Published:Updated:

விக்ரம் வேதா, மாநகரம் படங்கள் அசல் சென்னையைப் பிரதிபலித்தனவா?

விக்ரம் வேதா, மாநகரம் படங்கள் அசல் சென்னையைப்  பிரதிபலித்தனவா?
விக்ரம் வேதா, மாநகரம் படங்கள் அசல் சென்னையைப் பிரதிபலித்தனவா?

சமீபத்தில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் பார்த்து விட்டு பலரும் விஜய் சேதுபதியின் நடிப்பையும், கதை செல்லும் போக்குக் குறித்தும் வெகுவாக சிலாகித்தார்கள். சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புகழுரைகளுக்கு நடுவே விக்ரம் வேதா வடசென்னையை சித்தரித்த விதம் குறித்து கவலைப்பட யாருமில்லை என்றே தோன்றுகிறது. 'மாநகரம்' படம் வந்த போதும் இதுவே நடந்தது.

வடசென்னை என்றாலே திருடர்கள், ரௌடிகளின் சரணாலயமாகத்தான் இருக்குமென்கிற பொதுப்பார்வையை 'வலுவான' திரைக்கதையின் மூலம் கட்டமைத்திருக்கிற மற்றுமொரு திரைப்படம் விக்ரம் வேதா.

விக்ரம் வேதா படத்தில் பள்ளிக் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஹவுஸிங்போர்டு ஏரியாவில் உலவும் அத்தனை பேரும் போதைக்கு அடிமையாகவும், அதைக் கடத்துவதற்கு துணை போவதாகவுமே இருக்கிறார்கள். விதிவிலக்காகக் கணக்குப் பாடத்தில் புலியாக இருக்கும் வேதாவின் தம்பியின் படிப்பறிவும் கூட கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன்படுத்துகிறான் என்கிற அளவில் சுருக்கப்பட்டு முடிகிறது.

புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்கேபி நகர், முல்லைநகர் ஆகிய பகுதிகளை ரௌடிகள் புழங்குகிற விதத்தில் வசனமாக ஆங்காங்கே சொல்லப்படும்போது மற்ற தரப்பினருக்கு அப்பகுதிகளைப் பற்றிய எண்ணங்கள் சமூகத்தில் எந்தவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் யோசிக்க, சம்பந்தபட்டவர்களுக்கு நேரமிருக்காது. மதுரை என்றாலே பெரிய மீசை, எதற்கெடுத்தாலும் அரிவாள்தானே என மற்ற மாவட்டக்காரர்களை நினைக்க வைத்ததுடன், அது அப்படியே வட இந்தியர்கள் வரை பரவி தமிழர்கள் என்றாலே இப்படித்தான் என்கிற மனோபாவத்தின் வெளிப்பாடுதான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் முரட்டுக் கதாபாத்திரங்கள். குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்துகிறபோது அது விளைவித்த தாக்கங்களை இன்னும் யோசித்துப் பார்த்தால் நாம் சொல்ல வருகிற விஷயத்தில் உள்ள ஆபத்தையும் அபத்தத்தையும் உணரலாம்.

சென்னையின் அடித்தட்டு மக்களைப் பற்றிய சித்தரிப்புகளை நம் தமிழ்சினிமா காலங்காலமாகவே ரொம்பவும் மேம்போக்காகவே அணுகி வருகிறது. ஒரு பக்கம் அவர்களை திருடர்களாக, அடியாட்களாக, எளிதில் விலை போகிறவர்களாக சித்தரிப்பார்கள். மறுபக்கம் அவர்கள் ஏழையாய் இருந்தாலும் நல்லவர்கள் மாதிரியான வசனங்கள். டசக்கு டசக்கு பாடலில் கூட இதனையொத்த வரிகளைக் காணலாம். (//சந்து பொந்துல சண்ட வளப்போம் மல்லுக்கு நிப்போம்////ஒரு நொடி பழகிட்டா மறுநொடி சொந்த உசுரைத்தருவோம் கேட்டா//) 

விக்ரம் வேதாவுக்கு முன்பு வெளிவந்த மாநகரம் திரைப்படத்திலும் இதே ஒற்றுமையை வேறுவிதமாகக் காணலாம். ‘மாநகரம்’ படத்தின் முதல் காட்சியிலிருந்து படம் முடிவதற்கான கடைசி நிமிடங்கள் வரை நாயகனுக்கு சென்னை மீது ஒரு கசப்புணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. ‘ச்ச்சே ஊரா இது...’ என்கிற தன் ஆதங்கத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லிப் பொறுமுகிறான். அது கதாபாத்திரத்தின் தன்மை எனக் கடந்து போய்விட்டாலும் சென்னையின் முகங்களாக இயக்குநர் காண்பிப்பவர்கள் பொறுப்பற்றவர்களாகவும் கேலிக்குரியவர்களாகவும், குண்டர்களாகவும் ஆபத்தானவர்களாகவுமே இருப்பார்கள்.

பர்ஸ தொலைச்சிட்டேன் ஊருக்குப் போகணும் காசு வேண்டுமென மதுவகத்தில் நுழைந்து ஏமாற்றுபவராக சென்னையின் முகம் கதாநாயகனுக்கு அறிமுகமாகிறது. வாகன நெரிசலில் வண்டியைக் கொஞ்சம் உராசியதும் நானோநொடிகள் கூட யோசிக்கமால் &!@#$% என்றும் @& என்றும் இன்னும் சிலதுமாக நாயகனைத் திட்டுகிறார்கள். ச்ச்சே ஊரா இது என்கிற அவரின் எரிச்சலில் எண்ணெய் வார்க்கப்படுகிறது. நடைபாதையில் படுத்திருக்கும் பெண், கண்களைக் கூட சரியாய்த் திறக்கமால் ‘அய பொறம்போக்கு’ என்று கேட்கிறாள். சார்லியின் வண்டிக்கு சென்னை மொழியில் வழி சொல்லும் போதைமனிதர் ஏறுக்கு மாறாகச் சொல்லி நாயகனின் வெறுப்பை ஸ்திரப்படுத்துகிறார். ‘இன்ஸ்பெக்டர்’ கதாபாத்திரம் ஒன்றுக்கு இரண்டு முறை “பஞ்சம் பொழைக்க வந்துட்டு”, “ஊரு விட்டு ஊரு பொழைக்க வந்துட்டு” போன்ற வசனங்களைப் பேசுவார். வெளியூரிலிருந்து வேலை செய்ய வருபவர்களை இங்குள்ள பூர்வீகக் குடிகள் அணுகும் விதத்தை ஒருதலைபட்சமாக காட்டியிருப்பார் இயக்குநர்.

இன்னொரு காட்சியில், “எங்க ஊரு மெட்ராசு அதுக்கு நாங்க தானே அட்ரசு’ பாடலைக் கேட்டதும் எரிச்சலடைந்த நாயகனுக்கு சார்லியுடன் உரையாடல் நடக்கிறது. “பெத்த அம்மாவையே !@%#&^#னு திட்றானுங்க எங்க ஊர்லலாம்...னு சொன்னாலே அடிக்க வருவானுங்க. ஊரா இது..’’ என்று நாயகன் உணர்ச்சிவசப்படுவதன் மூலம் சார்லி மௌனமாகிறார்.

அச்சம் என்பது மடமையடா படத்தில் நள்ளிரவில் தங்களுக்கு அடைக்கலம் தரும் கிராமத்துப் பெரியவரின் குணாதிசயத்தைப் பற்றி இதுதான் கிராமம் இதுதான் கிராமத்து வாழ்க்கை என்று மஞ்சிமாவிடம் சிம்பு தழுதழுப்பார். அதற்கு நிகரான பொதுப்புத்தியைத்தான் இப்படம் மக்களிடம் விதைத்தது.

கதைக்கு வலு சேர்ப்பதற்காக இங்குள்ள அடித்தட்டு மக்களைப் பற்றி மோசமான சித்திரத்தை வரைந்துவிட்டு படம் முடிவடைகையில் ஒரு நீதியாக “நம்ம வாழத் தகுதியான ஊரு இதுதான்” என நாயகன் தன் அப்பாவிடம் சொல்கிறார். அதுகூட “இங்கதான் இருபத்தைஞ்சாயிரம் சம்பளத்துக்கு வேல கெடைக்குது” என்கிற காரணமும் சேர்த்துச் சொல்லப்படுவதால் அவர் சொன்ன காரணமும் நீர்த்துப் போகிறது.

மாநகரம், விக்ரம் வேதா இரண்டு படங்களின் திரைக்கதையும் விதந்தோதப்பட்டு பேசப்பட்ட சத்தத்தில் சென்னையின் பூர்வீகக் குடிகளைப் பற்றி இத்திரைப்படங்கள் முன்வைத்த விஷயங்கள் பொதுமக்களின் மனதிற்குள் ஓசையில்லாமல் இறங்கியிருக்கின்றன. ஒரு சினிமா சித்தரிக்கின்ற மோசமான (சாதி) அரசியலை உள்வாங்காமல் கதை சொல்லப்பட்ட விதத்திற்காகவும், யதார்த்தத் தன்மைக்காகவும் தமிழில் நிறையப் படங்கள் புகழப்பட்டிருக்கின்றன. அதில் சமீபத்தில் வெளிவந்த இவ்விரண்டு திரைப்படமும் விதிவிலக்கல்ல.

ஒரு படைப்பாளியின் செயல்பாடு என்பது "யதார்த்தம்" என்று ஏற்கெனவே இங்கு கட்டமைக்கப்பட்டதை திரும்பத் திரும்பச் செய்து அதை சமூக உண்மையாக நிறுவுவது அல்ல. மாற்று அரசியலை முன்வைக்கும் நோக்கத்தோடு கதையை எழுதினால்தான் புதிய சிந்தனைகள் பிறக்கும் என்கிற புரிதல் அவசியம். 

சென்னை அடித்தட்டு மக்கள் என்றாலே அன்பிற்கு அடிபணிபவர்கள், பழகிட்டா உயிரையும் கொடுப்பார்கள், உயிரையும் எடுப்பார்கள் என்கிற ரொமாண்டிஸ மனநிலையிலிருந்து விலகி இயல்பான சென்னை மனிதர்களைப் பிரதிபலிக்கும் தமிழ் சினிமாக்கள் அதிகம் வெளிவர வேண்டும். அப்படி வெளிவருமாயின் குறைந்தபட்ச நன்மையாக "சேரி பிஹேவியர்" போன்ற வார்த்தைகள் சமூகத்தில் மென்மேலும் ஊடுருவாது.