Published:Updated:

ரஜினி, அஜித், விஜய் பற்றி என்ன சொல்கிறார் காஜல் அகர்வால்?

ரஜினி, அஜித், விஜய் பற்றி என்ன சொல்கிறார் காஜல் அகர்வால்?
ரஜினி, அஜித், விஜய் பற்றி என்ன சொல்கிறார் காஜல் அகர்வால்?

ரஜினி, அஜித், விஜய் பற்றி என்ன சொல்கிறார் காஜல் அகர்வால்?

ஒரே நேரத்தில் தல, தளபதி ஜோடியாகி விவேகமாய் மெர்சல் காட்டுகிறார் காஜல் அகர்வால். தலகால் புரியாத சந்தோஷத்தில் இருந்தவரைப் பிடித்து சில அதிரிபுதிரி கேள்விகளைக் கேட்டோம்.

அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்தீங்களா?

“நான் எப்போதும் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். என்னைத் தேடி என்ன வருதோ அதை அக்செப்ட் பண்ணிப்பேன். இந்தப் படமும் அப்படித்தான். எந்தப் பிளானும் இல்லாம அமைஞ்சது.”

துப்பாக்கி, ஜில்லா, மெர்சல்.... மூணாவது முறையா விஜய்கூட நடிக்கிறீங்க... மாறியிருக்காரா?

“படத்துக்குப் படம்  அவரோட ஆக்டிங் மெருகேறிட்டே இருக்கிறதைப் பார்க்கறேன். குறிப்பா நான் அவர்கூட முதல் படம் பண்ணினதுக்கும் இப்போ மூணாவது படம் பண்றதுக்குமே அவ்வளவு வித்தியாசங்கள்... என்னமா நடிக்கிறார்னு தோணும். பெர்சனலா அவரைப் பத்தி கேட்டீங்கன்னா ஸாரி.... நான் யாரையும் அவ்வளவு நெருக்கத்துல போய் கவனிக்க மாட்டேன். ஷூட்டிங்குல பேசிக்கிறதோட சரி...”

தன்னுடைய பேச்சு எந்தவொரு கிசுகிசுவுக்கும் காரணமாகிவிடக்கூடாது என்ற கவனத்தோடு, செம உஷாராகப் பேசுகிறார் காஜல் அகர்வால்.

தமிழ்ல ஹிட் கொடுத்த பிறகும் அடிக்கடி காணாமப் போயிடுறீங்க... தெலுங்குலயும் ஹிந்தியிலயும் அப்படி என்ன ஸ்பெஷல்?

“தெலுங்குல 'லட்சுமி கல்யாணம்'தான் என்னோட அறிமுகப்படம். அப்புறம் ஹிந்தி, தமிழ் படங்கள் பண்ணியிருக்கேன். லேங்வேஜ் மட்டும்தான் வேற... மத்தபடி நான் எந்த வித்தியாசத்தையும் ஃபீல் பண்ணினதில்லை. நான் என்னிக்குமே லேங்வேஜைப் பார்த்து படங்களைக் கமிட் பண்றதில்லை. கதையும் என் கேரக்டரும்தான் முக்கியம்.”

காஜல் அகராதியில கிளாமருக்கு என்ன அர்த்தம்?

“அது தப்பா அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிற ஒரு வார்த்தை. தலையிலேருந்து கால் வரைக்கும் இழுத்து மூடின உடையிலகூட ஒருத்தரை கிளாமரா காட்ட முடியும். ஆனா உடம்பைக் காட்டறதுதான் கிளாமர்னு இங்கே தப்பான அர்த்தத்தைப் பரப்பிட்டாங்க. புடவையும் முழுக்கை ஜாக்கெட்டும் உடுத்திக்கிட்டு 60 வயசுலகூட ஒருத்தரால கிளாமரா இருக்க முடியும்னு நினைக்கிறேன்.”

ஹீரோ கூட டூயட்டுக்கு டான்ஸ் ஆடுறதுல உங்களுக்கு ஆட்சேபனை இல்லையா?

“காலங்காலமா அதைத்தானே பண்ணிட்டிருக்கேன்... அது எனக்கு தப்பா தெரியலை. சினிமா இண்டஸ்ட்ரி இப்ப ரொம்பவே மாறியிருக்கு. ஹீரோயின்களை மரத்தைச் சுத்தி ஓட விடாம, அவங்களைப் பிரதானப்படுத்தற கதைகள் வர ஆரம்பிச்சிருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு நடிகைன்னா எல்லாவிதமான கேரக்டர்ஸ்லயும் நடிக்கிற பேலன்ஸ் தெரிஞ்சிருக்கணும். நான் அப்படித்தான். சில படங்கள்ல பெர்ஃபார்மன்ஸுக்காக அக்செப்ட் பண்ணுவேன். சில படங்களை அப்படி எந்தக் கண்டிஷனும் இல்லாம அக்செப்ட் பண்ணுவேன். கிளாமராவே நடிக்கணுமா..... ஹீரோவை விரட்டிவிரட்டிக் காதலிக்கிற கேரக்டர் பண்ணணுமானு யோசிக்கிறவங்க அதையெல்லாம் செலக்ட் பண்ணாம இருக்கணும்.”

காஜல் அகர்வாலுக்கு ட்ரீம் ரோல்னு ஏதாவது இருக்கா?

“முழுக்க முழுக்க ஒரு பெண்ணை மையப்படுத்தின கதையில ஆக்ஷன் ஹீரோயினா நடிக்கணும்னு ஆசை. பவர்ஃபுல் பெண்களோட பயோபிக்ல நடிக்கணும்னு ஆசையிருக்கு.”

இன்னொரு ஹீரோயின்கூட ஸ்கிரீன் ஸ்பேஸைப் பகிர்ந்துக்கிறது பத்தி...?

“அதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நிறைய படங்கள்ல அப்படிப் பண்ணியிருக்கேன். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிற வரை எனக்கு நோ பிராப்ளம். நாம மட்டும் வாழணும்னு நினைக்காம அடுத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கற மனநிலை இருக்கிறதால எனக்கு இது ஓகே. தவிர நான் ரொம்ப ஃப்ரெண்ட்லியான பொண்ணு. யார்கூடவும் ஈஸியா நட்பாயிடுவேன்.”

உங்க படங்கள் சரியாப் போகாதபோது எப்படி ஃபீல் பண்ணுவீங்க?

“வெற்றியும் தோல்வியும் எல்லார் வாழ்க்கையிலயும் மாறி மாறித்தான் வரும். நான் என் கேரக்டர் என்னனு கேட்டுக்கிட்டுதான் கமிட் ஆகறேன்.  அதுக்காக ஹார்ட்வொர்க்  பண்றேன். அதையும் மீறி ஒரு படம் ஃப்ளாப் ஆனா.. அதுக்கு நான் மட்டுமே பொறுப்பெடுத்துக்க முடியாது. தோல்விகளை மனசுலயும் வெற்றிகளைத் தலையிலயும் ஏத்திக்கக்கூடாதுங்கிறது என் பாலிசி. ஒரு படம் ஹிட்டாகும்போது கிடைக்கிற பாராட்டுக்களை சந்தோஷமா ஏத்துக்கிறபோது, ஒரு படம் ஃப்ளாப் ஆகற போது வரும் விமர்சனங்களையும் கேட்டுக்கணும்தானே... எல்லாத்தையும் மீறி ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணியும் ஒரு படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாதபோது வருத்தமாதான் இருக்கும். என்ன செய்யறது?”

சென்னையில செட்டிலாகிற ஐடியா இருக்கா?

“சென்னை, ஹைதராபாத் ரெண்டுமே எனக்கு ரெண்டு வீடு மாதிரிதான். எங்கே வேலையிருக்கோ அங்கே இருக்கேன். சென்னையில செட்டிலாகிற ஐடியாவும் இருக்கு. சாப்பாட்டுல தொடங்கி, மக்கள் வரைக்கும் சென்னை தொடர்பான ஸ்பெஷல் நினைவுகள் எனக்கு நிறைய உண்டு.”

நம்பர் ஒன்னில் நம்பிக்கை உண்டா?

“ஹார்ட்வொர்க்ல நம்பிக்கை உண்டு. அது பலன் கொடுக்கும்ங்கிறதுல நம்பிக்கை உண்டு. மத்தபடி நம்பர் விளையாட்டுகளை நம்பறதில்லை.”

சக நடிகைகளில் நெருக்கமான தோழி யார்?

“இண்டஸ்ட்ரியில அப்படி யாரும் எனக்கு  ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. என்கூட ஸ்கூல், காலேஜில படிச்சவங்கதான் இப்பவும் எனக்கு திக் ஃப்ரெண்ட்ஸ்.”

எந்த ஹீரோகூட உங்க வேவ்லெங்க்த் சரியா ஒத்துப்போறதா நினைக்கிறீங்க?

“அப்படி ஒருத்தரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சினிமா மேல காதல் இருக்கிற யாரும் என்கூட ஜெல் ஆயிடுவாங்க. அளவுக்கதிமான ஹார்ட்வொர்க் தேவைப்படற ஃபீல்டு இது. ஆனா உழைப்புக்கேத்த அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்காது. அப்பல்லாம் நம்மளை மோட்டிவேட் பண்ண சில ஆட்கள் தேவை. மேக்னட் மாதிரி அப்படிச் சில பேர் உண்டு.”

உங்களோட நடிச்ச ஹீரோக்கள்ல ஹேண்ட்சம் ஹீரோன்னா  யாரைச் சொல்வீங்க?

“அது ரொம்பக் கஷடம். எல்லாருமே ஏதோ ஒரு வகையில ஹேண்ட்சம்மா இருக்காங்க.”

இன்னும் எவ்வளவு நாளைக்கு நடிகையா இருக்கறதா திட்டம்?

“இப்பதான் என் கெரியரே ஆரம்பிச்சிருக்கு. ஒவ்வொரு நாளையும் அன்னிக்குத்தான் நடிக்க வந்த முதல் நாள் மாதிரி நினைச்சு வொர்க் பண்ணிட்டிருக்கேன். இன்னும் பத்து வருஷங்கள் கழிச்சு எப்படியிருப்பேன்னெல்லாம் யோசிக்கவே இல்லை.”

உங்களோட லைஃப் பார்ட்னர் எப்படியிருக்கணும்?

“சின்சியரா இருக்கணும். என்னைப் புரிஞ்சுக்கணும். என்னை அப்படியே ஏத்துக்கணும். சொந்தக்கால்கள்ல நின்னு ஜெயிக்கிறவரா இருக்கணும். ஓரளவுக்கு ஹேண்ட்சம்மா, என் அளவுக்கு உயரமா இருக்கணும்.''

இத்தனை வருஷமா சினிமாவுல இருக்கீங்க...  எந்த சர்ச்சையிலும் சிக்காம இருக்கீங்களே எப்படி?

“தேங்கஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமெண்ட். கிசுகிசு வர்ற அளவுக்கு என் லைஃப்ல டைம் இல்லை. ஷூட்டிங் முடிஞ்சதும் என் ஃப்ரெண்ட்ஸ், அம்மா, அப்பானு என் உலகத்துக்குள்ள போயிடுவேன்.”

வேற என்ன ஆசைகள்?

“உலகம் முழுக்க சுத்தணும்... அனுபவங்களைச் சேகரிக்கணும். நிறைய வித்தியாசமான கேரக்டர்ஸ்ல நடிக்கணும். நடிப்பைத் தாண்டி  வேற ஏரியாக்கள்லயும் கால் பதிக்கணும். ஒரு மனுஷியா என் வாழ்க்கையை முழு திருப்தியோட வாழணும்.”

யார்கூட நடிக்கணும்னு ஏக்கம்?

“அந்த வகையில நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எல்லா பெரிய ஹீரோக்கள்கூடவும் நடிச்சிட்டேன். மறுபடியும் அவங்ககூட நடிப்பேன்னு நம்பறேன்.  ரஜினிசார்கூட நடிக்கணும்ங்கிறது எல்லாரையும் போலவே எனக்கும் கனவு. அதுவும் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.''

அடுத்த கட்டுரைக்கு