Published:Updated:

‘நேற்று ஓவியா செய்தது பழிவாங்கல்!’ என்பவர்கள் இதைக் கொஞ்சம் படிங்க! #BiggBossTamil

‘நேற்று ஓவியா செய்தது பழிவாங்கல்!’ என்பவர்கள் இதைக் கொஞ்சம் படிங்க! #BiggBossTamil
‘நேற்று ஓவியா செய்தது பழிவாங்கல்!’ என்பவர்கள் இதைக் கொஞ்சம் படிங்க! #BiggBossTamil

‘நேற்று ஓவியா செய்தது பழிவாங்கல்!’ என்பவர்கள் இதைக் கொஞ்சம் படிங்க! #BiggBossTamil

​நேற்றைய பிக் பாஸ் எபிசோடில் ஓவியா, ‘ஜூலியை ரெட் கார்ப்பெட்டில் வைத்து இழுத்து வேண்டுமென்றே விழ வைத்தார். பழி வாங்கிவிட்டார். ஓவியாவின் குணம் மாறிவிட்டது’ என்றெல்லாம் பேச்சுகளை அங்கங்கே கேட்க முடிகிறது. ​ஓவியா செய்தது, சரியா தவறா என்பதை நேரடியாகப் பேசாமல்,  ஓவியாவை அப்படிச் செய்ய வைத்தது எது என்பதிலிருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே ஜூலியின் நடவடிக்கைகள் பொதுவாகவே ரசிக்கும்படி இல்லை. ஆரவ்வை ‘டா’ போட்டுப் பேசும், ஓவியாவை ‘நீ வா போ’ என்று பேசும் இவர்தான், ஒருமுறை காயத்ரியிடம், ‘அவ உங்களையும், நமீதா மேடத்தையும் பேர் சொல்லிக் கூப்டறதே எனக்குப் பிடிக்கலைக்கா. அவ யாருக்கா உங்களை அப்படிக் கூப்ட?’ என்றார். காயத்ரி ஓவியாவுடன் இப்போது கொஞ்சம் இணங்கிப் போனாலும், முந்தைய வாரங்களில் ‘அவ யாரு என்னைக் கேட்க’ என்கிற தொனியில்தான் ஓவியாவைப் பற்றிப் பேசினார். ‘நமீதாவுக்கு இருக்கற ஃபேன்ஸ் இவளுக்கு இருக்கா? இவளுக்கு எப்படி இவ்வளவு ஓட்டு விழும்? என்னமோ நடக்குது’ என்று பிக் பாஸையே சந்தேகமாய்த்தான் பேசிக் கொண்டிருந்தார். நமீதாவையும் தன்னையும் விட, (காயத்ரி நினைக்கிற புகழ் விஷயத்தில்) ஓவியா கம்மிதானே என்று நினைக்கிற இவர், ஜூலி ஓவியாவைப் பற்றிப் புறம் பேசும்போதும், ‘அவ இவ’ என்று சொல்லும்போதும் ‘என்ன இருந்தாலும் உன்னை விட  ஓவியா  ஃபேமஸ்’ என்று சொல்லவில்லை. ஆக, தனக்கு வந்தால் ரத்தம் கான்செப்டில்தான் ஓவியாவை ஹேண்டில் செய்து கொண்டிருந்தனர்  காயத்ரியும், ஜுலியும், ரைசாவும், நமீதாவும்.  


சினேகனை ஒரு நல்ல தலைவராக எண்ணி, ஜுலியிடம் ஆறுதல் சொல்லும் ‘அந்த குறும்பட’ எபிசோடில் ‘சினேகன் இருக்கார், ஆரவ் இருக்கான்’ என்று நம்பிக்கையாகவே சொல்லிக் கொண்டிருந்தார் ஓவியா. இப்போதும். ஆனால் சிநேகன், எல்லாவற்றையும் சக்தி, காயத்ரியிடம் ஒப்புவித்து அவர்களிடம் இணக்கமாக இருப்பதையே முதல் கடமையாக எண்ணிக் கொண்டிருக்கிறார். ‘ஏய் வா போனு நீங்க பேசறது பிடிக்கலை’ என்று ரைசா சினேகனிடம் தனிப்பட்ட முறையில் சொன்னதைக் கூட, ஒரு புகார்போல ‘அவ என்கிட்ட அப்படிச் சொன்னா தெரியுமா?’ என்று ஸ்கூல் பையன் கணக்காக சொல்லிக் கொண்டிருந்தார். ஆக அவருக்கும் சக்தி, காயத்ரி என்கிற வட்டம் முக்கியம். 

ஆரவ், ஆரம்ப ஓவியா நெருக்கம் தாண்டி சினேகன் கோஷ்டியிடம் ‘ஓவியா என்கிட்ட அப்படிச் சொன்னா இப்படிச் சொன்னா..’ என்று பேசிக் கொண்டிருந்தார். மூன்று வாரங்களுக்கு முன் ஆளுக்கொரு கேள்வியாய் கமல் கேட்டபோது ‘ஆரவ்.. உங்கள் நண்பரைப் பத்தி வெளில புறம் பேசிருக்கீங்களா?’ என்ற கேள்வி ஆரவ்வுக்கு வந்தது. அப்போது சுதாரித்தவர், அதன்பின் ஓவியாவைப் புரிந்து கொண்டார்.  

வையாபுரி ஓரளவு சூழல்களையும் மனிதர்களையும் புரிந்து கொண்டவராக இருக்கிறார். இந்த பஞ்சாயத்துகளிலெல்லாம் அவர் கலந்து கொள்வதில்லை. செல்ஃபி டாஸ்கில் ‘ஆர்யா மாதிரி ஆகலாம்னா.. ஆரவ் மாதிரி கூட ஆகமுடியாது’ என்றெல்லாம் டைமிங்கில் ரைமிங்காகப் பேசியவரும் அவரே. ஆனால் சக்தியை பிக்பாஸ் தேர்வு செய்தது ஏனென்று தெரியவில்லை. அதைவிடுவோம்.

நேற்றைக்கு பிக் பாஸ் ஜூலியிடம் நடுவர் பொறுப்பைக் கொடுத்ததும், எல்லார் முகமும் மாறியதை கவனித்திருக்கலாம். அவரவர் பங்குங்கு மறைமுகமாக ஆளாளுக்கு அவரை ஓட்டி எடுத்தனர். ‘சொல்லுங்க மேடம்ம்ம்.. ஜூஸ் குடிங்க மேடம்ம்ம்ம்ம்’ என்று ஆரவ் செய்தது ஒருபுறம். ‘கொம்பு முளைச்சிருச்சா’ என்று எல்லாம் முடிந்த பின் காயத்ரி கேட்டது ஒருபுறம். வையாபுரியும் நக்கலாகப் பேசினார். சக்தி மொத்த முகபாவத்திலும் ஜூலி மீது வெறுப்பாகத்தான் இருந்தார். ஆனால் அவர் கார்ப்பெட்டில் உட்கார்ந்திருக்கும்போது தூக்கிக் கொண்டுபோய் விட்டது ‘டேமேஜ் கண்ட்ரோல்’. ஏற்கனவே ஓவியாவிடம் கை ஓங்கிய டேமேஜை, இதில் சரி செய்ய முயன்றிருக்கிறார். காயத்ரியும் அப்படித்தான். எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற மாதிரிதான்.

நடுவர் என்று சொல்லப்பட்ட நொடி முதல் ஜூலியிடம் நடை, உடை, பாவனைகளில் மாற்றம் வந்துவிட்டது. சமைக்கும்போது வெவ்வேறு அணிகளில் இருந்த ஓவியாவும், ஆரவ்வும் பேசிக்கொண்டதை ஜூலி ரசிக்கவில்லை. ‘டிஸ்டர்ப் பண்றீங்க’ என்று சொல்ல, ஓவியா ஆரவ்விடம் ‘நான் உங்களுக்கு டிஸ்டர்பா? ப்ளஸ்ஸிங்தானே?’ என்று கேட்டார். ஆரவ் ‘ஆமாம்’ என்று சொல்ல, ஜூலிக்கு அப்போதே ‘வெச்சுக்கறேன் உன்னை’ என்று தோன்றியிருக்க வேண்டும். கற்பனைதான். ஆனால் பின் அவர் நடவடிக்கைகள் அதை உறுதி செய்தன.

அதன்பிறகு நடுவராக அமர்ந்து ஜூலி ஜட்ஜ் செய்ததெல்லாம்.... ‘இந்த விஜய் டிவி யார் யாரையெல்லாம் ஜட்ஜ் ஆக்குமோ’ என்றுதான் நினைக்க வைத்தது. பார்வையாளர்களுக்கும், பிக் பாஸ் இன் மேட்ஸுக்குமே அதுதான் எண்ண ஓட்டமாக இருந்திருக்கும். சினேகன் டீமை தோற்க வைத்தார். அவர் அணியில் கணேஷ், வையாபுரி, ஓவியா. 

டாஸ்க் படி, ஜூலிக்கு ஒருவர் மசாஜ் செய்ய வேண்டும், ஒருவர் நடக்கும் இடங்களில் எல்லாம் ரெட் கார்ப்பெட் விரிக்க வேண்டும், ஒருவர் கேட்டதெல்லாம் சமைக்க வேண்டும். ஒருவர் நிழலாக இருக்க வேண்டும். 

’திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் லாபம் லாபம்’ என்று நமீதா, காயத்ரியுடன் ஜூலி பாடித் தொந்தரவு செய்த அந்த நள்ளிரவில் ஓவியா ஆண்கள் பெட்ரூமில் போய்ப் படுத்துக்கொண்டார். ‘என்னக்கா ஓவியா ஆம்பளைக ரூம்ல போய் தூங்கிட்டாக்கா.. அய்யோ படுத்துட்டாக்கா.. எனக்கு கோவம் வருதுக்கா..’ என்றெல்லாம் அங்கலாய்த்த ஜூலி, தனக்கு மசாஜ் செய்ய  கணேஷைத் தேர்ந்தெடுக்கிறார். அதுவும் ‘நான் நல்லா மசாஜ் செய்வேன்’ என்று ஓவியா சொன்ன பின்னும். அதை ஓவியா சொல்லும்போது எந்த வன்மமுமோ, பழிவாங்கலுமோ தெரியவில்லை. 

நிழலாக வையாபுரி என்றவர். ‘சும்மா வந்தா போதும்.. வயசுல பெரியவர்’ என்கிறார். சமைக்க சினேகனைத் தேர்ந்தெடுக்கிறார். ரெட் கார்ப்பெட் விரிக்க ஓவியா. இதில் ஓவியாவைத் தவிர வேறு யாருமே எதும் செய்ய வேண்டாம் என்பது எல்லாருக்குமே அப்பட்டமாகத் தெரிந்தது . நிழலாக தேர்ந்தெடுத்த வையாபுரி, காயத்ரி ஓவியாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சீனிலேயே இல்லை. 

நியாயமாக ரெட் கார்ப்பெட்டுக்குத்தான் கணேஷைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அப்படி நிற்க வைத்து ஓவியாவால் இழுக்க முடியாது என்று தெரிந்தும், ‘ஓவியாவுக்கு கெட்ட பெயர் வரவேண்டும், அவள் என் அடிமை’ என்கிற ஜூலியின் எண்ணம் அப்பட்டமாகத் தெரிந்தது. அங்கே தன் சுயமரியாதைக்கு இழுக்கு வந்துவிட்டதை உணர்கிறார் ஓவியா.

அப்போது முடிவெடுக்கிறார். ‘இனி போனாலும் பரவாயில்லை. இதற்கொரு முடிவு கட்ட வேண்டும்’ என்று. அதைத்தான் செய்கிறார். அப்போது ஜூலி என்ன செய்திருக்க வேண்டும்?

சக்திக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்கள்; திருடனாக. ஒருகட்டத்தில்  ‘என்னால முடியாது’ என்று டாஸ்கை மறந்து சரண்டர் ஆகிறார். ரைசாவுக்கு நீச்சல் குளத்தில் குளித்தெழுந்து, 10 முறை எழுதும் டாஸ்க் கொடுக்கப்பட்டபோது சின்ன பிக் பாஸ் ஆரவ் ‘குறைச்சுக்கலாமா பிக் பாஸ்?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஜூலி வெளியே தனிமையாக அமர வைக்கப்பட்டபோது கூட ‘இதெல்லாம் வேணாமே.. பாவம்’ என்றார் ஆரவ்.  

அப்படி ஜுலி, டாஸ்கை விட்டுவிட்டு, ‘போதும் ஓவியா.. கொஞ்சம் காலை கீழ வெச்சுக்கறேன். என்ன இப்போ’ என்று ஓவியாவிடம் அன்பைக் காட்டியிருக்கலாம். அதற்கு முன்பும் பலமுறை ஜூலி தன்னைக் காயப்படுத்தியபோதும் தனியாக அவரிடம் சமாதானமாகப் போக முயன்றவர்தான் ஓவியா. ‘ஜூலிகிட்ட பேச மாட்டில்ல?’ என்று ஒரு முறை ஆரவ் கேட்டபோதுகூட ‘எனக்கென்ன நான் பேசுவேன்’ என்று பகை மறந்து பேசிக் கொண்டிருந்தவர்தான் ஓவியா. நீச்சல் குளத்தினருகே நடக்கும்போது கல்லில் கால் பட்டுவிட ‘ஸாரி’ என்று திரும்பி கல்லைப் பார்த்துச் சொன்ன ஓவியாவுக்கு மனிதர்களிடம் அன்பு காட்டுவதென்பது அலாதியானது. குத்துப்பாட்டுக்கெல்லாம் ஆடுபவர் ஒரு மென்சோகப் பாடலுக்கு பொசுக்கென்று அழுகிறார். அவரிடம் இந்த டாஸ்கைக் கொடுத்து தன் ஆணவத்தைக் காட்டினால், என்ன நடக்குமோ அதுதான் நேற்று நடந்தது. 

அதைத்தான் சினேகனிடமும், ஆரவ்விடமும் உடைந்து புலம்பினார். ‘எனக்குன்னு செல்ஃப் ரெஸ்பெக்ட் இல்லையா?’ என்று கேட்டார். மற்ற யாராக இருந்தாலும் அப்போதைக்கு ரெட் கார்ப்பெட் இழுத்து டாஸ்கை முடித்து பிறகு கூட்டாக அமர்ந்து ‘என்னை அந்த வேலை செய்யச் சொல்லிட்டா பாரு’ என்று புலம்பிக் கொண்டிருந்திருப்பார்கள். ஓவியா அப்படி இல்லை. எப்போதுமே யாரால் பிரச்னையோ அவரிடமே பேசுவதுதான் அவரது பழக்கம். அதைத்தான் அங்கே காட்டித் தீர்த்துக் கொண்டார். 

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதை இங்கே  சொல்லலாம். ஆனால் ஓவியா சாது அல்ல. தேவையானபோது அறச்சீற்றம் கொள்பவர்தான். எல்லாம் அவருக்குத் தெரிகிறது. வெளியில் எப்படிப் பேசிக்கொள்வார்கள் என்பதை சரிவர கணிக்கிறார். அதைப் பிறர்க்குச் சொன்னால் அவர்களும் கேட்பதில்லை. காயத்ரியே இப்போதுவரை ஓவியா தன் முன் அழுதது தனக்கான வெற்றி என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். ‘என்னால நீங்க வெளில கெட்ட பேர் வாங்கிக்கறீங்க’ என்று காயத்ரிக்காகத்தான் அவர் அழுதார் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. காயத்ரி, ஓவியாவுடன் இணக்கமாகப் போனதை ஜூலியால் ஏற்க முடியவில்லை. ஓவியாவுக்கு இழுக்கு ஏற்படுத்தும் எண்ணத்திலேயே நேற்றைய ஜட்ஜ் பதவியின்போது நடந்து கொண்டார் என்று சொல்லலாம்.

ஓவியாவைக் கிண்டல் செய்ய ‘எவண்டி உன்னைப் பெத்தான்’-ஐ ஞாபகமாகப் பாடும் ஜூலிக்கு  ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ என்ற பாடல் வரியும் ஞாபகம் இருந்திருந்தால், நேற்றைக்கு இத்தனை களேபரங்கள் நடந்திருக்காது. ஓவியா செய்தது பழிவாங்கல் அல்ல. பாடம். 

அடுத்த கட்டுரைக்கு