Published:Updated:

“ஓவியாவை ஏன்மா அழ விடுறாங்க?” ‘மெளன ராகம்’ க்யூட் பேபி கிருத்திகா

“ஓவியாவை ஏன்மா அழ விடுறாங்க?” ‘மெளன ராகம்’ க்யூட் பேபி கிருத்திகா
“ஓவியாவை ஏன்மா அழ விடுறாங்க?” ‘மெளன ராகம்’ க்யூட் பேபி கிருத்திகா

‘மெளன ராகம்' சீரியல் மூலம் எல்லோரையும் ஈர்த்திருப்பவர், சக்தியாக நடிக்கும் பேபி கிருத்திகா. கிராமத்துச் சிறுமியாகவும் கதையின்போக்கில் சிறுவனாகவும் நடித்துக்கொண்டிருக்கும் கிருத்திகாவுக்கு வீடுகள்தோறும் ரசிகர்கள். சென்னையில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் கிருத்திகா, பிறந்தது பெங்களூரில். இந்த சீரியலில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்துவிட்டார். கிருத்திகாவின் அம்மா லட்சுமி பிரியா பாலசுப்ரமணியம், மகள் குறித்து பகிர்ந்துகொண்டார். 

“கிருத்திகா எப்படி 'மெளன ராகம்' சக்தியாக மாறினாங்க?" 

“போன வருஷம் எங்க நண்பர் கார்த்திக் சீனிவாசன் நடத்திய மாடலிங் வொர்க் ஷாப்பில் கிருத்திகா கலந்துகிட்டா. அதனால், அவளின் போட்டோ பல இடங்களுக்குப் போயிருக்கு. ஐந்து மாசம் கழிச்சு, விஜய் டிவியிலிருந்து போன் வந்துச்சு. 'மெளன ராகம்' சீரியல் பற்றிச் சொல்லி, நடிக்க விருப்பமானு கேட்டாங்க. கிருத்திகாவுக்கு நடிக்கவும் பாடவும் ரொம்பவே இஷ்டம். அதனால், உடனடியா ஓகே சொல்லிட்டோம். அதுக்கு ஏற்ற மாதிரியே சீரியலிலும் பாடகி கேரக்டர் அமைஞ்சதில் கிருத்திகாவுக்கு டபுள் ஹேப்பி." 

“கிருத்திகாவுக்கு பாடத் தெரியுமா?" 

“பெங்களூரில் இருந்தபோது பாட்டு கிளாஸுக்குப் போயிருக்கா. சீரியலில் நிறையப் பாட்டு இருக்கிறதால், முதல் நாளே அதை நல்லா பிராக்டீஸ் எடுத்துப்பா. வசனங்களையும் அப்படித்தான். அர்த்தம் தெரியாமல் ஒரு வசனத்தையும் பேச மாட்டா. சீரியலின் ஆரம்பத்தில் கிராமத்தில் நடக்கிற மாதிரி காட்சிகள் இருந்ததால், பல வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சுக சிரமப்பட்டா. 'ஏசறதுன்னா என்ன?'னு கேட்பாள். திட்டறதைத்தான் இந்த ஊர்ல அப்படிச் சொல்வாங்க'னு விளக்குவேன். நானும் கணவரும் தமிழ்நாடுதான். கிருத்திகா பிறந்து, வளர்ந்ததெல்லாம் பெங்களூரு அதனால், தமிழ் வட்டார வார்த்தையெல்லாம் தெரியாது." 

"பெங்களூரு சிட்டி கிருத்திகா, கிராமத்துச் சிறுமியாக நடிக்கிறது சவாலா இருந்திருக்குமே?'' 

"ஆமாம். சுந்தர பாண்டியபுரம் என்கிற கிராமத்தில் அந்தப் பகுதிகளை எடுத்தாங்க. பாவாடை சட்டையோடு, பெருசா மேக்கப் எதுவுமில்லாமல் எடுத்தாங்க. அதைப் பார்த்ததும், 'ஏம்மா இப்படி என்னைக் காட்டுறாங்க. நான் அழகாவே தெரியமாட்டேனா'னு கேட்டுட்டே இருந்தா. விஜய் டிவி விருது அறிவிக்கும்போது, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான பட்டியலில் இவள் பெயரும் நாமினேஷனில் இருந்ததைப் பார்த்த பிறகுதான் தன் கேரக்டரின் வலிமையைப் புரிஞ்சுக்கிட்டா. சூட்டிங் நடந்த ஊரில் கிருத்திகாவுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாங்க. பிரேக்கில் அவங்களோடு ஒரே விளையாட்டுதான். நொண்டியாட்டம் அவளுக்கு ரொம்பப் பிடிச்ச விளையாட்டு. கிராமத்தின் பல விஷயங்கள் அவளுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. 'கோழி, ஆடு எல்லாம் ரோட்டுல ஜாலியா நடந்துபோகுது பாரும்மா'னு குஷியோடு வேடிக்கை பார்ப்பாள்.'' 

"எந்த சீன்ல நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க?" 

“அழுகை சீன் வந்தாலே அப்செட் ஆயிடுவா. டைரக்டர் செல்வம் சார், அந்தக் காட்சியின் அவசியத்தைப் பொறுமையா விளக்கி, அவளைச் சமாதானப்படுத்தி நடிக்கவைப்பார். இப்போ, பையனா நடிக்கிறது ரொம்ப ஜாலியா இருக்காம். டிரெஸ் எடுக்கப் போனாலும், பாய்ஸ் டிரெஸ்ஸாக செலக்ட் பண்றா. சீரியலில் ஏதாச்சும் பிளாஸ்பேக் காட்சியாக கிராமத்தைக் காட்டும்போது, 'நீளமான முடியை வெட்டிட்டோமே, ஏம்மா அதையெல்லாம் திரும்பவும் காட்டுறாங்க. காட்ட வேணாம்னு சொல்லும்மா ப்ளீஸ்'னு கெஞ்சுவா.'' 

“தான் நடிச்சதை முதல்முறையாக டிவியில் பார்த்தபோது கிருத்திகாவின் ரியாக்‌ஷன் என்ன?” 

“முதல் நாள் ரொம்ப எதிர்பார்ப்போடு, 'நான் டிவியில் வர்றதை எல்லோரும் பார்ப்பாங்களா?'னு கேட்டுட்டே இருந்தா. அந்த நாள் சீரியல் முடிஞ்சதும், எல்லோருக்கும் போன் பண்ணி எப்படி இருந்துச்சுனு சந்தோஷமா கேட்டாள். வெளிநாடுகளிலிருந்து நிறைய பேர் போன் பண்ணி, 'எங்க வீட்டுக் குழந்தை மாதிரி சக்தியைப் பார்க்கிறோம்'னு சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். 'மெளன ராகம்' சீரியலை தவிர கிருத்திகாவுக்கு பிடிச்ச நிகழ்ச்சி, 'பிக் பாஸ்'தான்.'' 

கிருத்திகாவுக்கு 'பிக் பாஸ்'ல யாரைப் பிடிக்கும்?" 

“ஓவியாவை! அவங்க டான்ஸ் ஆடும்போது இவளும் ஆடுவா. 'என்னை மாதிரியே டான்ஸ் ஆடுறாங்கம்மா'னு சொல்லுவா. ஓவியாவை யாராவது அழவெச்சா கிருத்திகா வருத்தமாகிடுவா. 'ஏம்மா ஓவியாவை இப்படி அழவைக்கிறாங்க'னு கேட்பாள். விஜய் சேதுபதின்னா கிருத்திகாவுக்கு உயிர். 'நானும் ரெளடிதான்', 'காதலும் கடந்து போகும்' படங்களை எத்தனை தடவை பார்த்திருக்கானு கணக்கே கிடையாது. விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்துகிட்டதைப் பார்த்ததும், 'என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா ஆடியன்ஸாவாவது போய் பார்த்திருப்பேன்' என்றாள். எப்படியாச்சும் அவரைப் பார்த்திடணும்னு ஆசையோடு இருக்கா." 

"கிருத்திகா எதிர்காலம் சீரியல், சினிமா என்றுதானா?" 

“படிப்புதான் எப்போதும் கூடவே இருக்கும் என்பது என் மற்றும் என் கணவரின் எண்ணம். ஆனால், 'படிப்புடன் நடிக்கவும் செய்யறேம்பா'னு கிருத்திகா சொல்றா. படிக்கிறதில் ஒரு குறையும் வைக்காமல் இருக்கா. அதனால், எதிர்காலத்தில் அவளின் விருப்பம்தான் எங்கள் விருப்பமும்.''