Published:Updated:

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate
ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

வம்பு பேசுதல், மற்றவர்களின் அந்தரங்கமான தருணங்களை எட்டிப் பார்த்தல் போன்றவை மனிதனின் ஆதாரமான இச்சைகளில் அடக்கம். சாவி துவாரத்தின்  வழியாக இதர மனிதர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து இன்படையும் Voyeurism  எனப்படும் சிறுமையான குணத்தின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கப்பட்ட 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி ஷோ, உலகமெங்கிலும் வெற்றி பெற்றது. அது  இப்போது தமிழகத்திலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதில் ஆச்சரியமொன்றுமில்லை. சில விஷயங்களில் மானுட குலத்தை உத்தரவாதமாக நம்பலாம். அத்தனை சீக்கிரம் நல்லவர்களாகி விட மாட்டார்கள்.

'இந்த நிகழ்ச்சி ஒரு  கலாசார சீரழிவு' என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் கலாசார காவலர்கள் ஒருபுறம் ஆவேசமாக கதறிக் கொண்டிருக்கிறார்கள. இன்னொரு புறம்,  குறிப்பிட்ட நேரம் வந்ததும் கைகள் நடுங்க... ''ஹலோ.. விஜய் டிவியா? எப்ப சார் பிக் பாஸ் போடுவீங்க?" என்று ஆவலுடன் கேட்கும் குடிமகன்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். கோடிக்கணக்கானவர்கள்  இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்கிறது ஒரு தகவல். சின்னய்யா ரெளத்ரம் பழகியதில் காரணம் இல்லாமல் இல்லை.

ஆனால் சமூகவலைத்தளங்களில் திடீரென்று கிளம்பியிருக்கும் உளவியல் நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியைப் பற்றி வேறொரு பார்வையை முன்வைக்கிறார்கள்.

'ஒரு குறிப்பிட்ட சூழலில் அடைபடுவதின் மூலம் மனிதர்களிடம் உற்பத்தியாகும் மாற்றங்கள், அகங்கார மோதல்கள், உயர்வு - தாழ்வு மனப்பான்மைகளின் பிரதிபலிப்புகள், மனச்சிக்கல்கள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுகின்றன. இவற்றைக் கவனிப்பதின் மூலம் அவற்றைக் கொண்டு கண்ணாடியில் சரிபார்த்துக் கொள்வது போல  நம்மை சுயபரிசீலனை செய்து கொள்ளலாம். நம்மிடம் உள்ள குறைகளை இவை மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றன; யோசிக்க வைக்கின்றன' என்கிற வகையில் இந்த நிகழ்ச்சி உபயோகமானது என்கிறார்கள்.  'சமூகப் பரிசோதனை' என்று கமல் சொல்லியதும் இதைத்தான்.

சரி, இன்று துவங்கும் இந்தத்  தொடரின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தது என்பதை தினமும் பார்க்கப் போகிறோம்.

**

காயத்ரி - ஓவியா சமாதான உடன்படிக்கை நிகழ்ந்ததின் எதிரொலியாக கடந்த சில நாட்களாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சி சலிப்புறத் துவங்கி விட்டது. 'We want more emotion' என்று கதறும்படி ஆகிவிட்டது. தீமைகள் இருந்தால்தான் அதன் நடுவில் நன்மைகளை அடையாள காண முடியும். 

ஆதார் கார்டிற்கு எதிர் பரப்புரைப் பாடலை எப்போதோ பாடி வைத்து விட்ட 'தல'யின் திரைப்படத்திலிருந்து இன்றைய சுப்ரபாத எழுச்சி நடந்தது. 'அதாரு.. அதாரு...காட்டாதே உதாரு' பாடலுக்கு வழக்கம் போல ரகளையாக நடனமாடித் தீர்த்து விட்டார் ஓவியா. சோலார் பவருக்கு முன் மெழுகுவர்த்தி போல, டான்ஸ் மாஸ்டர் காயத்ரியே, ஓவியாவின் முன் டல்லாகத் தெரிகிற அளவிற்கான நளினமும் உற்சாகமும் ஓவியாவின் நடனத்தில் தெறித்தது.

***

'குருவி.. குருவி. அடிபட்டுடுச்சா.. குருவி'' என்கிற குணா கமல் ரேஞ்சிற்கு தனிமையில் பேச ஆரம்பித்து விட்டார் ஜூலி. ஓவியாவை நகலெடுக்கும் முயற்சியாகத் தெரிகிறது. என்றாலும் ஜல்லிக்கட்டுப் போராளியை இப்படி தனிமையில் அமர வைத்தது பாவம்தான்.

நமிதாவின் பிரிவால் இன்னமும் கடுப்பாகியிருக்கும் ரைஸா, 'யாரையாவது அறையலாம் என்கிற வாய்ப்பு கிடைத்தால் எவரை தேர்ந்தெடுப்பீர்கள்' என்கிற ஜூலியின்  கேள்விக்கு சந்தேகமேயில்லாமல் 'ஓவியா' என்று பதில் தந்தார். 'i want to go home' என்று கண்ணைக் கசக்கிக் கொண்டேயிருக்கிறது இந்த கான்வென்ட் பேபி.

காயத்ரி - ஓவியா சமாதானத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது ஜூலிதான். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் இது அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே இப்போது ரைஸாவுடன் கூட்டணி. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் அரசியல்வாதிகள் கூட மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. அத்தனை கட்சித் தாவல்கள்.

'ஆறுதல் நாயகன்' என்கிற பட்டத்தை கேள்வியே கேட்காமல் சினேகனுக்கு வழங்கலாம். எவர் கண்கலங்கினாலும், அதிலும் தாய்க்குலங்கள் கலங்கினால் 'கட்டிப்பிடி வைத்தியம்' மூலம் அவர்களை ஆற்றுப்படுத்த 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் தயாராக இருக்கிறார். ஆறுதல் சொல்வது மட்டும்தான் அவருடைய நோக்கமா என்று சந்தேகம் பல சமயங்களில் வருகிறது.

இன்று காலையில் இருந்தே ஓவியா 'அப்செட்'.  அது நாள் வரையில் காயத்ரி குழுவிற்கு முன்னால் ஒரு சவால்தன்மையுடன் இயங்க வேண்டியிருந்ததால் அதிலேயே நேரம் போயிருக்கும். இப்போது அதுவும் முடிவடைந்து விட்டதால் ஏற்பட்ட வெற்றிடமாக இருக்கலாம். தனிமையில் அழுது கொண்டிருந்த ஓவியாவை 'தேவதைகளின் காவலர்' சினேகன் உடனே ஓடிச் சென்று சமாதானப்படுத்தினார். மனிதர் ஒரு சந்தர்ப்பத்தையும் வீணாக்குவதாக இல்லை.

***

பாத்திரம் கழுவும் விஷயத்தில் மறுபடியும் பிரச்னை வெடித்தது. தனது நல்லியல்புகளின் மூலம் மக்களின் பிரமாண்டமான அபிமானத்தைப் பெற்ற 'டார்லிங்' ஆக ஓவியா இருந்தாலும், பணிகளை சரியாகச் செய்யாமல் டபாய்ப்பது துவக்கத்திலிருந்தே அவரது பலவீனமாக இருக்கிறது.  டீம் லீடர் ரைஸா உத்தரவிட்டும் ஆரவ்விடம் சுவாரசியமாக கடலை போட்டுக் கொண்டிருந்தது ஓவர்.

சற்று யோசித்தால் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் இல்லாமலிருந்தால் எத்தனை சலிப்பாக இருந்திருக்கும்? முதல் நாளிலேயே 'பிக் பாஸ்', 'பிக் பெயில்' ஆயிருப்பார். பெண்கள்தான் ஆக்கத்தின், அழிவின் மையமாக இருக்கிறார்கள்.

'நம்பியார்' mode -ல் இருந்த காயத்ரி திடீரென்று திருந்தி விட்டதால் அந்த இடத்திற்கு பொருத்தமாக நபராக அமர்ந்து விட்டார் ஜூலி. இனி சர்ச்சைகள் அவரைச் சுற்றியே மையம் கொள்ளும் என்பது உறுதியாகி விட்டது. ஒருவகையில் ஜூலி  பலிகடாவிற்கான மாற்றோ என்று கூட தோன்றுகிறது.  'True, true' ரைஸாவிற்கு இந்த அளவிற்கெல்லாம் சாமர்த்தியம் போதாது.

***

விக்ரமன் சினிமாப்பாடல் மாதிரி 'இப்படியே போய்க் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது' என்று யோசித்த பிக் பாஸ், நாரதர் வேலையை மறுபடியும் துவங்கி விட்டார். இம்முறை அவர் வெடித்தது நகைச்சுவை சரவெடி.

ஓபிஎஸ் மாதிரி 'திடீர் தலைவர்' ஆகும் அதிர்ஷ்டம் அடித்தது ஜூலிக்கு. இரண்டு அணிகளாக பிரிந்து செய்யும் சமையல் போட்டிக்கு அவர் நடுவராக இருப்பார். இந்தப் போட்டியில் தோற்கும் அணி ஜூலிக்கு பல்வேறு விதமான பணிவிடைகளைச் செய்ய வேண்டும்.  நேற்று வெளியே தனிமையில் அமர வைத்ததற்கு பரிகாரம் போல.

'இந்தப் புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் நெனச்சேனா' என்று புலம்பிய வடிவேலுவின் வசனத்தை தங்களின் மைண்ட் வாய்ஸில் நினைத்துக் கொண்ட போட்டியாளர்கள் விதியை நொந்து கொண்டு சமையல் போட்டிக்கு தயாரானார்கள்.

மசாலா கம்பெனி உரிமையாளரே, இந்தியாவெங்கும் அலைந்து திரிந்து வாங்கி வந்த மசாலா பொருட்களின் 'பிராண்ட்' சிறப்பாகவே ஃபோகஸ் செய்யப்பட்டது. சார்லி சாப்ளின் மீசையுடன் படுகாமெடியாக ஜூலி நடுநாயகமாக அமர்ந்திருக்க இரண்டு டீம்களும் பரபரப்பாக இயங்கினார்கள். சினேகன் விரலில் ரத்தக் காயம் ஏற்பட, 'பாசமலர்' ஜூலி உடனே பதறி, தற்காலிகமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு உதவி செய்ய ஓடிய காட்சி 'கிழக்கு சீமையிலே' சென்டிமென்ட்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் திறமையைக் கொண்டிருந்தது.

கிச்சன் செட் முன்னால் ஓவியா நின்ற போது, 'விதிகளின் படி அது தவறு' என்று தலைவர் ஜூலி பயங்கர ஜபர்தஸ்துடன் கறாராக சுட்டிக்காட்ட, ஆரவ்வின் பக்கத்தில் நின்று கொண்டு ஓவியா காட்டிய 'வெவ்வெவ்வே' ஒரு ஜாலியான தருணம்.

***

இரண்டு குழுக்களின் சமையலையும் ரசித்து ருசித்து சாப்பிட்டார் ஜூலி. 'மேடம் மேடம் என்று அவரை ஆரவ் கலாய்த்துக் கொண்டே இருந்தது நகைச்சுவை கலாட்டா. ஆரவ், மட்டுமல்ல ஜூலியின் பந்தாவை எல்லோருமே கலாய்த்தார்கள். ஜூலிக்கு புரைக்கேறிய போது 'நான் தட்றேன்' என்று தாமாக முன்வந்து ஓவியா ஓங்கித் தட்டியதும், அதற்கு நீலாம்பரி போல ஜூலி ஒரு லுக் தந்ததும்... நிஜமாகவே சிரிப்பை அடக்க முடியவில்லை.

எதிர்பார்த்தபடியே ஓவியா இருந்த டீமை தோற்ற அணியாக ஜூலி தேர்வு செய்தார். சினேகன் செய்த 'முட்டை மசாலா' அத்தனை ருசியாக இல்லை என்பது அவர் சுட்டிக் காட்டியிருந்த காரணம். ஒருவேளை ஜூலியின் இந்த தீர்ப்பு அவரளவில் நியாயமானதாக ஒன்றாக கூட இருக்கலாம். ஆனால் ஓவியாவை பழிவாங்கவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்கிற அளவிற்கு நிலைமை இருந்தது.

அப்புறம் துவங்கியதுதான் சீரியஸ் + காமெடி கலாட்டா.

தலைவர் ஜூலியின் ஆணைப்படி அவர் செல்லுமிடமெல்லாம் ரெட் கார்ப்பெட் விரிக்கப்பட வேண்டும். இந்தப் பணிக்காக அவர் தேர்வு செய்தது ஓவியாவை. ஜூலிக்குள் இருந்த 'நீலாம்பரி' முழுமையான சந்திரமுகியாக வெளிப்பட்ட தருணம் அது.

உள்ளுக்குள் பொங்கிய கோபத்தை மறைத்துக் கொண்டு 'வாடி மகளே' என்கிற சவாலுடன் ஓவியா களத்தில் இறங்கினார். ரெட் கார்ப்பெட்டில் ஜூலி காலை வைத்ததும் ஒரே இழு. தடுமாறிய ஜூலி ஏறத்தாழ விழப் போனார். கொலைவெறியுடன் ஓவியா மறுபடியும் இழுக்க விழுந்து வாரினார் ஜூலி. கார்ப்பெட்டில் இருந்த சிவப்பெல்லாம் ஜூலியின் கண்களில் ஏறியது. ''what to do? am doing my task' என்று ஓவியா அலட்சியமாக சொன்னாலும் அப்பட்டமாக அவர் பழிவாங்கியது வெளிப்படையாகவே தெரிந்தது.

ஓவியாவிற்கு நிச்சயம் இது சறுக்கல்தான். எதையும் உற்சாகமாக எதிர்கொள்ளும் ஓவியாவைத்தான் ஜனங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் இன்று வேறுமாதிரியான ஓவியாவை பார்க்க முடிந்தது. ஆனால் இதற்கு காரணமாக அவருக்கு ஒருவேளை இருக்கும் மனஅழுத்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

காலையில் இருந்தே 'மூட் அவுட்' ஆக இருந்த ஓவியாவிற்கு, 'ஜூலிக்கு' சேவகம் செய்யும் task தரப்பட்டதும் அழுத்தி வைத்திருந்த அத்தனை கோபமும் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆறுதல் சொல்லப் போயிருந்த தன்னிடம், நன்றி சொல்வதற்கு மாறாக, பிளேட்டை திருப்பி அபாண்டமான பழி சுமத்திய ஜூலியின் மீது ஓவியாவிற்கு இருக்கும் மனக்குறை இன்னமும் நீங்கவில்லை என்றுதான் தெரிகிறது. மேலும் அதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை என்பது கூடுதல் கோபத்தை தந்திருக்கிறது என யூகிக்கலாம்.  தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக அவர் இதை எடுத்துக் கொள்வது ஒருபுறம் நியாயம்தான். ஆனால் இதுவொரு விளையாட்டுப் போட்டி. இதற்கான உத்திகளோடுதான் இங்கு இயங்க வேண்டும். இந்த அடிப்படையை கணேஷைத் தவிர எல்லோரும் உணர மறுக்கிறார்கள். இதுவரை சமாளித்த ஓவியாவும் இன்று சறுக்கி விட்டார்.

விளைவு இன்று நடந்த பழிவாங்கல் படலம்.

***

ஓவியாவின் இந்த நடவடிக்கையை இதர போட்டியாளர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். 'i want to go home' என்று மறுபடியும் கான்வென்ட் பேபி சிணுங்கியது. ஓவியா சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆரவ் உடனடியாக இறங்கினார். 'ஆறுதல் நாயகன்' சினேகனும் இணைந்து கொண்டார். 'am done. போதும். நான் வீட்டுக்குப் போறேன்' என்று வழக்கத்திற்கு மாறாக கதறித் தீர்த்த ஓவியாவை இருவரும் சமாதானம் செய்தார்கள்.

'தலைவியானவுடனே  நீ ஓவர் பந்தா பண்ண. அது ரொம்ப கேவலமாக இருந்தது' என்று ஜூலியை உரிமையுடன் கண்டித்தார் காயத்ரி. சென்ற வாரங்களோடு ஒப்பிடும் போது காயத்ரியின் பிம்பம் தலைகீழாக மாறி விட்டது. இது நிகழ்ச்சியின் போக்கில் நடந்ததா அல்லது நடத்தி வைக்கப்பட்டதா என்பது 'பிக் பாஸிற்கே' வெளிச்சம். என்றாலும் காயத்ரியின் தாய்மை பிம்பமும் ஒரு நோக்கில் அழகாகவே இருந்தது.  'உப்பு மூட்டை தூக்கிச் செல்கிறேன்'' என்று ஜூலியை காயத்ரி தூக்கிச் சென்று இருவரும் கீழே விழுந்தது அவல நகைச்சுவை. மரண பங்கம்.

சிறந்த performance-க்காக சக்தி மற்றும் சினேகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பரிசாக மசாலா பொருட்கள்.

அவர்கள் செய்த சமையலில் மசாலா இருந்ததோ இல்லையோ, ஜூலியை தலைவராக்கி அவருடன் ஓவியாவை மோத விட்டதின் மூலம் இன்றைய நிகழ்ச்சியல் செமயான மசாலாவைச் சேர்த்த  பிக் பாஸின் 'செஃப்' திறமையை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்த வாரம் எவரும் வெளியேற மாட்டார்கள். இது பார்வையாளர்களுக்கு  மட்டுமே தெரிந்த ரகசியம்.

இன்று ஆண்டவர் வருவார். குறும்படம் காட்டுவாரா, வெறும்படத்தோடு முடித்து விடுவாரா என்பது இன்றும், நாளையும் தெரியும். 

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?!

 

1). ரெட் கார்ப்பெட் நிகழ்வுக்கு பின் ஓவியா மீதுள்ள உங்கள் அபிப்ராயம்..?! *

அடுத்த கட்டுரைக்கு