பிறகு அவரையும் களரி வகுப்பில் சேர்த்துக்கொண்டு, முறையான பயிற்சிகளை வழங்கினார். அப்புறமென்ன? 

இப்படிக் கதை நல்லாப் போகும்போதுதானே விதி வந்து விளையாடும். கொச்சுண்ணியின் வாழ்க்கையில் விதியின் விளையாட்டு ஒரு 'வெல்லக்கட்டி' வடிவில் வந்தது. பூசாரி ஒருவர், கொச்சுண்ணி வேலை பார்த்த கடைக்கு வந்து சாமிக்குப் பூஜை செய்ய அவசரமாக வெல்லம் வேண்டும் எனக் கேட்க, அந்த நேரத்தில் கடையில் வெல்லம் இல்லை. சட்டென முதலாளியின் வீட்டிற்குச் சென்றார் கொச்சுண்ணி. முதலாளியின் வீட்டுப் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த சூழல் அது. அவர்களைத் தொந்தரவு செய்யவேண்டாம் என நினைத்த கொச்சுண்ணி, வீட்டிற்குள் ஏறிக் குதித்து வெல்லக் கட்டியை எடுத்து வந்தார். முதலாளி பார்த்தார். சூழலைத் தவறாகப் புரிந்துகொண்டவர், கொச்சுண்ணியை கடையில் இருந்து வெளியேறச் சொன்னார். 

'கல்யாணம் பண்ணிவெச்சா சரியாகிடும்'னு அந்தக் காலத்திலேயும் யாராவது சொன்னார்களோ என்னவோ, 20 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார் கொச்சுண்ணி. வறுமை மேலும் போட்டு உலுக்கியது. நேர்மையாக இருந்து என்ன புண்ணியம்? என எல்லா நெகட்டிவ் ஹீரோக்களுக்கும் தோன்றும் லாஜிக் கொச்சுண்ணிக்கும் தோன்றவே, அப்பாவின் வேலை மகனுக்கு தொற்றிக்கொண்டது.

களரி கற்றுக்கொடுத்த ஆசிரியர் பயந்தது நிஜமானது. கற்ற களரியைத் திருட்டும்போது தற்காப்புக்காகப் பயன்படுத்திக்கொண்டார். பெரும் செல்வந்தர்களின் வீடுகளில் மட்டுமே திருடினார். திருடிய பணம் மற்றும் பொருட்களை ஏழைகளுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார். திருடச் சென்று திரும்பும் வழிகளில் உள்ள கோவில்களுக்குக் காணிக்கை வழங்கினார், பூஜைப் பொருட்களை வாங்கிக்கொடுத்தார், மருத்துவம், திருமணம், கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்கு  உதவினார். சுருக்கமாக, திருவாங்கூரின் ஃபேமஸான திருடனாக, ஏழைகளின் நாயகனாக வலம் வந்தார் கொச்சுண்ணி.

அதிகாரம் விடுமா? கொச்சுண்ணியைப் பிடிக்க, திருவாங்கூர் திவான் உத்தரவிட்டார். அவரைப் பிடிக்கச் சென்ற படை, தோல்வியோடு திரும்பியது. இன்னும் சிலர் முயற்சித்தார்கள், அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. கொச்சுண்ணியைப் பிடிக்க நம் படைகளால் முடியாது என நினைத்த சமஸ்தானம், கொச்சுண்ணியின் நெருங்கிய நண்பர்கள் மூலம் அவரை நெருங்க சதிவலை பின்னியதாகச் சொல்கிறது வரலாறு. பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு மாதவரேயர் என்பவர் திருவாங்கூர் திவானாக இருந்த சமயத்தில் கொச்சுண்ணியின் நண்பர்கள் மற்றும் சிலரது உதவியோடு கைது செய்யப்பட்டாராம் கொச்சுண்ணி. திருவனந்தபுரம் பூஜரா சிறையில் அடைக்கப்பட்டவர், தனது 40 வயதில் சிறையிலேயே இறந்தார். 

காயங்குளம் கொச்சுண்ணியைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கு, கேரள மக்களுக்குப் பல காரணங்கள் இருந்தது, இருக்கிறது. மதநல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கொச்சுண்ணி. பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், ஏழைகளுக்கு உதவி செய்யும்போது பாரபட்சம் காட்டவில்லை. இந்துக் கோவில்களுக்குப் பல உதவிகள் செய்தவர், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை தொழுகை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கொச்சுண்ணி மட்டுமா? அவருடைய நினைவாக 'கொச்சுண்ணி நாடா' என்ற கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்துக் கோவிலான எடப்பரா மலாதேவர் நடா என்ற இந்துக் கோவிலுக்கு உட்புறம் கொச்சுண்ணிக்குக் கோவில் அமைந்திருப்பதுதான் இதில் உள்ள சிறப்பு. கொச்சுண்ணியை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் எனப் பாகுபாடு இல்லாமல் வணங்கி வருகிறார்கள்.

அவருடைய கோவிலில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகிறது. ஊதுபத்தி, வெற்றிலை - பாக்கு, மது, பான் மசாலா, புகையிலை... எனப் பலவகைப் பொருட்கள் படைக்கப்படுகிறது. கொச்சுண்ணி பிறந்த காயங்குளம் அருகேயுள்ள வரணப் பள்ளி என்ற இடத்தில் இருந்த கொச்சுண்ணியின் வீடு, இப்போது நினைவிடமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் காயங்குளம் கொச்சுண்ணி, கேரள மக்களின் கலாசாரத்தோடு மட்டுமல்ல, நாட்டுப்புறக் கதைகளின் நாயகனாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

எனவேதான், கொச்சுண்ணியைப் பற்றிய திரைப் பதிவுகள் தொடர்கின்றன. கொச்சுண்ணியின் வரலாற்றைத் தழுவி முதல் முதலில் 'காயங்குளம் கொச்சுண்ணி' என்ற மலையாள சினிமா 1966-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. 'காயங்குளம் கொச்சுண்ணியுடே மகன்' என்ற திரைப்படம் 1976-ஆம் ஆண்டு வெளியானது. இதே இரண்டு டைட்டில்களில் சீரியல்களும் ஒளிபரப்பானது. இந்நிலையில்தான், காயங்குளம் கொச்சுண்ணியின் வரலாற்றைச் சொல்லும் முதல் திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் கடந்துவிட்டதைக் குறிக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிவின்பாலி - அமலாபால் ஜோடியாக நடிக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. '36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படத்தை இயக்குகிறார். கொச்சுண்ணியாக நடிக்க களரி பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார் நிவின்பாலி.

கொச்சுண்ணி வெல்லக்கட்டிக்காக வீட்டிற்குள் குதித்தது தொடங்கி, ஏழைகளின் நாயகனாக எழுந்தது வரை... நிவின்பாலி வடிவத்தில் காயங்குளம் கொச்சுண்ணியை ரசிக்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு