Published:Updated:

“இப்படிலாம் நடிக்கணுமானு தயங்கினேன்!” - ‘மாப்பிள்ளை’ வைஷாலி தனிகா

“இப்படிலாம் நடிக்கணுமானு தயங்கினேன்!” - ‘மாப்பிள்ளை’ வைஷாலி தனிகா
“இப்படிலாம் நடிக்கணுமானு தயங்கினேன்!” - ‘மாப்பிள்ளை’ வைஷாலி தனிகா

விஜய் டி.வி-யின் ஹிட் சீரியல்களில் ஒன்று, 'மாப்பிள்ளை'. இதில், ஶ்ரீஜாவின் தங்கையாக நடிக்கும் வைஷாலி தனிகா, தமிழ்க் குடும்பங்களில் ஒருவராக, மறக்கமுடியாத முகமாக மாறியிருக்கிறார். மேலும், ஜீ தமிழ் சேனலின் 'லட்சுமி வந்தாச்சு' சீரியலிலும் கலக்கிவருகிறார். அவரது நடிப்பு பயணம் குறித்து உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார். 

“நடிக்கிறது எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம். சீரியல், சினிமா வாய்ப்பு வந்தபோது வீட்டில் ஒரு கண்டிஷன் போட்டாங்க. 'படிப்புதான் ரொம்ப முக்கியம். அதை முடிச்சுட்டு தாராளமா நடிக்கப் போ'னு சொல்லிட்டாங்க. கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாதுனு, வீட்டில் இருக்கவங்களை கெஞ்சி கொஞ்சி சம்மதம்‘ வாங்கினேன். மாடலிங், சினிமா என இறங்கி பிஸியாக ஓட ஆரம்பிச்சேன். அதேநேரம்  இன்னொரு பக்கம் படிப்பிலும் கவனமா இருந்தேன். அப்பா, அம்மா விரும்பின மாதிரி சமத்துப் புள்ளையாக போன வருஷம் படிப்பை முடிச்சுட்டேன். ஸோ, அவங்களும் ஹேப்பி, நானும் ஹேப்பி'' எனக் குதூகலத்துடன் தொடர்ந்தார் வைஷாலி தனிகா. 

''இப்போ, 'மாப்பிள்ளை சீரியல் எனக்குக் கொடுத்திருக்கும் ரீச் பற்றி சொல்லியே ஆகணும். விஜய் டி.வி-யின் 'பகல் நிலவு' சீரியல்ல நடிக்கும் சிவா, எனக்கு நல்ல நண்பர். அவரிடம் பேசிட்டிருந்தபோது, 'மாப்பிள்ளை' சீரியல் பற்றி சொல்லி நடிக்கிறியானு கேட்டார். நல்ல ஸ்கோப் கேரக்டராக இருந்ததால் உடனே ஓ.கே சொல்லிட்டேன். ஆரம்பத்தில் வீட்ல பயந்தாங்க. அப்பா சில நாள்களுக்கு என்னோடு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டிருந்தார். அங்கே இருந்தவங்க பழகின விதம், பேசின விதம் எல்லாம் அவருக்குப் பிடிச்சுப்போச்சு. 'நம்ம பொண்ணு பாதுகாப்பா இருப்பா' என்கிற நம்பிக்கையோடு தனியா அனுப்ப ஆரம்பிச்சுட்டார். 

'மாப்பிள்ளை' சீரியல் டீமிலேயே நான்தான் ரொம்ப சின்னப் பொண்ணு. அதனால், நான் அங்கே ரொம்ப செல்லம். அந்த இடமே என்னால் ரகளையா இருக்கும். கலகலனு பேசி கலாய்ச்சுட்டே இருப்பேன். ஆனா, நான் நடிக்கும் கேரக்டர் அதுக்கு நேர்மாறாக இருக்கும். என் முகத்துக்கு வில்லி கேரக்டரை யோசிச்சுப் பாருங்க. இந்தக் குழந்தைக்கு வில்லத்தனம் ஆரம்பத்தில் செட் ஆகறதுக்குச் சிரமமா இருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக்கிட்டு இப்போ டெரர் வில்லி ஆகிட்டேன். 

அதேமாதிரிதான் ஜீ தமிழ் சேனலின் 'லட்சுமி வந்தாச்சு' சீரியல். ஹீரோவுக்குக் கல்யாணமான பிறகும் அவரை லவ் பண்ற கேரக்டர். 'ஆத்தீ... இப்படி ஒரு கேரக்டரா?' எனத் தயக்கம் இருந்துச்சு. நடிப்பில் பல வகைகள் இருக்கு. அப்படி இதுவும் ஒரு கதாபாத்திரம் என நடிக்க ஆரம்பிச்சுட்டேன். எந்த கேரக்டராக இருந்தாலும், மக்களிடம் ரீச் ஆவதில், அவங்க அந்த கேரக்டர் பற்றி பேசறதில்தான் சக்சஸ் இருக்கு. அப்படி, என்னை மக்களிடம் கொண்டுசேர்க்கும் கேரக்டர்கள் எதுவாக இருந்தாலும் இறங்கிப் பார்த்துடணும்'' என்ற வைஷாலி தனிகா, வெள்ளித்திரை விஷயத்துக்கு வந்தார். 

''விஜய் சாருடன் ‘பைரவா’, சிவகார்த்திகேயன் சாருடன் ‘ரெமோ’ எனச் சில படங்களில் சின்ன ரோல்கள் பண்ணியிருக்கேன். இப்போ பிரபுதேவா சார் இயக்கும் ‘யங் மங் சங்’ படத்தில் நடிச்சுட்டிருக்கேன். இந்த படத்தில் லட்சுமி மேனனின் தங்கை ரோல். சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து கலக்குவேன்'' என்கிறார் வைஷாலி, தன் அக்மார்க் புன்னகையோடு.