Published:Updated:

சீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்? - நிபுணன் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
சீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்?  - நிபுணன் விமர்சனம்
சீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்? - நிபுணன் விமர்சனம்

சீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்? - நிபுணன் விமர்சனம்

​சைக்கோபாத் சீரியல் கொலையாளி ஒருவனை கண்டுபிடிக்க நடக்கும் விசாரணைகளும், கிடைக்கும் தடயங்களும், சில திருப்பங்களுமாக விரிகிறது நிபுணன். 

நகரத்தில் திடீரென ஒரு மர்மமான மரணம் நிகழ்கிறது. இறப்பதற்கு முன் சித்ரவதை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்த பின்பு துப்பாக்கியால் சுடப்பட்டு, முதுகில் நம்பர் எழுதி, முகமூடி மாட்டப்பட்டு  என சிக்னேசர் கொலையாக இருக்கிறது. இறந்தவர் யார், எதற்காக கொல்லப்பட்டார், கொன்றது யார் என விசாரணையை ஆரம்பிக்கிறது அர்ஜூன் அண்ட் டீம். ஆனால், குற்றவாளியை நெருங்கும் முன் மறுபடி அதே மாதிரி அடுத்த கொலை நடக்கிறது. விஷயம் ரொம்ப சீரியஸ் என சுதாரிக்கும் அர்ஜூன் அண்ட் டீம் கொலைக்கான தடயங்கள், குற்றவாளி விட்டுச் செல்லும் க்ளூ போன்றவற்றை கண்டுபிடிக்கிறார்கள்.  அதன் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா, எதற்காக இந்தக் கொலைகள் நடக்கிறது என்பனவற்றைச் சொல்லுகிறான் இந்த நிபுணன்.

இன்வஸ்டிகேஷன் த்ரில்லருக்கு பக்காவான களம், குற்றவாளி செய்யும் கொலைகள், அடுத்த கொலைக்கான க்ளூ என முழுமையான படமாக தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன். ஆனால், அதில் பாதி கிணறுதான் தாண்டுகிறார்.

​‘ஆக்‌ஷன் கிங்’அர்ஜூனின் 150வது படம். இத்தனை பெரிய டிராவலுக்குப் பிறகு இவர் அடிக்கும்போது மட்டும் நம்ப முடிகிற உடல்வாகு. ஒரு டி.எஸ்.பிக்கே உண்டான உடல்மொழியும், ‘இயர் ரிங் புதுசா?’ என குறும்புமாய் கதாபாத்திரத்தில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறார். சீரியஸாகவே இருக்கும்  அவரது டீம் மேட்ஸாக பக்கா ஃபிட்டில் பிரசன்னா, வரலட்சுமி. வரலட்சுமியின் ஸ்டைல் படத்துக்குப் படம் ரசிக்க வைக்கிறது. அசால்ட் பேச்சும், பிரசன்னாவிடம் ‘ப்போடா’ என்ற ஜாலியாகவும், அர்ஜூனிடம் ‘எஸ் சீஃப்’ என்ற மரியாதை தொனியிலும் கலக்குகிறார். இவருக்கென்று ஒரு வசன மாடுலேஷன் செட் செய்து கொண்டிருக்கிறார். சில சமயம் நாம் யோசிப்பதற்குள் பேசிமுடிக்கிறார் என்றாலும் ரசிக்க முடிகிறது. பிரசன்னா, அர்ஜூனின் கேங்கில் இன்னொரு காப். ‘சொல்லுங்க சார்’ வேடமென்றாலும் படம் முழுவதும் பரபரவென இருக்கிறார். கொஞ்சம் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் வரும் நேரம் பார்த்து, வில்லன் கட்டிப்போடுவது பரிதாபம். அர்ஜூன் தம்பியாக வைபவ். அவர் ஒரு ‘ட்விட்டர் அடிக்ட்’ என காட்டும் அந்த ஐடியாவை  எங்காவது செமயாகப் பயன்படுத்துவார்கள் என்று பார்த்தால்... 

படம் ஆரம்பித்த கொஞ்சநேரத்திலேயே, எல்லா கதாபாத்திரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய விதம் ஓகே. குடும்பத்தில் அர்ஜூன் அப்படி என்பதற்காக, ஒவ்வொரு க்ரைம் சீனுக்குப் பிறகும் அவர் ஃபேமலி சீன்கள் என்று படம் 2017க்கும் 1980ஸ்க்கும் மாறி மாறிப் பயணிப்பது அலுப்பு. குடும்ப சீன்களில் கத்திரி இன்னும் வேகமாய்ப் பணியாற்றியிருக்கலாம். மொத்தம் நாலு கொலையில் மூன்றை இடைவேளைக்குள் முடித்ததும், அந்த நான்காவது நபர் யார் என்ற ‘இண்டர்வெல் ப்ளாக்’கும் வெரிகுட் தான். ஃப்ளாஷ்பேக்கில் ஆருஷி கொலை வழக்கைக் கலந்து கொடுத்து நிஜசம்பவத்தை பதிவு செய்யும் ஐடியா ஓகே. ஆனால், அது ஏனோ தானோ என்று இருப்பதால் பழிக்குப் பழிக்கான அழுத்தம் குறைகிறது. முக்கியத் திருப்பமாக இருக்க வேண்டிய வில்லனின் முக்கியத்துவமும் பலவீனமானதாக இருக்கிறது. அர்ஜூனுக்கு பார்க்கின்சன் வியாதி இருப்பதாகக் காட்டப்படுவதும் படத்தோடு ஒன்றாமலே இருக்கிறது. அர்ஜூன் அடிவாங்குவதற்கு நியாயம் சேர்க்க மட்டுமே அந்த வியாதி கைகொடுக்கிறது. 

படம் முழுக்க நிறைந்து வழிகிறது நவீனின் இசை. சில இடங்களில் மௌனமாகவே இருந்திருக்கலாம். இரைச்சல் அதிகமாக இருந்த ஒரு ஃபீல். அர்விந்த் கிருஷ்ணாவின் கேமரா படத்தில் பரபரப்பு டோனைக் கொடுக்க முயல்கிறது. ஆனால், சேஸியாக இருக்க வேண்டிய திரைக்கதை அர்ஜூனின் வலது கை, கால் போல திடீர் திடீரென மரத்துப் போய்விடுகிறதே. 

சித்ரவதை செய்து கொலை, முகமூடி, முதுகுக்குப் பின்னால் நம்பர் என கொலைக்கான விஷயங்களை யோசித்தது போல, படத்தை விறுவிறுப்பாக்க யோசித்திருந்தால் படம் பட்டாசாக வெடித்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு